என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மண்டபம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
    X

    மண்டபம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

    • சுமார் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
    • 1300 மீனவர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் காலை 300-க்கும் மேற்பட்ட விசைபடகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    நெடுந்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ஜோசப் என்பவருக்கு சொந்தமான ஒரு படகையும், அதிலிருந்த தங்கச்சிமடம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த அருளானந்தன் மகன் ஆமோஸ்டின் (24), அந்தோணியார்புரத்தை சேர்ந்த சத்யம் மகன் ஜோன்தாஸ் (37), மண்டபம் தோப்புகாடு அன்ரோஸ் மகன் பரலோக ஜெபஸ்டின் அன்ரோஸ் (25) ஆகியோரை இலங்கை கடற்படையினர் கைது செய்து காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.

    மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் ராமேசுவரம், மண்டபம், தங்கச்சி மடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் மண்டபம் மீனவர்கள் 3 பேர் சிறை பிடிக்கப்பட்டுள்ளது மீனவர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 3 மீனவர்கள், நீண்ட நாட்களாக இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும், மேலும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்டு கொண்டு வர மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்ககோரி அனைத்து மீனவ சங்கங்கள் சார்பாக மண்டபம் கோவில் வாடியில் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அதன்படி இன்று மண்டபம் கோவில்வாடி கடலோர பகுதியில் உள்ள சுமார் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் 1300 மீனவர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×