search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirunelveli"

    • திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அம்பாசமுத்திரத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்தார்.
    • அம்பாசமுத்திரத்தில் இருந்து, கார் மூலம் அகஸ்தியர் பட்டிக்கு பிரதமர் மோடி விரைந்தார்.

    பாராளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி தமிழகத்தில் முதற்கட்டமாக நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், போட்டிடும் கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், பாஜக வேட்பாளர்களை ஆதரிப்பதற்காக பிரதமர் மோடி இன்று நெல்லை வந்தடைந்தார்.

    திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அம்பாசமுத்திரத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்தார்.

    பின்னர், அம்பாசமுத்திரத்தில் இருந்து, கார் மூலம் அகஸ்தியர் பட்டிக்கு பிரதமர் மோடி விரைந்தார்.

    நெல்லை அகஸ்தியர்பட்டி பிரசார பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    தொடர்ந்து, வணக்கம் என கூறி தமிழில் உரையை தொடங்கினார் பிரதமர் மோடி.

    • பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம், தேர்தல் முடியும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    • மனு பெட்டியை கலெக்டர் அலுவலகத்தில் வேலை பார்க்கக் கூடிய ஊழியர்கள் அலுவலகத்திற்குள் எடுத்துச் செல்ல முடிவு.

    நெல்லை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த காரணத்தினால் வாரந் தோறும் திங்கள் கிழமை நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம், தேர்தல் முடியும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் கார்த்திகேயன் அறிவித்தார்.

    அதே நேரத்தில் கோரிக்கை தொடர்பாக பொது மக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிக்க அலுவலக வளாகத்தில் நுழைவு வாயில் பகுதியில் மனு பெட்டி வைக்கப்பட்டு அதில் மனுக்களை போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வரக்கூடும் என்பதால் வாசலில் இருந்த மனு பெட்டியை கலெக்டர் அலுவலகத்தில் வேலை பார்க்கக் கூடிய ஊழியர்கள் அலுவலகத்திற்குள் எடுத்துச் செல்ல முடிவு செய்தனர்.

    இதற்காக மாற்றுத்திறனாளிகளை அமர வைத்து அழைத்துச் செல்லக்கூடிய சக்கர நாற்காலியில் மனு பெட்டியினை தூக்கி வைத்து நகரக்கூடிய நாற்காலியை தள்ளி சென்றனர். இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சிறிது நேரத்திலேயே சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இந்த சம்பவம் கர காட்டக்காரன் படத்தில் நடிகர் ராமராஜன் உள்பட அனைவரும் சேர்ந்து காரை தள்ளிக் கொண்டு செல்லும் காட்சியை நினைவு படுத்துவதாக நெட்டிசன்கள் பதிவிட்டனர்.

    • போராட்டத்தில் ஈடுபட போவதாக கோவில் பக்தர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது.
    • பக்தர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு கருப்பந்துறை பகுதியில் பிரசித்தி பெற்ற அழியாபதி ஈஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்த கோவிலுக்கு முன் பகுதியில் 39.52 சென்ட் நிலம் கோவில் நந்தவனமாக பயன் படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலம் சில நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு நந்தவனம் பயன்பாட்டுக்கு இல்லாத நிலை உருவாகி இருப்பதாக அப்பகுதியினர் புகார் கூறினர்.

    இதனால் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சுவாமி அழியாபதி ஈஸ்வரரிடம் விண்ணப்பம் செய்து பிரார்த்தனை செய்து போராட்டத்தில் ஈடுபட போவதாக கோவில் பக்தர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை அங்கு பக்தர்கள் பிரார்த்தனை போராட்டம் நடத்தப் போவதாக வந்த தகவலை அடுத்து நெல்லை சந்திப்பு போலீஸ் உதவி கமிஷனர் ராஜேஸ்வரன் தலைமையில் போலீசார் கோவில் வளாகத்தில் குவிக்கப்பட்டனர்.

    அப்போது பக்தர்கள் பிரார்த்தனை செய்ய கோவிலுக்கு வருகை தந்த நிலையில் கோவில் முன்பு ஒற்றை காலில் நின்றவாறு சிவ நாமம் பாடி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நந்தவனத்தை மீட்க பிரார்த்தனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து பக்தர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது பிரார்த்தனையில் ஈடுபட்ட பக்தர்கள் தரப்பில், உடனடியாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலம் மீட்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் நில அளவை பிரிவு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு பிரச்சனைக்குரிய இடம் அளவீடு செய்யப்பட்டது.

    தொடர்ந்து அரசு ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட இடம் கோவில் நந்தவனம் என கண்டறியப்பட்டதை தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இன்னும் ஒரு சில நாட்களில் இடத்தை மீட்டு தருவது தொடர்பான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகளும், வருவாய் துறை அதிகாரிகளும் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து பக்தர்கள் அங்கிருந்து தற்காலிகமாக கலைந்து சென்றனர்.

    இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநில செயலாளர் குற்றாலநாதன், மாவட்ட பொதுச்செயலாளர் பிரம்மநாயகம், மாவட்ட துணைத்தலைவர்கள் செல்வராஜ், ராஜ செல்வம், மாவட்ட செயலாளர்கள் சுடலை, சுரேஷ், சங்கர், விமல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இரட்டை ரெயில்கள் செல்ல வசதியாக பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
    • வாகனங்கள் ஒழுகினசேரி செல்லாதவகையில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு சாலை அடைக்கப்பட்டு உள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஒரு சில இடங்களில் பணிகள் மேற்கொள்ள வேண்டியது உள்ளது. இதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் ஒழுகினசேரியில் ரெயில்வே பாலம் பகுதியில் இரட்டை பாதை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பழைய ரெயில்வே பாலத்தில் ஒரு ரெயில்கள் செல்ல வசதியாக மட்டுமே தண்டவாளம் உள்ளது என்பதால் பழைய பாலத்தை இடித்து விட்டு புதிதாக இரட்டை ரெயில்கள் செல்ல வசதியாக பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    புதிதாக பாலம் அமைப்பதற்கு தூண்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மேல் தளம் அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளனர். பழைய பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்தை மாற்றி விடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து இன்று (28-ந்தேதி) முதல் 20 நாட்கள் போக்குவரத்து மாற்றிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி இன்று காலை ஒழுகினசேரி பகுதியில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது.

    போக்குவரத்து மாற்றிவிடப் பட்டதையடுத்து போக்கு வரத்து போலீசார் ஒழுகினசேரி, புத்தேரி, அப்டா மார்க்கெட் பகுதிகளில் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். வடசேரி பகுதியில் சாலைகள் பேரிகார்டுகளால் மூடப்பட்டுள்ளது. இதுபோல் அப்டா மார்க்கெட் பகுதியில் நெல்லையில் இருந்து வரும் 4 சக்கர வாகனங்கள் ஒழுகினசேரி செல்லாதவகையில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு சாலை அடைக்கப்பட்டு உள்ளது.


    நெல்லையிலிருந்து வந்த வாகனங்கள் அனைத்தும் அப்டா மார்க்கெட் பகுதியில் இருந்து நான்கு வழிசாலை வழியாக திருப்பி விடப்பட்டது. அப்டா மார்க்கெட் நான்கு வழிச்சாலையில் இருந்து புத்தேரி எஸ்.எம்.ஆர்.வி. பள்ளி வழியாக வடசேரிக்கு வந்தது. இதேபோல் வடசேரியில் இருந்து நெல்லைக்கு சென்ற வாகனங்களும் இதே பாதையில் இயக்கப்பட்டது. இதனால் வடசேரி அசம்பு ரோடு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன. அப்டா மார்க்கெட் பகுதியில் இருந்து வடசேரிக்கு வந்த இருசக்கர வாகனங்கள் ஒழுகினசேரி பாலத்தையொட்டியுள்ள சாலை வழியாக வந்தது.

    களியக்காவிளை, குளச்சல், மார்த்தாண்டம் பகுதியில் இருந்து வந்த 4 சக்கர வாகனங்கள் களியங்காட்டில் இருந்து இறச்சகுளம், புத்தேரி, அப்டா மார்க்கெட் வழியாக இயக்கப்பட்டது.

    இதே போல் இங்கிருந்து தக்கலை, திருவனந்தபுரம், களியக்காவிளை, குளச்சல் சென்ற வாகனங்களும் இதே பாதையில் இயக்கப்பட்டன. இதனால் அந்த சாலையிலும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் என்ட் டூ என்ட் பஸ்கள் வழக்கமாக வரக்கூடிய நேரத்தை விட சிறிய நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது.

    இதே போல் மற்ற பஸ்களும் மாற்றுபாதை வழியாக இயக்கப்படுவதால் சிறிய நேரம் தாமதமாக வடசேரி பஸ் நிலையத்திற்கு வந்தது. பஸ்கள் புத்தேரி நான்கு வழிசாலை வழியாக திருப்பிடப்பட்டுள்ள நிலையில் நான்கு வழி சாலை இணைக்கும் பகுதியில் 100 மீட்டர் தூரத்திற்கு கான்கிரீட் தளம் அமைக்கப்படாமல் சாலை உள்ளது. இந்த சாலையில் கனரக வாகனங்களும் பஸ்களும் செல்லும் போது புழுதி காற்றால் புழுதி பறந்து வருகிறது.

    இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது. பஸ் போக்குவரத்து மாற்றப்பட்டதையடுத்து ஒழுகினசேரி பகுதியில் புதிய பாலம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொண்டு உள்ளனர். அந்த பகுதியில் மணல் நிரப்பும்பணி, கேபிள் வயர்கள் மாற்றும்பணி, கம்பிகள் கட்டும்பணி உள்பட அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது.

    • பாபநாசம் அணைக்கு வரும் நீரின் அளவு 883 கனஅடியாக அதிகரித்தது.
    • மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் அருவி பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று காலையில் தொடங்கி இரவு வரையிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்தது.

    நெல்லையில் நேற்று மாலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்தது. அங்கு 5 மில்லி மீட்டரும், சேர்வலாறு அணை பகுதியில் 2 மில்லி மீட்டரும் மழை பதிவாகியது.

    இதனால் பாபநாசம் அணைக்கு வரும் நீரின் அளவு 883 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 1,054 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 140.50 அடியாக உள்ளது. கொடுமுடியாறு அணையில் 11 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    118 அடி கொண்ட மணி முத்தாறு அணை பகுதியில் நேற்று 14.50 மில்லிமீட்டர் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக அணை இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் 3-வது முறையாக நிரம்பியது.

    தாமிரபரணி ஆற்றில் உபரி நீர் 720 கனஅடி திறக்கப்பட்டுள்ளது. கன்னடியன் கால்வாய் பகுதியில் சாரல்மழை தொடர்ந்து பெய்து வந்தது. அங்கு 8.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. களக்காட்டில் 9.2 மில்லி மீட்டரும், சேரன்மகாதேவியில் 4 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

    மாவட்டத்தில் நாங்குநேரி, அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று பரவலாக மழை பெய்தது. நாங்குநேரியில் அதிகபட்சமாக 12 மில்லி மீட்டரும், அம்பையில் 6 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. ராதாபுரத்தில் 3 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஊத்து, நாலுமுக்கு, மாஞ்சோலை, காக்காச்சி உள்ளிட்ட எஸ்டேட்டுகளிலும் தொடர்ந்து 2-வது நாளாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக ஊத்து பகுதியில் 12 மில்லி மீட்டரும், நாலுமுக்கில் 8 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 7 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் ராமநதி, கடனா நதி மற்றும் குண்டாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை நீடிக்கிறது. அதிகபட்சமாக கடனா நதியில் 7 மில்லி மீட்டரும், ராமநதியில் 6 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. குண்டாறு அணை தனது முழு கொள்ளளவான 36 அடியை அடைந்து நிரம்பி வழிந்த வண்ணம் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் அருவி பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    இன்று விடுமுறை தினத்தையொட்டி மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து குளித்து மகிழ்ந்து வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் தென்காசி மற்றும் சிவகிரியில் லேசான சாரல் அடித்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரன் பட்டினம், சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தலா 13 மில்லிமீட்டர் மழை பெய்து உள்ளது. அதிகபட்சமாக காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 23 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. திருச்செந்தூரில் 1 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    • ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நெல்லைக்கு வருகை தருவார்கள்.
    • திருநீர் பூசியும், நெற்றில் குங்குமத்தை இட்டும் வழிபட்டனர்.

    நெல்லை:

    உலக புகழ் பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர்-காந்திமதி கோவிலின் பெருமைகளை அறிந்து கொள்வதற்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நெல்லைக்கு வருகை தருவார்கள்.

    அதன்படி ஐரோப்பா கண்டத்தில் உள்ள எஸ்டோனியா நாட்டினை சேர்ந்த 32 பேர் ஒரு குழுவாக வந்து நெல்லையப்பர் கோவிலை இன்று சுற்றி பார்த்ததோடு அங்கு மூலவரான நெல்லையப்பர், காந்திமதி அம்பாளையும் மனம் உருகி வழிபட்டனர். அதன்பின் ஆண்கள் நெற்றியில் திருநீர் பூசியும் மற்றும் பெண்கள் நெற்றில் குங்குமத்தை இட்டும் வழிபட்டனர்.

    தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் கலாச்சாரம், மொழி, பழக்க வழக்கங்கள் என அனைத்தும் எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. நெல்லையப்பர் கோவிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தது மன அமைதியாகவும், உற்சாகத்தை அளிப்பதாகவும் உள்ளது.

    இந்த கோவிலின் வரலாறு, கட்டிடக்கலை, சிற்பங்கள் என அனைத்தும் வியப்பாக அமைந்துள்ளது. நாங்கள் தமிழ் சித்த மருத்துவமுறை குறித்து தெரிந்துகொள்ளவும், அகஸ்தியர் வழிபாட்டினை மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளோம். சிவனின் மீதுள்ள பற்றினால் எங்கள் நாட்டில் சிவன் கோவில் கட்டி வருகிறோம்.

    தொடர்ந்து முருக கடவுள் மீது அதிக பற்று உள்ளதால் தமிழ்நாட்டில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளான திருச்செந்தூர், திருத்தணி, சுவாமி மலை, திருப்பரங்குன்றம் என முருகன் தலங்களில் சென்று சுவாமி தரிசனம் செய்தோம். தொடர்ந்து இந்தியாவிலுள்ள புகழ் பெற்ற கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்ய உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் தனி தீவுகளாக காட்சி அளித்தன.
    • தமிழக அரசு சார்பில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டது.

    கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் அணைகள் நிரம்பியதால் சுமார் 1 லட்சம் கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் தனி தீவுகளாக காட்சி அளித்தன. லட்சக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதைத்தொடர்ந்து வெள்ளத்தில் தவித்தவர்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.


    தமிழக அரசு சார்பில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.6 ஆயிரம், மற்றவர்களுக்கு ரூ.1000 என வழங்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் சார்பில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.


    இந்நிலையில், நடிகர் பிரசாந்த், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் மழையால் பாதிக்கப்பட்ட 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வலம் வருகிறது. இதற்கு முன்பு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிவாரண உதவிகளை நடிகர் விஜய் வழங்கினார்.

    • கனமழை, வெள்ளத்தால் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
    • மீட்பு பணிகள் பெரும்பாலும் முடிந்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழை, வெள்ள பாதிப்பு காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக அளவு பாதிப்படைந்த தாலுகா பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு ரூ.6 ஆயிரமும், மற்ற பகுதிகளுக்கு ரூ.1000 நிவாரண தொகையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    அதன்படி டோக்கன்கள் வழங்கப்பட்டு நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் 92 சதவீத நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

    மேலும், டோக்கன் பெற்றவர்கள் நாளை மாலை 5 மணிக்குள் கட்டாயம் நிவாரணத் தொகையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

    • 11 அம்மன் கோவில்களிலும் தசரா விழா.
    • கோவில் சப்பரங்கள் வீதி உலா.

    நெல்லை பாளையங்கோட்டையில் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா நேற்று முன்தினம் ஆயிரத்தம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதேபோல் 11 அம்மன் கோவில்களிலும் தசரா விழா சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.

    நேற்று முன்தினம் இரவு 11 கோவில்களில் இருந்து சப்பரங்களில் அம்மன் எழுந்தருளினார்கள். ஆயிரத்தம்மன், முத்தாரம்மன், உலகம்மன், தூத்துவாரி அம்மன், உச்சினி மாகாளி அம்மன் உள்பட 11 அம்மன் கோவில் சப்பரங்கள் வீதி உலா நள்ளிரவில் தொடங்கியது.

    நேற்று காலை பாளையங்கோட்டை ராமர் கோவில் மற்றும் ராஜகோபால சுவாமி கோவில்கள் முன்பு பக்தர்கள் தரிசனத்துக்காக ஒரே நேரத்தில் அனைத்து சப்பரங்களும் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அங்கு பக்தர்கள் வரிசையாக வந்து வழிபட்டனர்.

    இதை தொடர்ந்து நவராத்திரி விழாவில் அம்மன் கொலு வீற்றிருக்கும் வைபவம் நேற்று தொடங்கியது. தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் கொலு இருக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வருகிற 25-ந்தேதி (புதன்கிழமை) இரவு 12 மணிக்கு பாளையங்கோட்டை எருமைக்கடா மைதானத்தில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

    • அன்னையின் திருவடியின் கீழ் அரக்கன் வீழ்ந்து கிடக்க அழகிய எழிலுடன் வீற்றிருக்கிறாள்.
    • ஐந்து சிறு தெய்வங்களும், பதினான்கு கன்னியர்களின் கற்படிமங்களும் கோவிலில் உள்ளன.

    திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு வடமேற்கு முனையில் அமைந்துள்ளது பிட்டாபுரத்தி அம்மன் கோவில். இங்கு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அன்னையை, 'வடக்கு வாய் செல்வி, நெல்லை மாகாளி, செண்பகச்செல்வி' என்றும் அழைக்கிறார்கள். தற்போது இந்த அம்மன் 'பிட்டாரத்தி அம்மன்' என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறாள்.

    இங்குள்ள அம்மன் நான்கு கரங்களுடன் வலது கைகளில் உடுக்கையும், சூலமும், இடக்கைகளில் பாசமும், கபாலமும் கொண்டு காட்சியளிக்கிறாள். அன்னையின் திருவடியின் கீழ் அரக்கன் வீழ்ந்து கிடக்க அழகிய எழிலுடன் வீற்றிருக்கிறாள். அருகில் இரு பக்கமும் படைக்கல தேவியும் (அஸ்திர தேவதை), சீபலி அம்மனும், ராஜராஜேஸ்வரியும் செப்பு படிமங்களில் காட்சியளிக்கிறார்கள்.

    இந்த ஆலயத்தில் விநாயகர், நெல்லையப்பர், காந்திமதி, நந்தி, வள்ளி, முருகன், தெய்வானை, மயில் மற்றும் ஐந்து சிறு தெய்வங்களும், பதினான்கு கன்னியர்களின் கற்படிமங்களும் உள்ளன.

    அம்மன் கருவறையை அடுத்து அர்த்த மண்டபமும், அதற்கு அடுத்து கருவறையும் உள்ளது. கருவறையில் அன்னை பிட்டாபுரத்தி அம்மன் சுமார் 6 அடி உயரத்தில், 5 அடி அகலத்தில் அழகிய இருக்கையில் (பீடத்தில்) வலது காலை பீடத்தின் மேலே ஊன்றி, இடது காலை தொங்க விட்டு வலது கைகளில் அரவு, வேதாளம், வாள், சூலம் ஆகியவற்றையும், இடது கைகளில் தீ, மணி, கேடயம், கபாலம் ஆகியவைகளை தாங்கியும், இருக்கையின் கீழ் வீழ்ந்து கிடக்கும் அரக்கனை வலக்கை சூலத்தால் அழுத்தியபடி எழிற்கோலம் காட்டுகிறாள்.

    இந்த அன்னைக்கு நடைபெறும் இருநேர பூஜையிலும் பிட்டு படைக்கப்படுவது சிறப்பான ஒன்றாகும். பிட்டு படைப்பதால்தான் இந்த அம்மனுக்கு பிட்டா புரத்தி அம்மன் என்று பெயர் வந்துள்ளதாக தெரிகிறது. அம்மனுக்கு தீபாராதனை ஆன பின்னர் அலங்காரத்தில் ஏற்படும் குறைகளை சரிசெய்ய மாட்டார்கள். அதேபோல் தீபாராதனை முடிந்த பின்னர் மாலைகளோ, பூக்களோ அம்மனுக்கு அணிவிக்கப்படாது.

    குழந்தைகளுக்கு ஏற்படும் நோயை குணப்படுத்துவது இந்த அம்மனின் சிறப்பு அம்சமாகும். குழந்தைகளுக்கு ஏற்படும் 64 விதமான நோய்களுக்கும் இக்கோவிலில் வேர்கட்டி, மையிடப்படுகிறது. இவ்வாறு செய்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் குணம் அடையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

    இதனை நிரூபிக்கும் விதமாக நாள்தோறும் ஏராளமானோர், நோயால் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் குழந்தைகளை இக்கோவிலுக்கு கொண்டு வந்து தீர்த்தம் தெளித்தும், மையிட்டும் செல்கிறார்கள். இந்துக்கள் மட்டுமல்லாது பிற மதத்தை சேர்ந்தவர்களும் இக்கோவிலுக்கு தங்கள் குழந்தைகளை கொண்டு வந்து செல்வது சிறப்பம்சமாகும்.

    மேலும் மகப்பேறு விரும்பியும், பீடைகள் நீங்கவும், நோய்கள் தீரவும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திரளான பெண்கள் இக்கோவிலுக்கு வந்து அம்மனை வேண்டி செல்கிறார்கள். ராகுகால நேரத்தில் இந்த அம்மனை வழிபடுவது சிறப்பாகும்.

    • ஏரிவாடி பக்கத்தில் நம்பி ஆற்றின் அருகில் அமைந்துள்ளது ஒத்தபனை சுடலை ஆண்டவர் கோவில்.
    • இயற்கை வளம் நிறைந்தது திருவேங்கடநாதபுரம் என்று அழைக்கக்கூடிய சிறுமளஞ்சி.

    திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே அமைந்துள்ளது. சிறுமளஞ்சி. இது நாங்குநேரி தாலுகாவில் உள்ள ஏரிவாடி பக்கத்தில் உள்ள நம்பி ஆற்றின் அருகில் அமைந்துள்ளது இந்த ஒத்தபனை சுடலை ஆண்டவர் கோவில்.

    இயற்கை வளம் நிறைந்த திருவேங்கடநாதபுரம் என்று அழைக்கக்கூடிய சிறுமளஞ்சி. இந்த ஊரில் பல தலைமுறைகளுக்கு முன்பு இருளப்பன் என்பவர் வசித்து வந்தார். அவரது பக்கத்து கிராமமான அணைக்கரையை சேர்ந்த வெள்ளையன் என்பவருக்கும் பனைமரங்களை குத்தகை எடுப்பதில் ஒரு சில பிரச்சினைகள் இருந்துகொண்டு வந்தது.

    ஒரு சமயம் வெள்ளையம் நிலத்தில் வைக்கப்பட்டிருந்த வைகோல்போர் தீப்பற்றி எரிந்தது. தன்னுடைய களத்துமேட்டில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல்போர் தீப்பற்றி எரிந்ததற்கு காரணம் இருளப்பன் தான் என்று சொல்லி குற்றம்சாட்டினார். அதன்பிறகு இருவருக்கும் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. பின்னர் ஊர் பெரியர்வர்களிடம் பேசி இந்த பிரச்சினைக்கு முடிவு செய்யப்பட்டது.

    அது என்னவென்றால் விஜயநாராயணத்தில் இருக்கக்கூடிய சுடலைமாட சுவாமி கோவிலுக்கு இரு ஊரில் உள்ள மக்களும் செல்ல வேண்டும். அங்கு சென்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்யலாம் என்று ஊர் பெரியவர்கள் முடிவு செய்தனர். சத்தியம் செய்தபிறகு சொந்த ஊருக்கு 3 நாட்கள் கழித்து தான் வர வேண்டும். எனவே இரண்டு ஊர் பொதுமக்களும் விஜயநாராயண புரத்துக்கு சென்றனர். அங்கு கோவிலில் சத்தியமும் செய்தனர்.

    ஆனால் 3 நாட்களுக்குள் ஊருக்கு செல்லக்கூடாது என்ற உத்தரவை மீறி சிறுமளஞ்சிக்காரர்கள் ஊருக்கு திரும்பி வந்துவிட்டனர். உடனே சுடலைமாட சுவாமி கோபத்துடன் தன்னுடைய திருவிளையாடலை ஆரம்பித்தார்.

    சிறுமளஞ்சி தெருவில் வசிக்கக்கூடிய ஒரு பெண்ணின் கனவில் பேச்சியின் மகனாகிய மாயாண்டி சுடலைமாட சுவாமி ஓங்கி உயர்ந்த உருவம் கொண்டு விரிசடை கூந்தலோடும், விரிந்த தோள்கள் இரண்டில் இரண்டு பனைமரங்களை வைத்துக்கொண்டு, ஒரு கையில் மாண்டுபோன பிணங்களின் மிட்டங்கால்களை முருக்குபோல் கடித்துக்கொண்டு ஆங்கார உருவம் கொண்டு ஆதாளி போட்டபடி இடுப்பில் கருப்புநிறத்தில் சல்லடை அணிந்து, காலிலே வெள்ளிமணி தண்டையும் அணிந்து, ஒருகையில் 5 மணிவல்லையமும் கொண்டு வருவதுபோல் தோன்றினார்.

    பயந்துபோன அந்த பெண், தான் கண்ட கனவை பற்றி தன்னுடைய பெற்றோர்களிடம் கூறினாள். அந்த பெண்ணின் அப்பா-அம்மா இருவரும் ஊர் பெரியவர்களிடம் சொன்னார்கள். ஊர் பெரியவர்களில் ஒருவர் நாளைக்கு கடைசி செவ்வாய். எனவே நம்ம ஊர் முத்தாரம்மன் கோவிலுக்கு சென்று கணக்கு கேட்டு வரலாம். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி செய்யலாம் என்று கூறினார்.

    கடைசி செவ்வாய் இரவு 8 மணிக்கு பூஜைகள் எல்லாம் நடந்தது. ஊர் பெரியவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து நடந்தவற்றை எடுத்துக்கூறி இனி நாங்கள் என்ன செய்வது என்று கேட்டனர்.

    அப்போது அம்மன் அருள்வாக்கு சொன்னார். என் மகன் மாயாண்டி சுடலைக்கு கோபம் தீரவில்லை. எனவே அவனுக்கு ஊரில் நிலையம் கொடுத்து கோவில் கட்டி சுடலைமாடனை கைகூப்பி வணங்கி வர வேண்டும். சிவசுடலை அவன் கோபம் தணிவான். கையிலையில் பிறந்த மகன் காவலாய் காத்து நிற்பான். இன்று இரவே சுடலைமாடன் வருவான். நள்ளிரவில் ஊருக்கு கிழக்கே ஒத்தபனை மரத்தின் மீது சுடரொளியில் அவதரித்தவன் போரொளியாய் தெரிவான் என்று அம்மன் அருள்வாக்கு சொன்னாங்க.

    உடனே அவர்கள் அருகில் இருந்தவர்களில் ஒரு பெண் கேட்டார். இந்த பனங்காட்டில் இருக்கக்கூடிய எந்த பனை மரத்தில் அவர் தெரிவார் என்று கேட்டார். அதை எவ்வாறு கண்டுபிடிப்பது என்று கேட்டார். உடனே அருள்வாக்கு கூறும் அம்மன், சுடலை பேரொளியாய் தெரியும் அந்த பனைமரத்துக்கு அடியில் கத்தரிக்காய் செடி ஒன்று இருக்கும். அதில் ஒரேஒரு காய் மட்டும் காய்த்திருக்கும். அந்த இடம் தான் சுடலைமாடசுவாமி குடியேறக்கூடிய இடம்.

    சுடலைமாட சுவாமியை கண்டு யாரும் பயப்படத்தேவை இல்லை. அவன் என் கண் பார்வையில், என் கட்டுப்பாட்டில் இருப்பான் என்று முத்தாரம்மன் அருள்வாக்கு சொன்னாங்க.

    முத்தாரம்மன் சொன்னபடியே நள்ளிரவில் ஊரார்கள் எல்லோரும் ஒன்றுகூடி நின்னாங்க. மாயாண்டி சுடலைமாட சுவாமி விஜயநாராயணம் விட்டு பரப்பாடி, புதுக்குளம், ராப்பாடி பாதைவிட்டு, நாங்குநேரி தாண்டி வாகைகுளம் வழியாக சிறுமளஞ்சி வந்தார்.

    வேம்புடையார் சாஸ்தா கூடி, ஐந்துடையான் பாலம் கடந்து சிறுமளஞ்சி ஊருக்கு ஓடி வந்தார். ஒத்தப்பனை உயரத்துக்கு ஒளியாக காட்சி தந்தார் சுடலைமாடன் சுவாமி. அடுத்த நாள் காலையில் ஊர் பெரியவர்கள் அனைவரும் விஜயநாராயணம் சென்றனர். விஜயநாராயணத்துக்கு சென்று பிடிமண் எடுத்து வந்தனர். கத்தரிக்காய் செடி முளைத்திருந்த அந்த ஒத்தை பனைமரத்தடியில் சுடலைமாட சுவாமிக்கு மண் பீடம் அமைத்தனர்.

    பனை ஓலையால் கொட்டகை அமைத்து கோவில் கட்டி பூஜை செய்து வந்தனர். அப்போது சுடலைமாட சுவாமி அருள்வாக்கு சொன்னார். முதல்வாக்கு என்னவென்றால், நான் இந்த சிறுமளஞ்சியை சிறு மதுரையாக்கி தருகிறேன் என்று கூறினார். சுடலைமாட சுவாமி கூறிய அருள்வாக்கின்படி சிறுமளஞ்சி விவசாயத்திலும், தொழில் வளர்ச்சியிலும், கல்வியிலும் சிறந்து விளங்கியது.

    அதன்பிறகு சிலவருடங்கள் கழித்து கல்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பனைக்கம்புகள் கொண்டு ஓடு வேயப்பட்டது. காலப்போக்கில் ஓட்டுக்கூரையை நீக்கிவிட்டு கல் மண்டபம் கட்டினர். இந்த கோவில் வள்ளியூரில் இருந்து 9 கி.மீ தூரத்தில் உள்ளது.

    இந்த கோவிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அதாவது ஆவணி மாதம் 3-வது வெள்ளிக்கிழமை சிறப்பாக கொடை விழா நடந்து வருகிறது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடும், தமிழ் மாதத்தில் வரும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் விஷேச வழிபாடும் நடக்கிறது.

    இந்த விஷேச நாட்களில் வள்ளியூரில் இருந்து சிறப்பு பஸ்கள் எல்லாம் இந்த கோவிலுக்கு இயக்கப்படுகிறது. இந்த கோவிலில் காலை 6.30 மணியில் இருந்து இரவு 8.30 மணிவரை நடை திறந்து இருக்கும். நுழைவு வாயிலுக்கு அருகில் ஒற்றை பனைமரமும், பக்கத்துலேயே கொம்புமாடசாமியின் பீடமும் இருக்கும். அதற்கு எதிரில் சுடலைமாட சுவாமியின் கோவில் உள்ளது.

    அங்கு சுடலைமாட சுவாமி, பேச்சியம்மன், முண்டன் சுவாமி ஆகிய தெய்வங்கள் நின்ற நிலையில் கிழக்கு பகுதி நோக்கி அருள்பாலித்து வருகிறார்கள். ஒத்தபனை சுடமாடசுவாமியின் தனிச்சிறப்பு என்னவென்றால் இந்த கோவிலில் இருக்கும் மூலவர் சுடலை ஆண்டவர் என்று அழைக்கப்படுகிறார்.

    உண்மையாகவே நம்பிக்கையுடன் வழிபட்டு வரும் பக்தர்களுக்கு உயர்வான வாழ்வை தருகிறார் இந்த ஒத்தப்பனை சுடலைமாடசுவாமி. நாமும் அவரை வழிபடுவோம் அவர் அருள் பெறுவோம்.

    நெல்லை மத்திய கூட்டுறவு வங்கியில் புதிய ஏ.டி.எம் எந்திரத்தை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    நெல்லை:

    நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் புதிதாக ஏ.டி.எம். மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

    இதில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஏ.டி.எம். மையத்தை திறந்து வைத்தார்.

    விழாவில் மேயர் சரவணன், தொ.மு.ச. அமைப்பு செயலாளர் தர்மர், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சுபாஷினி, மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் செல்லப் பாண்டியன்,

    நெல்லை மத்திய கூட்டுறவு வங்கி துணை பதிவாளர் லட்சுமண குமார், சரக மேற்பார்வையாளர் காதர் மைதீன், 11-வது வார்டு கவுன்சிலர் கந்தன், பேட்டை ரூரல் பஞ்சாயத்து தலைவர் சின்னத்துரை, வார்டு உறுப்பினர்கள் முருகன், ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    ×