search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rameshwaram Fishermens"

    • 32 மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • 2 நாட்களுக்கு முன் மீனவர்களிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் அனைத்து போராட்டங்களையும் வாபஸ் பெற்றனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வருவதாக கூறி சிறைபிடிப்பதும், பல முறை விரட்டியடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இலங்கை கடற்படையினரின் இந்த செயலை தடுத்து நிறுத்த கோரி மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் ராமேசுவரத்தில் இருந்து கடலுக்கு சென்ற 32 மீனவர்களை எல்லை தாண்டி இலங்கை கடற்படை கைது செய்தது. மேலும் 5 விசைபடகுகளையும் சிறை பிடித்தது. கைதான மீனவர்கள் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மீனவர்கள் கைதானது ராமேசுவரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 32 மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மீனவர்கள் அடையாள அட்டை என அனைத்து ஆவணங்களையும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் போராட்டம் அறிவித்திருந்தனர். 2 நாட்களுக்கு முன் மீனவர்களிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் அனைத்து போராட்டங்களையும் வாபஸ் பெற்றனர்.

    இந்த நிலையில், இன்று காலையில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகளிடம் மீன்பிடிக்க செல்லும் அனுமதி டோக்கன் பெற்றுக்கொண்டு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    5 நாட்களுக்கு பின் மீன்பிடிக்க சென்றுள்ள நிலையில் அதிகளவில் இறால் மீன் கிடைக்கும் என மீனவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    • மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை கையாண்டும் இப்பிரச்சனைக்கு தற்போது வரை நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை.
    • அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொண்டனர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் காலங்காலமாய் தொடர்ந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை கையாண்டும் இப்பிரச்சனைக்கு தற்போது வரை நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை.

    இதற்கிடையே எல்லை தாண்டியதாக கைதாகும் மீனவர்களுக்கு தண்டனை வழங்கிடும் வகையில் இலங்கை அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதன் அடிப்படையில் கடந்த மாதம் 2 சம்பவங்களில் சிறைபிடிக்கப்பட்ட நான்கு மீனவர்களுக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் படகுகளையும் அரசுடமையாக்கி வருகின்றனர்.

    இதனை கண்டித்தும், இலங்கையில் தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை விடுக்க வேண்டும். விடுவிக்கப்பட்ட மீனவர்களின் 10 படகுகளை மீட்க அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். விடுவிக்கப்படாமல் உள்ள 151 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த படகுகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்குவது போல மத்திய அரசும் இழப்பீடு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொண்டனர்.

    இதனைதொடர்ந்து, நேற்று ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும், அதற்கான பணியை தமிழ்நாடு அரசு செய்யும் என உறுதியளித்தார். இதனை ஏற்று மீனவர்கள் வேலைநிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

    இதனைதொடர்ந்து, இன்று காலையில் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று 7 நாட்களுக்கு பின்னர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    • வாக்குறுதிகள் எதையும் இதுவரை நிறைவேற்றாமல் தமிழக மீனவர்களுக்கு எதிரான அரசாக ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது.
    • மீனவர் போராட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கிறது.

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து பிப்ரவரி 3 அன்று கடலுக்குச் சென்று கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு விசைப்படகுகளை சிறைப்பிடித்து படகுகளிலிருந்த 23 மீனவர்களில் 20 மீனவர்களை மட்டும் விடுதலை செய்த இலங்கை நீதிமன்றம், 2 படகுகளின் ஓட்டுநர்களுக்கு தலா 6 மாதங்கள் சிறை தண்டனையும் ஒரு மீனவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.

    இதனால், ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 2013 ஆம் ஆண்டு பாம்பனில் பா.ஜ.க.வினர், சுஷ்மா சுவராஜ் தலைமையில் கடல் தாமரை மாநாடு நடத்தி, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீனவர்களுக்கென தனி அமைச்சகம், இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் கைது இருக்காது" என வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்தார்கள். அந்த வாக்குறுதிகள் எதையும் இதுவரை நிறைவேற்றாமல் தமிழக மீனவர்களுக்கு எதிரான அரசாக ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில், ராமேஸ்வரம் மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பு தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டிக்கிற வகையில், பாரம்பரியமாக பங்கேற்கிற கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவை புறக்கணிப்பது எனவும், நாளை முதல் தொடர் உண்ணாவிரதமும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மீனவர் போராட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கிறது.

    எனவே, நமது ஒன்றிய அரசு மற்றும் இலங்கை அரசின் தமிழக மீனவர்கள் மீதான விரோதப் போக்கை கண்டித்து எனது தலைமையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசியத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில், பிப்ரவரி 27 செவ்வாய்க்கிழமை அன்று காலை ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டமும், அதைத் தொடர்ந்து பிப்ரவரி 28 புதன்கிழமை அன்று காலை தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்ட வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசியத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தலைமையில் கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இந்தப் போராட்டங்கள் வெற்றி பெற அனைத்து மீனவ பெருமக்களும் பெருந்திரளாக பங்கேற்று மீனவ மக்களின் உரிமைகளை காக்க முன்வர வேண்டுமென அன்போடு அழைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நேற்று முன்தினம் 9 மீனவர்களை கைது செய்தது
    • இன்று 3 படகுகளில் சென்றவர்களை கைது செய்துள்ளது

    நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மீனவர்கள் சென்ற 3 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

    கைது செய்யப்பட்ட மீனவர்கள் ராமேசுவரத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது.

    நேற்று முன்தினம் 9 பேர் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று 21 பேர் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவங்கள் தொடர் கதையாக நடந்து வருகிறது. இலங்கை கடற்படையினரின் இந்த செயலை தடுத்து நிறுத்த மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் அமல்படுத்தப்படும் மீன்பிடி தடை காலம் கடந்த 14-ந்தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் கடந்த சில நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.

    மீன்பிடி தடைக்காலம் முடிந்து ஒரு வாரத்திற்குள் இரண்டு முறை இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்துள்ளது.

    • தங்கச்சிமடம் ராஜா நகரை சேர்ந்த அபிலதாப் என்பவரின் விசைப்படகில் 5 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றிருந்தனர்.
    • கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது, அவர்களது படகின் அடிப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டு படகிற்குள் தண்ணீர் வந்ததாக கூறப்படுகிறது.

    ராமேசுவரம்:

    கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவங்கள் தொடர் கதையாக நடந்து வருகிறது. இலங்கை கடற்படையினரின் இந்த செயலை தடுத்து நிறுத்த மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் அமல்படுத்தப்படும் மீன்பிடி தடை காலம் கடந்த 14-ந்தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் கடந்த சில நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.

    மீன்வளத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று தினமும் சுழற்சி முறையில் மீனவர்கள் கடலுக்கு செல்கின்றனர். கடந்த 16-ந்தேதி ராமேசுவரத்தில் இருந்து 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    தங்கச்சிமடம் ராஜா நகரை சேர்ந்த அபிலதாப் என்பவரின் விசைப்படகில் 5 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றிருந்தனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது, அவர்களது படகின் அடிப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டு படகிற்குள் தண்ணீர் வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அந்த படகிலிருந்த 5 மீனவர்களும், ராமேசுவரத்தை சேர்ந்த மற்றொரு படகில் ஏறி கரைக்கு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் கச்சத்தீவுக்கும், நெடுந்தீவுக்கும் இடையே நடுக்கடலில் நின்ற அந்த படகை இலங்கை கடற்படையினர் பார்த்தனர்.

    அவர்கள் அந்த படகில் ஏறி சோதனை செய்தனர். பின்பு சந்தேகப்படகு என்று கருதிய இலங்கை கடற்படையினர், அதனை பறிமுதல் செய்து நெடுந்தீவு கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர்.

    இந்த நிலையில் ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து நேற்று காலை மீன்வளத்துறை அதிகாரிகளின் அனுமதி பெற்று 558 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். தங்கச்சிமடத்தை சேர்ந்த அந்தோணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவர் உள்பட 9 பேர் சென்றார்கள்.

    அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்த போது, அவர்களுடைய படகு பழுதாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து 9 மீனவர்களும் படகுடன் நடுக்கடலில் இருந்துள்ளனர். பழுதான அவர்களது படகு காற்று காரணமாக நெடுந்தீவு பகுதிக்கு சென்று விட்டதாக தெரிகிறது.

    அப்போது அந்த வழியாக இலங்கை கடற்படையினர் ரோந்து வந்துள்ளனர். அவர்கள் ராமேசுவரம் மீனவர்களின் படகை பார்த்தனர். இதையடுத்து படகை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர், படகில் இருந்த ராமேசுவரம் மீனவர்களிடம் விசாரணை நடத்தினர். படகு பழுதானதால் அங்கு வந்துவிட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

    இருந்த போதிலும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி படகின் உரிமையாளர் அந்தோணி, சேசு ராஜா, ரூபன், முத்து, ஜான்சன், லெனின், பிரகதீஷ், ஜேக்கப், மற்றொரு அந்தோணி ஆகிய 9 பேரையும் கைது செய்தனர். பின்பு மேல் விசாரணைக்காக அவர்களை இலங்கைக்கு அழைத்து சென்றனர்.

    மேலும் அவர்களது விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கை ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முழு விசாரணைக்கு பின்னரே ராமேசுவரம் மீனவர்கள் விடுவிக்கப்படுவார்களா? என்பது தெரியவரும். இதனால் அவர்களது குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.

    ×