என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கத்திரி வெயிலை விரட்டியடித்த கனமழை- மதுரை சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்
- கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- மதுரையில் கடந்த 2 நாட்களாக சாரல் மற்றும் பலத்த மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை:
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் கடந்த 14-ந்தேதி அகோர முகத்துடன் தொடங்கியது. வடமாநிலங்களை மிஞ்சும் வகையில் கோடையின் தாக்கம் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு தகித்தது. வழக்கமாக வேலூர், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பதிவாகும் வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு மதுரையில் பதிவானது.
குறிப்பாக மதுரை விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 106 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்தியது. பகல் நேரங்களில் சாலைகளில் தோன்று கானல் நீரானது மக்களை அச்சப்பட வைத்தது. முதியோர்கள், குழந்தைகளை பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டாம் என்று கூறுமளவிற்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
கொளுத்தும் வெயிலுடன் அனல் காற்றும் வீசியதால் தேசிய நெடுஞ்சாலையிலும் வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்தது. அக்னி நட்சத்திர வெயில் காலத்தை கடந்து செல்ல வசதி படைத்த பொதுமக்கள் கோடை வாசஸ்தலங்களை நோக்கி படையெடுத்தனர். நடுத்தர வர்க்கத்தினர் அருகிலுள்ள சுற்றுலா தளங்களுக்கு சென்று ஆறுதல் படுத்திக்கொண்டனர். இளநீர், தர்பூசணி, பதநீர் உள்ளிட்டவைகளின் விற்பனையும் கணிசமாக உயர்ந்தது.
இந்தநிலையில் எதிர்பாராத வகையில் தென்மேற்கு பருவ மழை தமிழ்நாட்டில் முன்கூட்டியே தொடங்கி அக்னி நட்சத்திர வெயிலை விரட்டியடித்துள்ளது. நேற்று முன்தினம் முதல் இன்று வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி மதுரை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சாரல் மற்றும் பலத்த மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று காலை முதலே மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதுடன் மாலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
நேற்று மாலை முதல் மதுரை மாநகர் பகுதியான கோரிப்பாளையம், சிம்மக்கல், ஆரப்பாளையம், தத்தனேரி, அண்ணா பேருந்து நிலையம், தல்லாகுளம், மாட்டுத்தாவணி, பெரியார் பேருந்து நிலையம், காளவாசல் உள்ளிட்ட பகுதிகளிலும், புறநகர் பகுதிகளான மேலூர், வாடிப்பட்டி, சோழவந்தான், நாகமலை புதுக்கோட்டை, சிலைமான், திருப்பரங்குன்றம், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இந்த கனமழையால் சுற்று வட்டார கிராமத்தில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் மழை நீர் சாலைகளில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.
இதற்கிடையே மாநகரின் பல்வேறு இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்கள் முழுமையாக மூடப்படாததால் அங்கு மழை நீர் நிரம்பி குளம்போல் காணப்படுகிறது. வாகன ஒட்டிகள் சாலைகளை அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். மேலும் சுரங்கப்பாதைகள் மற்றும் சாலைகளில் உள்ள தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் தேங்கி உள்ளது. புதிதாக அந்த சாலைகளை கடந்து செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்துகளில் சிக்கி காயங்களுடன் எழுந்து செல்கிறார்கள்.
மதுரை யானைக்கல் பாலத்தின் கீழ் வைகையாற்றின் கரையோர பகுதிகளில் மழைநீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவானது. சாலையில் நடுவில் செல்வதை தவிர்த்த வாகன ஓட்டிகள் சாலையோரமாக தடுமாற்றத்துடன் சென்றனர்.






