என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பலத்த சூறாவளி காற்று- ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
- சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் தனுஷ்கோடியில் வழக்கத்தை விட அலைகள் ஆக்ரோஷமாக காணப்பட்டது.
- 3-வது நாளாக இன்றும் வங்கக்கடலில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது.
ராமேசுவரம்:
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் முதல் விட்டு விட்டு மழை பெய்தது. ராமநாதபுரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
இதனால் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியது. பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. மண்டபத்தில் பெய்த கனமழையால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வழக்கத்தை விட கடல் காற்று அதிகமாக வீசி வருகிறது.
சூறாவளி காற்றால் ராமேசுவரம், பாம்பன் துறைமுகங்களில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகுகள் ஒன்றொடொன்று மோதி பலத்த சேதமடைந்தன. இதனால் மீனவர்கள் கவலையடைந்தனர். கடல் நீரோட்டம் மாறுபாடு காரணமாக அக்னீ தீர்த்த கடலில் கடற்புற்கள் கரை ஒதுங்கியது. இதனால் பக்தர்கள் புனித நீராடுவதில் சிரமம் ஏற்பட்டது.
சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் தனுஷ்கோடியில் வழக்கத்தை விட அலைகள் ஆக்ரோஷமாக காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்குவதை தடுக்க போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
3-வது நாளாக இன்றும் வங்கக்கடலில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு இன்று முதல் மறுஅறிவிப்பு வரும் வரை ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.






