என் மலர்
நீங்கள் தேடியது "Rameshwaram Fishermen"
- ராமேசுவரம் துறைமுகத்தில் 650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது.
- 5 ஆயிரம் மீனவர்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த புதன்கிழமை மீன்பிடிக்க சென்றபோது ஒரு படகு, 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதே போன்று புதுக்கோட்டை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 2 விசைப்படகுகள், 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களின் 3 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிந்து ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 27-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில் யாழ்பாணம் சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.
தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது, கைது செய்து சிறையில் அடைக்கப்படுவது, படகுகளை விடுவிக்க மறுப்பது உள்ளிட்ட நடவடிக்கையால் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தலைமன்னார், காங்கேசம் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்துள்ளது.
இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களை கைது செய்யப்படுவதை கண்டித்தும், இலங்கையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை இன்று தொடங்கி உள்ளனர். இதனால் ராமேசுவரம் துறைமுகத்தில் 650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது. 5 ஆயிரம் மீனவர்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
வேலைநிறுத்தம் காரணமாக இன்று காலை ராமேசுவரம் துறைமுகம் வெறிச்சோடியது. இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறையில் கடலுக்கு செல்லும்போது இலங்கை கடற்படையினரால் தாக்கி விரட்டியடிப்பது நடந்து வருகிறது. இதனால் மீன்பிடி தொழில் பாதிக்கப்படுகிறது. தற்போது இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ள மீனவர்களை உடனே விடுதலை செய்ய மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிக்கடி நடக்கும் இதுபோன்று நடக்கும் வேலைநிறுத்தத்தால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றனர்.
- வேலைநிறுத்தம் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழந்தனர்.
- 5 நாள் போராட்டத்திற்கு பின் சிறிய ரக படகுகள் மீன் பிடிக்க செல்ல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையிடம் அனுமதி பெற்று இன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளது. இதன் மூலம் 3,500 மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். ராமேசுவரத்தில் பெரும்பாலானோர் மீன்பிடி தொழிலை நம்பியே உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 14-ந்தேதி ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற போது கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி வந்ததாக கூறி 5 விசைப் படகுகளுடன் 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கடந்த 16-ந்தேதி முதல் ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத்தில் பெரிய மற்றும் சிறிய ரக படகுகள் பங்கேற்றன.
இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேலைநிறுத்தம் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழந்தனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. பல கோடி ரூபாய் வர்த்தகமும் பாதித்தது.
இந்த நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சிறிய ரக படகுகள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லுவதாக மீனவ சங்க தலைவர் என்.ஜே.போஸ் தெரிவித்தார். மேலும் பெரிய படகுகள் போராட்டம் தொடருவதாக தெரிவித்தார்.
இதனைதொடர்ந்து, 5 நாள் போராட்டத்திற்கு பின் சிறிய ரக படகுகள் மீன் பிடிக்க செல்ல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையிடம் அனுமதி பெற்று இன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதனால் கடந்த 5 நாட்களாக வெறிச்சோடி கிடந்த ராமேசுரவம் துறைமுகம் இன்று மீண்டும் பரபரப்புடன் காணப்பட்டது.
- 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
- கடலோர பாதுகாப்பு போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
ராமேசுவரம்:
தென்மேற்கு வங்ககடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ராமநாதபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் கடற்பகுதிகளில் தற்போது வடகிழக்கு பருவகாற்று தீவிரமடைந்துள்ளது.
இதன்காரணமாக வங்கக் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்ட பாக்ஜலசந்தி கடலில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையொட்டி மீன் வளத்துறை இன்று (சனிக்கிழமை) முதல் மறுஉத்தரவு வரும் வரை ராமேசுவரம், தனுஷ்கோடி, மண்டபம், பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிப்பதாக அறிவித்தது.
இதனைதொடர்ந்து, ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, மூக்கையூர், தேவி பட்டணம், சோளியக்குடி, தொண்டி ஆகிய துறை முகங்களில் இருந்து 1,650 க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மற்றும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் அந்தந்த துறைமுகங்களில் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் கடலோர பகுதிகளில் பரவலாக மழை பெய்ய தொடங்கி உள்ளது. கனமழை பெய்வதால் சாலையில் மழை நீர் தேங்காதவாறு ராமேசுவரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தனுஷ்கோடி பகுதியில் இன்று வழக்கத்தை விட கடல் அதிக கொந்தளிப்புடன் காணப்பட்டது.
காற்றின் வேகமும் அதிகரித்து காணப்பட்டதால் மணல்கள் சாலைகளில் பரவின. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் கடலோர பாதுகாப்பு போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ஏற்கனவே இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தலுக்கு இடையே மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகிறோம். வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் கடலுக்கு சென்று வந்த நிலையில் தற்போது மீன்பிடிக்க செல்வது குறைந்து வருகிறது. இதனால் மாதத்தில் 15 நாட்கள் வேலையிழப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் வானிலை காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது என்றனர்.
- ராமநாதசுவாமி கோவிலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் மழையால் அவதிக்குள்ளாகினர்.
- தொடர்ந்து கனமழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.
ராமேசுவரம்:
ராமேசுவரத்தில் கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம் போல தேங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதிப்புக்குள்ளாகினர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிகாலையில் இருந்தே கனமழை பெய்ய தொடங்கியது. இதில், ராமேசுவரத்தில் மட்டும் விட்டு விட்டு கனமழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் குளம் போல தேங்கியது.
நகராட்சி அலுவலகம் அருகே முனியசாமி கோவில் தெரு, நகராட்சி பொது மார்க்கெட், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். ராமநாதசுவாமி கோவிலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் மழையால் அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து கனமழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.
பள்ளிகளுக்கு மதியம் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் அவர்கள் சிரமத்துடன் வீடு திரும்பினர்.
இந்த நிலையில் இன்று வங்க கடலில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறை காற்று வீசக்கூடும். மேலும் புதன்கிழமை கன மழை பெய்யக்கூடும் என வானிமை மையம் அறிவுறுத்தி உள்ளது.
இதனைதொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல இன்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, வாலிநோக்கம், மூக்கையூர், தேவிபட்டணம், சோளியகுடி, தொண்டி உள்ளிட்ட துறைமுகங்களில் 1,650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் அந்தந்த துறைமுங்களில் பாதுகாப்புடன் படகுகள் நிறுத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
கடலாடி 41, வாலி நோக்கம் 53 , கமுதி 53, பல்ல மோர்குளம் 12.20, முதுகுளத்தூர் 25.10, பரமக்குடி 28.30, ஆர்,எஸ்.மங்கலம் 21.40, மண்டபம் 45.60, ராமநாதபுரம் 88, பாம்பன் 63.90, ராமேசுவரம் 68.00, தங்கச்சிமடம் 91.00, தீர்த்ததாண்டதானம் 15.90, திருவாடானை 10.20, தொண்டி 14.60, வட்டாணம் 15.20 பதிவாகி உள்ளது.
- ராமேசுவரத்தில் இருந்து நேற்று 480 விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
- ராமேசுவரம் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் படகுடன் கைது செய்யப்பட்டு வரும் சம்பவம் மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராமேசுவரம்:
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி பிரதமர் மோடியின் ஆன்மிக பயணத்தின் ஒரு பகுதியாக அவர் ராமேசுவரம் வருகை தந்தார். 20-ந்தேதி பிற்பகலில் வந்த அவர் அன்று இரவு ராமேசுவரத்திலேயே தங்கினார். மறுநாள் பல்வேறு இடங்களுக்கு சென்று விட்டு டெல்லி திரும்பினார்.
பிரதமர் மோடி வருகையையொட்டி, ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல 2 நாட்கள் தடை விதிக்கப்பட்டது. அத்துடன் கடலோர பகுதிகளில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன. பிரதமரின் பயணம் நிறைவடைந்ததையடுத்து நேற்று முதல் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
அதன்படி ராமேசுவரத்தில் இருந்து நேற்று 480 விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவுக்கும், நெடுந்தீவுக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்திய கடல் எல்லையில் வலைகளை விரித்து மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் ஒன்று மின்னல் வேகத்தில் வந்தது. இதனால் அச்சம் அடைந்த மீனவர்கள் பலர் கடலில் வீசியிருந்த வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து அவசரம், அவசரமாக புறப்பட்டனர்.
ஆனாலும் விரைந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். இதில், தங்கச்சிமடத்தை சேர்ந்த ஜசக் (வயது 47), ஈஸ்டர் ஆரோக்கியதாஸ் (43) ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகுகளை சிறைபிடித்தனர். படலில் இருந்து ஐசக் (47), சிசேரியன் (43), சமாதான பாபு (38), ஈஸ்டர் ஆரோக் கியதாஸ் (34), நிஷாந்தன் (34), முருகேசன் ஆகிய 6 மீனவர்களையும் கைது செய்தனர்.
இதனைத்தொடர்ந்து, இரண்டு விசைப்படகுகளுடன் 6 மீனவர்களை இலங்கையில் உள்ள காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர். இரண்டு விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீனவர்கள் 6 பேரும் யாழ்ப்பாணம் நீரியல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ராமேசுவரம் மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்பாணம் சிறையில் அடைக்க உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராமேசுவரம் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் படகுடன் கைது செய்யப்பட்டு வரும் சம்பவம் மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. படகுடன் மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக பிரதமர் மோடியின் தமிழக வருகையை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் இலங்கை சிறையில் தவிக்கும் 40 தமிழக மீனவர்களை விடுவிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் இன்று மேலும் 6 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- கடற்படை அதிகாரிகள் விசாரணைக்கு பின்னர் ஊர்க்காவல் துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
- விடுதலையான 20 மீனவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து கடந்த 3-ந்தேதி காலை 492 விசைப்படகுகளில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவு கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவுக்கு இடையே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது 5 ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர். இதில், தங்கச்சிமடத்தை சேர்ந்த ராபர்ட் (வயது 40), பெஸ்கர் உள்பட 23 பேரை சிறைப்பிடித்தனர். அவர்களின் 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
கடற்படை அதிகாரிகள் விசாரணைக்கு பின்னர் ஊர்க்காவல் துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் இன்று 23 மீனவர்களும் ஊர்க்காவல் துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் 20 மீனவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் மீதமுள்ள 3 பேரில் ராபர்ட், பெஸ்கர் ஆகியோருக்கு தலா 6 மாதம் சிறை தண்டனையும், மற்றொருவர் இரண்டாவது முறையாக எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததால் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். தண்டனை விதிக்கப்பட்ட மூன்று மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அதேபோல் விடுதலையான 20 மீனவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் விரைவில் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- எல்லைதாண்டியதாக சிறைபிடிக்கப்பட்ட 19 பேரில் 18 மீனவர்களை விடுதலை செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.
- ஜான்சன் என்பவருக்கு மட்டும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து கடந்த 7-ந்தேதி காலை 450-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவில் அவர்கள் கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையேயான இந்திய கடல் எல்லை பகுதியில் வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரத்தை சேர்ந்த ரீகன், சசிக்குமார் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகை சிறைபிடித்தனர். மேலும் அதில் இருந்த ஜான்சன், மெட்டன், அந்தோணி டிஸ்மர், முனியசாமி, ஜேசுராஜா, சேகர், முனியசாமி, கிளவர்சன், பிரசாந்த், பிரபாகரன், செல்வராஜ், முனியசாமி, செல்வதாமஸ், ஆரோக்கியம், ஆஸ்வார்ட் உள்ளிட்ட 19 பேரை கைது செய்தனர்.
கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிமன்ற காவல் முடிவடைந்தையடுத்து இன்று அவர்கள் மீண்டும் ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதில் எல்லைதாண்டியதாக சிறைபிடிக்கப்பட்ட 19 பேரில் 18 மீனவர்களை விடுதலை செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. ஜான்சன் என்பவருக்கு மட்டும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
ஏற்கனவே கடந்த வாரம் 3 மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட ஜெயில் தண்டனையை எதிர்த்து ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்தி வந்த நிலையில் மேலும் ஒருவருக்கு தண்டனை அளித்திருப்பது சக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து போராட்டத்தை தீவிரப்படுத்த மீனவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.
- மீனவர்களின் பாதுகாப்பு கருதி ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மறு அறிவிப்பு வரும் வரை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தடை விதித்திருந்தது.
- 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
ராமேசுவரம்:
வங்க கடலில் 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறை காற்று காரணமாக மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் காற்றின் வேகம் குறைந்த நிலையில் இன்று காலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
வங்க கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைகாற்று வீசக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இதனால் கடந்த 28-ந்தேதி முதல் மீனவர்களின் பாதுகாப்பு கருதி ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மறு அறிவிப்பு வரும் வரை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தடை விதித்திருந்தது.
இதன் காரணமாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இந்த நிலையில், வங்க கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காற்றின் வேகம் குறைந்த நிலையில் இன்று ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட துறைமுகங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி அளித்ததை தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
- படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீனவர்கள் மீது வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
- ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம்:
தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தொடர்ந்து சிறைபிடித்து வருகிறார்கள். மேலும் நமது மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யும் படகுகளையும் அந்நாடு அரசுடமையாக்கி வருவதால் மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.
கச்சத்தீவு மீட்கப்பட்டால் மட்டுமே தமிழக மீனவர்களின் பிரச்சனை தீரும் என்பதால் மத்திய அரசை தமிழக அரசும், மீனவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். மீனவர்கள் சிறைபிடிக்கப்படும்போது எழும் கோரிக்கைகளும், கோஷங்களும் பின்னர் பேசப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் மீன்பிடிக்க சென்ற 32 மீனவர்கள் மற்றும் 5 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். இதில், படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீனவர்கள் மீது வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனை கண்டித்தும், சிறையில் உள்ள அனைத்து மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் இன்று யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இதனைதொடர்ந்து, ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி பாராளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு, ஏப்ரல் 8-ந்தேதி ஆதார் அட்டை, மீனவர் அடையாள அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களை மத்திய அரசிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்த உள்ளதாகவும் மீனவ சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இந்த போராட்டம் காரணமாக மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்து பிழைப்பு நடத்துபவர்கள் என சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் தினந்தோறும் நடைபெறும் கோடிக்கணக்கான அளவிலான மீன்பிடி தொழில் வர்த்தகமும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த மாதம் இதேபோல் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்களை விடுதலை செய்யக்கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள், உண்ணாவிரதமும் இருந்தனர். மேலும் ராமேசுவரத்தில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு நடைபயணமும் மேற்கொண்டனர். அவர்களை தடுத்து நிறுத்தி சமரச பேச்சுவார்த்தை நடத்திய கலெக்டர் மற்றும் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் வேண்டுகோளை ஏற்று தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது.
இந்தநிலையில் மீண்டும் மீண்டும் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் பல்வேறு இன்னலுக்கு ஆளாவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியான முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
- ரோந்து கப்பலை வைத்து படகுகளில் மோதச் செய்தனர். இதில் படகு உடைந்தது.
- 7 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் 2 மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மண்டபம்:
ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் ஜூன் மாதம் 22ந்தேதி அன்று மீன் பிடிக்க சென்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் கச்சத்தீவு-நெடுந்தீவு இடையே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்களை அடித்து விரட்டினர். மேலும் மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர்.
ரோந்து கப்பலை வைத்து படகுகளில் மோதச் செய்தனர். இதில் படகு உடைந்தது. இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையால் ராமேசுவரம் மீனவர்கள் பாதியிலேயே கரை திரும்பினர். அப்போது எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரத்தை சேர்ந்த ஈசாக் ராபின், செல்வகுமார் ஆகியோரின் விசைப்படகுகளில் மீன்பிடிக்க வந்திருந்த சகாய ராபர்ட்(வயது49), ராதா (44), முத்துராமலிங்கம் (51), யாக்கோபு (24), ஹரிகிருஷ் ணன் (50), இவரது மகன்கள் பொன்ராமதாஸ்(26), ராம்குமார்(24) மற்றும் லிபின்ராஜ் உள்பட 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களது வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி எல்லை தாண்டி வந்ததாக கூறி ராதா (44), முத்துராம லிங்கம் (51), யாக்கோபு (24), இவரது மகன்கள் பொன் ராமதாஸ்(26), ராம்குமார்(24) மற்றும் லிபின்ராஜ் உள்பட 7 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் மீண்டும் இதேபோல் எல்லை தாண்டி மீன் பிடித்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்தார். தொடர்ந்து சகாய ராபர்ட்டுக்கு 1 வருட சிறை தண்டனையும், ஹரிகிருஷ்ணனுக்கு 18 மாத சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
7 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் 2 மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- 14 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வரும் 19-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
- 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ராமேசுவரம் துறைமுக பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
மண்டபம்:
ராமேசுவரம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அவர்களது படகுகளை சிறைபிடிப்பதும் தொடர் கதையாகி உள்ளது.
இந்நிலையில் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 4-ம் தேதி மிக்கேல் ராஜ், நிஜோ ஆகியோருக்கு சொந்தமான 2 விசை படகுகளில் 14 மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 2 விசைப்படகையும் அதிலிருந்த மீனவர்கள் ரிபாக்சன், ராஜபிரபு, அரவிந்த், ராபின்ஸ்டன், முனீஸ்வரன், பிரசாந்த், ஆரோக்கியம், பெட்ரிக் நாதன், யோபு, ஜான் இம்மரசன், அருள் பிரிட்சன், நிஷாத், வினித், அந்தோணி லிஸ்பன் ஆகிய 14 பேரை கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.
அவர்கள் 14 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வரும் 19-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி ரபீக் உத்தரவிட்டார். இதையடுத்து 14 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று ராமேசுவரம் துறைமுக பகுதியில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்கத் தலைவர் ஜேசுராஜ் தலைமை வகித்தார். சகாயம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் 14 மீனவர்களை இலங்கை அரசு சிறை பிடித்ததை கண்டித்தும், இதுவரை சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை இலங்கை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து இன்று (7-ந் தேதி) ஒரு நாள் மட்டும் ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ராமேசுவரம் துறைமுக பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
- விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரும் மீண்டும் எல்லை தாண்டி வந்தால் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கோர்ட்டு எச்சரிக்கை விடுத்தது.
- விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரும் ஓரிரு நாளில் சொந்த ஊருக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராமேசுவரம்:
கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. அதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தமிழக மீனவர்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
இந்தநிலையில் கடந்த மாதம் 21-ந்தேதி ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன், அந்தோணி, கிருஷ்ணன், தங்கப்பாண்டி, அஜித், மடுகுபிச்சை ஆகிய 6 மீனவர்கள் தூதர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்கள் 6 பேரையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து மன்னார் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களை கைது செய்த போலீசார், இலங்கை மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் 6 பேரும் இலங்கை வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிமன்ற காவல் முடிந்ததையடுத்து ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரும் மன்னார் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களை விடுதலை செய்து மன்னார் கோர்ட்டு உத்தரவிட்டது. விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரும் மீண்டும் எல்லை தாண்டி வந்தால் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கோர்ட்டு எச்சரிக்கை விடுத்தது.
விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரும் ஓரிரு நாளில் சொந்த ஊருக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.