search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மலர் கண்காட்சியில் கட்டுக்கடங்காத கூட்டம்: ஒரே நாளில் 30 ஆயிரம் பேர் பார்த்து ரசித்தனர்
    X

    மலர் கண்காட்சியில் கட்டுக்கடங்காத கூட்டம்: ஒரே நாளில் 30 ஆயிரம் பேர் பார்த்து ரசித்தனர்

    • 12 லட்சம் மலர்களை கொண்டு பல்வேறு வடிவங்களில் பூங்கா முழுக்கவும் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
    • இதுவரை செய்யாத நடைமுறை என்பதால், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மலர்கள் மக்கள் பார்வைக்கு விருந்தளித்து வருகிறது.

    சென்னை:

    தமிழக அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் கருணாநிதி நூற்றாண்டு மலர் கண்காட்சி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள செம்மொழி பூங்காவில் கடந்த 10-ந்தேதி தொடங்கியது.

    12 லட்சம் மலர்களை கொண்டு பல்வேறு வடிவங்களில் பூங்கா முழுக்கவும் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. பல வண்ணங்களில், பல வகைகளில் மலர்கள் குறிப்பாக ரோஜா, துலிப், சாமந்தி என பல வகை பூக்கள் கண்களுக்கு விருந்தாக காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த இதய வடிவிலான மலர் அலங்கார வளைவை காணலாம்.

    இந்த மலர் கண்காட்சியானது சென்னையில் புதிய முயற்சியாக, பூக்கும் பருவத்தில் இருந்த செடிகளை கொண்டு வந்து, அவை பூத்தபின் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இதுவரை செய்யாத நடைமுறை என்பதால், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மலர்கள் மக்கள் பார்வைக்கு விருந்தளித்து வருகிறது.

    அதோடு பூக்களை கொண்டு பல அலங்காரங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. யானை, அன்னப்பறவை, பொம்மை, ஆமை என்று உருவ அலங்காரங்களும். அதேபோல் சதுர தூண், இதய வடிவ தூண், மலர் பாதை என பல வகைகளில் அலங்காரத்துடன் இந்த மலர் கண்காட்சி அமைக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று காலை முதலே மக்கள் அதிக அளவில் வர தொடங்கினர். இதனால் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த விதவிதமான மலர்களை கண்டு ரசித்தனர். மேலும் மலர்களுடன் 'செல்பி'களையும் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியும் அடைந்தனர்.

    மலர் கண்காட்சியை பார்வையிட வருபவர்களை உற்சாகப்படுத்துவதற்காகவே அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக மேடையில் மாலை நேரங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அந்தவகையில் நேற்றும் கலை நிகழ்ச்சி அரங்கேறியது. இதில் பொதுமக்கள் குறிப்பாக சிறுவர்-சிறுமிகள் பங்கேற்று ஆடிப்பாடி அசத்தினர்.

    மலர் கண்காட்சியை பார்வையிட வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

    அனைவரையும் கவர்ந்த இந்த கண்காட்சி நாளையுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவடைகிறது. பெரியவர்களுக்கு ரூ.150-ம், சிறியவர்களுக்கு ரூ.75-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகை இருக்கிறது. நேற்று ஒரு நாளில் மட்டுமே இக்கண்காட்சியை 30 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளதாகவும், இதுவரை சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×