search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Airwadi"

    • ஏரிவாடி பக்கத்தில் நம்பி ஆற்றின் அருகில் அமைந்துள்ளது ஒத்தபனை சுடலை ஆண்டவர் கோவில்.
    • இயற்கை வளம் நிறைந்தது திருவேங்கடநாதபுரம் என்று அழைக்கக்கூடிய சிறுமளஞ்சி.

    திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே அமைந்துள்ளது. சிறுமளஞ்சி. இது நாங்குநேரி தாலுகாவில் உள்ள ஏரிவாடி பக்கத்தில் உள்ள நம்பி ஆற்றின் அருகில் அமைந்துள்ளது இந்த ஒத்தபனை சுடலை ஆண்டவர் கோவில்.

    இயற்கை வளம் நிறைந்த திருவேங்கடநாதபுரம் என்று அழைக்கக்கூடிய சிறுமளஞ்சி. இந்த ஊரில் பல தலைமுறைகளுக்கு முன்பு இருளப்பன் என்பவர் வசித்து வந்தார். அவரது பக்கத்து கிராமமான அணைக்கரையை சேர்ந்த வெள்ளையன் என்பவருக்கும் பனைமரங்களை குத்தகை எடுப்பதில் ஒரு சில பிரச்சினைகள் இருந்துகொண்டு வந்தது.

    ஒரு சமயம் வெள்ளையம் நிலத்தில் வைக்கப்பட்டிருந்த வைகோல்போர் தீப்பற்றி எரிந்தது. தன்னுடைய களத்துமேட்டில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல்போர் தீப்பற்றி எரிந்ததற்கு காரணம் இருளப்பன் தான் என்று சொல்லி குற்றம்சாட்டினார். அதன்பிறகு இருவருக்கும் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. பின்னர் ஊர் பெரியர்வர்களிடம் பேசி இந்த பிரச்சினைக்கு முடிவு செய்யப்பட்டது.

    அது என்னவென்றால் விஜயநாராயணத்தில் இருக்கக்கூடிய சுடலைமாட சுவாமி கோவிலுக்கு இரு ஊரில் உள்ள மக்களும் செல்ல வேண்டும். அங்கு சென்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்யலாம் என்று ஊர் பெரியவர்கள் முடிவு செய்தனர். சத்தியம் செய்தபிறகு சொந்த ஊருக்கு 3 நாட்கள் கழித்து தான் வர வேண்டும். எனவே இரண்டு ஊர் பொதுமக்களும் விஜயநாராயண புரத்துக்கு சென்றனர். அங்கு கோவிலில் சத்தியமும் செய்தனர்.

    ஆனால் 3 நாட்களுக்குள் ஊருக்கு செல்லக்கூடாது என்ற உத்தரவை மீறி சிறுமளஞ்சிக்காரர்கள் ஊருக்கு திரும்பி வந்துவிட்டனர். உடனே சுடலைமாட சுவாமி கோபத்துடன் தன்னுடைய திருவிளையாடலை ஆரம்பித்தார்.

    சிறுமளஞ்சி தெருவில் வசிக்கக்கூடிய ஒரு பெண்ணின் கனவில் பேச்சியின் மகனாகிய மாயாண்டி சுடலைமாட சுவாமி ஓங்கி உயர்ந்த உருவம் கொண்டு விரிசடை கூந்தலோடும், விரிந்த தோள்கள் இரண்டில் இரண்டு பனைமரங்களை வைத்துக்கொண்டு, ஒரு கையில் மாண்டுபோன பிணங்களின் மிட்டங்கால்களை முருக்குபோல் கடித்துக்கொண்டு ஆங்கார உருவம் கொண்டு ஆதாளி போட்டபடி இடுப்பில் கருப்புநிறத்தில் சல்லடை அணிந்து, காலிலே வெள்ளிமணி தண்டையும் அணிந்து, ஒருகையில் 5 மணிவல்லையமும் கொண்டு வருவதுபோல் தோன்றினார்.

    பயந்துபோன அந்த பெண், தான் கண்ட கனவை பற்றி தன்னுடைய பெற்றோர்களிடம் கூறினாள். அந்த பெண்ணின் அப்பா-அம்மா இருவரும் ஊர் பெரியவர்களிடம் சொன்னார்கள். ஊர் பெரியவர்களில் ஒருவர் நாளைக்கு கடைசி செவ்வாய். எனவே நம்ம ஊர் முத்தாரம்மன் கோவிலுக்கு சென்று கணக்கு கேட்டு வரலாம். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி செய்யலாம் என்று கூறினார்.

    கடைசி செவ்வாய் இரவு 8 மணிக்கு பூஜைகள் எல்லாம் நடந்தது. ஊர் பெரியவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து நடந்தவற்றை எடுத்துக்கூறி இனி நாங்கள் என்ன செய்வது என்று கேட்டனர்.

    அப்போது அம்மன் அருள்வாக்கு சொன்னார். என் மகன் மாயாண்டி சுடலைக்கு கோபம் தீரவில்லை. எனவே அவனுக்கு ஊரில் நிலையம் கொடுத்து கோவில் கட்டி சுடலைமாடனை கைகூப்பி வணங்கி வர வேண்டும். சிவசுடலை அவன் கோபம் தணிவான். கையிலையில் பிறந்த மகன் காவலாய் காத்து நிற்பான். இன்று இரவே சுடலைமாடன் வருவான். நள்ளிரவில் ஊருக்கு கிழக்கே ஒத்தபனை மரத்தின் மீது சுடரொளியில் அவதரித்தவன் போரொளியாய் தெரிவான் என்று அம்மன் அருள்வாக்கு சொன்னாங்க.

    உடனே அவர்கள் அருகில் இருந்தவர்களில் ஒரு பெண் கேட்டார். இந்த பனங்காட்டில் இருக்கக்கூடிய எந்த பனை மரத்தில் அவர் தெரிவார் என்று கேட்டார். அதை எவ்வாறு கண்டுபிடிப்பது என்று கேட்டார். உடனே அருள்வாக்கு கூறும் அம்மன், சுடலை பேரொளியாய் தெரியும் அந்த பனைமரத்துக்கு அடியில் கத்தரிக்காய் செடி ஒன்று இருக்கும். அதில் ஒரேஒரு காய் மட்டும் காய்த்திருக்கும். அந்த இடம் தான் சுடலைமாடசுவாமி குடியேறக்கூடிய இடம்.

    சுடலைமாட சுவாமியை கண்டு யாரும் பயப்படத்தேவை இல்லை. அவன் என் கண் பார்வையில், என் கட்டுப்பாட்டில் இருப்பான் என்று முத்தாரம்மன் அருள்வாக்கு சொன்னாங்க.

    முத்தாரம்மன் சொன்னபடியே நள்ளிரவில் ஊரார்கள் எல்லோரும் ஒன்றுகூடி நின்னாங்க. மாயாண்டி சுடலைமாட சுவாமி விஜயநாராயணம் விட்டு பரப்பாடி, புதுக்குளம், ராப்பாடி பாதைவிட்டு, நாங்குநேரி தாண்டி வாகைகுளம் வழியாக சிறுமளஞ்சி வந்தார்.

    வேம்புடையார் சாஸ்தா கூடி, ஐந்துடையான் பாலம் கடந்து சிறுமளஞ்சி ஊருக்கு ஓடி வந்தார். ஒத்தப்பனை உயரத்துக்கு ஒளியாக காட்சி தந்தார் சுடலைமாடன் சுவாமி. அடுத்த நாள் காலையில் ஊர் பெரியவர்கள் அனைவரும் விஜயநாராயணம் சென்றனர். விஜயநாராயணத்துக்கு சென்று பிடிமண் எடுத்து வந்தனர். கத்தரிக்காய் செடி முளைத்திருந்த அந்த ஒத்தை பனைமரத்தடியில் சுடலைமாட சுவாமிக்கு மண் பீடம் அமைத்தனர்.

    பனை ஓலையால் கொட்டகை அமைத்து கோவில் கட்டி பூஜை செய்து வந்தனர். அப்போது சுடலைமாட சுவாமி அருள்வாக்கு சொன்னார். முதல்வாக்கு என்னவென்றால், நான் இந்த சிறுமளஞ்சியை சிறு மதுரையாக்கி தருகிறேன் என்று கூறினார். சுடலைமாட சுவாமி கூறிய அருள்வாக்கின்படி சிறுமளஞ்சி விவசாயத்திலும், தொழில் வளர்ச்சியிலும், கல்வியிலும் சிறந்து விளங்கியது.

    அதன்பிறகு சிலவருடங்கள் கழித்து கல்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பனைக்கம்புகள் கொண்டு ஓடு வேயப்பட்டது. காலப்போக்கில் ஓட்டுக்கூரையை நீக்கிவிட்டு கல் மண்டபம் கட்டினர். இந்த கோவில் வள்ளியூரில் இருந்து 9 கி.மீ தூரத்தில் உள்ளது.

    இந்த கோவிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அதாவது ஆவணி மாதம் 3-வது வெள்ளிக்கிழமை சிறப்பாக கொடை விழா நடந்து வருகிறது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடும், தமிழ் மாதத்தில் வரும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் விஷேச வழிபாடும் நடக்கிறது.

    இந்த விஷேச நாட்களில் வள்ளியூரில் இருந்து சிறப்பு பஸ்கள் எல்லாம் இந்த கோவிலுக்கு இயக்கப்படுகிறது. இந்த கோவிலில் காலை 6.30 மணியில் இருந்து இரவு 8.30 மணிவரை நடை திறந்து இருக்கும். நுழைவு வாயிலுக்கு அருகில் ஒற்றை பனைமரமும், பக்கத்துலேயே கொம்புமாடசாமியின் பீடமும் இருக்கும். அதற்கு எதிரில் சுடலைமாட சுவாமியின் கோவில் உள்ளது.

    அங்கு சுடலைமாட சுவாமி, பேச்சியம்மன், முண்டன் சுவாமி ஆகிய தெய்வங்கள் நின்ற நிலையில் கிழக்கு பகுதி நோக்கி அருள்பாலித்து வருகிறார்கள். ஒத்தபனை சுடமாடசுவாமியின் தனிச்சிறப்பு என்னவென்றால் இந்த கோவிலில் இருக்கும் மூலவர் சுடலை ஆண்டவர் என்று அழைக்கப்படுகிறார்.

    உண்மையாகவே நம்பிக்கையுடன் வழிபட்டு வரும் பக்தர்களுக்கு உயர்வான வாழ்வை தருகிறார் இந்த ஒத்தப்பனை சுடலைமாடசுவாமி. நாமும் அவரை வழிபடுவோம் அவர் அருள் பெறுவோம்.

    • உச்சிப்புளி, ஏர்வாடி பகுதியில் 11-ந்தேதி மின்தடை ஏற்படுகிறது.
    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் (ஊரகம்) செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பெருங்குளம் துணை மின் நிலையத்தில் வருகிற 11-ந் தேதி (செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் உச்சிப்புளி, கீழ நாகாச்சி, செம்படையார்குளம், தாமரைக்குளம், இரட்டையூரணி, புதுமடம், இருமேனி, பிரப்பன்வலசை, மானாங்குடி, நொச்சியூரணி. எஸ்.கே.வலசை, பெருங்குளம், வழுதூர், வாலாந்தரவை, குயவன்குடி. ஏந்தல், மொட்டையன் வலசை, வாணியங்குளம், பெருங்குளம் இந்திராநகர் அதனை சுற்றியுள்ள பகுதிகளும், பனைக்குளம் சுற்றியுள்ள பகுதிகள், பனைக்குளம், ஆற்றாங்கரை, தேர்பேகி, அழகன்குளம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    ஏர்வாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால் ஏர்வாடி, தர்கா, கடற்கரை மற்றும் புல்லந்தை, மாயாகுளம், இதம்பாடல், பனையடியேந்தல், ஆலங்குளம், மல்லல், நல்லிருக்கை, மல்லல் மட்டியரேந்தல், இளங்காக்கூர், வளநாடு பகுதிகளில் வருகிற 11-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 10மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    • ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சி வெட்டமனை நாடார் உறவின்முறை சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது.
    • இதையொட்டி ஏர்வாடி செல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சி வெட்டமனை நாடார் உறவின்முறை சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது. இதையொட்டி ஏர்வாடி செல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. கோவில் அருகே மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காமராஜர் படத்திற்கு பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பேனா, பென்சில் வழங்கப்பட்டது.

    அன்னதானமும் நடந்தது. விழாவில் லட்சுமணன், கார்த்திகேயன், சுரேஷ்குமார், சக்தி குமார், ஜெகன், ஜெகதீஷ், சரவணன், வீரக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் ஏர்வாடி ஊராட்சியில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் மண்டபம் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் தலைமையில் ராமநாதபுரம் நகர செயலாளர் சதீஷ் நாடார் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் அக்கீம் கலந்து கொண்டு இரட்டையூரணி கிராமத்தில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    இதில் மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். கீழக்கரையில் தமிழ்நாடு பனை வாரிய மாநில தலைவர் பாலசிங்கம் காமராஜரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. கீழக்கரை இளைஞர் இளம் பெண்கள் பாசறை தலைவர் செல்வகணேஷ்பிரபு, நகர் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பிரதீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×