என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
- மீனவர்கள் நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசில் புகார் அளித்தனர்.
- காயமடைந்த மீனவர்கள் 5 பேரும் ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை நம்பியார் நகர் பகுதியை சேர்ந்த சந்திரபாபு (வயது 60) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (28), விமல் (26), சுகுமார் (31), திருமுருகன் (31), முருகன்(38), அருண் (27) ஆகிய 6 பேர் நேற்று மதியம் 2 மணிக்கு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் இரவு 8 மணிக்கு கோடியக்கரை கிழக்கே நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது 2 படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 8 பேர் மீனவர்களை கத்தி, இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி அவர்களிடம் இருந்து வெள்ளி செயின், மோட்டார் என்ஜின், செல்போன், ஜி.பி.எஸ் கருவி, பேட்டரி, வாக்கிடாக்கி உள்ளிட்ட பொருட்களை பறித்து சென்றனர்.
இதையடுத்து காயமடைந்த 6 மீனவர்களும் இன்று அதிகாலை 4 மணிக்கு கரை திரும்பினர்.
இதுகுறித்து மீனவர்கள் நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் காயமடைந்த மீனவர்கள் 6 பேரும் ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல் நம்பியார்நகர் பகுதியை சேர்ந்த சசிகுமார் (30) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் சசிக்குமார், உதயசங்கர் (28), சிவசங்கர் (25), கிருபா (29), கமலேஷ்(19) ஆகிய 5 பேர் நேற்று மதியம் 2 மணிக்கு கடலுக்கு புறப்பட்டு சென்றனர். அவர்கள் கோடியக்கரைக்கு கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு 2 படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 8 பேர் மீனவர்களை தாக்கி, அவர்களிடம் இருந்து மோட்டார் என்ஜின், ஜி.பி.எஸ் கருவி, இகோ சவுண்டர், 5 செல்போன்கள், மீன்பிடி வலை உள்ளிட்ட பொருட்களை பறித்து சென்றனர்.
அதைத்தொடர்ந்து இன்று அதிகாலை கரை திரும்பிய மீனவர்கள் இதுகுறித்து நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பின்னர் காயமடைந்த மீனவர்கள் 5 பேரும் ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.






