search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nellaiappar"

    • அன்னையின் திருவடியின் கீழ் அரக்கன் வீழ்ந்து கிடக்க அழகிய எழிலுடன் வீற்றிருக்கிறாள்.
    • ஐந்து சிறு தெய்வங்களும், பதினான்கு கன்னியர்களின் கற்படிமங்களும் கோவிலில் உள்ளன.

    திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு வடமேற்கு முனையில் அமைந்துள்ளது பிட்டாபுரத்தி அம்மன் கோவில். இங்கு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அன்னையை, 'வடக்கு வாய் செல்வி, நெல்லை மாகாளி, செண்பகச்செல்வி' என்றும் அழைக்கிறார்கள். தற்போது இந்த அம்மன் 'பிட்டாரத்தி அம்மன்' என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறாள்.

    இங்குள்ள அம்மன் நான்கு கரங்களுடன் வலது கைகளில் உடுக்கையும், சூலமும், இடக்கைகளில் பாசமும், கபாலமும் கொண்டு காட்சியளிக்கிறாள். அன்னையின் திருவடியின் கீழ் அரக்கன் வீழ்ந்து கிடக்க அழகிய எழிலுடன் வீற்றிருக்கிறாள். அருகில் இரு பக்கமும் படைக்கல தேவியும் (அஸ்திர தேவதை), சீபலி அம்மனும், ராஜராஜேஸ்வரியும் செப்பு படிமங்களில் காட்சியளிக்கிறார்கள்.

    இந்த ஆலயத்தில் விநாயகர், நெல்லையப்பர், காந்திமதி, நந்தி, வள்ளி, முருகன், தெய்வானை, மயில் மற்றும் ஐந்து சிறு தெய்வங்களும், பதினான்கு கன்னியர்களின் கற்படிமங்களும் உள்ளன.

    அம்மன் கருவறையை அடுத்து அர்த்த மண்டபமும், அதற்கு அடுத்து கருவறையும் உள்ளது. கருவறையில் அன்னை பிட்டாபுரத்தி அம்மன் சுமார் 6 அடி உயரத்தில், 5 அடி அகலத்தில் அழகிய இருக்கையில் (பீடத்தில்) வலது காலை பீடத்தின் மேலே ஊன்றி, இடது காலை தொங்க விட்டு வலது கைகளில் அரவு, வேதாளம், வாள், சூலம் ஆகியவற்றையும், இடது கைகளில் தீ, மணி, கேடயம், கபாலம் ஆகியவைகளை தாங்கியும், இருக்கையின் கீழ் வீழ்ந்து கிடக்கும் அரக்கனை வலக்கை சூலத்தால் அழுத்தியபடி எழிற்கோலம் காட்டுகிறாள்.

    இந்த அன்னைக்கு நடைபெறும் இருநேர பூஜையிலும் பிட்டு படைக்கப்படுவது சிறப்பான ஒன்றாகும். பிட்டு படைப்பதால்தான் இந்த அம்மனுக்கு பிட்டா புரத்தி அம்மன் என்று பெயர் வந்துள்ளதாக தெரிகிறது. அம்மனுக்கு தீபாராதனை ஆன பின்னர் அலங்காரத்தில் ஏற்படும் குறைகளை சரிசெய்ய மாட்டார்கள். அதேபோல் தீபாராதனை முடிந்த பின்னர் மாலைகளோ, பூக்களோ அம்மனுக்கு அணிவிக்கப்படாது.

    குழந்தைகளுக்கு ஏற்படும் நோயை குணப்படுத்துவது இந்த அம்மனின் சிறப்பு அம்சமாகும். குழந்தைகளுக்கு ஏற்படும் 64 விதமான நோய்களுக்கும் இக்கோவிலில் வேர்கட்டி, மையிடப்படுகிறது. இவ்வாறு செய்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் குணம் அடையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

    இதனை நிரூபிக்கும் விதமாக நாள்தோறும் ஏராளமானோர், நோயால் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் குழந்தைகளை இக்கோவிலுக்கு கொண்டு வந்து தீர்த்தம் தெளித்தும், மையிட்டும் செல்கிறார்கள். இந்துக்கள் மட்டுமல்லாது பிற மதத்தை சேர்ந்தவர்களும் இக்கோவிலுக்கு தங்கள் குழந்தைகளை கொண்டு வந்து செல்வது சிறப்பம்சமாகும்.

    மேலும் மகப்பேறு விரும்பியும், பீடைகள் நீங்கவும், நோய்கள் தீரவும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திரளான பெண்கள் இக்கோவிலுக்கு வந்து அம்மனை வேண்டி செல்கிறார்கள். ராகுகால நேரத்தில் இந்த அம்மனை வழிபடுவது சிறப்பாகும்.

    • இன்று காலை 8 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா வந்தார்.
    • 6 மணிக்கு பரதநாட்டியம், 8 மணிக்கு பொம்மலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    நெல்லை:

    பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்டம் வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

    உள்ளூர் விடுமுறை

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தேரோட்டம் நடைபெறாத நிலையில் இந்தாண்டு தேரோட்டத்தை வெகு விமர்சையாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    தேரோட்ட பாதைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும் தேரோட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக செய்யப்பட்டு வருகிறது.

    திருவிழாவையொட்டி நேற்று கொடியேற்றம் நடைபெற்ற நிலையில் இன்று 2-ம் நாள் நிகழ்ச்சிகள் நடந்தது. காலை 8 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா வந்தார். தொடர்ந்து மாலை 4 மணிக்கு பக்தி சொற்பொழிவு, சுமார் 5 மணிக்கு பக்தி இன்னிசை, 6 மணிக்கு பரதநாட்டியம், 8 மணிக்கு பொம்மலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    இதற்கிடையே தேரோட்டத்திற்காக நெல்லையப்பர் தேர் (பெரிய தேர்), காந்திமதி தேர் உள்ளிட்ட அனைத்து தேர்களிலும் கம்புகள் மற்றும் குதிரை பொம்மைகள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    • நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • கோவிலில் நாள்தோறும் 1100 பேர் பயனடைந்து வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி முக்கிய திருவிழா நாட்களில் நாள் ஒன்றுக்கு 500 பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை சபாநாயகர் அப்பாவு இன்று தொடங்கி வைத்தார்.

    500 பேருக்கு அன்னதானம்

    கடந்த 2002-ம் ஆண்டு முதல் நெல்லையப்பர் கோவிலில் அன்னதான திட்டம் தொடங்கப்பட்டு தினமும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    சமீபத்தில் சட்டமன்ற கூட்டத்தொடரின் போது அன்னதான திட்டத்தை விரிவுப்படுத்தி முக்கிய திருவிழா நாட்களில் தினமும் 500 பேருக்கு அன்னதானம் வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    அதன்படி இன்று சபாநாயகர் அப்பாவு ஆயிரங்கால் மண்டபத்தில் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 20 கோவில்களில் இந்த அன்னதான திட்டம் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் நாள்தோறும் 1100 பேர் பயனடைந்து வருகின்றனர்.

    இன்று நடந்த அன்னதான திட்டம் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெயஸ்ரீ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, நெல்லை தாசில்தார் சண்முக சுப்பிரமணியன், நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி, முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, தச்சை பகுதி செயலாளர் சுப்பிரமணியன், பரமசிவ அய்யப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தென் தமிழகத்தில் புகழ் பெற்ற நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் வருசாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு கும்பம் வைத்து சிறப்பு ஹோமம் நடைபெற்றது.
    தென் தமிழகத்தில் புகழ் பெற்ற நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் நெல்லை டவுனில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருசாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை சுவாமி, அம்பாளுக்கு கும்பம் வைத்து சிறப்பு ஹோமம் நடைபெற்றது.

    காலை 10.30 மணிக்கு சுவாமி, அம்பாள், விமான கலசங்கள், பரிவார மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள், பஞ்ச மூர்த்திகள் ரதவீதி உலா வருதல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
    நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு செங்கோல் வழங்கும் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு தினமும் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடக்கின்றன. 4-ம் திருநாளான கடந்த 14-ந் தேதி வேணுவனத்தில் நெல்லையப்பர் தோன்றிய புராண வைபவ நிகழ்ச்சி நடந்தது.

    அன்று இரவு 8 மணி அளவில் ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா நடந்தது. பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு நெல்லையப்பர் கோவிலில் உள்ள உடையவர் லிங்கத்துக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

    நெல்லையப்பர் கோவிலில் செங்கோல் வழங்கும் விழா நடந்த போது எடுத்த படம்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான செங்கோல் வழங்கும் விழா நெல்லையப்பர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் நேற்று இரவு நடந்தது. இை-யொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. சுவாமி, அம்பாள் மண்டபத்தில் எழுந்தருளினர்.

    கோவில் அர்ச்சகர், நிர்வாக அலுவலரும், செயல் அலுவலருமான ரோஷினிக்கு செங்கோலும், தக்கார் சங்கருக்கு பாதமும் வழங்கினார். தொடர்ந்து அவர்கள் நெல்லையப்பர் கோவில் உட்பிரகாரத்தை சுற்றி வந்தனர். அப்போது தக்கார் சங்கர் சுவாமி பாதத்தை தலையில் சுமந்த படி வந்தார். முடிவில் செங்கோலை செயல் அலுவலர் ரோஷினியும், சுவாமி பாதத்தை தக்கார் சங்கரும் அம்பாள் எழுந்தருளிய ஆயிரம்கால் மண்டபத்தில் ஒப்படைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் கோவில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நெல்லையப்பர் கோவில் தல வரலாறு திருவிளையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த 11-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று கோவில் உருவான தல வரலாறு திருவிளையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதாவது ராமகோன் என்பவர் பாண்டிய மன்னருக்கு தினமும் பால் கொண்டு செல்வது வழக்கம். தற்போது நெல்லையப்பர் கோவில் அமைந்துள்ள பகுதியில் அடர்ந்து வளர்ந்திருந்த மூங்கில் காடு வழியாக ராமகோன் பால் கொண்டு செல்லும்போது ஓரிடத்தில் மூங்கிலால் தட்டிவிடப்பட்டு, அந்த மூங்கில் மீது பால் கொட்டியது. இது தொடர்ந்து நடைபெற்றதை அறிந்த மன்னர், மூங்கில் மரத்தை வெட்டி அகற்ற உத்தரவிட்டார். அவ்வாறு செய்தபோது சுவாமி காட்சி கொடுத்தார். அவர் வேணுவன நாதர், வேணுவன ஈசுவரன் என்று அழைக்கப்பட்டார். பின்னாளில் நெல்லுக்கு வேலியிட்ட மற்றொரு திருவிளையாடலால் நெல்லையப்பர் என்ற பெயர் பெற்றார் என்று புராண வரலாறு கூறுகிறது.

    இத்தகைய சிறப்புவாய்ந்த திருவிளையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஹோம பூஜைகள் நடைபெற்றன. சுவாமி சன்னதியில் உள்ள தல விருட்சம் மூங்கிலுக்கு சிறப்பு பூஜையும், அங்கு அமைக்கப்பட்டு உள்ள ராமகோன் சிலைக்கு சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி-அம்பாளை வழிபட்டனர். 
    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூச திருவிழாவும் முக்கியமானது. இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 4-ம் திருவிழாவான இன்று (செவ்வாய்க்கிழமை) பகல் 12 மணிக்கு நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்தியுடன் வீதி உலா நடக்கிறது.

    வருகிற 21-ந் தேதி (திங்கட்கிழமை) பகல் 12 மணிக்கு தைப்பூச தீர்த்தவாரி விழா நெல்லை கைலாசபுரம் சிந்துபூந்துறை மண்டபத்தில் நடைபெற உள்ளது. அன்று காலை சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், அகஸ்தியர், தாமிரபரணி, குங்குலிய கலய நாயனார், சண்டிகேஸ்வரர், அஸ்திரதேவி ஆகியோர் நெல்லையப்பர் கோவிலில் இருந்து புறப்பட்டு நெல்லையப்பர் நெடுஞ்சாலை கீழ் பாலம் வழியாக கைலாசபுரம் சிந்துபூந்துறை தைப்பூச மண்டபத்துக்கு செல்கிறார்கள். அங்கு தீர்த்தவாரி நடக்கிறது.

    பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. மாலையில் சுவாமிகள் புறப்பட்டு நெல்லையப்பர் கோவிலை வந்து அடைகிறார்கள்.

    தொடர்ந்து 22-ந் தேதி சவுந்திர சபா மண்டபத்தில் நடராஜ திருநடனக் காட்சி நடைபெறுகிறது. 23-ந் தேதி இரவு 7 மணிக்கு நெல்லையப்பர் கோவில் வெளி தெப்பத்தில் தெப்ப திருவிழா நடக்கிறது.
    நெல்லையப்பர், செப்பறை கோவில்களில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    நெல்லை அருகே ராஜவல்லிபுரத்தில் தாமிரபரணி நதிக்கரையில் செப்பறைக்கோவில் என்று அழைக்கப்படும் அழகிய கூத்தர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பஞ்ச சபைகளில் ஒன்றான தாமிரசபையாக விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி திருவாதிரை பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான திருவாதிரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. காலை 7 மணிக்கு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 8 மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டு இருந்த திரளான பக்தர்கள், பக்தி கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 22-ந்தேதி மதியம் 12 மணிக்கு நடக்கிறது. 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2 மணிக்கு மகாஅபிஷேகம், 5.30 மணிக்கு கோ பூஜை, தொடர்ந்து ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி, மதியம் 2 மணிக்கு நடன தீபாராதனை, மாலை 3 மணிக்கு அழகிய கூத்தர் திருவீதி உலா, இரவு 7.30 மணிக்கு அபிஷேகம் நடக்கிறது.

    இரவு 9.30 மணிக்கு அழகியகூத்தர் தாமிர சபைக்கு எழுந்தருளுகிறார். விழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சதுர்வேத பாராயணம், திருவெம்பாவை பாராயணம், நீராஞ்சன தீபாராதனை, நடன தீபாராதனை ஆகியவை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஐயர் சிவமணி, தக்கார் முருகானந்தம் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    செப்பறை கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துக்கு பிறகு கொடிமரத்துக்கு தீபாராதனை நடந்தபோது எடுத்த படம்.

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் திருவாதிரை திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. காலை 9 மணிக்கு தாமிரசபையில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து காலை 9.30 மணிக்கு கொடிமரத்திற்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழா நாட்களில் பெரியசபாபதி சன்னதி முன்பு தினமும் அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை திருவெம்பாவை வழிபாடு நடைபெறுகிறது. 4-ம் திருவிழாவான 17-ந்தேதி இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் வீதிஉலா வருதல் நடக்கிறது.

    9-ம் திருவிழாவான 22-ந்தேதி இரவு முழுவதும் தாமிரசபையில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது. 10-ம் திருவிழாவான 23-ந்தேதி அதிகாலை 3.30 மணிக்கு தாமிரசபை முன்பு உள்ள கூத்தபிரான் சன்னதி முன்பு பசு தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து 4 மணி முதல் 5 மணி வரை நடராஜர் திருநடன காட்சியான ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ரோஷினி மற்றும் பணியாளர்கள் செய்து உள்ளனர். 
    ×