என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர்கள் தாக்குதல்"

    • 2 படகுகளில் வந்த 8 இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களின் படகை சுற்றி வளைத்தனர்.
    • படுகாயம் அடைந்த 11 மீனவர்களும் நேற்று காலை நம்பியார் நகர் துறைமுகம் வந்தனர்.

    வேதாரண்யம்:

    நாகை மீனவர்களை தாக்கி மீன்பிடி உபகர ணங்களை பறித்த இலங்கை கடற் கொள்ளையர்கள் 8 பேர் மீது கடலோர காவல்குழும போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன் விபரம் வருமாறு:-

    நாகை நம்பியார் நகரை சேர்ந்தவர் சந்திரபாபு (வயது 60) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (28), விமல் (26), சுகுமார் (31), திருமுருகன் (31), முருகானந்தம் (38), அருண் (27) ஆகிய 6 மீனவர்களும், நாகை நம்பியார் நகரை சேர்ந்த சசிகுமார் (30) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த உதயசங்கர் (28), சிவசங்கர் (25), கிருபா (29), கமலேஷ் (19) ஆகிய 4 மீனவர்களும் நேற்று முன்தினம் மதியம் 2 மணி அளவில் நம்பியார் நகர் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    கோடியக்கரை தென்கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது 2 படகுகளில் வந்த 8 இலங்கை கடற்கொள்ளையர்கள் படகை சுற்றி வளைத்தனர். பின்னர், பயங்கர ஆயுதங்களால் மீனவர்களை சரமாரியாக தாக்கியதுடன் அவர்களிடம் இருந்த வெள்ளி செயின், எஞ்ஜீன், செல்போன், ஜி.பி.எஸ். கருவி, லைட் பேட்டரி, வாக்கி-டாக்கி, 500 கிலோ மீன் என மொத்தம் ரூ.4 லட்சம் மதிப்பு உபகரணங்களை பறித்து சென்றனர். படுகாயம் அடைந்த 11 மீனவர்களும் நேற்று காலை நம்பியார் நகர் துறைமுகம் வந்தனர். இதுகுறித்து பஞ்சாயத்தாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து அனைவரும் நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த சிவசங்கர் என்பவர் மட்டும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை கடற்கொள்ளையர்கள் 8 பேர் மீது வேதாரண்யம் கடலோர காவல்குழும போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • மீனவர்கள் நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசில் புகார் அளித்தனர்.
    • காயமடைந்த மீனவர்கள் 5 பேரும் ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை நம்பியார் நகர் பகுதியை சேர்ந்த சந்திரபாபு (வயது 60) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (28), விமல் (26), சுகுமார் (31), திருமுருகன் (31), முருகன்(38), அருண் (27) ஆகிய 6 பேர் நேற்று மதியம் 2 மணிக்கு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    இவர்கள் இரவு 8 மணிக்கு கோடியக்கரை கிழக்கே நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது 2 படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 8 பேர் மீனவர்களை கத்தி, இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி அவர்களிடம் இருந்து வெள்ளி செயின், மோட்டார் என்ஜின், செல்போன், ஜி.பி.எஸ் கருவி, பேட்டரி, வாக்கிடாக்கி உள்ளிட்ட பொருட்களை பறித்து சென்றனர்.

    இதையடுத்து காயமடைந்த 6 மீனவர்களும் இன்று அதிகாலை 4 மணிக்கு கரை திரும்பினர்.

    இதுகுறித்து மீனவர்கள் நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் காயமடைந்த மீனவர்கள் 6 பேரும் ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதேபோல் நம்பியார்நகர் பகுதியை சேர்ந்த சசிகுமார் (30) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் சசிக்குமார், உதயசங்கர் (28), சிவசங்கர் (25), கிருபா (29), கமலேஷ்(19) ஆகிய 5 பேர் நேற்று மதியம் 2 மணிக்கு கடலுக்கு புறப்பட்டு சென்றனர். அவர்கள் கோடியக்கரைக்கு கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு 2 படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 8 பேர் மீனவர்களை தாக்கி, அவர்களிடம் இருந்து மோட்டார் என்ஜின், ஜி.பி.எஸ் கருவி, இகோ சவுண்டர், 5 செல்போன்கள், மீன்பிடி வலை உள்ளிட்ட பொருட்களை பறித்து சென்றனர்.

    அதைத்தொடர்ந்து இன்று அதிகாலை கரை திரும்பிய மீனவர்கள் இதுகுறித்து நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பின்னர் காயமடைந்த மீனவர்கள் 5 பேரும் ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் மீனவர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டதோடு, பல லட்சம் ரூபாய் அளவிற்கு நஷ்டம் அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
    • மீனவர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மத்திய- மாநில அரசுகளுக்கு உண்டு.

    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது.

    இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் மீனவர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டதோடு, பல லட்சம் ரூபாய் அளவிற்கு நஷ்டம் அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

    எனவே இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலில் இருந்து மீனவர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மத்திய- மாநில அரசுகளுக்கு உண்டு.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • காயத்துடன் கரை திரும்பிய 4 மீனவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள புதுப்பேட்டையில் இருந்து கவிதாஸ் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் ஜெகன் (வயது 36), ராமகிருஷ்ணன் (67), செந்தில் (46), சாமுவேல் (31) ஆகியோர் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    அப்போது, நாகை மாவட்டம், கோடியக்கரை தென்கிழக்கே சுமார் 5 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 பேர் புதுப்பேட்டை மீனவர்களை வழிமறித்து கத்தி மற்றும் கட்டையால் தாக்கி மீனவர்கள் வைத்திருந்த ஜி.பி.எஸ்.கருவி, செல்போன், வாக்கி டாக்கி உள்ளிட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பி சென்றனர்.

    பின்னர், காயத்துடன் கரை திரும்பிய 4 மீனவர்களுக்கும் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இச்சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி, தமிழக எல்லை பகுதிக்கு வந்து புதுப்பேட்டை மீனவர்களை ஆயுதம் கொண்டு தாக்கி பொருட்களை கொள்ளையடித்து சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

    • 11 ஆண்டுகளில் 454 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன.
    • இன்று, நேற்று அல்ல பல ஆண்டுகளாக நீடிக்கும் மீனவர் பிரச்சனைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண்பது எப்போது?

    சென்னை:

    தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்வதால் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த பிறகுதான், தமிழக மீனவர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டு இருப்பதாக சொல்லப்படும் நிலையில், ஒவ்வொரு முறையும் உயிரை கையில் பிடித்துக் கொண்டுதான் கடலுக்குள் சென்று மீனவர்கள் கரை திரும்பும் சூழல் உள்ளது.

    அந்தவகையில் தற்போது கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி சட்டசபையில் தனித்தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. பாராளுமன்றத்திலும் இந்த விவகாரம் சமீபத்தில் சூடுபிடித்தது. இன்று, நேற்று அல்ல பல ஆண்டுகளாக நீடிக்கும் இந்த பிரச்சனைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண்பது எப்போது? என்ற எதிர்பார்ப்பில் மீனவர்களும் காத்திருக்கிறார்கள்.

    இந்த சூழலில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவரங்களை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது. அதாவது, கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து 2025-ம் ஆண்டு மார்ச் 22-ந்தேதி வரையிலான நிலவரப்படி, எவ்வளவு மீனவர்கள் பிடிபட்டார்கள்? அதேபோல் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளின் விவரங்கள் ஆகியவற்றையும் வெளியிட்டு உள்ளது.

    அதன்படி, 2015-ம் ஆண்டில் இருந்து கடந்த மார்ச் 22-ந்தேதி வரையில் கடந்த 11 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 870 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், அதில் கடந்த ஆண்டில் (2024) மட்டும் 526 மீனவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் மத்திய அரசின் புள்ளி விவரங்களில் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கின்றன.

    இதுதவிர, இலங்கை கடல் பகுதிகளில் கடந்த 11 ஆண்டுகளில் 104 தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி, 11 ஆண்டுகளில் 454 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன.

    தமிழகம் மட்டுமல்லாது, பிற பகுதிகளில் இருந்து அதாவது, இந்திய மீனவர்களாக எல்லை தாண்டி கடந்த 11 ஆண்டுகளில் கைது செய்யப்பட்டவர்களில், 2 ஆயிரத்து 919 மீனவர்கள் இலங்கை அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டு உள்ளனர். இதே ஆண்டுகளில் 346 மீன்பிடி படகுகளும் விடுவிக்கப்பட்டு உள்ளன.

    இதுபோக, 22.3.2025 வரையிலான நிலவரப்படி, 86 இந்திய மீனவர்கள் (தமிழக மீனவர்கள் உள்பட) இலங்கை சிறையில் இருக்கின்றனர். அதேபோல், 225 மீன்பிடி படகுகள் இலங்கை வசம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    • மத்திய அரசு இலங்கை அரசிடம் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
    • பாதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க மத்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு, உடனடியாக இலங்கை அரசிடம் தொடர்பு கொண்டு தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். மேலும் மத்திய அரசு, மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற இலங்கையிடம் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க மத்திய அரசு - இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.

    தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் இலங்கை கடற்படையினரின் அராஜகத்தை தடுத்து நிறுத்தக்கூடிய வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடல் கொள்ளையர்களுக்கு 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க முடியும்.
    • இலங்கை கடல் கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்துவது அண்மைக்காலமாக அதிகரித்திருக்கிறது. கடந்த 10-ந்தேதி நள்ளிரவிலும் இதே பகுதியில் வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். அதனால் ஏற்பட்ட அச்சமும், பதற்றமும் விலகும் முன்பே இலங்கைக் கடல் கொள்ளையர்கள் அடுத்தத் தாக்குதலை நடத்தியிருக்கின்றனர். இதனால் உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டுள்ள நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவே அஞ்சுகின்றனர்.

    கடல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக 2019-ம் ஆண்டில் பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கடல் கொள்ளையர்கள் எதிர்ப்புச் சட்டம் கடந்த ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி கடல் கொள்ளையர்களுக்கு 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க முடியும். எனவே, அந்த சட்டத்தின்படி இலங்கை கடல் கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து அச்சமின்றி மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி பொருட்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை துறையில் இருந்து நேற்று முன்தினம் 50-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க புறப்பட்டனர். ஆறுக்காட்டுதுறையில் இருந்து 22 நாட்டிகல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீனவர்கள் நேற்று முன்தினம் இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது 15-க்கும் மேற்பட்ட இலங்கை கடற்கொள்ளையர்கள் 5 பைபர் படகுகளில் அங்கு வந்தனர். பின்னர் அந்த கடல் கொள்ளையர்கள் ஆறுகாட்டுதுறை மீனவர்களின் 4 விசைப்படகுகள் மற்றும் ஒரு பைபர் படகை அடுத்தடுத்து வழிமறித்து படகில் அத்துமீறி ஏறினர். தொடர்ந்து கத்தி, கம்பி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தமிழக மீனவர்களை தாக்கி படகில் இருந்த மீன்பிடி வலைகள் , திசை காட்டும் கருவி, பேட்டரிகள், வாக்கி டாக்கி மற்றும் மீன்பிடி உபகரணங்களை பறித்துக் கொண்டு மீனவர்களை விரட்டியடித்தனர்.

    இந்த கொடூர தாக்குதலில் மீனவர்கள் பாஸ்கர், அருள்ராஜ், சுப்பிரமணியன், வெற்றிவேல், செந்தில்அரசன், மருது, வினோத் உள்பட 8 பேர் பலத்த காயமடைந்தனர்.

    அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை நாகை மாவட்ட கலெக்டர் ஜானிவாம் டர்கீஸ் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    இந்நிலையில் அந்தப் பதற்றம் தணிவதற்குள் இன்று அதிகாலை மீண்டும் இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தி உள்ளனர்.

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் வைத்தியநாதசுவாமி (வயது 45) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த ராமராஜன், செல்வராஜ் ஆகியோர் கடந்த 21-ந் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நேற்று இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 மீனவர்களையும் கொடூரமாக தாக்கினர். பின்னர் படகில் வைத்திருந்த ஜிபிஎஸ் கருவி, வாக்கிடாக்கி, பேட்டரி, செல்போன், 20 லிட்டர் டீசல், விலை உயர்ந்த மீன்கள் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி சென்றனர். இதன் மதிப்பு சுமார் ரூ. 2 லட்சமாகும். இன்று காலை மீனவர்கள் கரை திரும்பினர். இது குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    கடந்த 2 நாட்களில் 3 முறை நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி பொருட்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியத்திற்கு முற்றுபுள்ளி வைத்து கடலில் அச்சமின்றி மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தொடர்ந்து தாக்குதலில் நிலை குலைந்து போன மீனவர்கள் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து அச்சமின்றி மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இலங்கை மீனவர்கள் கடலில் நீரோட்டம் பார்த்து கூண்டு அமைத்து மீன்பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
    • தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் முறையால் இலங்கை பகுதியில் மீன்வளம் பாதிக்கப்படுவதால், அவர்கள் மீது எல்லை தாண்டி வந்ததாக கூறி வழக்குப்பதிவு செய்து இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து செல்கிறார்கள்.

    ராமேசுவரம்:

    கடலுக்கு செல்லும் மீனவர்கள் அதிகப்படியான மீன்பாடுகளுடன் கரை திரும்ப வேண்டும் என்று வேண்டிய காலம் போய், இலங்கை கடற்படையினரிடம் சிக்காமல் பத்திரமாக கரை திரும்ப வேண்டும் என்று வேண்டும் காலம் வந்து விட்டது. அந்த அளவுக்கு தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் மொத்தம் 650 விசைப்படகுகள் உள்ளன. இதில் நேற்று காலை மீன்வளத்துறை அனுமதியுடன் 352 படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.

    ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்களின் 10-க்கும் மேற்பட்ட படகுகளை சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர் அவர்களை மிரட்டும் வகையில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதோடு, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலைகளையும் அறுத்து கடலில் வீசி எறிந்தனர். இதனால் மீனவர்கள் குறைந்த அளவு மீன்களுடன் கரை திரும்பினர்.

    அதேபோல் இன்று அதிகாலை மீண்டும் சிங்கள கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். நமது மீனவர்கள் கடலில் வலைகளை வீசி எதிர்திசையில் இழுத்துச் சென்று மீன் பிடிப்பார்கள். ஆனால் இலங்கை மீனவர்கள் கடலில் நீரோட்டம் பார்த்து கூண்டு அமைத்து மீன்பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் முறையால் இலங்கை பகுதியில் மீன்வளம் பாதிக்கப்படுவதால், அவர்கள் மீது எல்லை தாண்டி வந்ததாக கூறி வழக்குப்பதிவு செய்து இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து செல்கிறார்கள். இன்று காலையும் ராமேசுவரம் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்த சிங்கள கடற்படையினர் ராட்சத விளக்குகள் மூலம் ஒளியை ஏற்படுத்தி, மீனவர்கள் மீது தங்களது ரோந்து படகில் குவித்து வைத்திருந்த கற்களை எடுத்து சரமாரியாக வீசியுள்ளனர்.

    இதனை சற்றும் எதிர்பாராத ராமேசுவரம் மீனவர்கள் வலைகளை சுருட்டிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர். இருந்தபோதிலும் சில கி.மீ. தூரம் வரை இலங்கை கடற்படையினர் தங்களது ரோந்து படகில் மீனவர்களை துரத்தி வந்து விரட்டியடித்துள்ளனர். இதையடுத்து காயங்களுடன் மீனவர்கள் கரை திரும்பினர்.

    இதுபற்றிய தகவலின் பேரில் ராமேசுவரம் மீன்வளத்துறை அதிகாரிகள் உடனடியாக கடலுக்குள் சென்று சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்தை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேலை நிறுத்த போராட்டம், இயற்கை சீற்றம், இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல்கள், சிறைப்பிடிப்பு, விசைப்படகுகள் பறிமுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மீனவர்கள் மீன்பிடி தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

    • மீனவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு செருதூர் மீனவர்கள் 4 பேர் கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் பாலு என்பவருக்கு சொந்தமான விசைப்படகு ஒன்றில் ராமேசுவரம் சுடுகாட்டம்பட்டி பகுதியை சேர்ந்த செங்கோல் பிராங்க்ளின் (வயது 34), ஜஸ்டின், அஸ்வால்ட் உள்ளிட்ட 4 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    இந்த மீனவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது 2 ரோந்து கப்பலில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் திடீரென ராமேசுவரம் மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

    மேலும் அவர்களை அங்கு மீன்பிடிக்க விடாமல் விரட்டி அடித்தனர். இலங்கை கடற்படையினர் கற்களை வீசியதில் மீனவர் செங்கோல் பிராங்கிளினின் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், படகில் இருந்த மற்ற 3 மீனவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த 4 மீனவர்களும் அவசர அவசரமாக கரை திரும்பினர்.

    இதையடுத்து நேற்று காயம் அடைந்த செங்கோல் பிராங்கிளினை ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்பினார்.

    இதற்கிடையே மீன்துறை அதிகாரிகளும், மத்திய, மாநில உளவு பிரிவு போலீசாரும் காயமடைந்த மீனவரை சந்தித்து இலங்கை கடற்படை தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

    கடந்த வாரம் ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை துப்பாக்கியால் சுட்டு இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த நிலையில் தற்போது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் மீனவர் ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே கோடியக்கரை அருகே 10 நாட்டிக்கல் தூரத்தில் நேற்று முன்தினம் இரவு மீன் பிடித்துக்கொண்டிருந்த நாகை செருதூர் மீனவர்கள் 5 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதுடன், ரூ.4 லட்சம் மதிப்புள்ள பொருட்களையும் பறித்து சென்றனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு செருதூர் மீனவர்கள் 4 பேர் கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    • மீனவர்களை தாக்கி, அவர்களிடம் இருந்து பொருட்களை கொள்ளையடித்து செல்லும் இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது மத்திய- மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • கடலோர காவல் படையினரும், மீன்வளத்துறை அதிகாரிகளும் தாக்கப்பட்ட மீனவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள விழுந்தமாவடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கு சொந்தமான பைபர் படகில் சுப்பிரமணியன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி, முருகேசன், மகாலிங்கம், ராஜகோபால் உள்ளிட்ட 5 பேரும் நேற்று காலை மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    இதேப்போல், மற்றொரு படகில் விழுந்தமாவடி கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன், சண்முகவேல், முருகானந்தம், செல்வம் ஆகிய 4 பேரும் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். மொத்தம் 2 பைபர் படகுகளில் 9 மீனவர்கள் நேற்று நள்ளிரவு கோடியக்கரை தென்கிழக்கே சுமார் 10 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு திடீரென 2 விசைபடகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் சுப்பிரமணியன் படகில் ஏறி கத்தியை காட்டி மிரட்டி மீன்பிடி வலை மற்றும் தொழில்நுட்ப கருவிகளை உள்ளிட்ட பொருட்களை கேட்டுள்ளனர். அவர்கள் அதனை கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் இரும்பு கம்பியால் 5 மீனவர்களையும் சராமாரியாக தாக்கினர். பின்னர், அங்கிருந்த சுமார் 600 கிலோ மீன்பிடிவலையை எடுத்து கொண்டு படகையும் சேதப்படுத்தி விட்டு தப்பி சென்றனர்.

    அதனைத் தொடர்ந்து, இலங்கை கடற்கொள்ளையர்கள் அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான பைபர் படகிற்கு சென்று அவர்களையும் கத்தியை காட்டி மிரட்டி பொருட்களை தருமாறு கேட்டுள்ளனர். அவர்கள் தர மறுத்ததால் கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் 4 மீனவர்களையும் சரமாரியாக தாக்கிவிட்டு படகில் இருந்த மீன்கள், தொழில் நுட்ப கருவிகள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர். இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.5 லட்சமாகும்.

    இன்று காலை இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட 9 மீனவர்களும் விழுந்தமாவடி கடற்கரைக்கு வந்தனர். காயங்களுடன் அவர்களை கண்ட சக மீனவர்கள் அவர்களிடம் கேட்கையில் தாங்கள் தாக்கப்பட்டு குறித்து கூறினர். தொடர்ந்து, கீழையூர் கடலோர காவல் படையில் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து கடலோர காவல் படையினரும், மீன்வளத்துறை அதிகாரிகளும் தாக்கப்பட்ட மீனவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர், அவர்கள் அனைவரும் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதல் சம்பவம் அதிகரித்து வருகிறது. தொடரும் தாக்குதலால் மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களை தாக்கி, அவர்களிடம் இருந்து பொருட்களை கொள்ளையடித்து செல்லும் இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது மத்திய- மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடிக்க இந்திய கடற்படை ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • சமீப காலமாக தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது கவலையளிப்பதாக உள்ளது.
    • மத்திய அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

    சென்னை :

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் 22-1-2024 அன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் IND-TN-10-MM-769 மற்றும் IND-TN-10-MM-750 என்ற பதிவு எண்களைக் கொண்ட மீன்பிடிப் படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், 22-1-2024 அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    சமீப காலமாக தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது கவலையளிப்பதாக உள்ளது என்றும், இத்தகைய போக்கு பதட்டமான சூழ்நிலையை உருவாக்கும் என்பதால், இதில் மத்திய அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இத்தகைய தொடர் கைது நடவடிக்கைகள், தமிழ்ச் சமூகத்தின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பறிப்பதோடு, மீனவ மக்களிடையே அச்சத்தையும், நிச்சயமற்ற சூழலையும் உருவாக்கியுள்ளதாகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவச் சமூகங்களின் கலாசார மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை அச்சுறுத்தும் வகையில் உள்ளதாகவும் முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

    இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண உரிய தூதரக வழிமுறைகளைப் பின்பற்றி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள முதலமைச்சர், மீனவர்கள் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண இந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையேயான கூட்டு நடவடிக்கைக் குழுவினை அமைப்பதன் மூலம் இது சாத்தியமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

    அப்பாவி மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவதைத் தவிர்க்கவும், இந்திய மீனவர்களுக்கும், இலங்கைக் கடற்படையினருக்கும் இடையே நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு ஏதுவாகவும், உரிய தூதரக வழிமுறைகளை மேற்கொண்டு கூட்டு நடவடிக்கைக் குழுவினை கூட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை மந்திரியைக் கேட்டுக்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர், இலங்கைக் காவலில் உள்ள தமிழ்நாடு மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விரைந்து விடுவித்திட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

    ×