என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கச்சத்தீவு திருவிழா"

    • கடலில் பயணிக்கும் 4 ஆயிரம் பேருக்கும் பாதுகாப்பு கவச உடை வழங்கப்பட்டது.
    • கச்சத்தீவு மற்றும் இலங்கை கடல் எல்லையிலும் அந்நாட்டு கடற்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    தமிழகத்தின் ராமேசுவரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 16 கடல் மைல் தொலைவில் அமைந்து உள்ளது கச்சத்தீவு. இருநாடுகளின் கடல் பரப்பில் நடுவே அமைந்துள்ள இத்தீவு சுமார் 285 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த கச்சத்தீவு கடந்த 1974-ம் ஆண்டு இலங்கைக்கு வழங்கப்பட்டது. அப்போது இந்த தீவில் உள்ள அந்தோணியார் தேவாலய திருவிழாவுக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழக மீனவர்களை அனுமதிப்பது, மீன்பிடிப்பின்போது தமிழக மீனவர்கள் தங்களது வலைகளை உலர்த்திக் கொள்ளவும், ஓய்வெடுக்கவும் இத்தீவை பயன்படுத்திக் கொள்வது என்ற ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டது.

    ஆனால் இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழக மீனவர்கள் வலைகளை உலர்த்திக் கொள்ள இலங்கை அரசு அனுமதி மறுத்துவிட்டது. ஆனால் வருடந்தோறும் நடைபெறும் கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவிற்கு மட்டும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழக மீனவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான கச்சத்தீவு திருவிழா இன்று (27-ந் தேதி) மாலை தொடங்குகிறது. இந்த விழாவில் பங்கேற்க விரும்புவோர் கடந்த ஒரு மாதம் முன்பே ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பம் செய்திருந்தனர். அதனை அதிகாரிகள் பரிசீலனை செய்து கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க மொத்தம் 4 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    இன்று மாலை விழா தொடங்குவதை முன்னிட்டு கச்சத்தீவு செல்ல ராமேசுவரம் துறைமுகத்துக்கு அதிகாலையிலேயே பக்தர்கள் வருகை தந்தனர். காலை 6 மணியளவில் மாவட்ட அதிகாரிகள் பக்தர்களின் ஆவணங்களை சரிபார்த்து படகுகளில் ஏற அனுமதிக்கப்பட்டனர். கடலில் பயணிக்கும் 4 ஆயிரம் பேருக்கும் பாதுகாப்பு கவச உடை வழங்கப்பட்டது. துறைமுகத்தில் இருந்து இன்று காலை 7 மணியளவில் கச்சத்தீவுக்கு 118 விசைப்படகுகள், நாட்டுப்படகுகளில் 3 ஆயிரத்து 31 ஆண்கள், 780 பெண்கள், 185 சிறுவர்-சிறுமிகள் என 4 ஆயிரம் புறப்பட்டு சென்றனர். கச்சத்தீவு பக்தர்களின் பயணத்தை மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர நாராயணன், ராமேசுவரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    ஒவ்வொரு படகுகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பக்தர்கள் ஏற்றப்பட்டனர். படகுகளில் ஏறிய அவர்கள் உற்சாகத்துடன் கச்சத்தீவுக்கு புறப்பட்டு சென்றனர். இன்று பிற்பகலுக்குள் அனைத்து படகுகளும் கச்சத்தீவுக்கு சென்றடையும். கச்சத்தீவு திருவிழாவையொட்டி இந்திய கடல் எல்லையில் கடற்படை, கடலோர காவல் படையினர், உளவுத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதே போல் கச்சத்தீவு மற்றும் இலங்கை கடல் எல்லையிலும் அந்நாட்டு கடற்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

    அதேபோல் கச்சத்தீவு கடற்கரையில் இலங்கை ராணுவம் மற்றும் போலீசாரின் சோதனைக்கு பின்னர் இருநாட்டு பக்தர்களும் திருவிழா நடைபெறும் பகுதிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். அங்கு பக்தர்கள் அமருவதற்கும், ஓய்வெடுக்கவும் பிரமாண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. அப்போது அந்தோணியார் உருவம் பதித்த கொடியை நெடுந்தீவு பங்குசந்தை பத்திநாதன், ராமேசுவரம் வேர்க்கோடு பங்குத்தந்தை அசோக் வினோ ஆகியோர் ஏற்றி வைக்கிறார்கள். தொடர்ந்து சிலுவைப் பாதை திருப்பலி நடைபெறுகிறது. இரவு அந்தோணியார் சொரூபத்துடன் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட தேர்ப வனி நடக்கிறது. 2-ம் நாளான நாளை (சனிக்கிழமை) சிறப்பு திருப்பலி நடக்கிறது.

    அதனை தொடர்ந்து கொடியிறக்கம் நடக்கிறது. விழா முடிந்த பின் இந்திய பக்தர்கள் நாடு திரும்புகிறார்கள். கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு ராமேசுவரம் கடல் பகுதியில் 5 நாட்களுக்கு மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏராளமான படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    கச்சத்தீவு திருவிழாவையொட்டி, உச்சிப்புளியில் உள்ள ஐ.என்.எஸ். பருந்து கடற்படை விமான தளத்தில் இருந்து 2 ஹெலிகாப்டர்களும், டார்னியர் விமானமும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.

    • இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்கி, 2 நாட்கள் நடக்கிறது.
    • படகுகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் செல்ல உள்ளனர்.

    ராமேசுவரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும் இலங்கை நெடுந்தீவில் இருந்து 16 கடல் மைல் தொலைவிலும் நடுக்கடலில் கச்சத்தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். இந்த விழாவில் தமிழகம் மற்றும் இலங்கை மக்கள் கலந்து கொள்வது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி, 2 நாட்கள் நடக்கிறது.

    இந்த திருவிழாவுக்கு ராமேசுவரத்தில் இருந்து செல்ல 75 விசைப்படகுகளும் 26 நாட்டுப்படகுகளும் என மொத்தம் 101 படகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த படகுகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் செல்ல உள்ளனர்.

    இந்தநிலையில் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு செல்லும் நாட்டுப்படகுளை மீன்வளத்துறை துணை இயக்குனர் சின்ன குப்பன் தலைமையில் ராமேசுவரம் உதவி இயக்குனர் தமிழ்மாறன், மண்டபம் இயக்குனர் சிவக்குமார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    இந்தநிலையில் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு செல்லும் நாட்டுப்படகுளை மீன்வளத்துறை துணை இயக்குனர் சின்ன குப்பன் தலைமையில் ராமேசுவரம் உதவி இயக்குனர் தமிழ்மாறன், மண்டபம் இயக்குனர் சிவக்குமார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    அப்போது படகின் உறுதித்தன்மை, என்ஜின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். இதேபோல் ராமேசுவரம் துறைமுக பகுதியில் விசைப்படகுகளையும் ஆய்வு செய்தனர்.

    கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் 1-ந்தேதி வரை 5 நாட்கள் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என்று மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர்.

    • ராமேசுவரத்தில் இருந்து கச்சத்தீவு திருவிழாவுக்கு 72 படகுகளில் 2,400 பேர் பயணம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • இங்கு வருடந்தோறும் இந்திய-இலங்கை நாட்டு மீனவர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு திருப்பலி விழா நடைபெறும்.

    ராமநாதபுரம்

    ராமேசுவரம் அருகே இந்திய கடல் எல்லையை ஒட்டியுள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு வருடந்தோறும் இந்திய-இலங்கை நாட்டு மீனவர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு திருப்பலி விழா நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான விழா மார்ச் 3 மற்றும் 4-ந்தேதிகளில் நடைபெறுகிறது. இதில் ராமேசுவரத்தில் இருந்து மீனவர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர். விழா குறித்து முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, கடற்படை கமாண்டர் முகமதுஷானவாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கி பேசியதாவது:-

    வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ள கச்சத்தீவு திருவிழாவுக்கு ராமேசு வரத்தில் இருந்து பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 2,400பேர் 60 விசைப்ப டகுகள், 12 நாட்டுப்படகுகளில் சென்று வருவதற்கான முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. தேர்வு செய்யப்பட்ட பொதுமக்கள் காவல்துறை, கடற்படை அலுவலர்களின் பரிசோதனைக்கு உட்பட்டு அனுப்பப்படுவார்கள். இப்பயணத்தில் கலந்து கொள்ளும் பொதுமக்களும் அரசு வழிகாட்டுதலை கடைபிடித்து பாதுகாப்பாக சென்று வர வேண்டும்.

    இவ்விழாவிற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் மாவட்ட காவல் துறை, கடற்படை மற்றும் மீன்வளத்துறை உரிய பணிகளை திட்டமிட்டு செயல்பட்டு பாதுகாப்புடன் அழைத்துச் சென்று வர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அருண், துணை காவல் கண்காணிப் பாளர் உமாதேவி, ராமநாதபுரம் வருவாய் கோட்டா ட்சியர் கோபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர், காவல் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கச்சத்தீவு திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்கள் பிப்.6 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
    • இந்திய, இலங்கை பக்தர்கள் 8 ஆயிரம் பேர் கலந்து கொள்ள யாழ்ப்பாணம் மாவட்ட அரசு அனுமதி அளித்துள்ளது.

     கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் இரண்டு நாள் திருவிழா நடைபெறும். அந்தவகையில் இந்த ஆண்டு கச்சத்தீவு புனித அந்தோணியர் ஆலய திருவிழா பிப்.23 ஆம் தேதி தொடங்குகிறது. விழாவின் முதல் நாள் கொடியேற்றம் மற்றும் தேர்பவனி நடைபெறும். இரண்டாவது நாளான பிப்.24 அன்று சிறப்பு திருப்பலி மற்றும் கொடியிறக்கம் நடைபெறும்.

    இந்த இரண்டு நாள் திருவிழாவில், இந்திய, இலங்கை பக்தர்கள் 8 ஆயிரம் பேர் கலந்து கொள்ள யாழ்ப்பாணம் மாவட்ட அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி இந்தியாவில் இருந்து 4 ஆயிரம் பக்தர்கள் கச்சத்தீவு செல்ல அனுமதிக்கப்படவுள்ளனர்.

    இந்நிலையில், இந்த விழாவில் பங்கேற்க விரும்புவோர் பிப்.6 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என விழா ஒருங்கிணைப்பாளர் பாதிரியார் சத்யதாகு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, "கச்சத்தீவு திருவிழா செல்வதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தேவையான ஆவணங்களுடன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பிப்.6க்குள் கொடுக்க வேண்டும். அனுமதி கிடைத்த பக்தர்கள் தடை செய்யப்பட்ட எவ்வித பொருட்களையும் படகில் கொண்டு செல்லக்கூடாது" எனத் தெரிவித்தார்

    • நாளை முதல் படகுகளில் கருப்பு கொடி கட்டி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை மீனவர்கள் தொடங்க உள்ளனர்.
    • 3 நாட்கள் பேரணியாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளனர்.

    ராமேசுவரம்:

    இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து காலவரையற்ற போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்களுக்கு சிறை தண்டனை வழங்குவதை கண்டித்து நாளை முதல் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழக மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    நாளை முதல் படகுகளில் கருப்பு கொடி கட்டி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை மீனவர்கள் தொடங்க உள்ளனர்.

    3 நாட்கள் பேரணியாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளனர். வரும் 20-ந்தேதி மீன்வளத்துறை அலுவலகத்தில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி மீனவர்கள் பேரணியாக செல்ல உள்ளனர்.

    • வேலைநிறுத்த போராட்டம் காரணமாக கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழாவிற்கு விசைப்படகுகளை இயக்க மாட்டோம் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
    • வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கச்சத்தீவு திருவிழாவிற்கு படகுகளில் செல்ல பதிவு செய்த நபர்கள் ராமேசுவரம் துறைமுகத்திற்கு வரவேண்டாம்.

    மண்டபம்:

    இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நடுக்கடலில் அமைந்துள்ளது கச்சத்தீவு. இது ராமேசுவரத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவிலும், இலங்கை நெடுந்தீவு பகுதியில் இருந்து 18 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்த கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் நடைபெறுவது வழக்கம்.

    இந்நிலையில் இந்த ஆண்டிற்கான கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளை (23-ந்தேதி) மற்றும் 24-ந்தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் இந்திய தரப்பிலிருந்து சுமார் 3 ஆயிரத்து 500 பக்தர்களும், இலங்கை தரப்பிலிருந்து 4 ஆயிரம் பக்தர்களும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது.

    இதற்கிடையே ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் மீன்பிடிக்க சென்ற நான்கு மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்தது. இதை கண்டித்து, ராமேசுவரத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்கத்தினா் கடந்த சனிக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

    அதைத்தொடர்ந்து இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக நாளை 23, 24-ந்தேதிகளில் நடைபெறும் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க விசைப்படகு மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். வேலைநிறுத்த போராட்டம் காரணமாக கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழாவிற்கு விசைப்படகுகளை இயக்க மாட்டோம் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து விழாவில் தமிழக பக்தர்கள் பங்கேற்க போவதில்லை. மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தத்தால் கச்சத்தீவு திருவிழாவுக்கான பயண ஏற்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கச்சத்தீவு திருவிழாவிற்கு படகுகளில் செல்ல பதிவு செய்த நபர்கள் ராமேசுவரம் துறைமுகத்திற்கு வரவேண்டாம்.

    விசைப்படகிற்காக அவர்கள் செலுத்திய பணம் விரைவில் திருப்பித் தரப்படும் என கலெக்டர் விஷ்ணு சந்திரனுக்கு நேற்று கச்சத்தீவு சர்ச் விழா திருப்பயண குழு ஒருங்கிணைப்பாளர் ராமேஸ்வரம் பாதிரியார் சந்தியாகு கடிதம் அனுப்பியுள்ளார். மீனவர்கள் பிரச்சனையால் இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழா புறக்கணிக்கப்பட்டது தமிழக பக்தர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சமரசம் ஏற்பட்டால் கச்சத்தீவு செல்லலாம் என்ற அடிப்படையில் வெளியூர்களில் இருந்து ராமேசுவரம் துறைமுகத்தில் ஏராளமான பக்தர்கள் இன்று காலை குவிந்தனர்.
    • காத்திருந்த பக்தர்கள் படகுகள் எதுவும் கச்சத்தீவுக்கு இயக்கப்படாததால் ஏமாற்றத்துடன் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.

    மண்டபம்:

    இந்திய, இலங்கை கடல் நடுவில் அழகிய குட்டித்தீவாக அமைந்துள்ளது கச்சத்தீவு. இந்தியாவின் எல்லையில் இருந்த இந்த தீவு கடந்த 1974-ல் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது அதிபர் பண்டாரநாயகாவுடன் போடப்பட்ட ஒப்பந்தப்படி இலங்கைக்கு வழங்கப்பட்டது.

    இருப்பினும் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் கோவில் திருவிழாவினை இருநாட்டை சேர்ந்தவர்கள் இணைந்து கொண்டாடி கொள்ளலாம், தமிழக மீனவர்கள் தங்கள் வலைகளை உலர்த்தி கொள்ளலாம் என்ற ஷரத்துகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டது.

    அதன்பேரில் ஆண்டுதோறும் கச்சத்தீவில் இருநாட்டு மீனவர்களும், பக்தர்களும் கொண்டாடி வந்தனர். இலங்கையில் கடந்த 1983-ல் போர் உச்சகட்டத்தை அடைந்தபோது, தமிழக மீனவர்கள் கச்சத்தீவு செல்வதற்கு அனுமதி வழங்க இலங்கை அரசு மறுத்தது. அதனால் இந்த திருவிழாவிற்கு முறையான அனுமதியின்றி ஒருசிலர் மட்டுமே சென்று அந்தோணியாரை வழிபட்டு வந்தனர்.

    தொடர்ந்து உள்நாட்டு போர் தீவிரமடைந்ததும் கச்சத்தீவு திருவிழா நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் 2002-ல் நிலைமை கட்டுக்குள் வந்ததும் கச்சத்தீவில் மீண்டும் திருவிழா தொடங்கியது. இருந்தபோதும் இந்திய மக்கள் அனுமதிக்கப்படவில்லை.

    இந்நிலையில் இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு உள்நாட்டு போர் முடிவுக்கு வந்ததும், 27 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2010-ம் ஆண்டு தமிழக மக்கள் கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல இலங்கை அரசு அனுமதி அளித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் தமிழக மக்கள் கச்சத்தீவு சென்று திருவிழா கொண்டாடி வருகின்றனர்.

    பாஸ்போர்ட், விசா போன்றவை இல்லாமல் இந்த விழாவில் இருநாட்டினரும் கலந்து கொள்ளலாம் என்பதால் இந்தாண்டு ராமேசுவரம், மதுரை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், பாண்டிச்சேரி உள்ளிட்ட தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்து சுமார் 3 ஆயிரத்து 500 பக்தர்கள் செல்ல பதிவு செய்திருந்தனர். இலங்கை தரப்பிலிருந்து 4 ஆயிரம் பக்தர்களும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்ததை கண்டித்து, ராமேசுவரத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்கத்தினா் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணித்தனர். இதை உறுதிப்படுத்தி கச்சத்தீவு திருவிழா திருப்பயண குழு ஒருங்கிணைப்பாளர் ராமேசுவரம் பாதிரியார் சந்தியாகு கலெக்டர் விஷ்ணு சந்திரனுக்கு கடிதம் அனுப்பினார்.

    கச்சத்தீவு செல்ல விசைப்படகு மீனவர்கள் புறக்கணித்த நிலையில் 17 நாட்டுப்படகுகளில் 302 மீனவர்கள் இன்று காலை 6 மணிக்கு ராமேசுவரத்தில் இருந்து செல்ல அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும் விசைபடகு மீனவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கச்சத்தீவு திருவிழா முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அரசும் தமிழகத்தில் இருந்து பக்தர்கள் செல்ல தடை விதித்தது. இந்த தடையை மீறி செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் ராமேசுவரம் துறைமுகத்தில் குவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் ஒரு வேளை சமரசம் ஏற்பட்டால் கச்சத்தீவு செல்லலாம் என்ற அடிப்படையில் வெளியூர்களில் இருந்து ராமேசுவரம் துறைமுகத்தில் ஏராளமான பக்தர்கள் இன்று காலை குவிந்தனர். அவர்களுக்கு போலீசார் படகில் செல்ல அனுமதி அளிக்கவில்லை. அதனால் ராமேசுவரம் துறைமுகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காலை 8 மணி வரை காத்திருந்த பக்தர்கள் படகுகள் எதுவும் கச்சத்தீவுக்கு இயக்கப்படாததால் ஏமாற்றத்துடன் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.

    மீனவர்கள் பிரச்சனையால் இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழா புறக்கணிக்கப்பட்டது தமிழக பக்தர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • இந்த ஆண்டு அந்தோணியார் திருவிழாவில் இலங்கையில் உள்ள வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இருந்து குறைவான பக்தர்களே கலந்து கொண்டனர்.
    • இந்த ஆண்டு மீனவர்கள் புறக்கணிப்பு காரணமாக ராமேசுவரம் துறைமுக பகுதி, பாம்பன் உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    ராமேசுவரம்:

    இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே ராமேசுவரம் கடல் பகுதியில் மன்னார் வளைகுடாவில் கச்சத்தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் இருநாட்டு மீனவர்களும் ஓய்வு எடுப்பது, வலைகளை காய வைப்பது, மீன்களை தரம் பிரிப்பது போன்ற பணிகளில் ஈடுபடுவது வழக்கம்.

    ராமேசுவரத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த தீவில் பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் தேவாலயம் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் நடைபெறும் ஆலய திருவிழாவில் இரு நாட்டில் இருந்தும் ஏராளமான மீனவர்களும், கிறிஸ்தவர்களும் பங்கேற்பார்கள்.

    இந்த நிலையில் இந்த ஆண்டு திருவிழாவில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து முன்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் பல வாரங்களுக்கு முன்பே தொடங்கின. இருந்தபோதிலும் தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், சிறையில் அடைப்பதுமாக பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

    இதனால் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் தமிழக மீனவர்கள் மற்றும் இந்திய பக்தர்கள் பங்கேற்பார்களா? என்ற சந்தேகம் நிலவியது. ஏற்கனவே கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க 2000-க்கும் மேற்பட்டோர் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்திருந்தனர்.

    இந்த நிலையில் இலங்கையில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழக மீனவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டங்களை தொடங்கினர். படகுகளில் கருப்பு கொடி ஏற்றியும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டும், பேரணி நடத்தியும் தொடர்ந்து தமிழக மீனவர்கள் போராடி வருகின்றனர்.

    இதையடுத்து கச்சத்தீவு திருவிழா தொடங்கியதால் அதில் பங்கேற்க போவதில்லை என தமிழக மீனவர்கள் முடிவு செய்தனர். இதனால் இந்தியாவில் இருந்து கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவுக்கு படகுகளை இயக்குவதில் சுணக்கம் ஏற்பட்டது. பக்தர்கள் யாரையும் படகுகளில் ஏற்றி சென்று கச்சத்தீவு செல்ல தமிழக மீனவர்கள் மறுத்து விட்டனர்.

    அதே நேரத்தில் கச்சத்தீவு திருவிழாவில் இலங்கை தரப்பில் இருந்து பங்கேற்க முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி இலங்கையில் இருந்து மிகவும் குறைவான மீனவர்களே கச்சத்தீவுக்கு வந்தனர். நேற்று கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தின் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

    இதைதொடர்ந்து திருவிழா தொடங்கியது. ஆனால் ராமேசுவரத்தில் இருந்து நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் படகுகளை இயக்கவில்லை. ஏற்கனவே பங்கேற்கபோவதில்லை என்று அறிவித்திருந்த போதிலும் இதை அறியாமல் ஏராளமான வெளிமாவட்ட, வெளி மாநில பக்தர்கள் ராமேசுவரத்தில் குவிந்தனர். இதனால் ராமேசுவரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையொட்டி கடலோர பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு ராமேசுவரம் துறைமுக பகுதியில் எப்போதும் விழாக்கோலம் பூண்டிருக்கும். ஆனால் இந்த ஆண்டு மீனவர்கள் புறக்கணிப்பு காரணமாக ராமேசுவரம் துறைமுக பகுதி, பாம்பன் உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    அதேபோல் கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவிலும் தமிழக மீனவர்கள் யாரும் பங்கேற்காததால் களை இழந்து காணப்பட்டது. மிகவும் குறைவான பக்தர்களின் பங்கேற்புடன் நேற்று மாலை அந்தோணியார் உருவம் பொறித்த கொடியை நெடுந்தீவு பங்கு தந்தை ஏற்றி வைத்தார். ஆலயத்தில் சுற்றி 14 இடங்களில் சிலுவை பாதை மற்றும் திருப்பலி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்றன.

    விழாவின் 2-ம் நாளான இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு யாழ்ப்பாணம் மறைமாவட்ட பிஷப் ஜஸ்டின் ஞானபிரகாசம் தலைமையில் திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. அதன் பின்பு கொடியிறக்கப்பட்டது. இத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.

    இந்த ஆண்டு அந்தோணியார் திருவிழாவில் இலங்கையில் உள்ள வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இருந்து குறைவான பக்தர்களே கலந்து கொண்டனர். தமிழக மீனவர்கள் புறக்கணிப்பு காரணமாக இரு நாட்டில் இருந்தும் வியாபாரிகளும் புறக்கணித்தனர். இதனால் திருவிழாவில் வழக்கமாக விற்பனையாகும் பொருட்கள், கடைகள் களை இழந்து காணப்பட்டன. இதனால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    முதன் முறையாக தமிழக மீனவர்கள் கலந்து கொள்ளாமல் கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா நடைபெற்றது இந்திய பக்தர்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியது.

    • இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற மார்ச் 14, 15-ந்தேதிகளில் நடைபெறுகிறது.
    • விழாவில் கலந்து கொள்பவர்களுக்கான விண்ணப்ப படிவம் வருகிற 6-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை வழங்கப்பட உள்ளது.

    ராமேசுவரம்:

    இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே நடுக்கடலில் கச்சத்தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் 2 நாட்கள் நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற மார்ச் 14, 15-ந்தேதிகளில் நடைபெறுகிறது. திருவிழா அழைப்பிதழானது யாழ்ப்பாணம் மறை மாவட்ட பிஷப் மூலம் சிவகங்கை மறை மாவட்ட பிஷப், ராமேசுவரம் வேர்க்கோடு பங்குத்தந்தை ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், வேர்க்கோடு பங்குத்தந்தை அசோக் வினோ, ராமேசுவரம் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். கூட்டத்துக்கு பின்பு பங்குத்தந்தை அசோக் வினோ கூறியதாவது:-

    கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா அழைப்பிதழை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து வழங்க இருக்கிறோம். இந்த திருவிழாவுக்கு சென்று வர அரசிடம் அனுமதி பெற்றுத்தந்து, பயண ஏற்பாடுகள் செய்து தருவது தொடர்பாக கலெக்டரிடம் கோரிக்கை வைக்க உள்ளோம். இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவுக்கு 75 விசைப்படகுகளும், 16 நாட்டு படகுகளும் செல்ல உள்ளன. 2500-க்கும் மேற்பட்டோர் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. விழாவில் கலந்து கொள்பவர்களுக்கான விண்ணப்ப படிவம் வருகிற 6-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை வழங்கப்பட உள்ளது. இந்த விண்ணப்ப படிவத்தை பிப்ரவரி 25-ந்தேதிக்குள் அனைவரும் பூர்த்தி செய்து படகு உரிமையாளர்களிடம் அல்லது விழா கமிட்டியிடம் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×