என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சாதிதான் நம்முடைய முதல் எதிரி - ஆணவக்கொலை குறித்து எம்.பி. கமல்ஹாசன் பதிவு
- கவின் செல்வகணேஷ் எனும் 27 வயது ஐடி ஊழியர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டார்.
- சாதிய வன்கொடுமைக்கு எதிராக அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒன்று திரள வேண்டும்.
அண்மையில் நடந்த திருநெல்வேலி ஆணவப்படுகொலை சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வெவ்வேறு சமூகங்களைச் சார்ந்த கவினும் சுபாசினி என்ற பெண்ணும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்னர் இதனையறிந்த சுபாசினியின் பெற்றோர் கவின்குமாரையும் அவரது பெற்றோரையும் எச்சரித்துள்ளனர். அதனால் கவின்குமாரின் பெற்றோர் கவின்குமாரை கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த கவின் விபத்தில் சிக்கி திருச்செந்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாத்தாவை பார்ப்பதற்காக ஊருக்கு சென்றுள்ளார். அப்போது திருநெல்வேலியில் சித்த மருத்துவராக தான் பணியாற்றும் தனியார் சிகிச்சை மையத்தில் கவினின் தாத்தாவிற்கு சிகிச்சை அளிக்கலாம் என சுபாஷினி தெரிவித்ததன் அடிப்படையில் சுபாஷினியிடம் ஆலோசனை பெறுவதற்கு கவின் அவரது அம்மா மற்றும் மாமா ஆகிய மூவரும் சிகிச்சை மையத்திற்கு சென்றுள்ளனர்.
சிகிச்சை மையத்தின் உள்ளே சுபாஷினியிடம் கவினின் அம்மாவும் மாமாவும் பேசிக் கொண்டிருந்தபோது வெளியே நின்று கொண்டிருந்த கவினை சுபாஷினியின் தம்பி சுர்ஜித் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று தனது வீட்டு வாசலில் வைத்து கவினை வெட்டி படுகொலை செய்துள்ளான். பின்னர் சுர்ஜித் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளான்.
இந்த ஆணவக்கொலையை கண்டித்து மாநிலங்களவை எம்.பி.கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "பாளையங்கோட்டையில் கவின் செல்வகணேஷ் எனும் 27 வயது ஐடி ஊழியர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. இந்தக் கொடும்குற்றத்தைச் செய்த குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தரவேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். கவினை இழந்து வாடும் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சாதிய வன்கொடுமை எனும் சமூக இழிவிற்கு எதிராக அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒன்று திரள வேண்டும். சாதிதான் நம்முடைய முதல் எதிரி என்பதை உணர வேண்டும். முற்றுப்புள்ளி எட்டும் வரை போராட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.






