என் மலர்
நீங்கள் தேடியது "Mayiladuthurai"
- வைரமுத்துவை தான் திருமணம் செய்து கொள்வேன் என அந்த பெண் தெரிவித்துள்ளார்.
- மயிலாடுதுறை போலீசார் வழக்குபதிவு செய்து இருவரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம், அடியமங்கலம் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் குமார். இவருக்கு வைரமுத்து (வயது 28) என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். வைரமுத்து மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், இவரும் அதே பகுதியை சேர்ந்த 26 வயது பெண்ணும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிகிறது. இதற்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இதனால் இரு குடும்பத்திற்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பெண்ணின் தாயார் வைரமுத்து வேலை பார்க்கும் கடைக்கு சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து, பெண்ணின் குடும்பத்தார் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், இருதரப்பினரையும் அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் வைரமுத்துவை தான் திருமணம் செய்து கொள்வேன் என அந்த பெண் தெரிவித்துள்ளார். பின்னர், இருவருக்கும் சில மாதங்களில் பதிவு திருமணம் செய்து வைப்பதாக வைரமுத்துவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, அந்த பெண் தான் பணிபுரிந்து வரும் சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில், நேற்று (திங்கட்கிழமை) இரவு வழக்கம்போல் வைரமுத்து வேலையை முடித்து விட்டு, மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மகும்பல் அவரை வழிமறித்தனர். பின்னர், அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வைரமுத்துவை ஓட ஓட விரட்டி சென்று, கழுத்து, கைகளில் சரமாரியாக வெட்டி விட்டு, அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
ரத்த வெள்ளத்தில் சாலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வைரமுத்துவை உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், அதற்குள் வைரமுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். இந்த கொலை குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குபதிவு செய்து இருவரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இதில் தொடர்பு டையவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். காதலியின் குடும்பத்தினர் இதில் ஈடுபட்டு இருக்கிறார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை துரிதப்படுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து, அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் அடியமங்கலம் கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அங்கு மிகவும் பதட்டமான சூழல் நிலவுகிறது.
- டி.எஸ்.பி. சுந்தரேசன் அலுவலகத்திற்கு நடந்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது.
- லஞ்சம் வாங்காமல் நேர்மையாக பணிபுரிவதால் எனக்கு தண்டனை தருகிறார்கள்.
மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி.யாக பணிபுரிந்து வருபவர் சுந்தரேசன். அவருக்கு வழங்கப்பட்டிருந்த அலுவலக வாகனம் திரும்ப பெறப்பட்டதால், அவரது வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு நடந்து சென்றதாக கூறி ஒரு வீடியோ இணையத்தில் வைரலானது.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுந்தரேசன், "லஞ்சம் வாங்காமல் நேர்மையாக பணிபுரிவதால் எனக்கு தண்டனை தருகிறார்கள். எனது அலுவலக வாகனத்தை எடுத்துக்கொண்டு மனரீதியாக என்னை சித்ரவதை செய்கிறார்கள். நான் தன்னிச்சையாக பேட்டியளிப்பதால் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் 'சஸ்பெண்டு' செய்யப்படுவேன் என்றும் தெரிந்துதான், இந்த பேட்டி அளிக்கிறேன்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி. சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது ஊழியருக்கான விதிகளை மீறி ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதாக கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- காயத்துடன் கரை திரும்பிய 4 மீனவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
- வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள புதுப்பேட்டையில் இருந்து கவிதாஸ் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் ஜெகன் (வயது 36), ராமகிருஷ்ணன் (67), செந்தில் (46), சாமுவேல் (31) ஆகியோர் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அப்போது, நாகை மாவட்டம், கோடியக்கரை தென்கிழக்கே சுமார் 5 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 பேர் புதுப்பேட்டை மீனவர்களை வழிமறித்து கத்தி மற்றும் கட்டையால் தாக்கி மீனவர்கள் வைத்திருந்த ஜி.பி.எஸ்.கருவி, செல்போன், வாக்கி டாக்கி உள்ளிட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பி சென்றனர்.
பின்னர், காயத்துடன் கரை திரும்பிய 4 மீனவர்களுக்கும் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி, தமிழக எல்லை பகுதிக்கு வந்து புதுப்பேட்டை மீனவர்களை ஆயுதம் கொண்டு தாக்கி பொருட்களை கொள்ளையடித்து சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.
- அனைத்து மந்திரங்களும் நான்கு நாட்கள் முதல் 10 நாட்கள் வரை தொடர்ந்து வாசிக்கப்படும்.
- கந்த சஷ்டி மற்றும் துலா மாதத்தை முன்னிட்டு வேத பாராயணம் செய்யும் நிகழ்ச்சி.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில், துலா மாதம் எனப்படும் ஐப்பசி மாதம் கொண்டாடப்படும் துலா உற்சவம் புகழ் பெற்றதாகும்.
இந்த மாதத்தில் நகரம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வேத பாராயணங்கள் செய்யப்படும். வேதபாராயணம் செய்வதற்கு உரிய அந்தணர்களைக் கொண்டு வேத பாராயணத்துக்குரிய ருத்ரம், சமகம், புருஷ ஸூக்தம், நாராயண ஸூக்தம், பாக்ய ஸூக்தம், ஸ்ரீ ஸூக்தம் மற்றும் அனைத்து மந்திரங்களும் நான்கு நாட்கள் முதல் 10 நாட்கள் வரை தொடர்ந்து வாசிக்கப்படும்.அதன் ஒரு பகுதியாக சேந்தங்குடி ராகவேந்திரர் ஆராதனை கமிட்டி சார்பில் உலக நன்மை வேண்டியும், கந்த சஷ்டி மற்றும் துலா மாதத்தை முன்னிட்டு வேத பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நான்கு நாட்களாக சேந்தங்குடி அக்ரஹாரத்தில் நடைபெற்று வருகிறது. அந்தணர்கள் ஒன்பது பெயர் வேதங்களை பாராயணம் செய்தனர்.
நிகழ்ச்சியில் பெங்களூர் ரவிகுமார் கலந்து கொண்டார். கிரி தலைமையிலான விழா குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- பல இடங்களில் ஆய்வு செய்தபோது விவசாயம் முற்றிலும் அழிந்து போய் உள்ளது தண்ணீர் வடிந்தாலும் அந்த பயிர்களை இனி காப்பாற்ற முடியாது, கால்நடைகள், வீடுகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
- பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு ஏக்கருக்கு குறை ந்தபட்சம் ரூ 30000 வழங்க வேண்டும்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கனமழையால் மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட குடியிருப்பு மற்றும் விளைநிலங்களை பார்வையிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மழையால் பாதிக்க ப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் கடந்த 14ஆம் தேதி நேரடியாக வந்து பார்வையிட்டு சென்றுள்ளார்அமைச்சர் மெய்யநாதன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து நிவாரண உதவிகளை மேற்கொண்டு வருகிறார்.
தொடர் மழையால் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 764 பேர் முகாம்களில் தங்கி உள்ளனர்.
இதுவே மிகப்பெரிய பாதிப்புக்கு அடையாளம் இரண்டு லட்சம் மக்கள் கையேந்துகிற நிலைமை ஏற்பட்டு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு அரசு நிவாரண உதவிகளை வழங்கி உள்ளது.
பல இடங்களில் ஆய்வு செய்தபோது விவசாயம் முற்றிலும் அழிந்து போய் உள்ளது தண்ணீர் வடிந்தாலும் அந்த பயிர்களை இனி காப்பாற்ற முடியாது, கால்நடைகள், வீடுகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
அதேபோல் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
முதல்வர் பாதிப்புக்கு ஏற்றவாறு நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார் முதல்வர் அறிவித்த ரூபாய் ஆயிரம போதாது கூடுதலாக நிவாரணம் அறிவிக்க வேண்டும்.
மயிலாடுதுறை மாவட்டத்தை இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு ஏக்கருக்கு குறை ந்தபட்சம் ரூ 30000 வழங்க வேண்டும். பெற்ற குழந்தை தாய்யை பறிகொடுத்தது போல் சம்பா சாகுபடிவிவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த பயிரை பறிகொடுத்து தவித்து வருகின்றனர்.
மீண்டும் மூன்று நாட்களுக்கு அதிக மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் மேலும் பாதிப்பு ஏற்படும் விவசாயிகள் ஒரு ஆண்டுகளுக்கான வருமானத்தை முற்றிலும் இழுந்துவிட்டனர்.
மேலும் விவசாயிகளின் மாடி வீடுகள், தொகுப்பு வீடுகளுக்கு அரசு நிவாரணம் அறிவித்துள்ளது தனை உயர்த்தி வங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
நாகை எம்பி செல்வ ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், நிர்வாகிகள் சிவராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- மயிலாடுதுறை நகராட்சியில் பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
- ராஜன் தோட்டத்தை சுற்றியுள்ள பகுதியில் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அன்னை இந்திரா நகரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனைபட்டாவழங்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம் முன்பு மாநில குழு உறுப்பினர் பாபுசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், மயிலாடுதுறை நகராட்சியில் பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மயிலாடுதுறை ராஜன் தோட்டத்தை சுற்றியுள்ள பகுதியில் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
- மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்துள்ளனர்.
- சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள 2-ம் நம்பர் புதுத்தெருவில் ஸ்ரீ மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோயில் வாசலில் உண்டியல் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அங்கு வந்த மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்துள்ளனர்.
உண்டியல் உடைக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். இதைத் தொடர்ந்து மர்மநபர்கள் உண்டியலில் உள்ள பாதி பணத்தை அள்ளிக்கொண்டு அருகில் உள்ள இருட்டில் பதுங்கினர். பின்னர் சிறிதளவு பணத்தை அங்கேயே விட்டு, விட்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
- 51 பணிகள் ரூ.8 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் 749.74 கி.மீ நீளத்திற்கு தூர்வார முடிவு செய்யப்பட்டுள்ளது.
- மேமாத்தூர், வாழ்க்கை, அன்னவாசல் ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 657 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காவிரி, வீரசோழன், மஞ்சளாறு, மகிமலையாறு, விக்ரமண் ஆறு, அய்யாவையானாறு, பழவாறு, மண்ணியாறு, தெற்குராஜன் ஆகிய ஆறுகளிலிருந்து பிரியும் பிரிவு வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களை தூர்வாரிட விவசாயிகள், பொதுமக்கள் சார்பில் பெறப்பட்ட மனுக்கள் மற்றும் கோரிக்கைகளின் அடிப்படையில் நடப்பாண்டு 2023-24, 51 பணிகள் ரூ.8 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் 749.74 கி.மீ நீளத்திற்கு தூர்வார முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பாசன வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள் தூர்வாரபடவுள்ளதால் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் வட்டங்களை சேர்ந்த 71ஆயிரத்து 811.69 ஏக்கர் நிலங்களுக்கு பாசனம் தங்குதடையின்றி கடைமடை வரை சென்றடையும்.
மேலும் மழை வெள்ளக்காலங்களின் பாசன நிலங்களில் தேங்கும் வெள்ள நீர் விரைவாக வடியவும் உறுதி செய்யப்படும்.அந்த வகையில் நேற்று மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேமாத்தூர் ஊராட்சியில் மஞ்சளாற்றின் வலது கரையில் பிரியும் வாழ்க்கை வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்றது.
இதில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி, பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன் ஆகியோர் கலந்து கொண்டு வாய்க்கால் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தனர்.
இந்த வாய்க்கால் தூர்வாரும் பணி 25.04 கி.மீ தூரத்திற்கு ரூ.22.05 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறுகிறது. மேற்கண்ட வாய்க்கால் தூர்வாருவதால் தரங்கம்பாடி வட்டத்தை சார்ந்த மேமாத்தூர், வாழ்க்கை, அன்னவாசல் ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 657 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், நீர்வளத்துறை செயற்பொறியாளர் சண்முகம், செம்பனார்கோயில் ஒன்றியக் குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகர், உதவி செயற்பொறியாளர்கள் பாண்டியன், ஜெயராமன், சீனிவாசன், சண்முகம், உதவி பொறியாளர்கள் விஜயபாஸ்கர், வீரப்பன், வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர்ஸ்ரீதர், ஒப்பந்தக்காரர் வேல்முருகன்,தரங்கம்பாடி தாசில்தார் காந்திமதி, செம்பனார்கோயில் ஒன்றிய ஆணையர் மீனா, மற்றும் உழவர் குழுவினர், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- பாத பூஜை செலுத்தி மரியாதை செலுத்தினர்.
- இதில் திருக்கடையூர் மகேஷ் குருக்கள் உள்ளிட்ட ஏராள மான ஆதீனம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் பழமை வாய்ந்த சைவ ஆதீன திருமடமான தருமபுரம் ஆதீனம் அமைந்துள்ளது.
ஆதீனத்துக்கு சொந்தமான சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் ஆலய திருக்கோயில் கும்பாபிஷேகம் வரும் 24ம் தேதி புதன்கிழமை நடைபெறுகின்றது.
இதில் பங்கேற்பதற்காக தருமபுரம் ஆதீன 27 வது மடாதிபதி, தருமபுர ஆதீன மடத்திலிருந்து ஆதீன பூஜா மூர்த்தி செந்தமிழ் சொக்கநாதருடன் குருலிங்க சங்கம பாதயாத்திரையை துவங்கினார்.
ஒட்டகம் குதிரை ஆகிய முன்னே செல்ல பரிவாரங்களுடன் மேளதாளங்கள் முழங்க பாதயாத்திரையாக சென்ற மடாதிபதிக்கு சேந்தங்குடி வள்ளலார் கோயில் நிர்வாகிகள் பூர்ண கும்பம் வைத்து, பாத பூஜை செலுத்தி மரியாதை செலுத்தினர்.
முன்னதாக ஆலய மடத்தில் செந்தமிழ் சொக்கநாதருக்கு சிறப்பு ஆராதனைகள் செய்ய ப்பட்டது.
இதில் திருக்கடையூர் மகேஷ் குருக்கள் உள்ளிட்ட ஏராள மான ஆதீனம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- 2023-ம் ஆண்டுக்கான கோடை விழா கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
- 16 மாநிலங்களை சேர்ந்த 270 கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
தரங்கம்பாடி:
இந்திய கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் மற்றும் மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை இணைந்து நடத்திய 2023-ஆம் ஆண்டுக்கான கோடை விழா கலைநிகழ்ச்சி மயிலாடுதுறை தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
3 நாள் நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு, ராஜஸ்தான், மேற்குவங்கம், உத்தரகாண்ட், ஆந்திரபிரதேசம், கேரளா, கர்நாடகா, குஜராத், தெலுங்கானா, ஒடிசா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், ஜார்கண்ட், கோவா ஆகிய 16 மாநிலங்களில் சேர்ந்த 270 கலைஞர்கள் பங்கேற்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாள் நடைபெறும் இக்கலை நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியை, மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ராஜகுமார், தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மைய அதிகாரி நாதன், சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை பரணிதரன், சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம், கலைத்தாய் அறக்கட்டளை நிறுவனர் கிங்பைசல் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தனர்.
இதில், மத்திய பிரதேச மாநிலத்தில் இயற்கை பேரழிவுகள் மற்றும் நோய்களிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக ஷிதலாதேவிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடத்தப்படும் படாய் நாட்டுப்புற நடனம், சத்தீஸ்கர் மாநிலத்தின் சத்னாமி சமூகத்தினர் மகி பூர்ணிமாவில் நிகழ்த்தும் பந்தி நாட்டுபுற நடனம், ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த குஜராத் பழங்குடியினர் வேட்டையாடிய பின்னர் ஏற்படும் மகிழ்ச்சியை பிரதிபலிக்கும் விதமாக ஆடும் சித்தி டமால் நடனம், உத்தர பிரதேச மாநிலம் பிரஜ் பகுதியை சேர்ந்த மக்கள் ராதா மற்றும் கிருஷ்ணர் இடையேயான காதல் அத்தியாயத்தில் இருந்து உருவாக்கப்பட்டு, ஆடும் மயூர் ஹோலி நடனம் ஆகிய நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.இதில், காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர் நவாஸ், வட்டார தலைவர் ஜம்பு கென்னடி, மாவட்ட பொதுச் செயலாளர் ரியாத், நகர செயலாளர் ராமகிருஷ்ணன், நகர்மன்ற உறுப்பினர் சௌ.சர்வோதயன் மற்றும் திரளான ரசிகர்கள் பங்கேற்று கண்டு ரசித்தனர்.
- மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணிகளுக்கான டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டு வருகிறது.
- மயிலாடுதுறையில் மருத்துவக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு மாத்திரைகளை வழங்கினார். தொடர்ந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சுமார்ரூ. 7 கோடியே 30 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள எம் ஆர் ஐ ஸ்கேன் சென்டரை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மருத்துவமனையில் ரூ. 45 கோடி 50 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்டுமான பணியை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி, எம்.பி, ராமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் ராஜகுமார் நிவேதா முருகன் பன்னீர்செல்வம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்துறை பணியாளர்கள் பற்றாக்குறையை நீக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் , மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இந்த பணிகள் துவங்கி 33 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழக அரசின் திட்டமான மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற பெயரில் 6 மாவட்டங்கள் விடுபட்டுள்ளதாகவும், இதற்கு ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு தேவை என்றும் இதற்காக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை பலமுறை பார்த்து வந்துள்ளதாகவும் விரைவில் இதற்கான ஒப்புதல் கிடைக்கும் கிடைத்தவுடன் மயிலாடுதுறை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் முதலில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மயிலாடுதுறையில் இருந்து காலை புறப்பட்டு மதியம் சேலம் சென்றடைகிறது.
- மறு மார்க்கமாக சேலத்தில் இருந்து மதியம் புறப்பட்டு இரவு மயிலாடுதுறை வந்தடைகிறது.
சீர்காழி:
மயிலாடுதுறை எம்பி இராமலிங்கம் , ரயில்வே துறை முதன்மை செயல் இயக்குனர் தேவேந்திர குமாருக்கு விடுத்த கோரிக்கை ஏற்கப்பட்டு மயிலாடுதுறை முதல் சேலம் வரை எக்ஸ்பிரஸ் ரெயில் வருகின்ற 28 ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது.
இது குறித்து, புது தில்லி முதன்மை செயல் இயக்குனர் தேவேந்திர குமாருக்கு, கடந்த மார்ச் மாதம் 12ஆம் தேதி மயிலாடுதுறை எம் பி ராமலிங்கம் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை-சேலம் விரைவு ரயில் சேவை குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு, 13.5.2022, 29.11.2022 தேதிகளில் எனது கடிதத்தில் கீழ்கண்டவாறு வலியுறுத்தி இருந்தேன்.
எனது மயிலாடுதுறை தொகுதி பயணிகள், நாமக்கல் வழியாக சேலத்திற்கு நேரடி ரயில் சேவையை கோரி வருகின்றனர்.
இந்த சேவையை கருத்தில் கொண்டு, மயிலாடுதுறை-திருச்சி எக்ஸ்பிரஸ்,திருச்சி-கரூர் எக்ஸ்பிரஸ் கரூர்-சேலம் எக்ஸ்பிரஸ் இணைக்கப்பட வேண்டும் எனவும், இதே கோரிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேலம் எஸ்.ஆர். பார்த்திபன் நாமக்கல் ஏ.கே.பி சின்ராஜ் ஆகியோரும் வைத்துள்ளனர்.
அந்த கோரிக்கைகளின் அடிப்படையில், தெற்கு ரயில்வே கடந்த மாதம் ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காக அந்த ரயில்களை இணைக்கும் திட்டத்தை அனுப்பியுள்ளது.
பயணிக்கும் பொதுமக்க ளின் நலன் கருதி உடனடியாக ஒப்புதல் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இது சம்பந்தமாக உங்கள் முன்கூட்டிய சாதகமான பதிலை எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு, மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம் தனது கோரிக்கைக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதனை அடுத்து, கோரிக்கை ஏற்கப்பட்டு, தெற்கு ரயில்வே வெளியிட்டு ள்ள அட்டவணையில் தெரிவித்திருப்பதாவது:
மயிலாடுதுறையில் காலை 6:20 க்கு புறப்பட்டு குத்தாலம், நரசிங்கன்பேட்டை, ஆடுதுறை, திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், கும்பகோணம், தாராசுரம், சுவாமிமலை, சுந்தரபெரு மாள்கோவில், பாபநாசம், பண்டாரவாடை, அய்ய ம்பேட்டை, பசுபதிகோவில், திட்டை தஞ்சாவூர், ஆலக்குடி, பூதலூர், திருவெறும்பூர், திருச்சி, கரூர், நாமக்கல், ராசிபுரம் ஆகிய அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று, மதியம்1.45 மணிக்கு சேலம் சென்றடைகிறது.
இதேபோல் மறு மார்க்கமாக, சேலத்தில் மதியம் 2.05மணிக்கு, புறப்பட்டு இரவு 9.40மணிக்கு மயிலாடுதுறையை அடைகிறது.இவ்வாறு ரயில்வே துறை வெளியிட்டு ள்ள அட்ட வணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையிலிருந்து சேலத்திற்கு, நாமக்கல் வழியாக நேரடியாக இயக்கப்படும் விரைவு ரயிலை இயக்குவதற்கு ஒப்புதல் அளித்த ரயில்வே துறைக்கு நன்றியையும், விரைவு ரயில் இயக்கத்திற்கு வரவேற்பையும் எம். பி. ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.






