search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fishermens strike"

    • 32 மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • 2 நாட்களுக்கு முன் மீனவர்களிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் அனைத்து போராட்டங்களையும் வாபஸ் பெற்றனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வருவதாக கூறி சிறைபிடிப்பதும், பல முறை விரட்டியடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இலங்கை கடற்படையினரின் இந்த செயலை தடுத்து நிறுத்த கோரி மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் ராமேசுவரத்தில் இருந்து கடலுக்கு சென்ற 32 மீனவர்களை எல்லை தாண்டி இலங்கை கடற்படை கைது செய்தது. மேலும் 5 விசைபடகுகளையும் சிறை பிடித்தது. கைதான மீனவர்கள் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மீனவர்கள் கைதானது ராமேசுவரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 32 மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மீனவர்கள் அடையாள அட்டை என அனைத்து ஆவணங்களையும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் போராட்டம் அறிவித்திருந்தனர். 2 நாட்களுக்கு முன் மீனவர்களிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் அனைத்து போராட்டங்களையும் வாபஸ் பெற்றனர்.

    இந்த நிலையில், இன்று காலையில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகளிடம் மீன்பிடிக்க செல்லும் அனுமதி டோக்கன் பெற்றுக்கொண்டு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    5 நாட்களுக்கு பின் மீன்பிடிக்க சென்றுள்ள நிலையில் அதிகளவில் இறால் மீன் கிடைக்கும் என மீனவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    • விசைப்படகு மீனவர்களின் இழுவை மடி வலையை பயன்படுத்துவதால் பைபர் படகு மீனவர்களின் வாழ்வாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது.
    • மீனவர்களின் வேலைநிறுத்தத்தால் சுமார் ரூ.2 கோடி மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட இழுவைமடி வலையை பயன்படுத்தி ஒரு சில விசைபடகு மீனவர்கள் மீன்பிடிப்பதால் பைபர் படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

    இதனால் நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம் வாணவன் மகாதேவி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் உள்ள பைபர் படகு மீனவர்கள் கடந்த 28-ந்தேதி முதல் மீன்பிடிக்க செல்லாமல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் விசைப்படகு மீனவர்களின் இழுவை மடி வலையை பயன்படுத்துவதால் பைபர் படகு மீனவர்களின் வாழ்வாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது.

    எனவே நாகை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட இழுவை மடிவலையை பயன்படுத்துவதை தடுக்க மீன்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து தீவிரமாக நடவடிக்கை எடுத்து இழுவை மடிவலையை முற்றிலும் அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 9-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் சுமார் ரூ.2 கோடி மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பைபர் படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடற்கரை பகுதியில் வெறிச்சோடி காணப்படுகிறது.

    • மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை கையாண்டும் இப்பிரச்சனைக்கு தற்போது வரை நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை.
    • அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொண்டனர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் காலங்காலமாய் தொடர்ந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை கையாண்டும் இப்பிரச்சனைக்கு தற்போது வரை நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை.

    இதற்கிடையே எல்லை தாண்டியதாக கைதாகும் மீனவர்களுக்கு தண்டனை வழங்கிடும் வகையில் இலங்கை அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதன் அடிப்படையில் கடந்த மாதம் 2 சம்பவங்களில் சிறைபிடிக்கப்பட்ட நான்கு மீனவர்களுக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் படகுகளையும் அரசுடமையாக்கி வருகின்றனர்.

    இதனை கண்டித்தும், இலங்கையில் தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை விடுக்க வேண்டும். விடுவிக்கப்பட்ட மீனவர்களின் 10 படகுகளை மீட்க அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். விடுவிக்கப்படாமல் உள்ள 151 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த படகுகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்குவது போல மத்திய அரசும் இழப்பீடு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொண்டனர்.

    இதனைதொடர்ந்து, நேற்று ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும், அதற்கான பணியை தமிழ்நாடு அரசு செய்யும் என உறுதியளித்தார். இதனை ஏற்று மீனவர்கள் வேலைநிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

    இதனைதொடர்ந்து, இன்று காலையில் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று 7 நாட்களுக்கு பின்னர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    • ராமேசுவரத்தில் மீன்பிடிக்க செல்ல தேவையான பணிகளை மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
    • மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் மீன்பிடிக்க சென்றபோது 2 கட்டமாக 10 விசைப்படகுகள், 64 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இதனை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இன்று (வெள்ளிக்கிழமை) மண்டபம் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்திருந்தனர்.

    இதனைதொடர்ந்து, நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் மீன்வளத் துறை அதிகாரிகள், மீனவ சங்க தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது வருகிற 8 மற்றும் 9-ந்தேதிகளில் ராமேசுவரம் மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். அப்போது அவர்களை விடுவிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் மீனவர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என அதிகரிகள் கேட்டுக்கொண்டனர்.

    இதனை ஏற்று வேலை நிறுத்த போராட்டம் மற்றும் ரெயில் மறியல் போராட்டங்களை மீனவர்கள் வாபஸ் பெற்றனர். இதைத் தொடர்ந்து ராமேசுவரத்தில் மீன்பிடிக்க செல்ல தேவையான பணிகளை மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். நாளை (சனிக்கிழமை) மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
    • நாள் ஒன்றுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டு, மீன்பிடி தொழில் முற்றிலுமாக முடங்கியுள்ளது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 14-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற போது 5 விசைப்படகுகளுடன் 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கூறி சிறைபிடித்து சென்றனர். இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களுக்கு இரண்டு முறை காவல் நீட்டிக்கப்பட்டது.

    இதேபோன்று கடந்த வாரம் மீன்பிடிக்க சென்ற போது 5 விசைப்படகுகளுடன் 37 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். 64 மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதே போன்று 10 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இலங்கை அரசின் இந்த தொடர் நடவடிக்கையை கண்டித்தும், கைது செய்யப்பட்டுள்ள 64 மீனவர்கள் 10 படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரியும் ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போராட்டம் இன்று மூன்றாவது நாளாக நீடிக்கிறது.

    இதனால் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளிட்ட 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து கடுமையான பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

    அத்துடன் நாள் ஒன்றுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டு, மீன்பிடி தொழில் முற்றிலுமாக முடங்கியுள்ளது. தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில், நேற்று தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. மற்றும் மீனவ சங்க பிரநிதிகள் வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளிதரனை சந்தித்து மீனவர்களை விடுவிப்பது தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தனர்.

    இதற்கிடையே மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி வருகிற 3-ந்தேதி அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சார்பில் மண்டபம் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டமும், 6-ந்தேதி முதல் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் குடும்பத்துடன் தொடர் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

    • வேலைநிறுத்தம் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழந்தனர்.
    • 5 நாள் போராட்டத்திற்கு பின் சிறிய ரக படகுகள் மீன் பிடிக்க செல்ல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையிடம் அனுமதி பெற்று இன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளது. இதன் மூலம் 3,500 மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். ராமேசுவரத்தில் பெரும்பாலானோர் மீன்பிடி தொழிலை நம்பியே உள்ளனர்.

    இந்த நிலையில், கடந்த 14-ந்தேதி ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற போது கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி வந்ததாக கூறி 5 விசைப் படகுகளுடன் 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கடந்த 16-ந்தேதி முதல் ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத்தில் பெரிய மற்றும் சிறிய ரக படகுகள் பங்கேற்றன.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேலைநிறுத்தம் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழந்தனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. பல கோடி ரூபாய் வர்த்தகமும் பாதித்தது.

    இந்த நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சிறிய ரக படகுகள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லுவதாக மீனவ சங்க தலைவர் என்.ஜே.போஸ் தெரிவித்தார். மேலும் பெரிய படகுகள் போராட்டம் தொடருவதாக தெரிவித்தார்.

    இதனைதொடர்ந்து, 5 நாள் போராட்டத்திற்கு பின் சிறிய ரக படகுகள் மீன் பிடிக்க செல்ல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையிடம் அனுமதி பெற்று இன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதனால் கடந்த 5 நாட்களாக வெறிச்சோடி கிடந்த ராமேசுரவம் துறைமுகம் இன்று மீண்டும் பரபரப்புடன் காணப்பட்டது.

    • மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழில் சார்ந்த தொழிலாளர்கள் என சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
    • வருகிற 27-ந்தேதிக்குள் மீனவர்கள் விடுதலை செய்யப்படுவதோடு, அவர்களது படகுகளும் விடுவிக்கப்பட வேண்டும்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளது. இதில், 3,500 மீனவர்கள் மற்றும் சார் தொழிலாளர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். முழுமையாக மீன்பிடி தொழிலை நம்பியே இவர்களின் வாழ்வாதாரம் உள்ளது. ஆனால் அடிக்கடி சிங்கள கடற்படையினரால் மீனவர்கள் சிறைப்பிடிக்கப்படுவதால் அவர்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதிகளில் இருந்து கடந்த 14-ந்தேதி காலை கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 27 மீனவர்கள் மற்றும் அவர்களின் 5 விசைப்படகுகளை எல்லை தண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை ராமேசுவரம் மீனவர்கள் நேற்று முதல் தொடங்கியுள்ளனர்.

    இந்த போராட்டம் இன்று இரண்டாவது நாளாக நடைபெறுகிறது. இதனால் மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழில் சார்ந்த தொழிலாளர்கள் என சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

    மேலும் ரூ.3 கோடி மதிப்பிலான இறால் மற்றும் மீன்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி நாளை (18-ந்தேதி) பாம்பன் சாலை பாலத்தில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர். இதற்கிடையே நேற்று ராமேசுவரம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் சமரச பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து நாளை நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு பதிலாக தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    அதேபோல் வருகிற 27-ந்தேதிக்குள் மீனவர்கள் விடுதலை செய்யப்படுவதோடு, அவர்களது படகுகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் நவம்பர் 1-ந்தேதி ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்றும், அதுவரை வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • தனியார் மீன்பிடி உரிமம் முடிந்த நிலையில் கடந்த 15-ந் தேதி முதல் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகமே நேரடியாக மீன்களை கொள்முதல் செய்தது.
    • பழையபடி தங்களுக்கு 55 ரூபாய் கூலியாக வழங்க வேண்டும் என்று வலியுறு த்தி கடந்த 15-ந் தேதி முதல் பவானிசாகர் அணைப்பகுதி யில் மீனவர்கள் மீன் பிடிப்பதை நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர்.

    சத்தியமங்கலம்

    ஈரோடு மாவட்டம் பவா னிசாகர் அணையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் மூலம் மீன் குஞ்சுகள் விடப்பட்டு மீன் பிடிக்கும் உரிமம் தனியா–ருக்கு தரப்பட்டிருந்தது.

    இங்கு சுசில் குட்டை, அண்ணா நகர், வெற்றிவேல் முருகன் நகர், கண்ட்ராயன் மொக்கை போன்ற பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பரிசல் மூலம் மீன்களைப் பிடித்து வருகி ன்றனர்.

    நாள் ஒன்றுக்கு 2000 கிலோ மீன்கள் பிடித்து வந்தனர். இந்த மீன்கள் கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட பல்வேறு பகுதிகளு க்கு அனுப்பப்பட்டு வந்தது.

    தனியார் மீன்பிடி உரிமம் முடிந்த நிலையில் கடந்த 15-ந் தேதி முதல் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகமே நேரடியாக மீன்களை கொள்முதல் செய்தது.

    தனியார் குத்தகைதாரர் ஒரு கிலோ மீனுக்கு 55 ரூபாய் கூலியாக மீனவர்களுக்கு தந்த நிலையில் மீன் வளர்ச்சி கழகம் ஒரு கிலோ 35 ரூபாய் மட்டுமே வழங்குகிறது. இதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பழையபடி தங்களுக்கு 55 ரூபாய் கூலியாக வழங்க வேண்டும் என்று வலியுறு த்தி கடந்த 15-ந் தேதி முதல் பவானிசாகர் அணைப்பகுதி யில் மீனவர்கள் மீன் பிடிப்பதை நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று 7-வது நாளாக நீடித்து வருகிறது.

    • ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
    • இதன்காரணமாக 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ராமேசுவரம் துறைமுகம் மற்றும் அதனை சுற்றி உள்ள கரையோர பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டன.

    ராமேசுவரம்:

    கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவங்கள் தொடர் கதையாக நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் கடந்த 20-ந்தேதி ராமேசுவரத்தில் இருந்து 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சென்ற 1500 மீனவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அவர்களில் ராமேசுவரத்தை சேர்ந்த அந்தோணி, மடகு பிச்சை, பாலமுருகன், தங்க பாண்டி, அர்ஜூனன், ராஜா ஆகிய 6 மீனவர்களையும், அவர்களது விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட மீனவர்கள் 6 பேரும், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அந்த மீனவர்கள் 6 பேரையும், அவர்களது விசைப்படகையும் விடுவிக்கக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    இதன்காரணமாக 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ராமேசுவரம் துறைமுகம் மற்றும் அதனை சுற்றி உள்ள கரையோர பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டன. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன் தொழிலை நம்பியுள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று வேலையின்றி இருந்தனர்.

    திருச்செந்தூர் அருகே உள்ள கல்லாமொழி கடற்கரையில் நிலக்கரி இறங்குதளம் மற்றும் கடலுக்குள் பாலம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் கடலுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். #ThiruchendurFishermenStike
    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருகே அனல்மின்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த அனல்மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை கடல் வழியாக கப்பலில் கொண்டு வந்து இறக்க வசதியாக திருச்செந்தூர் அருகே உள்ள கல்லாமொழி கடற்கரையில் நிலக்கரி இறங்குதளம் மற்றும் கடலுக்குள் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    நிலக்கரி இறங்குதளம் மற்றும் கடலுக்குள் பாலம் அமைப்பதால் ஆலந்தலை பகுதிக்குள் கடல்நீர் புகுந்து விடும் என்பதால் அந்த திட்டத்தை கைவிடவேண்டும் என வலியுறுத்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் கல்லா மொழி கடற்கரையில் நிலக்கரி இறங்குதளம் மற்றும் கடலுக்குள் பாலம் அமைக்ககூடாது என்றும், ஆலந்தலை பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி ஆலந்தலை பகுதி மீனவர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ள படகுகள்.

    அவர்கள் அனைவரும் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தங்களது படகுகளை கடற்கரையில் நிறுத்தியிருந்தனர். அனைத்து படகுகளிலும் கருப்பு கொடி கட்டப்பட்டிருந்தது. மீனவர்களின் பேராட்டத்திற்கு ஆதரவாக ஆலந்தலை பகுதி பொதுமக்களும் கடற்கரையில் திரண்டனர். 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடற்கரையில் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அவர்கள் அனைவரும் கடற்கரையில் மனிதசங்கிலி போன்று வரிசையாக நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கல்லாமொழியில் நிலக்கரி இறங்குதளம் மற்றும் பாலம் அமைக்ககூடாது, ஆலந்தலை பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் மீனவர்கள்.

    மேலும் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடலுக்குள் இறங்கி நின்று தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த போராட்டத்தால் ஆலந்தலையில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. #ThiruchendurFishermenStike
    ×