என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர் தாக்குதல்"

    • கைதான சங்கரநாராயணன் மீது பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் 2 வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
    • நெல்லையில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்தவர் சின்னத்துரை. கடந்த 2023-ம் ஆண்டு சாதி ரீதியிலான தாக்குதலில் பலத்த காயம் அடைந்தார். இவர் தற்போது நெல்லை திருமால்நகர் குடியிருப்பில் வசித்து வருவதுடன், பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    கடந்த 16-ந் தேதி நெல்லை கொக்கிரகுளம் வசந்தம் நகர் விரிவாக்கம் பகுதிக்கு தனது இன்ஸ்டாகிராம் நண்பரை பார்க்க சென்றார். அப்போது அவரை அடையாளம் தெரியாத 4 பேர் தாக்கியதுடன், செல்போனையும் பறித்துச் சென்றனர்.

    ஏற்கனவே பாதிக்கப்பட்ட மாணவன் மீண்டும் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

    போலீசாரின் விசாரணையில் பாலகிருஷ்ணன் மகன் பரமேஸ் (வயது 20) என்பவர் தலைமையில், அவருடைய நண்பர்கள் சங்கர நாராயணன் (23), சக்திவேல் (19), சண்முக சுந்தரம் மற்றும் வேல்முருகன் ஆகியோர் சின்னத்துரையிடம் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு, அவரிடம் பணம் பறிக்கும் நோக்கத்தோடு சம்பவ இடத்துக்கு வரவழைத்து இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதுதொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்றது. இந்த நிலையில் சக்திவேல், சங்கரநாராயணன் ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான சங்கரநாராயணன் மீது பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் 2 வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இந்த வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் பரமேஸ், சண்முகசுந்தரம், வேல்முருகன் ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே மாணவன் சின்னத்துரையை காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் ரஞ்சன்குமார் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து பேசி ஆறுதல் கூறி, நிதிஉதவியும் வழங்கினர்.

    பின்னர் ரஞ்சன் குமார் கூறுகையில், 'நெல்லையில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர் சின்னத்துரைக்கு வீடு வசதி, கல்வி வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சாதி ரீதியான மோதல்கள் அதிகமாக நடந்து வருகிறது. பாளையங்கோட்டை பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவர் அரிவாளால் வெட்டப்பட்டது கண்டிக்கத்தக்கது. சாதி ரீதியான வன்முறைகளுக்கு எதிராக சிறப்பு தனி சட்டங்களை இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

    • பிளாஸ்டிக் பைப்புகளுடன் வந்த நந்தனம் கல்லூரி மாணவர்கள் பிரேம்குமாரை சுற்றிவளைத்து தாக்கினர்.
    • மாணவர்கள் 7 பேரையும் சைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

    போரூர்:

    சென்னை நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரேம் குமார். மாநிலக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை அவர் கல்லூரி செல்வதற்காக வடபழனி பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.

    அப்போது அங்கு பிளாஸ்டிக் பைப்புகளுடன் வந்த நந்தனம் கல்லூரி மாணவர்கள் பிரேம்குமாரை சுற்றிவளைத்து தாக்கினர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் இளங்கனி மற்றும் போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு பிரேம்குமார் மீது தாக்குதல் நடத்திய கல்லூரி மாணவர்களான தீப கணேஷ், நவீன்குமார், தமிழ்செல்வன், அரசு, கிரிதரன், சதிஷ், அபிஷேக் ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது சட்ட விரோதமாக கூடுதல், ஆபாசமாக பேசுதல், மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ்வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மாணவர்கள் 7 பேரையும் சைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி வேல்ராஜ் மாணவர்கள் 7 பேரையும் ஜாமீனில் விடுவித்தார். மேலும் அவர்களை 30 நாட்கள் நல்லொழுக்க பயிற்சி வகுப்பில் சேர்க்க உத்தரவிட்டார்.

    அதன்படி கல்லூரி மாணவர்கள் 7 பேரும் இன்று முதல் 30 நாட்களுக்கு கல்லூரி முடிந்து மாலை 4 மணி முதல் 6 மணி வரை சைதாப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் நல்லொழுக்க பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள உள்ளனர்.

    அங்கு சிறைத்துறை மற்றும் சமூக நலத்துறை சார்பில் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கி மீண்டும் இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடாமல் நல்வழிப்படுத்தும் வகையில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

    மாணவர்களின் எதிர்கால நலன் கருதி அவர்களின் பெற்றோரை நேரில் வரவழைத்து பிள்ளைகளின் செயல்பாடுகளை கண்காணிக்க அறிவுறுத்துவதுடன் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்க வடபழனி போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    • மாணவன் பிரவீன் குமார் தனது தாயார் இந்திராவிடம் கூறி உள்ளார்.
    • ஆனந்த் மீது சிறுவர் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

    இந்தக் கல்லூரியில் காவல்கிணறை சார்ந்த பிரவீன் குமார் (வயது 17) என்ற மாணவன் இரண்டாம் ஆண்டு டிப்ளமோ இன் பெட்ரோல் கெமிக்கல் என்ஜினியரிங் படித்து வருகிறார். நேற்று மாலை மாணவர் படித்து வரும் துறையின் தலைவரான ஆனந்த் (40) என்பவர் மாணவனிடம் அசைன்மென்ட் நோட்டை கேட்டுள்ளார்.

    அப்போது மாணவன் தனது நோட்டை சக மாணவர் ஒருவர் வாங்கி சென்று விட்டதாகவும், எனவே தான் நோட்டில் எழுதவில்லை எனவும் கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர் ஆனந்த், கம்பால் மாணவனை அடித்து காயப்படுத்தியதாக கூறப்படுகிறது .

    இதுகுறித்து மாணவன் பிரவீன் குமார் தனது தாயார் இந்திராவிடம் கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவனின் தாயார் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் துறை தலைவரான ஆனந்த் மீது சிறுவர் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

    • பலத்த காயம் அடைந்த அஸ்வின் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
    • அதே பகுதியை சேர்ந்த 4 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அஸ்வின்(18). இவர் சென்னையில் உள்ள கல்லூரியில் பி.டெக். முதலாம் ஆண்டு படித்து வருகிறார். பேரம்பாக்கம் பகுதியில் இளம் பெண்களை சிலர் கேலி-கிண்டல் செய்தனர். இதனை அஸ்வின் தட்டி கேட்டார்.

    இதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் நேற்று மாலை கல்லூரி முடிந்து கடம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே நடந்து வந்த அஸ்வினை 4 பேர் கும்பல் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த அஸ்வின் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

    • மாணவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கரம்பக்குடி புதுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி மாணவர்கள் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ளது மழையூர் கிராமம். இங்குள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் பள்ளி முடிந்து வீடு திரும்பினார். அப்போது அங்கு வந்த 6 பேர் அந்த மாணவனை கடத்தி சென்று சரமாரியாக தாக்கினர்.

    இதில் அந்த மாணவர் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த மாணவரின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் இன்று காலை திரண்டனர்.

    மாணவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கரம்பக்குடி புதுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் சாலை மறியல் நடைபெற்றது.

    தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இதனிடையே மாணவரை தாக்கியவர்கள் கல்லூரி மாணவர்கள் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி 6 கல்லூரி மாணவர்கள் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

    • கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து 4 இந்திய மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
    • தற்போது இந்திய மாணவர் மீது கொடூர தாக்குதல் நடந்துள்ளது.

    சிகாகோ:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள லங்கார் ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் சையத் மசாஹிர் அலி. இவர் அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இண்டியானா வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

    இவர் நேற்று தான் வசிக்கும் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை 4 வாலிபர்கள் பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் ஆயுதங்கள் வைத்திருந்ததால், சையத் மசாஹிர் அலி தனது வீட்டுக்கு வேகமாக ஓடினார்.

    உடனே அவரை அக்கும்பல் விரட்டி சென்று பிடித்தது. பின்னர் இந்திய மாணவரை கொடூரமாக அக்கும்பல் தாக்கி அடித்து உதைத்தது. மாணவரிடம் செல்போனை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    கொள்ளையர்கள் தாக்கியதில் சையத் மசாஹிர் அலிக்கு நெற்றி, மூக்கு, வாயில் ரத்தம் வழிந்தது. அவர் ரத்தம் வழிந்தபடியே வீடியோவில் பேசினார். அதில் அவர் கூறும்போது, "நான் உணவு வாங்கி கொண்டு வீட்டுக்கு திரும்பிய போது 4 பேர் என்னை துரத்தி வந்தனர். என் வீடு அருகே நான் தவறி விழுந்தேன். அவர்கள் என்னை சரமாரியாக தாக்கினார்கள். எனக்கு உதவி செய்யுங்கள்" என்றார்.

    இச்சம்பவம் குறித்து சையத் மசாஹிர் அலியின் மனைவி பாத்திமா ரிஸ்வி, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அமெரிக்காவில் எனது கணவரின் பாதுகாப்பு பற்றி கவலைப்படுகிறேன். அவருக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். எனது 3 குழந்தைகளுடன் நான் அமெரிக்காவுக்கு சென்று கணவரை பார்க்க உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார்.

    தாக்குதலுக்குள்ளான இந்திய மாணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அமெரிக்காவில் கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து 4 இந்திய மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்திய மாணவர் மீது கொடூர தாக்குதல் நடந்துள்ளது.

    ×