என் மலர்
உள்ளூர் செய்திகள்

உப்பளங்களில் மழைநீர் தேங்கி நிற்கும் காட்சி
வேதாரண்யம் பகுதியில் திடீரென பெய்த மழையால் உப்பு உற்பத்தி கடும் பாதிப்பு
- கடந்த 3 மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் உப்பு உற்பத்தி பணிகளில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.
- உப்பு உற்பத்தி தொடங்குவதற்கு இன்றும் 10 நாட்கள் ஆகும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வேதாரண்யம்:
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் உள்ளிட்ட பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி பணிகள் முழு வீச்சில் நடைபெறுகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பானது தினமும் லாரிகள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கடந்த 3 மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் உப்பு உற்பத்தி பணிகளில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், வேதாரண்யம் பகுதியில் நேற்றிரவு திடீரென பெய்த மழையால் உப்பு பாத்திகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் உப்பு உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.
உற்பத்தியான உப்பை விற்பனை செய்தது போக, மீதமுள்ள உப்பை பாதுகாப்பாக தார்பாய் கொண்டு தொழிலாளர்கள் மூடி வைத்துள்ளனர்.
இதுகுறித்து உப்பள தொழிலாளர்கள் கூறுகையில்:-ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஜூலை வரையிலான 6 மாத காலத்தில் சுமார் 5 லட்சம் டன் உப்பு உற்பத்தி நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு எதிர்பாராத விதமாக அவ்வப்போது பெய்த கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் ஆண்டு உற்பத்தி இலக்கான 6.5 லட்சம் டன் உப்பு உற்பத்தியை எட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்றனர்.
இந்த திடீர் மழையால் உப்பு பாத்திகள் பாதிக்கப்பட்டு உள்ளதால் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்குவதற்கு இன்றும் 10 நாட்கள் ஆகும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.






