search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமேசுவரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்திவைப்பு
    X

    ராமேசுவரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்திவைப்பு

    • ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
    • இதன்காரணமாக 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ராமேசுவரம் துறைமுகம் மற்றும் அதனை சுற்றி உள்ள கரையோர பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டன.

    ராமேசுவரம்:

    கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவங்கள் தொடர் கதையாக நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் கடந்த 20-ந்தேதி ராமேசுவரத்தில் இருந்து 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சென்ற 1500 மீனவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அவர்களில் ராமேசுவரத்தை சேர்ந்த அந்தோணி, மடகு பிச்சை, பாலமுருகன், தங்க பாண்டி, அர்ஜூனன், ராஜா ஆகிய 6 மீனவர்களையும், அவர்களது விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட மீனவர்கள் 6 பேரும், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அந்த மீனவர்கள் 6 பேரையும், அவர்களது விசைப்படகையும் விடுவிக்கக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    இதன்காரணமாக 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ராமேசுவரம் துறைமுகம் மற்றும் அதனை சுற்றி உள்ள கரையோர பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டன. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன் தொழிலை நம்பியுள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று வேலையின்றி இருந்தனர்.

    Next Story
    ×