search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nanguneri Student Attack"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாங்குநேரி சம்பவம் தமிழக மக்கள் அனைவரையும் மிகவும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியது.
    • இளைய சமுதாயத்தினரிடையே சாதி, இன உயர்வு பரவியிருப்பது எதிர்காலத் தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நாங்குநேரியில் பள்ளி மாணவன் மற்றும் அவன் குடும்பத்தினர், சக மாணவர்களால் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் தமிழக மக்கள் அனைவரையும் மிகவும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியது. சாதி, மத, பேதங்களைக் கடந்து மனிதநேயத்துடன் ஒரு சமுதாயத்தைப் படைத்து, அனைத்து தரப்பு மக்களும் சமூகப் பொருளாதார வளர்ச்சி பெற வேண்டுமென்ற நோக்கில் இந்த அரசு செயலாற்றி வருவதை மக்கள் அறிவார்கள்.

    இச்சூழ்நிலையில் இதுபோன்ற ஒரு சம்பவம் என்னை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

    இளைய சமுதாயத்தினரிடையே சாதி, இன உயர்வு பரவியிருப்பது எதிர்காலத் தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல. இது உடனடியாக சரி செய்யப்பட வேண்டிய ஒரு முக்கியமான பிரச்சனை என்பதால், இதில் அரசு எந்த வகையான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்திட உத்தரவிட்டுள்ளேன்.

    இந்தக் குழு கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சமூக சிந்தனையாளர்கள், பத்திரிகைத் துறையினர் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கருத்துக்களைப் பெற்று அதனடிப்படையில் அரசுக்கு விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • சாதி மோதல்களைத் தடுக்க, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து கடுமையாக எச்சரிக்க வேண்டும்.
    • போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுக்க காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவன் சின்னத்துரையை, அதே ஊரைச் சேர்ந்த சக மாணவர்கள் கேலி, கிண்டல் செய்து வந்ததாகவும், அது குறித்து அம்மாணவன் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பு, இரவு நேரத்தில் வீட்டில் இருந்த மாணவன் சின்னத்துரையை சக மாணவர்களில் சிலர் கொடூர ஆயுதங்களால் தாக்கி உள்ளதாகவும், தனது சகோதரன் சின்னத்துரையை காப்பாற்ற வந்த அவரது சகோதரியையும் அம்மாணவர்கள் தாக்கியதால் பலத்த காயமடைந்த 2 பேரும், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    இவர்கள் இருவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    இன்றைக்கு, தமிழகமெங்கும் தங்கு தடையின்றி கிடைக்கும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களினால் இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட இளைய சமுதாயம் சீரழிவை சந்திப்பது தினசரி நிகழ்வாக உள்ளது. இளைய சமுதாயத்தினரை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை இரும்புக் கரம் கொண்டு தடுக்க பலமுறை தி.மு.க. அரசை வலியுறுத்தியும், உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

    அ.தி.மு.க. அம்மாவின் ஆட்சியிலும், தொடர்ந்து எனது தலைமையிலான அம்மாவின் ஆட்சியிலும், சாதி, இன மோதல்கள் இன்றி, மக்கள் சகோதரர்களாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர். சட்டத்தின் ஆட்சி நிலை நிறுத்தப்பட்டது. சமூக விரோதிகள் ஒடுக்கப்பட்டனர். சாதி, இன மோதல்கள் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது. தமிழக மக்கள் அமைதியாக தங்களது பணிகளை செய்து வந்தனர்.

    ஆனால், தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 27 மாத காலத்தில், நாள்தோறும் ஏதேனும் ஒரு குற்றச் சம்பவம் நடைபெறுவதும்; பிறகு, தி.மு.க. அரசு நடவடிக்கை எடுப்பதும், அறிக்கை விடுவதுமே வாடிக்கையாகக் கொண்டுள்ளது. வரும் முன் காப்போம் என்ற எண்ணமே இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றால் என்ன என்று கேட்கும் இந்த விடியா அரசு இனியாவது, மாணவர்களின் மத்தியில் நன்னெறி,

    நீதி போதனை வகுப்புகளை நடத்தி மாணவ சமுதாயம் சகோதரத்துவத்துடன் நடப்பதற்கு அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுக்க காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும்.

    சட்டத்தின் ஆட்சி நடப்பதை உறுதி செய்ய வேண்டும். சாதி மோதல்களைத் தடுக்க, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து கடுமையாக எச்சரிக்க வேண்டும். அதன்மூலம் சாதி, இன மோதல்களின் ஆரம்பப் புள்ளியினை கண்டு பிடித்து, முளையிலேயே அகற்றிட வேண்டும் என்று தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பாதிக்கப்பட்ட மாணவரின் தாய் அம்பிகாவிடம் பேசி ஆறுதல் தெரிவித்தார்.
    • தொடர்ந்து மாணவருக்கு தேவையான உயர்தர சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவக்கல்லூரி முதல்வர் ரேவதியிடம் அறிவுறுத்தினார்.

    நெல்லை:

    நாங்குநேரியில் வீடு புகுந்து சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயம் அடைந்த பிளஸ்-2 மாணவன் சின்னத்துரை மற்றும் அவரது தங்கை செல்வி ஆகியோர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அவர்களை சபாநாயகர் அப்பாவு, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோகரன், அப்துல் வகாப், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் உள்ளிட்டார் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

    அப்போது காவல்துறை சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும், மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினரிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு எடுத்துரைத்தார்.

    தொடர்ந்து மாணவருக்கு தேவையான உயர்தர சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவக்கல்லூரி முதல்வர் ரேவதியிடம் அறிவுறுத்தினார்.

    இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பாதிக்கப்பட்ட மாணவரின் தாய் அம்பிகாவிடம் பேசி ஆறுதல் தெரிவித்தார்.

    தமிழக அரசு உங்களது குடும்பத்திற்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும். அமைச்சரிடம் அனைத்து விவரங்களையும் தெரிவித்துள்ளேன். நீங்கள் தைரியமாக இருங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்பத்திற்கு தி.மு.க. சார்பில் ரூ.2 லட்சம் நிதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:-

    நாங்குநேரியில் நடந்த சம்பவம் குறித்து தகவல் வந்த உடன் முதலமைச்சர் என்னை நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    முதலமைச்சரும் நேரடியாக பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயிடம் பேசியிருக்கிறார். குழந்தைகள் கல்வி தடைபடாத அளவில் நடவடிக்கைகள் எடுக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு துணை நிற்கும் எனவும் அவர்களிடம் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

    தேவையான உயர் சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

    இவர் அவர் கூறினார்.

    ×