search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வருகிற 28-ந்தேதி தூத்துக்குடியில் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டுவோம்- செல்வப்பெருந்தகை அறிவிப்பு
    X

    வருகிற 28-ந்தேதி தூத்துக்குடியில் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டுவோம்- செல்வப்பெருந்தகை அறிவிப்பு

    • வாக்குறுதிகள் எதையும் இதுவரை நிறைவேற்றாமல் தமிழக மீனவர்களுக்கு எதிரான அரசாக ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது.
    • மீனவர் போராட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கிறது.

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து பிப்ரவரி 3 அன்று கடலுக்குச் சென்று கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு விசைப்படகுகளை சிறைப்பிடித்து படகுகளிலிருந்த 23 மீனவர்களில் 20 மீனவர்களை மட்டும் விடுதலை செய்த இலங்கை நீதிமன்றம், 2 படகுகளின் ஓட்டுநர்களுக்கு தலா 6 மாதங்கள் சிறை தண்டனையும் ஒரு மீனவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.

    இதனால், ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 2013 ஆம் ஆண்டு பாம்பனில் பா.ஜ.க.வினர், சுஷ்மா சுவராஜ் தலைமையில் கடல் தாமரை மாநாடு நடத்தி, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீனவர்களுக்கென தனி அமைச்சகம், இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் கைது இருக்காது" என வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்தார்கள். அந்த வாக்குறுதிகள் எதையும் இதுவரை நிறைவேற்றாமல் தமிழக மீனவர்களுக்கு எதிரான அரசாக ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில், ராமேஸ்வரம் மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பு தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டிக்கிற வகையில், பாரம்பரியமாக பங்கேற்கிற கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவை புறக்கணிப்பது எனவும், நாளை முதல் தொடர் உண்ணாவிரதமும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மீனவர் போராட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கிறது.

    எனவே, நமது ஒன்றிய அரசு மற்றும் இலங்கை அரசின் தமிழக மீனவர்கள் மீதான விரோதப் போக்கை கண்டித்து எனது தலைமையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசியத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில், பிப்ரவரி 27 செவ்வாய்க்கிழமை அன்று காலை ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டமும், அதைத் தொடர்ந்து பிப்ரவரி 28 புதன்கிழமை அன்று காலை தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்ட வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசியத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தலைமையில் கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இந்தப் போராட்டங்கள் வெற்றி பெற அனைத்து மீனவ பெருமக்களும் பெருந்திரளாக பங்கேற்று மீனவ மக்களின் உரிமைகளை காக்க முன்வர வேண்டுமென அன்போடு அழைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×