என் மலர்
நீங்கள் தேடியது "திருநெல்வேலி"
- அண்மையில் நடந்த திருநெல்வேலி ஆணவப்படுகொலை சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
- தனது வீட்டு வாசலில் வைத்து கவினை வெட்டி படுகொலை செய்துள்ளான்.
அண்மையில் நடந்த திருநெல்வேலி ஆணவப்படுகொலை சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வெவ்வேறு சமூகங்களைச் சார்ந்த கவினும் சுபாசினி என்ற பெண்ணும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்னர் இதனையறிந்த சுபாசினியின் பெற்றோர் கவின்குமாரையும் அவரது பெற்றோரையும் எச்சரித்துள்ளனர். அதனால் கவின்குமாரின் பெற்றோர் கவின்குமாரை கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த கவின் விபத்தில் சிக்கி திருச்செந்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாத்தாவை பார்ப்பதற்காக ஊருக்கு சென்றுள்ளார். அப்போது திருநெல்வேலியில் சித்த மருத்துவராக தான் பணியாற்றும் தனியார் சிகிச்சை மையத்தில் கவினின் தாத்தாவிற்கு சிகிச்சை அளிக்கலாம் என சுபாஷினி தெரிவித்ததன் அடிப்படையில் சுபாஷினியிடம் ஆலோசனை பெறுவதற்கு கவின் அவரது அம்மா மற்றும் மாமா ஆகிய மூவரும் சிகிச்சை மையத்திற்கு சென்றுள்ளனர்.
சிகிச்சை மையத்தின் உள்ளே சுபாஷினியிடம் கவினின் அம்மாவும் மாமாவும் பேசிக் கொண்டிருந்தபோது வெளியே நின்று கொண்டிருந்த கவினை சுபாஷினியின் தம்பி சுர்ஜித் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று தனது வீட்டு வாசலில் வைத்து கவினை வெட்டி படுகொலை செய்துள்ளான்.
பின்னர் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்ததாக தெரியவருகிறது.
இதனை கண்டித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பதிவிட்டுள்ளார் அதில் "நீளும்
சாதிய அருவருப்பின்
அட்டூழியம் …
சாதிய பெருமைவாதத்திற்கு எதிரான
நடவடிக்கைகளை அரசு இன்னும் துரிதமானதாகவும் கடுமையானதாகவும் நிச்சயம் செயல்படுத்தியே ஆகவேண்டும்." என கூறியுள்ளார்.
- கயிலாசநாதரின் வலதுபுறம் தனிச் சன்னிதியில் அன்னை பொன்மலைவல்லி அம்மாள் நின்ற கோலத்தில் கிழக்கு முகமாய் கருணை வடிவுடன் அருள்பாலிக்கின்றார்.
- முருகன் சன்னிதிக்கு அருகில் தெற்கு நோக்கிய சண்டிகேஸ்வரர் சன்னிதி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடம்போடுவாழ்வு திருக்கோவில் அமைந்துள்ளது. பழங்காலத்தில் இவ்வூர் கடம்ப மரங்கள் நிறைந்த ஊராக விளங்கியதாலும், கடம்ப மரங்கள் இங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவி புரிந்ததாலும், இத்தலம் 'கடம்போடு வாழ்வு' எனப் பெயர் பெற்றதாகத் தலவரலாறு கூறுகின்றது.
ஆலய அமைப்பு
இவ்வாலயம் மன்னர் காலத்தை சேர்ந்தது என்பதற்கு இதன் கட்டிட அமைப்பும், இங்குள்ள மூலவர் வடிவங்களும் சான்று கூறுகின்றன. ஊரின் வடகிழக்கு திசையான ஈசான்ய மூலையில் கிழக்கு நோக்கி ஆலயம் அமைந்துள்ளது. கோவிலில் முதலில் நம்மை வரவேற்பது பராமரிப்பை எதிர்நோக்கும் பழமையான திருக்குளம்.
அதையடுத்து பலிபீடம், நந்திதேவர் காட்சி தருகின்றனர். இதைக் கடந்ததும் நேர் எதிரே மூலவர் கயிலாசநாதர், லிங்கத் திருமேனியில் கிழக்கு நோக்கி எழிலாகக் காட்சி தருகின்றார். நுழைவு வாசலின் இடது புறம் இடம்புரி விநாயகர் காட்சி தருகின்றார். இவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று ஊர் மக்கள் கூறுகின்றனர். இது தவிர உட்புறத்தில் மற்றொரு நந்திதேவர் இறைவனை நோக்கி அமைந்துள்ளார். நந்தியின் இடதுபுறம் மற்றொரு விநாயகர் அமர்ந்துள்ளார்.
கயிலாசநாதரின் வலதுபுறம் தனிச் சன்னிதியில் அன்னை பொன்மலைவல்லி அம்மாள் நின்ற கோலத்தில் கிழக்கு முகமாய் கருணை வடிவுடன் அருள்பாலிக்கின்றார். இறைவன், இறைவி சன்னிதிகளின் வலது பின்புறம் தென்மேற்கில் முக்குறுணி விநாயகர், இடது பின்புறம் வடமேற்கில் முருகப்பெருமான் சன்னிதி அமைந்துள்ளது.
இவரை இவ்வூர் மக்கள் 'தேசிக மெய்க்கண்ட ஆறுமுக நயினார்' என அழைக்கின்றனர். கலைநயத்துடன் உள்ள இவரின் சிலா வடிவம் சோழர் கால பாணியைச் சார்ந்ததாக அமைந்துள்ளது. வலது மேற்கரங்களில் ஆயுதங்கள் தாங்கியும், இடது கீழ்க் கரங்களில் அபய - வரத முத்திரை காட்டியும் மயில்மீது அமர்ந்தபடி காட்சி தருகின்றார். தெற்கு நோக்கிய தேவ மயில், தன் வாயில் நாகத்தை கவ்வியபடி எழிலாக காட்சி தருகின்றது. கருங்கல்லிலான திருவாச்சி, முருகப்பெருமானுக்கு மேலும் அழகு சேர்க்கின்றது. சிற்பியின் முழுத் திறமைகளும் முருகன் வடிவத்தில் மின்னுகிறது. இவரைக் காண கண் கோடி வேண்டும் என்றால் அது மிகையல்ல.
முருகன் சன்னிதிக்கு அருகில் தெற்கு நோக்கிய சண்டிகேஸ்வரர் சன்னிதி உள்ளது. ஆலயத்தின் வடகிழக்கில் காலபைரவர் அமைந்துள்ளார். கோவில் தென்னை மரங்களும், வாழை மரங்களும் நிறைந்து பசுமையாக காட்சி தருகின்றன.
கோவிலில் பிரதோஷங்கள், மகா சிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன. கடம்பமரம் ஆதித் தலமரமாக விளங்கினாலும், இன்று இவ்வாலயத்தின் தலமரங்களாக பழைமையான வில்வ மரமும், நாகலிங்க மரமும், திருவோடு மரமும் உள்ளன. தலத்தீர்த்தமாக ஆலயத்தின் வெளியில் அமைந்துள்ள பழமையான திருக்குளம் உள்ளது.
ஊரில் அமைந்துள்ள பிற ஆலயங்கள்
இவ்வூரின் பழைமைக்கு சான்றாக கடம்ப விநாயகர், பெருமாள் கோவில், சுந்தராட்சி அம்மன், உச்சி மாகாளி அம்மன், கருப்பசாமி, அக்கினி மாடன்- அக்னி மாடச்சி, செல்வ விநாயகர் கோவில்கள் உள்ளன. இது தவிர கரைசாமி கோவில், ஆத்தங்கரை சுடலை, ஊர்க்காட்டுசாமி கோவில், ஒத்தைப்பனை சுடலை சாமி கோவில், களத்துசாமி, ஈஸ்வரி அம்மன் முதலான எண்ணற்ற பழம்பெரும் சிற்றாலயங்கள் அமைந்துள்ளன.
ஊரை சுற்றி பிரபலமான நாங்குநேரி வானமாமலை பெருமாள், திருக்குறுங்குடி அழகிய நம்பி கோவில், திருமலை நம்பிக்கோவில், வள்ளியூர் முருகன், களக்காடு கோமதி அம்மன் உடனுறை சத்தியவாகீஸ்வரர் திருக்கோவில் போன்றவை அமைந்துள்ளன.
அமைவிடம்
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டத்தில், களக்காடு - நாங்குநேரி வழித்தடத்தில் 7 கிலோமீட்டர் தொலைவில் கடம்போடுவாழ்வு ஆலயம் அமைந்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
- சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது.
- கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி
நெல்லை:
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையிலும், கடந்த 2 நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.
நெல்லையை பொறுத்த வரை நேற்று 2-வது நாளாக மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மாநகரில் நேற்று மாலையில் தொடங்கி சுமார் 1 மணி நேரம் பயங்கர இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. மேலும் சூறைக்காற்றும் வீசியது.
சில இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மாநகரில் பாளை சமாதான புரம், கே.டி.சி. நகர், வண்ணார்பேட்டை, சந்திப்பு, புதிய பஸ் நிலையம், பெருமாள்புரம் பகுதிகளில் பரவலாக பெய்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது. கன்னடியன் கால்வாய் பகுதியை ஒட்டிய கிராமங்க ளிலும் கனமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 31.20 மில்லிமீட்டரும், மணிமுத்தாறு மற்றும் மூலைக்கரைப்பட்டி யில் தலா 16 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
அம்பை சுற்றுவட்டா ரத்தில் நேற்று மாலையில் இடி-மின்னலுடன் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சுமார் 1 மணி நேரம் பெய்த மழையால் சில இடங்களில் மின்தடை ஏற்பட்டாலும் உடனடியாக சீரமைக்கப்பட்டு மின்வினியோகம் மீண்டும் வழங்கப்பட்டது.
களக்காடு சுற்றுவட்டாரத்தில் பெய்த கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அங்கு 9.40 மில்லிமீட்டர் மழை பெய்தது. 1 மணி நேரம் கொட்டி தீர்த்த மழையினால் தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.
மூலைக்கரைப்பட்டி தங்கம் நகரில் மின்னல் தாக்கியது. இதனால் வீடுகளில் இருந்த மின் மீட்டர்கள், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற மின் சாதனங்கள் கருகின. 50-க்கும் மேற்பட்ட மின் சாதனங்கள் சேதமடைந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். அத்துடன் அங்குள்ள சுடலை மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான பால் விற்பனை கடையில் மின்னல் தாக்கியதில் வயர்கள் கருகி தீ பற்றியது.
இதனைத் தொடர்ந்து கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயினால் கடையில் இருந்த பொருட்கள் நாசம் அடைந்தன. மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. மின் சாதனங்கள் கருகியதால் பொதுமக்கள் பாதிப்படைந்து ள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலும் நேற்று மாலையில் இடி-மின்னலுடன் கனமழை கொட்டியது. குறிப்பாக விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. திருச்செந்தூர், காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. அதிகபட்சமாக விளாத்திகுளத்தில் 23 மில்லிமீட்டர் மழை பெய்தது.
தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோடு செல்சினி காலனி அருணா நகர் பகுதியில் நேற்று மாலையில் மழை பெய்தபோது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த மீனாட்சி(வயது 60) என்பவர் மீது பயங்கரமாக இடியுடன் கூடிய மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார்.
புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம் பகுதிகளில் ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதிய நேரம் மக்கள் வெளியில் நடமாடுவதையே தவிர்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் மேகம் திரண்டு பலத்த காற்றுடன் மழை பெய்தது.
புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம், சாமி நத்தம், சில்லாநத்தம், ஜம்புலிங்கபுரம், ராஜாவின் கோவில், தட்டப்பாறை ஆகிய கிராமங்களில் இடி-மின்னலுடன் மிதமான மழை பெய்தது. தட்டப்பாறையில் இடி-மின்னல் தாக்கி பசுமாடு இறந்தது. இந்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து பொதுமக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
ஏற்கனவே கோடை மழையால் பாதிக்கப்பட்டு வந்த உப்பு உற்பத்தி, கடந்த சில நாட்களாக இயல்பு நிலைக்கு திரும்பி வந்தது. பல உப்பளங்களில் பாத்திகளை தயார் செய்து உப்பு உற்பத்திக்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று திடீரென பெய்த மழையால் மீண்டும் உப்பு உற்பத்தி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
- எட்டாம் வகுப்பு மாணவன், சக வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
- மாணவர்களிடையே இதுபோன்ற வன்முறை கலாச்சாரம் தலையெடுத்திருப்பது, ஒரு சமூகமாக நாம் எவ்வளவு தோல்வியடைந்திருக்கிறோம் என்பதற்கு எடுத்துக்காட்டு.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
திருநெல்வேலி மாவட்டம் பாளையம்கோட்டை தனியார் பள்ளி ஒன்றில், எட்டாம் வகுப்பு மாணவன், சக வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
தொடர்ச்சியாக பள்ளி மாணவர்களிடையே இதுபோன்ற வன்முறை கலாச்சாரம் தலையெடுத்திருப்பது, ஒரு சமூகமாக நாம் எவ்வளவு தோல்வியடைந்திருக்கிறோம் என்பதற்கு எடுத்துக்காட்டு. தவறான மனிதர்களை முன்மாதிரிகளாகக் கொண்டு, இத்தனை சிறு வயதிலேயே அரிவாளைக் கையில் எடுக்கும் அளவுக்கு, நமது குழந்தைகள் மனதில் வன்முறை எண்ணம் தலைதூக்கியிருக்கிறது என்றால், பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகம், அரசு என அனைவருமே இதற்கு பொறுப்பு.
பள்ளி மாணவர்கள் தங்கள் சுற்றத்தாரையே முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு வளர்கிறார்கள். அப்படிப்பட்ட சூழலில், கடுமையான குற்றங்களைச் செய்யும் குற்றவாளிகள் மீது கூட நடவடிக்கை எடுக்க அனுமதிக்காமல், காவல்துறையின் கைகளைக் கட்டிப் போட்டிருக்கிறது திமுக அரசு. மேலும், உச்ச வரம்பு வைத்து அரசே மது விற்பனை செய்வதாலும், பெருகிவரும் போதைப்பொருள் புழக்கத்தாலும், தமிழ்ச் சமுதாயம் நிலைதடுமாறிக் கொண்டிருக்கிறது. இதனால் மாணவ சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கும் எதிர்விளைவுகளை முதலமைச்சர் மு.க. இனியாவது உணர வேண்டும்.
பள்ளி ஆசிரியர்களால் தங்கள் பணிச்சுமைகளைக் கடந்து, அத்தனை குழந்தைகளையும் கண்காணிப்பது என்பது இயலாதது. எனவே, பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை எப்போதும் தங்கள் கண்காணிப்பில் வைத்திருப்பது சமூகத்திற்கே நல்லது. சரியான வழியில் வளர்க்கப்படும் ஒவ்வொரு குழந்தையும், எதிர்காலத்தில் நூறு குற்றவாளிகள் உருவாவதைத் தடுக்கிறார்கள். பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளைத் தங்கள் கண்காணிப்பில் வளர்ப்பது, சமூகத்திற்குச் செய்யும் முக்கியமான கடமை என்பதை உணர்வது நன்று.
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- தென் மாவட்டங்களில் பல்வேறு காரணங்களால் மாணவர்கள் சக மாணவர்களால் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது.
- மாணவர்கள் தான் நாட்டின் எதிர்காலத் தூண்கள்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில்,
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ் மேரி பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையில், ஒரு மாணவரை இன்னொரு மாணவர் அரிவாளால் வெட்டியிருப்பதும், அதைத் தடுக்கச் சென்ற ஆசிரியருக்கு லேசான காயம் ஏற்பட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது. கல்வியும், ஒழுக்கமும் கற்பிக்கப்பட வேண்டிய பள்ளியில் இத்தகைய நிகழ்வுகள் நடப்பது நல்லதல்ல.
இரு மாணவர்களுக்கும் இடையே பென்சில் வாங்குவதில் தான் மோதல் ஏற்பட்டிருக்கிறது. இது மறந்து, கடந்து போக வேண்டிய மோதல் தான். ஆனால், அதற்கான அரிவாளை வீட்டில் இருந்து பையில் மறைத்து எடுத்து வந்து சக மாணவரை வெட்டும் அளவுக்கு ஒரு மாணவரின் மனநிலை வெறுப்படைந்திருக்கிறது என்றால், அது மாணவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சமுதாயத்திலும் அதிகரித்து வரும் சீரழிவையே காட்டுகிறது. இந்தப் போக்கு சரி செய்யப்பட வேண்டும்.
தமிழகத்தில், குறிப்பாக தென் மாவட்டங்களில் பல்வேறு காரணங்களால் மாணவர்கள் சக மாணவர்களால் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. நாங்குநேரியில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ஆம் வகுப்பு மாணவர் சின்னத்துரை வீடு புகுந்து வெட்டப்பட்டது, தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் பேருந்தை மறித்து அதில் பயணம் செய்த மாணவர் வெட்டப்பட்டது என வன்முறை நிகழ்வுகள் தொடர்கின்றன. இத்தகைய நிகழ்வுகளை பார்க்கும் போது தமிழகம் எங்கே செல்கிறது? என்ற கவலை தான் ஏற்படுகிறது.
மாணவர்கள் தான் நாட்டின் எதிர்காலத் தூண்கள். அவர்களுக்கு நல்வழி காட்டுவது தான் பள்ளிகள் மற்றும் சமூகத்தின் கடமை ஆகும். இதை மனதில் கொண்டு பள்ளிகளில் நீதிபோதனை பாடவேளைகளை மீண்டும் அறிமுகம் செய்ய வேண்டும்; விளையாட்டுப் பாடவேளையை அதிகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
- ஒரு மாணவனை இன்னொரு மாணவன் அரிவாளால் வெட்டியுள்ளார்.
- காயமடைந்த மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவனை சக மாணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாளையங் கோட்டை வ.உ.சி. மைதானத்தின் பின்புறம் இயங்கி வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் 8-ம் வகுப்பு பிரிவு ஒன்றில் ஆசிரியை ரேவதி பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு மாணவனுக்கும், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஒரு மாணவனுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணாபுரம் மாணவர் தனது பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சக மாணவனை சரிமாரியாக வெட்டினார். இதில் அந்த மாணவனின் கை, தோல்பட்டை, முதுகு உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. இதனால் படுகாயம் அடைந்த அந்த மாணவன் அலறி துடித்தான்.
உடனே ஆசிரியை ரேவதி ஓடி சென்று வெட்டிய மாணவனை தடுக்க முயன்றார். இதில் ஆசிரியைக்கும் வெட்டு விழுந்தது. இதைப்பார்த்து சக மாணவர்கள் அலறல் சத்தம் போட்டனர்.
உடனே வெட்டிய மாணவன் சட்டையில் ரத்தம் சொட்ட சொட்ட அரிவாளுடன் வெளியேறி அருகே உள்ள பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு சென்றான். அங்கிருந்த போலீசார் மாணவனிடம் இருந்த அரிவாளை கைப்பற்றி விசாரித்தபோது சக மாணவனை அரிவாளால் வெட்டியதாக கூறி உள்ளான்.
இதைக்கேட்டு அதிர்ச்சிய டைந்த போலீசார் மாணவனை கைது செய்ததோடு, உடனடியாக பள்ளிக் கூடத்துக்கு விரைந்து சென்றனர். மேலும் படுகாயம் அடைந்த மாணவனையும், வெட்டுப்பட்ட ஆசிரியையும் அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு படுகாயம் அடைந்த மாணவனுக்கும், ஆசிரியைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தனியார் பள்ளியில் மாணவன் வெட்டப்பட்ட சம்பவம் பற்றி அறிந்ததும் போலீஸ் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பள்ளியில் இந்த 2 மாணவர்களுக்கும் இடையே பென்சில் வாங்கியது தொடர்பாக தகராறு ஏற்பட்டது தெரியவந்தது.
அப்போது ஆசிரியை தலையிட்டு 2 மாணவர்களையும் கண்டித்து பிரச்சினையை தீர்த்துள்ளார். மேலும் இதுகுறித்து 2 மாணவர்களின் பெற்றோருக்கும் தகவல் கூறி அவர்களை வரவழைத்து மாணவர்களை கண்டித்து அனுப்பி உள்ளார்.
ஆனால் வெட்டிய மாணவன் இந்த பிரச்சினையை மனதில் வைத்துக்கொண்டு இன்று அரிவாளை பையில் மறைத்து வைத்து எடுத்து வந்து வெட்டியது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே மாணவன் வெட்டுப்பட்ட தகவல் அறிந்து அவனது பெற்றோர் மட்டுமல்லாதது ஏராளமான மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு திரண்டு வந்தனர்.இதைத்தொடர்ந்து பள்ளி முன்பு 20-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக போலீஸ் உதவி கமிஷனர் சுரேஷ் கூறுகையில், பென்சில் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் மாணவனின் பெற்றோரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் பாதிக்கப்பட்ட மாணவன் மற்றும் சம்பவத்தில் ஈடுபட்ட மாணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே பள்ளி வகுப்பறையில் சுழற்சி முறையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இன்றும் பள்ளியில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக புத்தக பையில் இருந்த அரிவாள் கண்டறியப்படவில்லை என்றார்.
- கிரிப்டோகரன்சியை பறிமுதல் செய்துள்ளனர்.
- கிரிப்டோ மோசடிகளில் இருந்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியை சேர்ந்தவர் ஆன்டனி செல்வன் (வயது 40). இவர் பெருமாள்புரம் ராஜ ராஜேஸ்வரி நகர் பகுதியில் ஆன்லைன் கிரிப்டோ கரன்சி டிரேடிங் தொழில் செய்து வருகிறார்.
இவர் கடந்த 24-ந்தேதி கிரிப்டோ கரன்சி பண பரிவர்த்தனையில் ஏமாற்றப்பட்டதாக பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் தனக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட திண்டுக்கல்லை சேர்ந்த முகம்மது ரியாஸ் (36) என்பவர் மூலம் அறிமுகமான சங்கரன் கோவில் அருகே உள்ள தலைவன்கோட்டையை சேர்ந்த அய்யாதுரை (37), மதுரையை சேர்ந்த இசக்கிமுத்து (28) ஆகியோர் தங்களுக்கு அமெரிக்க டாலருடன் இணைக்கப்பட்ட கிரிப்டோகரன்சி தேவைப்படுவதாக கூறி ரூ.75 லட்சம் கள்ள நோட்டுகளை கொடுத்து ஏமாற்றியதாக கூறியிருந்தார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து அதிரடி விசாரணையில் இறங்கினார். அதில் ரூ.75 லட்சம் மதிப்பில் சுமார் 82 ஆயிரத்து 691 அமெரிக்க டாலர் கிரிப்டோகரன்சியை முகமது ரியாஸின் மின்னணு பணப்பைக்கு (எலக்ட்ரானிக் வேலட்) மாற்றம் செய்து அதற்கான பணம் ரூ.75 லட்சத்தினை ஆண்டனியிடம் கொடுத்துள்ளனர். அவை அனைத்தும் கலர் ஜெராக்ஸ் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
உடனடியாக மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவுபடி தனிப்படை திண்டுக்கல், பழனி மற்றும் பாலக்காடு ஆகிய இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதனிடையே வழக்கில் சம்பந்தப்பட்ட முகமது ரியாஸ், அய்யாதுரை மற்றும் இசக்கி முத்து ஆகியோர் நெல்லையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்தனர்.
புகார் குறித்து விசாரணையை தொடங்கிய 24 மணி நேரத்திற்குள் கைது செய்ததுடன், முகமது ரியாஸ் மின்னணு பணப்பையில் இருந்த ரூ.75 லட்சம் மதிப்பிலான 82691 அமெரிக்க டாலருக்கு இணையான கிரிப்டோகரன்சியை பறிமுதல் செய்துள்ளனர். அவர்களை கமிஷனர் பாராட்டினார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், தூத்துக்குடியில் அடிக்கடி இத்தகைய மீட்புகள் நடக்கிறது. நெல்லையில் இதுதான் முதல் முறை. மோசடி செய்த முகமது ரியாஸ் தனது வாலட்டில் அதை வைத்திருந்ததால் எளிதாக பறிமுதல் செய்ய முடிந்தது.
கிரிப்டோகரன்சி குற்ற வழக்குகளில் முழுமையாக அங்கீகரிக்கப்பட்ட கிரிப்டோகரன்சி மீட்கப்பட்டது இதுவே முதல் முறை.
இந்த வகையான கிரிப்டோ மோசடிகளில் இருந்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிக லாப வாக்குறுதிகள் அளித்து முதலீடு செய்யுமாறு அழைப்பவர்களை நம்ப வேண்டாம். நம்பகமான நிறுவனம் மற்றும் சட்டப் பூர்வமான வழிகளில் மட்டுமே முதலீடு செய்வது பாதுகாப்பானது என்றனர்.
- ஏரிவாடி பக்கத்தில் நம்பி ஆற்றின் அருகில் அமைந்துள்ளது ஒத்தபனை சுடலை ஆண்டவர் கோவில்.
- இயற்கை வளம் நிறைந்தது திருவேங்கடநாதபுரம் என்று அழைக்கக்கூடிய சிறுமளஞ்சி.
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே அமைந்துள்ளது. சிறுமளஞ்சி. இது நாங்குநேரி தாலுகாவில் உள்ள ஏரிவாடி பக்கத்தில் உள்ள நம்பி ஆற்றின் அருகில் அமைந்துள்ளது இந்த ஒத்தபனை சுடலை ஆண்டவர் கோவில்.
இயற்கை வளம் நிறைந்த திருவேங்கடநாதபுரம் என்று அழைக்கக்கூடிய சிறுமளஞ்சி. இந்த ஊரில் பல தலைமுறைகளுக்கு முன்பு இருளப்பன் என்பவர் வசித்து வந்தார். அவரது பக்கத்து கிராமமான அணைக்கரையை சேர்ந்த வெள்ளையன் என்பவருக்கும் பனைமரங்களை குத்தகை எடுப்பதில் ஒரு சில பிரச்சினைகள் இருந்துகொண்டு வந்தது.
ஒரு சமயம் வெள்ளையம் நிலத்தில் வைக்கப்பட்டிருந்த வைகோல்போர் தீப்பற்றி எரிந்தது. தன்னுடைய களத்துமேட்டில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல்போர் தீப்பற்றி எரிந்ததற்கு காரணம் இருளப்பன் தான் என்று சொல்லி குற்றம்சாட்டினார். அதன்பிறகு இருவருக்கும் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. பின்னர் ஊர் பெரியர்வர்களிடம் பேசி இந்த பிரச்சினைக்கு முடிவு செய்யப்பட்டது.
அது என்னவென்றால் விஜயநாராயணத்தில் இருக்கக்கூடிய சுடலைமாட சுவாமி கோவிலுக்கு இரு ஊரில் உள்ள மக்களும் செல்ல வேண்டும். அங்கு சென்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்யலாம் என்று ஊர் பெரியவர்கள் முடிவு செய்தனர். சத்தியம் செய்தபிறகு சொந்த ஊருக்கு 3 நாட்கள் கழித்து தான் வர வேண்டும். எனவே இரண்டு ஊர் பொதுமக்களும் விஜயநாராயண புரத்துக்கு சென்றனர். அங்கு கோவிலில் சத்தியமும் செய்தனர்.
ஆனால் 3 நாட்களுக்குள் ஊருக்கு செல்லக்கூடாது என்ற உத்தரவை மீறி சிறுமளஞ்சிக்காரர்கள் ஊருக்கு திரும்பி வந்துவிட்டனர். உடனே சுடலைமாட சுவாமி கோபத்துடன் தன்னுடைய திருவிளையாடலை ஆரம்பித்தார்.
சிறுமளஞ்சி தெருவில் வசிக்கக்கூடிய ஒரு பெண்ணின் கனவில் பேச்சியின் மகனாகிய மாயாண்டி சுடலைமாட சுவாமி ஓங்கி உயர்ந்த உருவம் கொண்டு விரிசடை கூந்தலோடும், விரிந்த தோள்கள் இரண்டில் இரண்டு பனைமரங்களை வைத்துக்கொண்டு, ஒரு கையில் மாண்டுபோன பிணங்களின் மிட்டங்கால்களை முருக்குபோல் கடித்துக்கொண்டு ஆங்கார உருவம் கொண்டு ஆதாளி போட்டபடி இடுப்பில் கருப்புநிறத்தில் சல்லடை அணிந்து, காலிலே வெள்ளிமணி தண்டையும் அணிந்து, ஒருகையில் 5 மணிவல்லையமும் கொண்டு வருவதுபோல் தோன்றினார்.
பயந்துபோன அந்த பெண், தான் கண்ட கனவை பற்றி தன்னுடைய பெற்றோர்களிடம் கூறினாள். அந்த பெண்ணின் அப்பா-அம்மா இருவரும் ஊர் பெரியவர்களிடம் சொன்னார்கள். ஊர் பெரியவர்களில் ஒருவர் நாளைக்கு கடைசி செவ்வாய். எனவே நம்ம ஊர் முத்தாரம்மன் கோவிலுக்கு சென்று கணக்கு கேட்டு வரலாம். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி செய்யலாம் என்று கூறினார்.
கடைசி செவ்வாய் இரவு 8 மணிக்கு பூஜைகள் எல்லாம் நடந்தது. ஊர் பெரியவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து நடந்தவற்றை எடுத்துக்கூறி இனி நாங்கள் என்ன செய்வது என்று கேட்டனர்.
அப்போது அம்மன் அருள்வாக்கு சொன்னார். என் மகன் மாயாண்டி சுடலைக்கு கோபம் தீரவில்லை. எனவே அவனுக்கு ஊரில் நிலையம் கொடுத்து கோவில் கட்டி சுடலைமாடனை கைகூப்பி வணங்கி வர வேண்டும். சிவசுடலை அவன் கோபம் தணிவான். கையிலையில் பிறந்த மகன் காவலாய் காத்து நிற்பான். இன்று இரவே சுடலைமாடன் வருவான். நள்ளிரவில் ஊருக்கு கிழக்கே ஒத்தபனை மரத்தின் மீது சுடரொளியில் அவதரித்தவன் போரொளியாய் தெரிவான் என்று அம்மன் அருள்வாக்கு சொன்னாங்க.
உடனே அவர்கள் அருகில் இருந்தவர்களில் ஒரு பெண் கேட்டார். இந்த பனங்காட்டில் இருக்கக்கூடிய எந்த பனை மரத்தில் அவர் தெரிவார் என்று கேட்டார். அதை எவ்வாறு கண்டுபிடிப்பது என்று கேட்டார். உடனே அருள்வாக்கு கூறும் அம்மன், சுடலை பேரொளியாய் தெரியும் அந்த பனைமரத்துக்கு அடியில் கத்தரிக்காய் செடி ஒன்று இருக்கும். அதில் ஒரேஒரு காய் மட்டும் காய்த்திருக்கும். அந்த இடம் தான் சுடலைமாடசுவாமி குடியேறக்கூடிய இடம்.
சுடலைமாட சுவாமியை கண்டு யாரும் பயப்படத்தேவை இல்லை. அவன் என் கண் பார்வையில், என் கட்டுப்பாட்டில் இருப்பான் என்று முத்தாரம்மன் அருள்வாக்கு சொன்னாங்க.
முத்தாரம்மன் சொன்னபடியே நள்ளிரவில் ஊரார்கள் எல்லோரும் ஒன்றுகூடி நின்னாங்க. மாயாண்டி சுடலைமாட சுவாமி விஜயநாராயணம் விட்டு பரப்பாடி, புதுக்குளம், ராப்பாடி பாதைவிட்டு, நாங்குநேரி தாண்டி வாகைகுளம் வழியாக சிறுமளஞ்சி வந்தார்.
வேம்புடையார் சாஸ்தா கூடி, ஐந்துடையான் பாலம் கடந்து சிறுமளஞ்சி ஊருக்கு ஓடி வந்தார். ஒத்தப்பனை உயரத்துக்கு ஒளியாக காட்சி தந்தார் சுடலைமாடன் சுவாமி. அடுத்த நாள் காலையில் ஊர் பெரியவர்கள் அனைவரும் விஜயநாராயணம் சென்றனர். விஜயநாராயணத்துக்கு சென்று பிடிமண் எடுத்து வந்தனர். கத்தரிக்காய் செடி முளைத்திருந்த அந்த ஒத்தை பனைமரத்தடியில் சுடலைமாட சுவாமிக்கு மண் பீடம் அமைத்தனர்.
பனை ஓலையால் கொட்டகை அமைத்து கோவில் கட்டி பூஜை செய்து வந்தனர். அப்போது சுடலைமாட சுவாமி அருள்வாக்கு சொன்னார். முதல்வாக்கு என்னவென்றால், நான் இந்த சிறுமளஞ்சியை சிறு மதுரையாக்கி தருகிறேன் என்று கூறினார். சுடலைமாட சுவாமி கூறிய அருள்வாக்கின்படி சிறுமளஞ்சி விவசாயத்திலும், தொழில் வளர்ச்சியிலும், கல்வியிலும் சிறந்து விளங்கியது.
அதன்பிறகு சிலவருடங்கள் கழித்து கல்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பனைக்கம்புகள் கொண்டு ஓடு வேயப்பட்டது. காலப்போக்கில் ஓட்டுக்கூரையை நீக்கிவிட்டு கல் மண்டபம் கட்டினர். இந்த கோவில் வள்ளியூரில் இருந்து 9 கி.மீ தூரத்தில் உள்ளது.
இந்த கோவிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அதாவது ஆவணி மாதம் 3-வது வெள்ளிக்கிழமை சிறப்பாக கொடை விழா நடந்து வருகிறது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடும், தமிழ் மாதத்தில் வரும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் விஷேச வழிபாடும் நடக்கிறது.
இந்த விஷேச நாட்களில் வள்ளியூரில் இருந்து சிறப்பு பஸ்கள் எல்லாம் இந்த கோவிலுக்கு இயக்கப்படுகிறது. இந்த கோவிலில் காலை 6.30 மணியில் இருந்து இரவு 8.30 மணிவரை நடை திறந்து இருக்கும். நுழைவு வாயிலுக்கு அருகில் ஒற்றை பனைமரமும், பக்கத்துலேயே கொம்புமாடசாமியின் பீடமும் இருக்கும். அதற்கு எதிரில் சுடலைமாட சுவாமியின் கோவில் உள்ளது.
அங்கு சுடலைமாட சுவாமி, பேச்சியம்மன், முண்டன் சுவாமி ஆகிய தெய்வங்கள் நின்ற நிலையில் கிழக்கு பகுதி நோக்கி அருள்பாலித்து வருகிறார்கள். ஒத்தபனை சுடமாடசுவாமியின் தனிச்சிறப்பு என்னவென்றால் இந்த கோவிலில் இருக்கும் மூலவர் சுடலை ஆண்டவர் என்று அழைக்கப்படுகிறார்.
உண்மையாகவே நம்பிக்கையுடன் வழிபட்டு வரும் பக்தர்களுக்கு உயர்வான வாழ்வை தருகிறார் இந்த ஒத்தப்பனை சுடலைமாடசுவாமி. நாமும் அவரை வழிபடுவோம் அவர் அருள் பெறுவோம்.
- அன்னையின் திருவடியின் கீழ் அரக்கன் வீழ்ந்து கிடக்க அழகிய எழிலுடன் வீற்றிருக்கிறாள்.
- ஐந்து சிறு தெய்வங்களும், பதினான்கு கன்னியர்களின் கற்படிமங்களும் கோவிலில் உள்ளன.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு வடமேற்கு முனையில் அமைந்துள்ளது பிட்டாபுரத்தி அம்மன் கோவில். இங்கு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அன்னையை, 'வடக்கு வாய் செல்வி, நெல்லை மாகாளி, செண்பகச்செல்வி' என்றும் அழைக்கிறார்கள். தற்போது இந்த அம்மன் 'பிட்டாரத்தி அம்மன்' என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறாள்.
இங்குள்ள அம்மன் நான்கு கரங்களுடன் வலது கைகளில் உடுக்கையும், சூலமும், இடக்கைகளில் பாசமும், கபாலமும் கொண்டு காட்சியளிக்கிறாள். அன்னையின் திருவடியின் கீழ் அரக்கன் வீழ்ந்து கிடக்க அழகிய எழிலுடன் வீற்றிருக்கிறாள். அருகில் இரு பக்கமும் படைக்கல தேவியும் (அஸ்திர தேவதை), சீபலி அம்மனும், ராஜராஜேஸ்வரியும் செப்பு படிமங்களில் காட்சியளிக்கிறார்கள்.
இந்த ஆலயத்தில் விநாயகர், நெல்லையப்பர், காந்திமதி, நந்தி, வள்ளி, முருகன், தெய்வானை, மயில் மற்றும் ஐந்து சிறு தெய்வங்களும், பதினான்கு கன்னியர்களின் கற்படிமங்களும் உள்ளன.
அம்மன் கருவறையை அடுத்து அர்த்த மண்டபமும், அதற்கு அடுத்து கருவறையும் உள்ளது. கருவறையில் அன்னை பிட்டாபுரத்தி அம்மன் சுமார் 6 அடி உயரத்தில், 5 அடி அகலத்தில் அழகிய இருக்கையில் (பீடத்தில்) வலது காலை பீடத்தின் மேலே ஊன்றி, இடது காலை தொங்க விட்டு வலது கைகளில் அரவு, வேதாளம், வாள், சூலம் ஆகியவற்றையும், இடது கைகளில் தீ, மணி, கேடயம், கபாலம் ஆகியவைகளை தாங்கியும், இருக்கையின் கீழ் வீழ்ந்து கிடக்கும் அரக்கனை வலக்கை சூலத்தால் அழுத்தியபடி எழிற்கோலம் காட்டுகிறாள்.
இந்த அன்னைக்கு நடைபெறும் இருநேர பூஜையிலும் பிட்டு படைக்கப்படுவது சிறப்பான ஒன்றாகும். பிட்டு படைப்பதால்தான் இந்த அம்மனுக்கு பிட்டா புரத்தி அம்மன் என்று பெயர் வந்துள்ளதாக தெரிகிறது. அம்மனுக்கு தீபாராதனை ஆன பின்னர் அலங்காரத்தில் ஏற்படும் குறைகளை சரிசெய்ய மாட்டார்கள். அதேபோல் தீபாராதனை முடிந்த பின்னர் மாலைகளோ, பூக்களோ அம்மனுக்கு அணிவிக்கப்படாது.
குழந்தைகளுக்கு ஏற்படும் நோயை குணப்படுத்துவது இந்த அம்மனின் சிறப்பு அம்சமாகும். குழந்தைகளுக்கு ஏற்படும் 64 விதமான நோய்களுக்கும் இக்கோவிலில் வேர்கட்டி, மையிடப்படுகிறது. இவ்வாறு செய்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் குணம் அடையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
இதனை நிரூபிக்கும் விதமாக நாள்தோறும் ஏராளமானோர், நோயால் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் குழந்தைகளை இக்கோவிலுக்கு கொண்டு வந்து தீர்த்தம் தெளித்தும், மையிட்டும் செல்கிறார்கள். இந்துக்கள் மட்டுமல்லாது பிற மதத்தை சேர்ந்தவர்களும் இக்கோவிலுக்கு தங்கள் குழந்தைகளை கொண்டு வந்து செல்வது சிறப்பம்சமாகும்.
மேலும் மகப்பேறு விரும்பியும், பீடைகள் நீங்கவும், நோய்கள் தீரவும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திரளான பெண்கள் இக்கோவிலுக்கு வந்து அம்மனை வேண்டி செல்கிறார்கள். ராகுகால நேரத்தில் இந்த அம்மனை வழிபடுவது சிறப்பாகும்.
- ஆலய பூசாரி பூஜை முடிப்பார். அப்போது அவருக்கு அருள் வரும்.
- இரவில் வெந்த கொழுக்கட்டையை பூஜித்து படையல் போடுவார்கள்.
திருநெல்வேலி மாவட்ட தென்கோடியில் தெற்கு கருங்குளம் என்ற கிராமத்தில் பூ அய்யப்பன் ஆலயம் அமைந்துள்ளது.
இங்கு பங்குனி உத்திரத்தன்று மெகா கொழுக்கட்டை வழிபாடு செய்கின்றனர்.
இது முழுக்க முழுக்க ஆண்களே செய்யும் வேலை.
விரதம் இருந்து, எச்சில் படாமல் இருக்க வாயில் துணி கட்டிக் கொண்டு செய்வர்.
ஒரு கோட்டை நெல்லில் இருந்து பெறப்படும் பச்சரிசி 42 படி இருக்கும்.
இது கிலோ கணக்கில் பார்த்தால் 63 கிலோ வரும் இந்தப் பச்சரிசியை ஆண்களே இடித்து மாவாக்குவார்கள்.
மாவில் நீர் விட்டுப் பிசைந்து உருட்டித் தட்டுவார்கள்.
இதை காட்டுக் கொடி நிரவி, அதன் மீது இலைகளை பரப்பி உருட்டித் தட்டிய அரிசி மாவை அடுக்குவார்கள்.
அதன் மீது சிறுபயறு, தேங்காய்த் துருவல் கலந்து பூரணத்தையும் வைப்பர்.
இப்படி மாவு, பூரணம் என மாறி மாறி அடுக்கியபின் காட்டு இலையை பரப்பி மூடி,
காட்டுக்கொடியால் உருண்டை வடிவில் கட்டிவிடுவார்கள்.
மெகா கொழுக்கட்டை உருவாகி விட்டது.
இதற்கு முன்பே கட்டைகள் எடுத்து தணல் உருவாக்கி இருப்பார்கள்.
ஆலய பூசாரி பூஜை முடிப்பார். அப்போது அவருக்கு அருள் வரும்.
சாமி ஆடியப்படியே ஐந்தாறு பேர் சேர்ந்து தூக்கும் கொழுக்கட்டையை இவர் ஒருவரே அனாயசமாகத் தூக்கி தணல் நடுவே போடுவார்.
யாராலும் நெருங்க முடியாத தணலில் அங்கிருந்து கொழுக்கட்டையை உருட்டிப் புரட்டி வேக வைத்து விடுவார்.
இரவில் வெந்த கொழுக்கட்டையை பூஜித்து படையல் போடுவார்கள்.
ஆயிரக்கணக்கானோர் இவ்வழிபாட்டை தரிசிப்பார்கள்.
பின் மறுநாள் கொழுக்கடையை பிரித்து ஊரில் உள்ள எல்லா வீடுகளுக்கும் பிரசாதமாக கொடுப்பார்கள்.
- 11 அம்மன் கோவில்களிலும் தசரா விழா.
- கோவில் சப்பரங்கள் வீதி உலா.
நெல்லை பாளையங்கோட்டையில் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா நேற்று முன்தினம் ஆயிரத்தம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதேபோல் 11 அம்மன் கோவில்களிலும் தசரா விழா சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.
நேற்று முன்தினம் இரவு 11 கோவில்களில் இருந்து சப்பரங்களில் அம்மன் எழுந்தருளினார்கள். ஆயிரத்தம்மன், முத்தாரம்மன், உலகம்மன், தூத்துவாரி அம்மன், உச்சினி மாகாளி அம்மன் உள்பட 11 அம்மன் கோவில் சப்பரங்கள் வீதி உலா நள்ளிரவில் தொடங்கியது.
நேற்று காலை பாளையங்கோட்டை ராமர் கோவில் மற்றும் ராஜகோபால சுவாமி கோவில்கள் முன்பு பக்தர்கள் தரிசனத்துக்காக ஒரே நேரத்தில் அனைத்து சப்பரங்களும் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அங்கு பக்தர்கள் வரிசையாக வந்து வழிபட்டனர்.
இதை தொடர்ந்து நவராத்திரி விழாவில் அம்மன் கொலு வீற்றிருக்கும் வைபவம் நேற்று தொடங்கியது. தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் கொலு இருக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வருகிற 25-ந்தேதி (புதன்கிழமை) இரவு 12 மணிக்கு பாளையங்கோட்டை எருமைக்கடா மைதானத்தில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
- இக்கோவிலுள்ள சிலைகளின் அழகைக் சொல்லி மாளாது.
- கிருஷ்ணப்பர் நினைவாக இங்குள்ள கோவிலை அடுத்த ஊர் கிருஷ்ணாபுரம் என அழைக்கப்படுகிறது.
வரலாற்று சுவடுகள்
கிருஷ்ணாபுரம் திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில், திருநெல்வேலிக்கு 12கி.மீ தொலைவில் குமார கிருஷ்ணப்பா என்ற நாயக்க மன்னரால் இவ்வூரும் கோவிலும் அமைக்கப்பட்டன.
வேங்கடாசலபதி கோவில் என அழைக்கப்படுகிறது.
புரட்டாசி மாதப் பெருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ணாபுரம் கோவில் ஒரு வைணவ வழிபாட்டுத் தலம் ஆகும்.
மதுரை நாயக்க மன்னர் கிருஷ்ணப்பரால் (1564-1572) இக்கோவில் கட்டப்பட்டது.
கிருஷ்ணப்பரின் மகன் வீரப்பரின் திருப்பணிகளும் இங்கு உள்ளன.
கிருஷ்ணப்பர் நினைவாக இங்குள்ள கோவிலை அடுத்த ஊர் கிருஷ்ணாபுரம் என அழைக்கப்படுகிறது.
இக்கோவிலிலுள்ள 'வீரப்பர் மண்டபமும், அரங்க மண்டபமும் உன்னத சிற்பங்களைக் கொண்டுள்ளன.
வீரப்பர் மண்டபத்தின் முன்னுள்ள அர்ஜுனன், குறத்தி ராஜகுமாரனைத் தூக்கிச் செல்லுதல்,
நாடோடிப் பெண்ணின் நடனம், கர்ணன், குறவன் அரசகுமாரியைத் தூக்கிச் செல்லுதல், தேவகன்னியின் நடனம் ஆகிய ஆறு கற்றூண் சிலைகள் யாவரும் பார்த்து வியக்கும் படியாக உள்ளன.
அரங்க மண்டபத்திலுள்ள வீரபத்திரன், மன்மதன், பீமன், புருஷாமிருகம், தருமர் ஆகிய சிற்பங்கள் உள்ள
கற்றூண்கள், நடனமாது, ரதிதேவியும் தோழிகளும், வீரபத்திரன் ஏவலாளர் ஆகிய சிற்பங்கள்
நாயக்கர் காலச் சிற்பியின் கைவண்ணத்தைக் காட்டுகின்றன.
பீமன், புருஷாமிருகம், தருமர் உள்ள கற்றூணின் ஒரு பகுதியில் யானைக்கும், காளைக்கும் ஒரே முகம் இருக்கும் படியாகச் சிற்பம் செதுக்கப்பட்டிருப்பது விநோதமாக உள்ளது.
கிருஷ்ணாபுரச் சிற்பங்கள் நமது அரிய கலைச் செல்வங்களாகும்.
இக்கோவிலில் உள்ள கற்சிற்பங்கள் கலைநயத்துடன் தத்ருபமாக படைக்கப்பட்டிருப்பதால் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
இக்கோவிலுள்ள சிலைகளின் அழகைக் சொல்லி மாளாது.
தொங்கு மீசையுடன் குறவன் அரசகுமாரியைத் தூக்கிக் கொண்டு செல்லும் போது, பெண்ணின் உடலில் இக்காலத்தில் அணியும் (பிரேசியர்) மார்ப்புக் கச்சை காணப்படுவது வியப்பான செய்தி.
சீன முகத்துடன் தேவகணம் படைத்திருப்பது, இப்பகுதியில் சீனர்கள் இருந்ததைத் தெரிவிக்கிறது.






