search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anmikam"

    • ஆவணி அவிட்டம் பெரும்பாலும் பவுர்ணமி அன்று வரும்.
    • குளக்கரைகளில் பழைய பூணூலை எடுத்துவிட்டு புதிய பூணூலை அணிந்துக்கொள்வர்.

    ஆவணி மாத பவுர்ணமியை யொட்டி வரும் அவிட்ட நட்சத்திரத்தில் ஆவணி அவிட்ட விரதம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நாளில் முறையாக காயத்ரி உபதேசம் பெற்றவர்கள் மற்றும் உபநயணம் செய்துக்கொண்ட பிராமணர்கள் ஆற்றங்கரைகளில் அல்லது குளக்கரைகளில் தங்களுடைய பழைய பூணூலை எடுத்துவிட்டு புதிய பூணூலை அணிந்துக்கொள்வர்.

    ஆவணி அவிட்டம் என்று சொன்னாலே, பலருக்கும் இது பூணூல் மாற்றும் ஒரு நிகழ்வு என்று தான் முதலில் நினைவுக்கு வரும். பூணூல் அணியும் பழக்கம் உள்ளவர்கள், விடியற்காலையிலேயே குளித்து நீர்நிலைகளின் அருகில் அல்லது ஏதேனும் ஒரு கோவிலில் ஒரு குழுவாக சேர்ந்து புரோகிதர் மந்திரம் சொல்ல பழைய பூணூலை மாற்றி புதிய பூணூலை அணிந்து கொள்வார்கள்.

    திருமணம் ஆகாதவர் ஒரு ஒரு பூணூல், திருமணம் ஆனவர் இரண்டு பூணூலையும், திருமணம் ஆகி தந்தையை இழந்தவர்கள் மூன்று பூணூலையும் அணிந்து கொள்வர். அதன்படி ஆவணி அவிட்டத்தையொட்டி உபநயணம் எனப்படும் பூணூல் மாற்றி தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் தர்ப்பணம் செய்து வழிபாடு செய்வார்கள்.

    ஒவ்வொரு ஆண்டும் இது பூணூல் மாற்றும் சடங்கு என்பது மட்டுமல்லாமல் ஆவணி அவிட்டத்திற்கு பல்வேறு முக்கியத்துவம் உள்ளன. உபகர்மா என்று கூறப்படும் இந்த நிகழ்வு பிராமணர் சமூகத்தில் கல்வி கற்பதை தொடங்குவதற்கான ஒரு முக்கியமான நாளாகவும் கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், ஒருசில சமூகங்களில் பூணூல் அணிந்தவர்கள் தான் கர்மகாரியம், அதாவது திதி கொடுப்பது, தெவசம் செய்வது உள்ளிட்டவற்றை செய்ய வேண்டும் என்ற வழக்கமும் இருக்கிறது.

    ஆவணி அவிட்டம் என்ற பேரிலேயே இந்த நிகழ்வு எந்த மாதம் எந்த நாளன்று வரும் என்பது தெரிந்து விடுகிறது. தமிழ் மாதங்களின் அடிப்படையில், சூரியன், சிம்ம ராசியில் ஆட்சி பெற்று அமரும் ஐந்தாவது மாதமான ஆவணி மாதத்தில், அவிட்ட நட்சத்திர நாளன்று பூணூல் மாற்றிக் கொள்வார்கள். இந்த நாள் பெரும்பாலும் பவுர்ணமி அன்று வரும். இந்த நாளை ஹயக்ரீவ ஜெயந்தி என்றும் கொண்டாடுகிறார்கள்.

    இத்தகைய சிறப்பு மிக்க ஆவணி அவிட்டம் ஆகஸ்ட் 30-ந்தேதி புதன்கிழமை வருகிறது. காயத்ரி ஜெபம் ஆகஸ்ட் 31-ந் தேதி வியாழக்கிழமை நடைபெற உள்ளது. ஆவணி அவிட்டம் அன்று இரவு 9.58 மணிவரை அவிட்டம் நட்சத்திரம் உள்ளது. ஆனால் பவுர்ணமி திதி காலை 10.45 மணி வரை மட்டுமே உள்ளது. அன்று புதன்கிழமை என்பதால் காலை 7.30 மணிமுதல் 9 மணி வரை எமகண்ட நேரம். இதனால் பூணூல் மாற்றுபவர்கள் காலை 7.15 மணிக்கு முன்பாக மாற்றி விட வேண்டும். முடியாதவர்கள் 9.15 முதல் 10.15 வரையிலான நல்ல நேரத்தில் மாற்றிக் கொள்ளலாம்.

    • அன்னையின் திருவடியின் கீழ் அரக்கன் வீழ்ந்து கிடக்க அழகிய எழிலுடன் வீற்றிருக்கிறாள்.
    • ஐந்து சிறு தெய்வங்களும், பதினான்கு கன்னியர்களின் கற்படிமங்களும் கோவிலில் உள்ளன.

    திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு வடமேற்கு முனையில் அமைந்துள்ளது பிட்டாபுரத்தி அம்மன் கோவில். இங்கு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அன்னையை, 'வடக்கு வாய் செல்வி, நெல்லை மாகாளி, செண்பகச்செல்வி' என்றும் அழைக்கிறார்கள். தற்போது இந்த அம்மன் 'பிட்டாரத்தி அம்மன்' என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறாள்.

    இங்குள்ள அம்மன் நான்கு கரங்களுடன் வலது கைகளில் உடுக்கையும், சூலமும், இடக்கைகளில் பாசமும், கபாலமும் கொண்டு காட்சியளிக்கிறாள். அன்னையின் திருவடியின் கீழ் அரக்கன் வீழ்ந்து கிடக்க அழகிய எழிலுடன் வீற்றிருக்கிறாள். அருகில் இரு பக்கமும் படைக்கல தேவியும் (அஸ்திர தேவதை), சீபலி அம்மனும், ராஜராஜேஸ்வரியும் செப்பு படிமங்களில் காட்சியளிக்கிறார்கள்.

    இந்த ஆலயத்தில் விநாயகர், நெல்லையப்பர், காந்திமதி, நந்தி, வள்ளி, முருகன், தெய்வானை, மயில் மற்றும் ஐந்து சிறு தெய்வங்களும், பதினான்கு கன்னியர்களின் கற்படிமங்களும் உள்ளன.

    அம்மன் கருவறையை அடுத்து அர்த்த மண்டபமும், அதற்கு அடுத்து கருவறையும் உள்ளது. கருவறையில் அன்னை பிட்டாபுரத்தி அம்மன் சுமார் 6 அடி உயரத்தில், 5 அடி அகலத்தில் அழகிய இருக்கையில் (பீடத்தில்) வலது காலை பீடத்தின் மேலே ஊன்றி, இடது காலை தொங்க விட்டு வலது கைகளில் அரவு, வேதாளம், வாள், சூலம் ஆகியவற்றையும், இடது கைகளில் தீ, மணி, கேடயம், கபாலம் ஆகியவைகளை தாங்கியும், இருக்கையின் கீழ் வீழ்ந்து கிடக்கும் அரக்கனை வலக்கை சூலத்தால் அழுத்தியபடி எழிற்கோலம் காட்டுகிறாள்.

    இந்த அன்னைக்கு நடைபெறும் இருநேர பூஜையிலும் பிட்டு படைக்கப்படுவது சிறப்பான ஒன்றாகும். பிட்டு படைப்பதால்தான் இந்த அம்மனுக்கு பிட்டா புரத்தி அம்மன் என்று பெயர் வந்துள்ளதாக தெரிகிறது. அம்மனுக்கு தீபாராதனை ஆன பின்னர் அலங்காரத்தில் ஏற்படும் குறைகளை சரிசெய்ய மாட்டார்கள். அதேபோல் தீபாராதனை முடிந்த பின்னர் மாலைகளோ, பூக்களோ அம்மனுக்கு அணிவிக்கப்படாது.

    குழந்தைகளுக்கு ஏற்படும் நோயை குணப்படுத்துவது இந்த அம்மனின் சிறப்பு அம்சமாகும். குழந்தைகளுக்கு ஏற்படும் 64 விதமான நோய்களுக்கும் இக்கோவிலில் வேர்கட்டி, மையிடப்படுகிறது. இவ்வாறு செய்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் குணம் அடையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

    இதனை நிரூபிக்கும் விதமாக நாள்தோறும் ஏராளமானோர், நோயால் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் குழந்தைகளை இக்கோவிலுக்கு கொண்டு வந்து தீர்த்தம் தெளித்தும், மையிட்டும் செல்கிறார்கள். இந்துக்கள் மட்டுமல்லாது பிற மதத்தை சேர்ந்தவர்களும் இக்கோவிலுக்கு தங்கள் குழந்தைகளை கொண்டு வந்து செல்வது சிறப்பம்சமாகும்.

    மேலும் மகப்பேறு விரும்பியும், பீடைகள் நீங்கவும், நோய்கள் தீரவும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திரளான பெண்கள் இக்கோவிலுக்கு வந்து அம்மனை வேண்டி செல்கிறார்கள். ராகுகால நேரத்தில் இந்த அம்மனை வழிபடுவது சிறப்பாகும்.

    • கோவிலின் மற்றொரு சிறப்பு சீட்டு கட்டுதல்.
    • நம்பிக்கையோடு சீட்டு கட்டுபவர்களின் பிரார்த்தனையும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

    கடலூர் மாவட்டம் விருதாச்சலம் மணவாள நகரில் அமைந்துள்ளது கொளஞ்சியப்பர் திருக்கோயில். இன்று 'விருதாச்சலம்' என்று அழைக்கப்படும் இந்த ஊரானது பல நூற்றாண்டிற்கு முன்பு 'திருமுதுகுன்றம்' என்ற பெயரில் இருந்தது. சிறுவயதில் தேவாரம் பாடிய சுந்தரர் திருமுதுகுன்றம் பகுதிக்கு வருகை தந்தார். இந்த ஊரில் இருந்த பழமலைநாதர் கோவிலில் சிவபெருமானும், விருத்தாம்பிகையும் சேர்ந்து சுந்தரருக்கு காட்சி தந்தனர்.

    'விருதம்' என்றால் 'பழமை' என்ற பொருளை குறிகின்றது. இந்த ஊரில் இருக்கும் கோவில்கள் எல்லாம் மிகவும் பழமை வாய்ந்தது என்பதை அறிந்து கொண்ட சுந்தரர், இந்த கோவிலில் இருக்கும் சிவபெருமானையும் அம்பிகையையும் போற்றி படாமலேயே சென்றுவிட்டார். ஏனென்றால் இவ்வளவு பழமைவாய்ந்த கோவிலைப்பற்றி பாடல் பாட சுந்தரருக்கு தகுதி இல்லை என்று நினைத்துக் கொண்டார்.

    ஆனால் சிவபெருமானுக்கு சுந்தரின் பாடல்கள் என்றால் மிகவும் விருப்பம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. சிவனுடன் இருக்கும் அம்பாளுக்கும் அதே விருப்பம் தான். சுந்தரர், பாடலை பாடாமல் சென்றதில் சிவபெருமானுக்கு வருத்தம் இருந்தது. சிவபெருமான் முருகனை அழைத்து நடந்ததை கூறினார். முருகப்பெருமான் உடனே வேடனாக உருமாறி சுந்தரரிடம் சென்று அவர் கையில் இருந்த செல்வத்தை எல்லாம் திருடி விட்டார்.

    இந்த செல்வங்கள் எல்லாம் என்னுடையது அல்ல. அந்த இறைவனின் திருப்பணிக்காக வைத்திருப்பது. எனவே இதையெல்லாம் என்னிடம் திருப்பி கொடுத்துவிடு' என்று அந்த வேடனிடம் முறையிட்டார். உனக்கு இந்த பொருட்கள் எல்லாம் திரும்பவும் வேண்டுமென்றால் திருமுதுகுன்றத்தில் வந்து பெற்றுக் கொள்ளும்படி சொல்லிவிட்டு வேடன் ரூபத்தில் இருந்த முருகன் மறைந்து விட்டார்.

    அந்த சிவபெருமானின் திருவிளையாடல் தான் இது என்பதை உணர்ந்த சுந்தரர் திருமுதுகுன்றம் சென்று ஈசனிடம் மன்னிப்பு கேட்டு பாடலை பாடி இழந்த செல்வத்தை திரும்பவும் பெற்றுக்கொண்டார். சுந்தரரை வழிமறித்த வேடன், முருகப்பெருமான்தான் என்பதை உணர்த்துவதற்கு திருமுதுகுன்றம் மேற்கு பகுதியில், சுந்தருக்கு காட்சியளித்து அருள் பாவித்தார் முருகன். காட்சியளித்த அந்த இடத்தில் 'குளஞ்சி' எனப்படும் மரங்கள் அதிகமாக இருந்ததால் அந்த இடம் 'குளஞ்சியப்பர்' என்ற பெயரைக் கொண்டது. காலப்போக்கில் 'குளஞ்சியப்பர்' என்ற பெயர் மருவி 'கொளஞ்சியப்பர்' என்று தற்போது அழைக்கப்பட்டு வருகிறது.

    பலன்கள்

    இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு சீட்டு கட்டுதல். நம் மனதில் இருக்கும் குறைகளை ஒரு வெள்ளை காகிதத்தில் எழுதி அர்ச்சகரிடம் கொடுத்து கொளஞ்சியப்பரின் காலடியில் வைத்து அர்ச்சனை செய்து, பின்பு ஒரு சிறிய நூலில் கட்டி முனியப்பர் சந்நிதியில் இருக்கும் வேலில் தொங்க விட்டால் நினைத்த காரியமானது 90 நாட்களில் நிறைவேறும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை. நம்பிக்கையோடு சீட்டு கட்டுபவர்களின் பிரார்த்தனையும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நாம் வேண்டிக்கொள்ளும் கோரிக்கையானது நிறைவேறிவிட்டால் அந்த சீட்டை திரும்பவும் வந்து பெற்றுக் கொள்கின்றேன், என்றும் வேண்டிக்கொண்டு, நம் கோரிக்கையானது நிறைவேற்றப்பட்ட பின்பு, திரும்பவும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி கொளஞ்சியப்பரை வழிபட்டு செல்வது வழக்கமாக இருக்கிறது.

    • இந்த கோவிலில் சிவபெருமானுக்கு உருவமும் இல்லை. கண்ணுக்குப் புலப்படாத அருவமாகவும் இல்லை.
    • உருவமும் அருவமும் சேர்ந்து ஒரு பலிபீட வடிவமாக பக்தர்களுக்கு காட்சி தருகின்றார்.

    கடலூர் மாவட்டம் விருதாச்சலம் மணவாள நகரில் அமைந்துள்ளது கொளஞ்சியப்பர் திருக்கோயில். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இங்கு மூலவராக வீற்றிருக்கும் சிவபெருமான் சுயம்பு மூர்த்தி என்ற பெருமையை கொண்டவர். இந்த கோவிலில் சிவபெருமானுக்கு உருவமும் இல்லை. கண்ணுக்குப் புலப்படாத அருவமாகவும் இல்லை. உருவமும் அருவமும் சேர்ந்து ஒரு பலிபீட வடிவமாக பக்தர்களுக்கு காட்சி தருகின்றார் மூலவர்.

    இங்கு மூன்று அடி உயரத்தில் உள்ள சுயம்புவாக தோன்றிய பலிபீடமே மூலஸ்தனமாக இருக்கின்றது. இந்த பலிபீடத்திற்கு கீழ்ப்பகுதியில் முருகனது உருவம் பொறிக்கப்பட்ட ஸ்ரீசக்கரம் ஒன்று உள்ளது. இங்கு நடத்தப்படும் அபிஷேகங்கள் எல்லாம் முருகப்பெருமானுக்கு நடக்கின்றது.

    குடும்ப பிரச்னை, தீராத நோய், வழக்கு பிரச்னை என எப்பிரச்னைகள் ஏற்பட்டாலும் இக்கோயிலில் உள்ள முருகனை வேண்டினால் தீரும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இக்கோயிலின் முகப்பில் வீரனார் ஆலயம், கொளஞ்சியப்பருக்கு கிழக்கு கோபுரம், வடக்கு கோபுரம் என இரண்டு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    கொளஞ்சியப்பரை அடையாளம் காட்டிய பசுவின் சிற்பம் பீட வடிவில் தோன்றி பெருமானுக்கு பால் சொரிவது போல தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. சித்தி விநாயகரின் கருவறையின் மேலே வட்ட வடிவிலான விமானம் அமைக்கப்பட்டுள்ளது.

    விமானத்தின் நாற்புரமும் விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, திருமால் , பிரம்மாவின் சிற்பங்களை காணலாம். பீட வடிவில் உள்ள கொளஞ்சியப்பருக்கு கிரீடம் சூட்டி வெள்ளியால் கண்ணமைத்து பீடத்தின் கீழே முருகனின் ஆறு எழுத்து மந்திரமான சரவணபவ சடாச்சரம் சாத்தி வேல் ஏந்திய நிலையில் அழகுற காட்சி அளிக்கின்றார் முருகப்பெருமான்.

    திருக்கோயிலின் தென்மேற்கு பகுதியில் ஒரே கருவறையில் இடுபடும் கடம்பனும் நின்ற காலத்தில் காட்சி தருகின்றனர். இக்கோயிலில் பதினெட்டு சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தரின் குரு அகப்பை சித்தர் இந்த திருத்தலத்தில் ஜீவசக்தி பெற்றுள்ளார். இக்கோயிலில் கிருத்திகை, சஷ்டி, அமாவாசை, பௌர்ணமி ஆகிய தினங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது மட்டுமல்லாமல் நான்கு கால பூஜைகளும் சிறப்புடன் நடந்து வருகின்றது.

    இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு வேப்பெண்ணை மருந்து. இங்கு வரும் பக்தர்கள் வேப்பெண்ணையை வாங்கிக் கொண்டுவந்து அர்ச்சகரிடம் கொடுத்து அந்த இறைவனின் காலடியில் வைத்து பூஜை செய்து சிவபெருமானின் பிரசாதமான திருநீற்றை சிறிதளவு அந்த எண்ணெயில் போட்டு வாங்கிச் செல்வார்கள். இந்த எண்ணெயானது பல விதமான நோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்டதாக, பக்தர்கள் நம்பிக்கையோடு வாங்கி செல்கிறார்கள்.

    ஆறாமல் இருக்கும் புண்கள், கட்டிகள் இவற்றுக்கு மருந்தாக இந்த எண்ணெய் நல்ல ஒரு தீர்வினை கொடுக்கிறது. மனிதர்களுக்கு மட்டுமல்ல மாடுகளுக்கு ஏற்படும் காமாலைகட்டிக்கும் இந்த எண்ணெயானது மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இந்த ஊர் மக்கள் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் கூட இந்த எண்ணெயானது கொண்டு செல்லப்படுகிறது.

    ஆனால், இந்த எண்ணையை மருந்தாக பயன்படுத்துபவர்கள் சுத்தமாகவும் எந்தவிதமான தீட்டும் இல்லாதவர்களாகவும் இருக்கவேண்டும்.

    ×