என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தருமபுரி அருகே இடி மின்னலுடன் 2-வது நாளாக கனமழை: விவசாயிகள்-பொதுமக்கள் மகிழ்ச்சி
- சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால், வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது.
- தாழ்வான பகுதிகள், விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியது.
அரூர்:
தருமபுரி மாவட்டம் அரூர் பாப்பிரெட்டிப்பட்டி அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் காலையில் இருந்து கடுமையான வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்தது. மாலை, வானில் கருமேகங்கள் திரண்டு பலத்த காற்று இடி, மின்னலுடன் திடீர் கனமழை பெய்தது.
இந்தநிலையில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில், நேற்றும் மாலை சூறைக்காற்றுடன் மழை பெய்தது. பல இடங்களில் விளம்பர பலகைகள், மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. பலத்த காற்று வீசத் துவங்கி, சில நிமிடத்தில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தாழ்வான பகுதிகள், விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியது.
சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால், வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. திடீர் மழையால் சாலைகளில் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
இதேபோல் தருமபுரி நகரில் மாலை சூறை காற்றுடன் பரவலாக மழை பெய்தது. இதனால் குளிர்ச்சி நிலவி வெப்பம் தணிந்ததால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களாக அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது.
இரண்டாவது நாளாக நேற்று மாலை ஊத்தங்கரை பகுதியில் சுமார் ஒரு மணி நேரமாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.
காற்றுடன் பெய்த மழையால் ரவுண்டானா பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் முறிந்து சாலையில் விழுந்தது. ஊத்தங்கரை, கல்லாவி, காரப்பட்டு, சிங்காரப்பேட்டை, சாமல் பட்டி உட்பட பல்வேறு பகுதியில் திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.






