என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்று தாய் தற்கொலை- குடும்ப தகராறில் விபரீத முடிவு
    X

    2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்று தாய் தற்கொலை- குடும்ப தகராறில் விபரீத முடிவு

    • தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி 2 குழந்தைகளை சடலமாக மீட்டனர்.
    • 3 பேர் உடல்களையும் கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கயத்தாறு:

    நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே உள்ள பருத்திகுளம் மேலத்தெருவை சேர்ந்தவர் முத்தையா (வயது38). இவரது மனைவி முத்துலெட்சுமி (வயது 27). இவர்களுக்கு 5 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி முத்தமிழ் (4½), சுசிலாதேவி (3) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

    முத்தையா ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அவர் அடிக்கடி மதுகுடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையை கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.

    நேற்று காலை கறி குழம்பு வைப்பதற்காக முத்தையா கறி வாங்கி கொடுத்ததாகவும், முத்துலெட்சுமி குழம்பு வைக்க மாட்டேன் என்று மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து முத்தையா தனது மனைவி முத்துலெட்சுமி மற்றும் குழந்தைகளை கங்கைகொண்டானில் இருந்து பருத்திகுளத்தில் உள்ள முத்துலெட்சுமியின் தாயார் லட்சுமி வீட்டில் கொண்டு விட்டுள்ளார். அதோடு நேற்றிரவு முத்தையா குடித்து விட்டு பருத்திகுளம் சென்று முத்துலெட்சுமியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் முத்துலெட்சுமி மனமுடைந்துள்ளார்.

    இந்நிலையில் இன்று காலை முத்துலெட்சுமி தனது குழந்தைகளை அழைத்து கொண்டு பெருமாள் கோவில் காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது தாயார் லெட்சுமி தேடிப்பார்த்த போது அப்பகுதியில் உள்ள கிணற்று அருகே முத்துலெட்சுமி செருப்புகள் கிடந்ததை கண்டார். உடனே கிணற்றுக்குள் பார்த்த போது கிணற்றில் முத்தமிழ், சுசிலாதேவி ஆகிய 2 குழந்தைகளும் மிதந்தனர்.

    உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் கங்கைகொண்டான் தீயணைப்பு நிலைய அலுவலர் பர்னபாஸ் சாலமோன் தலைமையில் வீரர்கள் கிணற்றுக்கு விரைந்து சென்றனர்.

    மேலும் கங்கைகொண்டான் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி 2 குழந்தைகளை சடலமாக மீட்டனர். தொடர்ந்து முத்துலெட்சுமியும் சடலமாக மீட்கப்பட்டார். அவர் தனது குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்று விட்டு தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. 3 பேர் உடல்களையும் கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சடலமாக மீட்கப்பட்டதை பார்த்து அங்கிருந்த உறவினர்களும், கிராம மக்களும் கதறி அழுதனர். இந்த சம்பவத்தால் பருத்திகுளம் கிராமம் சோகத்தில் மூழ்கியது.

    இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், முத்தையா மற்றும் உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×