என் மலர்
நீங்கள் தேடியது "TN fishermen"
- இன்றைய நிலவரப்படி 104 மீனவர்களும் 258 படகுகளும் இலங்கை காவலில் உள்ளது.
- மீனவர்களின் குடும்பங்களை நிச்சயமற்ற சூழலிலும் பொருளாதார நெருக்கடியிலும் ஆழ்த்தியுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் நேற்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட அனைத்து மீனவர்களும் தாயகம் திரும்புவதற்கும், இலங்கைக் காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் விடுவிப்பதற்கும் உடனடி தூதரக நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில்,
தமிழ்நாட்டைச் சேர்ந்த 22 மீனவர்களும் அவர்களது நான்கு மீன்பிடிப் படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டது குறித்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்தை ஈர்த்துள்ள முதலமைச்சர், 18.02.2026 அன்று ராமேஸ்வரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 மீனவர்கள் மற்றும் அவர்களது மூன்று மீன்பிடிப் படகுகளுடன் கைது செய்யப்பட்டதையும், அதே நாளில் நடந்த மற்றொரு சம்பவத்தில், இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீனவ சமூகத்தின் வாழ்க்கையும் வாழ்வாதாரமும் கடலையே நம்பியுள்ளதால் இலங்கை அதிகாரிகளால் மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவது அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நிலவரப்படி 104 மீனவர்களும் 258 படகுகளும் இலங்கை காவலில் உள்ளது.
மேலும், பிப்ரவரி முதல் வாரத்தில் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட 12 மீனவர்கள் தாயகம் திரும்புவதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவது, அவர்களின் குடும்பங்களை நிச்சயமற்ற சூழலிலும் பொருளாதார நெருக்கடியிலும் ஆழ்த்தியுள்ளது.
எனவே, இலங்கை காவலிலிருந்து விடுவிக்கப்பட்ட அனைத்து மீனவர்களும் தாயகம் திரும்புவதற்கும், தற்போது கைது செய்யப்பட்டு அங்கு காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கும் உடனடி தூதரக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
- நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 7 தமிழக மீனவர்களை எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது.
- சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.
தமிழக-புதுச்சேரி மீனவர்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை, அவர்களை கைது செய்து படகுகளை பறிமுதல் செய்வதும், பலமுறை தாக்கி விரட்டியடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 7 தமிழக மீனவர்களை எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மயிலாடுதுறை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை அவர்களின் 2 நாட்டுப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- கைது செய்த 11 மீனவர்களை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.
- விசாரணை நடத்தியபோது கைது செய்யப்பட்ட மீனவர்கள் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் என தெரியவந்தது.
தமிழக-புதுச்சேரி மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லும்போது எல்லைதாண்டி சென்றதாக கூறி இலங்கை கடற்படை தொடர்ந்து கைது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடலுக்கு மின்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி சென்றதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்த 11 மீனவர்கள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் காங்கேசன் துறைமுகம் வடமேற்கு கடற்பரப்பில் இன்று காலை மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களது படகை பறிமுதல் செய்து 11 மீனவர்களையும் கைது செய்தனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்கள் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கைது செய்த 11 மீனவர்களையும் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் விசாரணை நடத்தியபோது கைது செய்யப்பட்ட மீனவர்கள் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் என தெரியவந்தது.
விசாரணை முடிந்து மீனவர்கள் 11 பேரும் யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தமிழக-புதுச்சேரி மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வரும் நடவடிக்கைக்கு மத்திய, மாநில அரசுகள் விரைந்து தீர்வு காணவேண்டும் என்று மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
- மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
- கைது செய்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை, அவர்களை கைது செய்து படகுகளை பறிமுதல் செய்வதும், பலமுறை தாக்கி விரட்டியடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
கடந்த ஒரு மாதமாக வடகிழக்கு பருவமழை, டிட்வா புயல் காரணமாக ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ள நிலையில், மீனவர்கள் கடலுக்கு சென்று வருகிறார்கள். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று காலை 300-க்கும் மேற்பட்ட விசை படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கட லுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
நெடுந்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி ஜோசப் என்பவருக்கு சொந்தமான ஒரு படகையும், அதிலிருந்த மூன்று மீனவர்களையும் கைது செய்தனர்.
இதையடுத்து கைது செய்த தங்கச்சிமடம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த அருளானந்தன் மகன் ஆமோஸ்டின் (24), அந்தோணியார்புரத்தை சேர்ந்த சத்யம் மகன் ஜோன்தாஸ் (37), மண்டபம் தோப்புகாடு அன்ரோஸ் மகன் பரலோக ஜெபஸ்டின் அன்ரோஸ் (25) ஆகியோரை இலங்கை கடற்படையினர் காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் மீனவர்கள் மூன்று பேரையும், படகுடன் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் ஒப்படைக்க இருப்பதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர். கடந்த 4 நாட்களுக்கு முன்புதான் இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்கள் 12 பேரை சிறைபிடித்து சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
- மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை அவர்களது படகையும் பறிமுதல் செய்துள்ளது.
- கைதான செய்யப்பட்ட மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.
சீர்காழி:
தமிழகம், பாண்டிச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்களின் முக்கிய தொழிலாக மீன்பிடிதொழில் உள்ளது. இந்த தொழிலில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் இயற்கை சூழல்களால் அடிக்கடி அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் கடலில் எல்லை தாண்டி வந்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அவ்வப்போது கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இதற்கிடையே இலங்கை கடற்கொள்ளையர்களும் தமிழக மீனவர்களை தாக்கி தொழில் நுட்பபொருட்கள், மீன்கள், வலைகள், செல்போன்கள் ஆகியவற்றையும் கொள்ளையடித்து செல்லும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க மத்திய-மாநில அரசுகளிடம் மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இந்த சம்பவம் தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வானகிரி மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் ராமையன். இவருக்கு சொந்தமான விசைப்படகில் அதேபகுதியை சேர்ந்த மீனவர்கள் ராஜேந்திரன், சிவதாஸ், குழந்தைவேல், ரஞ்சித், ராஜ், கலை, குகன், பிரசாத்,அகிலன், ஆகாஷ், ராபின், ராஜ்குமார் மற்றும் தரங்கம்பாடியை சேர்ந்த கோவிந்த், கடலூரை சேர்ந்த பாரதி ஆகிய 14 பேர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தரங்கம்பாடியில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.
அவர்கள் நேற்று இரவு கோடிக்கரைக்கு தென்கிழக்கு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி கைது செய்தனர். பின்னர் அவர்களை விசைப்படகுடன் இலங்கைக்கு அழைத்து சென்றனர்.
இதனால் வானகிரி மீனவ கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட தகவல் தங்களுக்கு கிடைத்ததாகவும், அடுத்தகட்ட சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் மீனவ மக்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தமிழ்நாட்டின் மீனவ சமூகத்தினரிடையே ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
- 114 மீனவர்கள் இலங்கை வசம் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இன்று நாகை மீனவர்கள் 31 பேர், ராமநாதபுரம் மீனவர்கள் 4 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளதோடு சேர்த்து, மொத்தம் 114 மீனவர்கள் காவலில் உள்ள நிலையில், அவர்களை மீட்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்களையும், அவர்களது மூன்று இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளையும் சிறைபிடித்துள்ள இலங்கைக் கடற்படையினர், மற்றொரு சம்பவத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களையும், அவர்களது நாட்டுப் படகினையும் சிறைபிடித்துள்ளனர்.
மீனவர்களின் வாழ்க்கையும், அவர்களது வாழ்வாதாரமும் கடலுடன் பிரிக்கமுடியாத வகையில் பின்னிப் பிணைந்துள்ளது. இதுபோன்று தொடர்ச்சியாக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தமிழ்நாட்டின் மீனவ சமூகத்தினரிடையே ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு கைது நடவடிக்கையின்போதும், மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களது குடும்பத்தினரிடையே ஆழ்ந்த அச்ச உணர்வையும், பாதுகாப்பற்ற நிலையையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 114 மீனவர்கள் இலங்கை வசம் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 247 படகுகளும் இலங்கை வசம் காவலில் உள்ளது.
எனவே, இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிப்பதற்கு மத்திய வெளியுறவுத் துறை மந்திரி டாக்டர் எஸ். ஜெய்சங்கர் உடனடியாக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- நேற்று முன்தினம் கடலுக்கு சென்ற மீனவர்கள் குறைந்த அளவு மீன்களுடன் கரை திரும்பினர்.
- ராமேசுவரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மீன்பிடி தொழில் நலிவடைந்து வருகிறது.
ராமேசுவரம்:
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 2 வாரங்களாக பரவலாக நல்ல மழை பெய்தது. ஆந்திராவில் கரையை கடந்த மோன்தா புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் ராமேசுவரம் மீனவர்கள் 10 நாட்களாக கடலுக்கு செல்லாமல் இருந்தனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் கடலுக்கு சென்ற மீனவர்கள் குறைந்த அளவு மீன்களுடன் கரை திரும்பினர். இந்தநிலையில் நேற்று காலை ராமேசுவரத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு சென்றனர். அவர்கள் இந்திய கடல் எல்லையில் கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர்.
இன்று அதிகாலை அந்த பகுதிக்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் ஒன்று வந்தது. அதிலிருந்த வீரர்கள் ராமேசுவரம் மீனவர்களை பார்த்து இது எங்கள் நாட்டு எல்லை, இங்கு மீன்பிடிக்க அனுமதி கிடையாது என்று பலமுறை எச்சரித்தும் ஏன் வருகிறீர்கள்? என்று கூறியதுடன், அவர்களை நோக்கி துப்பாக்கியை காட்டி மிரட்டினர். அத்துடன் தொடர்ந்து அந்த பகுதியில் மீன்பிடிக்க விடாமல் தடுத்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் உடனடியாக கடலில் விரித்திருந்த வலைகளை சுருட்டிக் கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள். ஆனாலும் நீண்ட தூரம் வரை ராமேசுவரம் மீனவர்கள் மீது கற்களை வீசியும், வலைகளை அறுத்து கடலில் வீசியும் துரத்தியடித்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் இலங்கை கடற்படைக்கு அஞ்சி ராமேசுவரம் மீனவர்கள் மீன் பிடிக்க முடியாமல் படகு ஒன்றுக்கு ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரம் வரை நஷ்டத்துடன் இன்று காலை கரை திரும்பி உள்ளனர்.
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ராமேசுவரம் மீனவர்கள் மீது தொடர்ச்சியாக இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவது, சிறை பிடிப்பது, விரட்டி அடிப்பது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது.
இதனால் ராமேசுவரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மீன்பிடி தொழில் நலிவடைந்து வருகிறது. இதை தடுக்க வேண்டிய மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இலங்கை அரசுடன் சேர்ந்து வேடிக்கை பார்த்து வருகிறது. இதனால் ராமேசுவரம் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே ராமேசுவரம் மீனவர்கள் நலனை கருத்தில் கொண்டு இனி வரும் காலங்களில் பிரச்சனையின்றி மீன் பிடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் மன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.
- ராமேசுவரத்தில் இருந்து டேவிட் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் 9 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர்.
ராமேசுவரம்:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்களை எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக்கூறி இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. அத்துடன் மீனவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.
இதனால் தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்படுகிறது. அத்துடன் இலங்கை கடற்கொள்ளையர்கள், தமிழ்நாடு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி மீன், வலை உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் செல்வதும் தொடர்கதையாக உள்ளது.
ராமேசுவரத்தில் இருந்து கடலுக்கு செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 45 நாட்களில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டதுடன் அவர்களின் பல லட்சம் மதிப்பிலான விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பாக்ஜலசந்தி கடல் பகுதி கடுமையான சீற்றத்துடன் காணப்பட்டது. பாம்பனில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்ட நிலையில் குறைந்த எண்ணிக்கையிலான மீனவர்களே கடலுக்கு சென்றனர்.
இந்தநிலையில் நேற்று காலை ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து மீன்துறை அலுவலக அனுமதியுடன் 350 விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இதில் பெரும்பாலான மீனவர்கள் தனுஷ்கோடி, தலைமன்னார் இடைப்பட்ட பகுதியில் வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.
இன்று அதிகாலையில் அந்த பகுதிக்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் மின்னல் வேகத்தில் வந்தது. இதனால் மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலைகளை சுருட்டி படகில் போட்டுக்கொண்டு அங்கிருந்து புறப்பட ஆயத்தமானார்கள். அனைத்து படகுகளும் சென்றுவிட்டபோதும், தங்கச்சிமடத்தை சேர்ந்த ஜஸ்டின் (வயது 51) என்பவருக்கு சொந்தமான விசைப்படகை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர்.
அந்த படகில் தாவிக்குதித்த வீரர்கள், மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலையுயர்ந்த மீன்களை அபகரித்துக்கொண்டனர். இது எங்கள் நாட்டு எல்லை என்று கூறிய அவர்கள், அந்த படகில் இருந்த உரிமையாளர் ஜஸ்டின், டெனிசன் (39), மோபின் (24), சைமன் (55), சேகர் (55) ஆகிய 5 மீனவர்களையும் எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர்.
மேலும் அவர்களுக்கு சொந்தமான விசைப்படகையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் மன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். முதல்கட்ட விசாரணைக்கு பிறகு அவர்கள் 5 பேரும் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். பிற்பகலில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் விடுதலை ஆவார்களா அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்பது தெரியவரும்.
இதற்கிடையே இன்று காலை ராமேசுவரத்தில் இருந்து டேவிட் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் 9 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர். அவர்களின் படகை இன்று அதிகாலையில் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி அதிலிருந்த 9 பேரையும் கைது செய்தனர்.
இதற்கிடையே ஒரே நாளில் 14 பேர் கைது செய்யப்பட்ட தகவல் ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இயற்கை சீற்றம், இலங்கை கடற்படையினர் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் மீன்பிடி தொழில் நாளுக்கு நாள் நசிந்துவரும் நிலையில் தொடர்ந்து மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவது அதிர்ச்சி அளிப்பதாகவும், தாங்கள் வேறு தொழிலுக்கு செல்ல எண்ணுவதாகவும் தெரிவித்தனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் தமிழக மீனவர்களின் நலன் குறித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ராமேசுவரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை விசைப்படகுகளை குறிவைத்து மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் தற்போது நாட்டுப்படகையும் பறிமுதல் செய்ய தொடங்கியுள்ளனர்.
எல்லை தாண்டியதாக பொய்யான குற்றச்சாட்டை கூறி தமிழக மீனவர்களை சிறைபிடிப்பு என்ற பெயரில் நடுக்கடலில் கடத்தி செல்லும் இலங்கை கடற்படையால் கைதாகி சிறையில் வாடும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்ற மீனவர் சங்க பிரதிநிதிகள், மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஜஸ்டின் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.
- கைது செய்யப்பட்ட 5 பேரும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
ராமேஸ்வரம் மீனவர்கள் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை 5 மீனவர்களை கைது செய்தது. மேலும், ஜஸ்டின் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.
கைது செய்யப்பட்ட 5 பேரும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
- கைதான மீனவர்களை மன்னார் கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படை அழைத்துச் சென்றது.
- இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை தடுக்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை
தலைமன்னார் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
கைதான ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரையும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை தடுக்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துதுள்ளனர்.
- இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.
- ராமேஸ்வரத்தை சேர்ந்த 7 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் மீன்பிடி தடைக்காலத்திற்கு பிறகு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து சிறைபிடித்து வருவது பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது. கடந்த மாதம் 29-ந்தேதி 8 மீனவர்களையும், கடந்த 1-ந் தேதி 7 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் கைது செய்தனர்.
அதேபோல் அவ்வப்போது மீனவர்கள் மீது கற்களை வீசியும், தாக்குதல் நடத்தியும் அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை பறிமுதல் செய்துகொண்டு விரட்டி அடிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில்இருந்து நேற்று காலை 456 விசைப்படகுகள் மீன்துறை அலுவலகத்தில் அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு சென்றன.
அதில் பெரும்பாலான படகுகள் இந்திய கடல் எல்லையில் அமைந்துள்ள நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன்பிடித்துக்கொண்டு இருந்தன. இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் சற்று தூரத்தில் இருந்து இலங்கை கடற்படைக்கு சொந்தமான குட்டி ரோந்து கப்பல் ஒன்று மின்னல் வேகத்தில் மீனவர்களின் படகுகளை நோக்கி வந்தன. இதனால் பதட்டம் அடைந்த மீனவர்கள் உடனடியாக வலைகளை படகுக்குள் இழுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.
ஆனாலும் தங்கச்சிமடத்தை சேர்ந்த ஈசக்பவுல் என்பவருக்கு சொந்தமான விசைப்படகினை சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர் அவர்களின் படகில் தாவிக்குதித்தனர். பின்னர் நீங்கள் மீன்பிடிப்பது எங்கள் நாட்டின் எல்லை, இங்கு வந்து மீன்பிடிக்க கூடாது என்று பலமுறை எச்சரித்தும் ஏன் வருகிறீர்கள்? என்று திட்டினர்.
பின்னர் அந்த படகில் இருந்த சண்முகம் (வயது 50), டுதர் (40), எடிசன் (51), சக்திவேல் (47), ஜெகதீஷ் (48), டல்வின்ராஜ் (46), அன்பழகன் ஆகிய 7 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து, விசைப்படகுடன் காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு கொண்டு சென்றனர்.
அங்கு முதல்கட்ட விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் 7 பேரும் படகுடன் மயிலட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் கைதான தகவலை தொடர்ந்து ராமேசுவரம் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். இலங்கை அரசால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை உடனே நிறுத்த வேண்டும் என்றும், சிறைபிடிப்பை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இந்திய மீனவர்கள் தடை செய்யப்பட்ட மீன்பிடிக்கும் முறைகளை பின்பற்றுகின்றனர்.
- மீனவர்கள் மற்றும் படகுகள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி படகுகளுடன் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த பிரச்சனை தொடர்பாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கூறுகையில்,
இந்திய மீனவர்கள் தடை செய்யப்பட்ட மீன்பிடிக்கும் முறைகளை பின்பற்றுகின்றனர். இதனால் கடல்வளம் பெரிதும் பாதிக்கப்படுவதோடு, இலங்கையின் வடக்கு பகுதியில் வாழும் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.
இலங்கைக் கடல் எல்லையில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கும் சம்பவங்கள் கடந்த இரண்டு மாதங்களாக குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.
எல்லைதாண்டி மீன் பிடித்தால் கைது மற்றும் படகு பறிமுதல் நடவடிக்கை தொடரும். மீனவர்கள் மற்றும் படகுகள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த பிரச்சனையை தூதரக ரீதியாக இந்தியாவிடம் கொண்டு செல்வதோடு, சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் மீனவர்களை கைது செய்ய இலங்கை அரசு, இலங்கை கடற்படைக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கியுள்ளது என்று தெரிவித்தார்.






