search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகை மீனவர்களை மீண்டும் தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்: தொடரும் அட்டூழியத்தால் பதட்டம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    நாகை மீனவர்களை மீண்டும் தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்: தொடரும் அட்டூழியத்தால் பதட்டம்

    • மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து அச்சமின்றி மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி பொருட்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை துறையில் இருந்து நேற்று முன்தினம் 50-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க புறப்பட்டனர். ஆறுக்காட்டுதுறையில் இருந்து 22 நாட்டிகல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீனவர்கள் நேற்று முன்தினம் இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது 15-க்கும் மேற்பட்ட இலங்கை கடற்கொள்ளையர்கள் 5 பைபர் படகுகளில் அங்கு வந்தனர். பின்னர் அந்த கடல் கொள்ளையர்கள் ஆறுகாட்டுதுறை மீனவர்களின் 4 விசைப்படகுகள் மற்றும் ஒரு பைபர் படகை அடுத்தடுத்து வழிமறித்து படகில் அத்துமீறி ஏறினர். தொடர்ந்து கத்தி, கம்பி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தமிழக மீனவர்களை தாக்கி படகில் இருந்த மீன்பிடி வலைகள் , திசை காட்டும் கருவி, பேட்டரிகள், வாக்கி டாக்கி மற்றும் மீன்பிடி உபகரணங்களை பறித்துக் கொண்டு மீனவர்களை விரட்டியடித்தனர்.

    இந்த கொடூர தாக்குதலில் மீனவர்கள் பாஸ்கர், அருள்ராஜ், சுப்பிரமணியன், வெற்றிவேல், செந்தில்அரசன், மருது, வினோத் உள்பட 8 பேர் பலத்த காயமடைந்தனர்.

    அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை நாகை மாவட்ட கலெக்டர் ஜானிவாம் டர்கீஸ் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    இந்நிலையில் அந்தப் பதற்றம் தணிவதற்குள் இன்று அதிகாலை மீண்டும் இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தி உள்ளனர்.

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் வைத்தியநாதசுவாமி (வயது 45) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த ராமராஜன், செல்வராஜ் ஆகியோர் கடந்த 21-ந் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நேற்று இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 மீனவர்களையும் கொடூரமாக தாக்கினர். பின்னர் படகில் வைத்திருந்த ஜிபிஎஸ் கருவி, வாக்கிடாக்கி, பேட்டரி, செல்போன், 20 லிட்டர் டீசல், விலை உயர்ந்த மீன்கள் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி சென்றனர். இதன் மதிப்பு சுமார் ரூ. 2 லட்சமாகும். இன்று காலை மீனவர்கள் கரை திரும்பினர். இது குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    கடந்த 2 நாட்களில் 3 முறை நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி பொருட்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியத்திற்கு முற்றுபுள்ளி வைத்து கடலில் அச்சமின்றி மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தொடர்ந்து தாக்குதலில் நிலை குலைந்து போன மீனவர்கள் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து அச்சமின்றி மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×