search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student attack"

    • கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து 4 இந்திய மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
    • தற்போது இந்திய மாணவர் மீது கொடூர தாக்குதல் நடந்துள்ளது.

    சிகாகோ:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள லங்கார் ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் சையத் மசாஹிர் அலி. இவர் அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இண்டியானா வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

    இவர் நேற்று தான் வசிக்கும் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை 4 வாலிபர்கள் பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் ஆயுதங்கள் வைத்திருந்ததால், சையத் மசாஹிர் அலி தனது வீட்டுக்கு வேகமாக ஓடினார்.

    உடனே அவரை அக்கும்பல் விரட்டி சென்று பிடித்தது. பின்னர் இந்திய மாணவரை கொடூரமாக அக்கும்பல் தாக்கி அடித்து உதைத்தது. மாணவரிடம் செல்போனை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    கொள்ளையர்கள் தாக்கியதில் சையத் மசாஹிர் அலிக்கு நெற்றி, மூக்கு, வாயில் ரத்தம் வழிந்தது. அவர் ரத்தம் வழிந்தபடியே வீடியோவில் பேசினார். அதில் அவர் கூறும்போது, "நான் உணவு வாங்கி கொண்டு வீட்டுக்கு திரும்பிய போது 4 பேர் என்னை துரத்தி வந்தனர். என் வீடு அருகே நான் தவறி விழுந்தேன். அவர்கள் என்னை சரமாரியாக தாக்கினார்கள். எனக்கு உதவி செய்யுங்கள்" என்றார்.

    இச்சம்பவம் குறித்து சையத் மசாஹிர் அலியின் மனைவி பாத்திமா ரிஸ்வி, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அமெரிக்காவில் எனது கணவரின் பாதுகாப்பு பற்றி கவலைப்படுகிறேன். அவருக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். எனது 3 குழந்தைகளுடன் நான் அமெரிக்காவுக்கு சென்று கணவரை பார்க்க உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார்.

    தாக்குதலுக்குள்ளான இந்திய மாணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அமெரிக்காவில் கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து 4 இந்திய மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்திய மாணவர் மீது கொடூர தாக்குதல் நடந்துள்ளது.

    • மாணவரை தாக்கிய சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
    • இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே வடக்கு சூரங்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த மோகன் என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 15-ந் தேதி 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரை ஆசிரியர் மோகன் அடித்ததாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட மாணவர் சரியாக படிக்காததால் ஆசிரியர் அவரை அடித்ததாக தெரிகிறது.

    இதில் மாணவரின் உடலில் காயங்கள் ஏற்பட்டன. இதனை சிலர் புகைப்படமாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த புகைப்படங்கள் பலராலும் பகிரப்பட்டது. எனவே மாணவரை தாக்கிய சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் கணித ஆசிரியர் மோகன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி பிறப்பித்துள்ளார்.

    • மாணவி கீர்த்தனா மாலையில் பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல வந்த தந்தையிடம் வகுப்பு ஆசிரியை தன்னை அடித்ததாக தெரிவித்து உள்ளார்.
    • அதிர்ச்சி அடைந்த தந்தை சத்யா இது பற்றி பள்ளி நிர்வாகத்திடம் கேட்டதற்கு சரியான பதில் அளிக்கவில்லை. இதனால் ஆசிரியை மீது கொரட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அம்பத்தூர்:

    கொரட்டூர் ரெயில் நிலையம் அருகே தனியார் பள்ளி ஒன்று உள்ளது. அதில் கொரட்டூரை சேர்ந்த ஐ.டி. ஊழியர் சத்யா என்பவரது மகள் கீர்த்தனா (11) 4-ம் வகுப்பு பயின்று வருகிறார்.

    நேற்று காலை வீட்டு பாடத்தை சோதனை செய்த போது மாணவி கீர்த்தனா தமிழ் பாடத்தில் வீட்டு பாடம் எழுதவில்லை. இதனால் வகுப்பறையில் வைத்திருந்த பிரம்பால் மாணவியின் வலது கால் மற்றும் இடது கையில் ஆசிரியை தாறுமாறாக அடித்துள்ளார். இதனால் குழந்தைக்கு கை காலில் பலத்த வீக்கம் ஏற்பட்டு ரத்தம் கட்டியது.

    மாணவி கீர்த்தனா மாலையில் பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல வந்த தந்தையிடம் வகுப்பு ஆசிரியை தன்னை அடித்ததாக தெரிவித்து உள்ளார்.

    அதிர்ச்சி அடைந்த தந்தை சத்யா இது பற்றி பள்ளி நிர்வாகத்திடம் கேட்டதற்கு சரியான பதில் அளிக்கவில்லை. இதனால் ஆசிரியை மீது கொரட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    புகாரை பெற்றுக்கொண்ட கொரட்டூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி தனியார் பள்ளி நிர்வாகத்தினரிடமும் குழந்தையை தாக்கிய ஆசிரியை குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்.

    வில்லியனூர் அருகே ஏரியில் மீன் பிடித்த தகராறில் மாணவரை தாக்கிய 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே கீழூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். விவசாயி. இவரது மனைவி சுமதி. இவர்களது மகன் சசிக்குமார் (வயது 15). இவர் அரியூரில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    நேற்று இவர் தனது நண்பர்களுடன் அங்குள்ள ஏரியில் தூண்டில் போட்டு மீன் பிடித்து கொண் டிருந்தார்.

    அப்போது அருகில் குட்டை அமைத்து மீன் வளர்த்து வரும் அதே பகுதியை சேர்ந்த தமிழரசன் (31), சீனுவாசன் (26), பிரகாஷ் (19), வெங்கடேசன் (25) ஆகியோர் தங்களது குட்டையில் மீன் பிடித்ததாக கூறி சசிக்குமாரை சரமாரியாக தாக்கினர்.

    இந்த தாக்குதலில் சசிக்குமார் பலத்த காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக அரியூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து சசிக்குமாரின் தாய் சுமதி மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்கு பதிவு செய்து தமிழரசன் உள்ளிட்ட 4 பேரையும் தேடி வருகிறார்.

    ஆம்பூர் அருகே பிளஸ்-1 மாணவன் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே பிளஸ்-1 மாணவன் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாலூர் பட்டுவாம்பட்டி கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவன் மாதனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்த மாணவனின் உறவினர் பெண்ணும் அதே பள்ளியில் படிக்கிறார். 2 பேரும் அடிக்கடி சந்தித்து பேசியுள்ளனர்.

    நேற்று பள்ளி வளாகத்தில் மாணவியுடன் பிளஸ்-1 மாணவன் பேசி கொண்டிருந்தார். அப்போது, அதே பள்ளியில் படிக்கும் பட்டுவாம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒருசில மாணவர்கள் பிளஸ்-1 மாணவனையும், மாணவியையும் காதலிப்பதாக சேர்த்து வைத்து ஆபாசமாக பேசியுள்ளனர்.

    பிளஸ்-1 மாணவன், வம்பு செய்த அந்த மாணவர்களை கண்டித்தார். ஆத்திரமடைந்த மாணவர்கள் பிளஸ்-1 மாணவனையும், மாணவியையும் மிகவும் மோசமாக பேசியுள்ளனர். இதையடுத்து, பிளஸ்-1 மாணவன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் சேர்ந்துக் கொண்டு தகராறு செய்த மாணவர்களுடன் மோதலில் ஈடுபட்டனர்.

    பள்ளி வளாகத்தில் நடந்த மாணவர்களின் மோதலை ஆசிரியர்கள் தடுத்து சமரசம் செய்தனர். இந்த விவகாரம் மாலையில் வகுப்பு முடிந்து வீடு திரும்பிய பிறகு பூதாகரமாக வெடித்தது.

    பள்ளிக்கு வெளியே மீண்டும் இருத்தரப்பு மாணவர்களும் பயங்கரமாக மோதி கொண்டனர். பின்னர், வீட்டிற்கு செல்லும் வழியில் பிளஸ்-1 மாணவனை, வம்புக்கு இழுத்த மாணவனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சிலர் மடக்கி பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

    ‘எங்கள் மகனை தாக்க உனக்கு எங்கிருந்து வந்தது தைரியம்’ என்று கூறி தாக்கினர். தாக்கப்பட்ட பிளஸ்-1 மாணவன் நடந்ததை கூறியும் அவர்கள் ஏற்கவில்லை.

    மாணவன் தாக்கப்பட்ட சம்பவத்தை அங்கிருந்த ஒரு வாலிபர் செல்போனில் வீடியோவாக எடுத்து வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவ விட்டார். தற்போது, இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தாக்குதலில் காயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவனின் பெற்றோர், ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து முனிராஜ் (48) மற்றும் சிங்காரம் (57) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள தாக்குதலுக்கு காரணமான மாணவன் மற்றும் அவனது பெற்றோரை தேடி வருகின்றனர்.



    ×