என் மலர்
நீங்கள் தேடியது "ராமேசுவரம் மீனவர்கள்"
- ராமேசுவரத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.
- வேலைநிறுத்தம் காரணமாக மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
ராமேசுவரம்:
தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை படையினர் அவர்களை சிறை பிடிப்பதும், பல நேரங்களில் தாக்கி விரட்டி அடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி காரைக்காலை சேர்ந்த 25 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நடந்த ஒரு நாள் இடைவெளியில் 18-ந்தேதி மன்னர் வளைகுடா, நெடுந்தீவு கடல் பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம், மண்டபத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஒரே வாரத்தில் 47 தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் மீனவ மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இலங்கை சிறையில் உள்ள 104 தமிழக மீனவர்களையும் 200-க்கும் மேற்பட்ட விசைப்படைகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்தார்.
இந்த நிலையில் ராமேசுவரம் உள்ளிட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி இன்று ஒரு நாள் ராமேசுவரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று ராமேசுவரத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. இதன் காரணமாக 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்தன. வேலைநிறுத்தம் காரணமாக மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
வழக்கமாக வார இறுதி நாட்களில் மீன் வியாபாரம் களை கட்டும் நிலையில் வேலைநிறுத்தம் காரணமாக இன்று ராமேசுவரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் ரூ.1 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை தங்கச்சி மடம் வலசை பஸ் நிறுத்தம் முன்பு மீனவர் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் மீனவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையின் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் ஒவ்வொரு முறையும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் கடலுக்கு சென்று வருகிறோம். இதற்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் உடல், மனநலம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அவர்களின் உடல்நலம் மற்றும் குடும்பத்தினரின் நிலையை கருதி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றனர்.
- ராமேசுவரம் பகுதியில் சாலைகளில் மணல் புழுதியாக பறந்து சென்றதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதியடைந்தனர்.
- மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடைவிதித்தனர்.
ராமேசுவரம்:
வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி இருப்பதால் ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதலே வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் படகுகள் துறைமுக கடல் பகுதியில் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
பலத்த சூறாவளி காற்று காரணமாக பாம்பனில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம் பகுதியில் சாலைகளில் மணல் புழுதியாக பறந்து சென்றதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதியடைந்தனர். இதேபோல ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதியிலும் வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறவாளி காற்று வீசியது.
இந்தநிலையில் பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் இருந்து நேற்று விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தயாராகி இருந்தனர். ஆனால் மீன் துறை அதிகாரிகள் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பலத்த சூறாவளி காற்று வீசும் என்பதோடு கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் மூலம் எச்சரிக்கை வந்துள்ளதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல டோக்கன் வழங்க மறுத்து விட்டனர். மேலும், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதியில் இருக்கும் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடைவிதித்தனர்.
இதன் காரணமாக, ராமேசுவரம் பகுதியிலும் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் இன்று முதல் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 1300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 600-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் மீன் பிடிக்க செல்லாமல் துறைமுக கடல் பகுதியில் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதே போல் பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளிலும் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்களும் மீன்பிடிக்க செல்லவில்லை.
இந்த தடை உத்தரவால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் நேற்று சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலைவாய்ப்பை இழந்தனர். இதேபோல மண்டபம் பகுதியிலும் நேற்று மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் தெற்கு துறைமுக பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
- வடகடல் மற்றும் தென்கடல் நாட்டுப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
- ராமேசுவரம், மண்டபம் பகுதி மீனவர்களுக்கு இன்று கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை.
ராமேசுவரம்:
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
ராமேசுவரத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. தங்கச்சிமடம் பகுதியில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இந்த நிலையில் நேற்றும் விட்டு விட்டு மழை பெய்தது. மேலும் கடல் சீற்றம், சூறாவளி காற்று காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் கடந்த ஒரு வாரமாக அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மணிக்கு 45 முதல் 65 கி.மீட்டர் வரை கடல் காற்று வீசக்கூடும் வழக்கத்தை விட கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல இன்று தடை விதிக்கப்படுகிறது. மேலும் வடகடல் மற்றும் தென்கடல் நாட்டுப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. தங்கு தளத்தில் உள்ள விசைப்படகுகளை இடைவெளி விட்டு பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்த வேண்டும் என மீன்வளத்துறை அறிவுறுத்தியது.
அதன்படி ராமேசுவரம், மண்டபம் பகுதி மீனவர்களுக்கு இன்று கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை. இதனால் 500-க்கும் மேற்பட் விசைப்படகுகள், நாட்டு படகுகள், துறைமுகம், மீன்பிடி இறங்கு தளங்களில் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டி ருந்தது. மீன்பிடி தடையால் 15 ஆயிரம் மீனவர்கள் பாதிக்கப்பட்டனர்.
- ராமேசுவரம் பகுதியில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
- மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளோம்.
ராமேசுவரம்:
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த 11-ம் தேதி முதல் ராமேசுவரம் மீனவர்கள் கால வரையற்ற வேலைநிறுத்தத்தை நடத்தி வந்தனர்.
இதனால் ராமேசுவரம் பகுதியில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக ரூ.15 கோடி வரை மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
இதனிடையே, கடந்த 19-ந் தேதி மீனவர்களின் விடுதலை கோரிக்கையை வலியுறுத்தி தங்கச்சி மடத்தில் பெண்கள் உள்பட 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ராமேசுவரத்திலிருந்து தாம்பரம் செல்லும் ரெயிலை மறித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் மீனவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், கடந்த 12 நாட்களாக ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் விசைப்படகு மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளனர். இன்று முதல் அவர்கள் மீன்பிடிக்க செல்லவும் திட்டமிட்டு உள்ளனர்.
இதுகுறித்து அனைத்து விசைப்படகு மீனவர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சேசுராஜா கூறுகையில், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்வது குறித்தும், மீனவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பது குறித்தும் தமிழக முதலமைச்சர் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளரை சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளோம் என்றார்.
இதையடுத்து வழக்கம் போல் இன்று முதல் ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் இந்திய கடல் எல்லையை தாண்டாமல் மிகவும் பாதுகாப்புடன் மீன்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
- மூன்று முறை விசாரணை வந்தபோது மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டது.
- இனிமேல் இலங்கை கடற்பகுதியில் மீன் பிடிக்க கூடாது என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடந்த மாதம் மீன் பிடிக்க சென்றனர். இதில் ராமேசுவரத்தை சேர்ந்த 7 மீனவர்கள் ஒரு படகில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்ததாக கூறி அவர்களை சிறைபிடித்து சென்றனர். விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 7 மீனவர்கள் நீதிபதி உத்தரவின்படி வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். மூன்று முறை விசாரணை வந்தபோது மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கைதான 7 மீனவர்களுக்கும் தலா ரூ.1.75 லட்சம் (இலங்கை மதிப்பு) அபராதத்துடன் விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் அபராத தொகை செலுத்த தவறினால் 6 மாத கால சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் இனிமேல் இலங்கை கடற்பகுதியில் மீன் பிடிக்க கூடாது என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.
இதேபோல் கடந்த ஆண்டு எல்லைதாண்டி வந்ததாக கூறி கைதான ராமேசுவரத்தை சேர்ந்த 23 மீனவர்களின் வழக்கு இன்று மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மீனவர்களின் கைரேகை ஒத்துப்போகவில்லை எனக்கூறி மீனவர்கள் காவலை நீட்டிப்பு செய்து வழக்கை வருகிற 29-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.
- இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட சிறுவன் உள்பட 15 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
- விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 15 பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
ராமேசுவரம்:
கச்சத்தீவு அருகே உள்ள கடல் பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர் கதையாக நடந்து வருகிறது.
அதனை தடுக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட சிறுவன் உள்பட 15 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கான நீதிமன்ற காவல் இன்று முடிவ டைந்தது. இதையடுத்து ராமேசுவரம் மீனவர்கள் 15 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, 15 மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் விடுவிக்கப்பட்ட 15 பேரும் மீண்டும் எல்லைதாண்டி மீன்பிடிக்க வந்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவித்த நீதிபதி, படகின் உரிமையாளர் 6 மாதத்திற்குள் கோர்ட்டில் ஆஜராகுமாறு தெரிவித்தார்.
விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 15 பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் ஒரு சில தினங்களில் நாடு திரும்புவார்கள் என்ற எதிர்பார்ப்பில் மீனவர்களின் குடும்பத்தினர் உள்ளனர்.
- இலங்கை கடற்படையின் தொடர் அச்சுறுத்தல் காரணமாக இன்று காலை 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ராமேசுவரம் துறைமுகத்துக்கு திரும்பினர்.
- ஒவ்வொரு முறையும் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கி விரட்டியடிப்பது நடந்து வருகிறது.
ராமேசுவரம்:
ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு புறப்பட்டனர். இவர்களில் ஒரு தரப்பினர் இன்று அதிகாலை இந்திய கடல் எல்லையையொட்டி உள்ள கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது வழக்கம்போல் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் சர்வதேச கடல் பகுதியான இங்கு மீன்பிடிக்க அனுமதி இல்லை. எனவே இங்கிருந்து புறப்பட்டு செல்லுங்கள் என எச்சரித்தனர். சில வீரர்கள் மீனவர்களின் படகுகளில் ஏறி தாக்கி விரட்டியடித்ததாக தெரிகிறது. தொடர்ந்து இந்த பகுதியில் மீன் பிடித்தால் விசைப்படகுகளுடன் சிறைபிடிக்கப்படுவீர்கள் என இலங்கை கடற்படை எச்சரித்தது.
இதனால் பீதி அடைந்த மீனவர்கள் மீன்பிடிப்பதை பாதியிலேயே அவசர அவசரமாக கரைக்கு புறப்பட்டனர். இவ்வாறு அவசர கதியில் திரும்பும்போது மீனவர்களின் படகுகள் ஒன்றொடு ஒன்று மோதி சேதமடைந்தன.
இலங்கை கடற்படையின் தொடர் அச்சுறுத்தல் காரணமாக இன்று காலை 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ராமேசுவரம் துறைமுகத்துக்கு திரும்பினர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஒவ்வொரு முறையும் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கி விரட்டியடிப்பது நடந்து வருகிறது. இதன் காரணமாக எங்களுக்கு ஒவ்வொரு படகுகளுக்கும் ரூ.1 லட்சம் வரை இழப்பு ஏற்படுகிறது.
இந்த போக்கு நீடித்தால் ராமேசுவரத்தில் மீன்பிடி தொழில் பாதிக்கப்படும். எனவே இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- தங்கச்சிமடம் ராஜா நகரை சேர்ந்த அபிலதாப் என்பவரின் விசைப்படகில் 5 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றிருந்தனர்.
- கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது, அவர்களது படகின் அடிப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டு படகிற்குள் தண்ணீர் வந்ததாக கூறப்படுகிறது.
ராமேசுவரம்:
கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவங்கள் தொடர் கதையாக நடந்து வருகிறது. இலங்கை கடற்படையினரின் இந்த செயலை தடுத்து நிறுத்த மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் அமல்படுத்தப்படும் மீன்பிடி தடை காலம் கடந்த 14-ந்தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் கடந்த சில நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.
மீன்வளத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று தினமும் சுழற்சி முறையில் மீனவர்கள் கடலுக்கு செல்கின்றனர். கடந்த 16-ந்தேதி ராமேசுவரத்தில் இருந்து 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
தங்கச்சிமடம் ராஜா நகரை சேர்ந்த அபிலதாப் என்பவரின் விசைப்படகில் 5 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றிருந்தனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது, அவர்களது படகின் அடிப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டு படகிற்குள் தண்ணீர் வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அந்த படகிலிருந்த 5 மீனவர்களும், ராமேசுவரத்தை சேர்ந்த மற்றொரு படகில் ஏறி கரைக்கு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் கச்சத்தீவுக்கும், நெடுந்தீவுக்கும் இடையே நடுக்கடலில் நின்ற அந்த படகை இலங்கை கடற்படையினர் பார்த்தனர்.
அவர்கள் அந்த படகில் ஏறி சோதனை செய்தனர். பின்பு சந்தேகப்படகு என்று கருதிய இலங்கை கடற்படையினர், அதனை பறிமுதல் செய்து நெடுந்தீவு கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர்.
இந்த நிலையில் ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து நேற்று காலை மீன்வளத்துறை அதிகாரிகளின் அனுமதி பெற்று 558 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். தங்கச்சிமடத்தை சேர்ந்த அந்தோணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவர் உள்பட 9 பேர் சென்றார்கள்.
அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்த போது, அவர்களுடைய படகு பழுதாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து 9 மீனவர்களும் படகுடன் நடுக்கடலில் இருந்துள்ளனர். பழுதான அவர்களது படகு காற்று காரணமாக நெடுந்தீவு பகுதிக்கு சென்று விட்டதாக தெரிகிறது.
அப்போது அந்த வழியாக இலங்கை கடற்படையினர் ரோந்து வந்துள்ளனர். அவர்கள் ராமேசுவரம் மீனவர்களின் படகை பார்த்தனர். இதையடுத்து படகை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர், படகில் இருந்த ராமேசுவரம் மீனவர்களிடம் விசாரணை நடத்தினர். படகு பழுதானதால் அங்கு வந்துவிட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
இருந்த போதிலும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி படகின் உரிமையாளர் அந்தோணி, சேசு ராஜா, ரூபன், முத்து, ஜான்சன், லெனின், பிரகதீஷ், ஜேக்கப், மற்றொரு அந்தோணி ஆகிய 9 பேரையும் கைது செய்தனர். பின்பு மேல் விசாரணைக்காக அவர்களை இலங்கைக்கு அழைத்து சென்றனர்.
மேலும் அவர்களது விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கை ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முழு விசாரணைக்கு பின்னரே ராமேசுவரம் மீனவர்கள் விடுவிக்கப்படுவார்களா? என்பது தெரியவரும். இதனால் அவர்களது குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.
- நேற்று முன்தினம் 9 மீனவர்களை கைது செய்தது
- இன்று 3 படகுகளில் சென்றவர்களை கைது செய்துள்ளது
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மீனவர்கள் சென்ற 3 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் ராமேசுவரத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது.
நேற்று முன்தினம் 9 பேர் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று 21 பேர் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவங்கள் தொடர் கதையாக நடந்து வருகிறது. இலங்கை கடற்படையினரின் இந்த செயலை தடுத்து நிறுத்த மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் அமல்படுத்தப்படும் மீன்பிடி தடை காலம் கடந்த 14-ந்தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் கடந்த சில நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.
மீன்பிடி தடைக்காலம் முடிந்து ஒரு வாரத்திற்குள் இரண்டு முறை இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்துள்ளது.
- ராமேசுவரம் துறைமுகம், பாம்பனில் 5 ஆயிரம் படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.
- கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் கடந்த 4 நாட்களில் ரூ.7 கோடி அளவில் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம்:
தமிழகத்தில் தென் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த 3 நாட்களாக உள்மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதன் காரணமாக ராமேசுவரம், மண்டபம், பாம்பன் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.
இதனால் ராமேசுவரம் துறைமுகம், பாம்பனில் 5 ஆயிரம் படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன. 4-ம் நாளான இன்றும் ராமேசுவரத்தில் சூறாவளி காற்று வீசி வருகிறது.
கடலில் 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வரை காற்று வீசி வருவதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. தனுஷ்கோடி, மண்டபம், பாம்பன் போன்ற பகுதிகளில் ராட்சத அலைகள் எழும்பின. இதன் காரணமாக இன்றும் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
4-வது நாளாக தொடரும் இந்த தடையால் மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கினர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் கடந்த 4 நாட்களில் ரூ.7 கோடி அளவில் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடியிலும் வழக்கத்தை விட கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் சில நேரங்களில் கடல் உள் வாங்கியதால் படகுகள் தரைதட்டி நின்றது.
- கடந்த சில வாரங்களாக ஏற்றுமதி நிறுவனங்கள் மீன்களுக்கு போதிய விலையை தரவில்லை என கூறப்படுகிறது.
- கேரளாவில் தற்போது இறால், காரல், சூடை போன்ற மீன் வரத்துகள் அதிகரித்துள்ளது.
ராமேசுவரம்:
ராமேசுவரத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் வாரத்தில் 3 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர். இதன் மூலம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலைவாய்ப்பை பெறுகின்றனர்.
ஒவ்வொரு முறையும் கடலுக்கு சென்று வரும்போது விலை உயர்ந்த இறால், நண்டு, கணவாய் உள்ளிட்ட பலவகை ரக மீன்கள் கிடைக்கும். டன் கணக்கில் பிடிக்கப்படும் மீன்களை ஏற்றுமதி நிறுவனங்கள் மொத்தமாக கொள்முதல் செய்து அதனை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கிறது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ஏற்றுமதி நிறுவனங்கள் மீன்களுக்கு போதிய விலையை தர வில்லை என கூறப்படுகிறது. இதனால் மீனவர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். கடலுக்கு சென்று வந்த செலவுக்குகூட போதவில்லை. எனவே விலையை உயர்த்தி தரக்கோரி மீனவர்கள் ஏற்றுமதி நிறுவனங்களிடம் வலியுறுத்தினர். ஆனால் அதனை ஏற்க மறுத்ததாக தெரிகிறது.
இதனால் நஷ்டம் ஏற்படுவதாக கூறி ராமேசுவரம் மீனவர்கள் இன்று (2-ந் தேதி) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்தனர்.
அதன்படி இன்று காலை ராமேசுவரத்தில் வேலை நிறுத்தம் தொடங்கியது. ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டார கடற்கரை பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களும், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராமேசுவரம் துறைமுகம் வேலைநிறுத்தம் காரணமாக வெறிச்சோடி காணப்பட்டது.
கேரளாவில் தற்போது இறால், காரல், சூடை போன்ற மீன் வரத்துகள் அதிகரித்துள்ளது. ஏற்றுமதி நிறுவனங்கள் அங்கு குறைந்த அளவில் மீன்களை கொள்முதல் செய்கிறது. ராமேசுவரத்தில் மீன்களை வாங்க வியாபாரிகள் முன்வரவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து ராமேசுவரம் மீனவர்கள் கூறுகையில், ஒவ்வொரு முறையும் மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ காரல் மீன் ரூ.40-க்கு வாங்கிய வியாபாரிகள் தற்போது அதனை ரூ.20-க்கு கேட்கின்றனர். சூடை மீனும் ரூ.20 ஆக குறைந்துள்ளது.
சங்காயம் வகை மீன்கள் ரூ.23-க்கு விற்கப்பட்ட நிலையில் ரூ.17-க்கு கேட்கப்படுகிறது. இதுபோன்று பல்வேறு ரக மீன்கள் குறைந்த விலைக்கு கேட்கப்படுவதால் மீனவர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. கடலுக்கு சென்றும் போதிய வருமானம் இல்லை. இதனால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.
விசைப்படகு மீனவர்கள் மட்டும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். நாட்டு படகு மீனவர்கள் இன்று வழக்கம்போல் கடலுக்கு சென்று மீன் பிடித்தனர்.
- தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- மீன்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை எனக்கூறி ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 2-ந்தேதி முதல் வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளனர்.
ராமநாதபுரம்:
தமிழகத்தில் காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் இடி, மின்னலுடன் மழை பெய்துள்ளது.
அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி, தங்கச்சிமடம் உள்ளிட்ட கடல் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
இன்று முதல் அடுத்த சில நாட்கள் வரை ராமநாதபுரம் மாவட்டத்தை ஒட்டியுள்ள தென்கடல் பகுதியில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக இன்று முதல் மறு அறிவிப்பு வரும்வரை ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக மீன்வளத்துறை உதவி இயக்குநர் பிரபாவதி தெரிவித்துள்ளார்.
மீன்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை எனக்கூறி ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 2-ந்தேதி முதல் வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளனர். இதனால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களும், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு ராமேசுவரத்தில் ரூ.5 கோடி வரை மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வானிலை மாறுபாடு காரணமாக கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






