என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மயிலாடுதுறையில் பள்ளி வேன் மீது தனியார் வேன் மோதி விபத்து - 27 மாணவர்கள் காயம்
    X

    மயிலாடுதுறையில் பள்ளி வேன் மீது தனியார் வேன் மோதி விபத்து - 27 மாணவர்கள் காயம்

    • பள்ளி வேன் நீடூரில் இருந்து 31 மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு வந்து கொண்டிருந்தது.
    • விபத்து குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி கிராமத்தில் தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பிரி கேஜி முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

    இன்று காலை வழக்கம் போல் பள்ளி வேன் நீடூரில் இருந்து 31 மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு வந்து கொண்டிருந்தது.

    அப்போது மயிலாடுதுறை பஸ் நிலையம் அருகே சி.பி.எஸ்.இ. பள்ளியின் வேன் வந்தபோது, பின்னால் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களை ஏற்றிக்கொண்டு வந்த மற்றொரு தனியார் வேன் மோதியது.

    இந்த விபத்தில் சி.பி.எஸ்.சி. பள்ளி வேனில் இருந்த 27 மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து காயம் அடைந்த மாணவர்களை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கு அவர்களுக்கு தலைமை டாக்டர் மருதவாணன் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் பதறியடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு வந்தனர்.

    இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் பின்னால் மற்றொரு வேனில் வந்த பள்ளி மாணவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.

    இதையடுத்து தனியார் வேனை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய டிரைவர் பிரபுவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×