என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோடை வெப்பம்"

    • விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் வந்து காத்திருந்தனர்.
    • திருவள்ளுவர் சிலையை பார்வையிட்ட பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து படகு மூலம் கரைக்கு திரும்பினர்.

    கன்னியாகுமரி:

    கோடை விடுமுறையையொட்டி சனிக்கிழமையான இன்று கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக கேரளா மற்றும் வட மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர். இன்று அதிகாலை சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்ததால் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

    அதேபோல விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் வந்து காத்திருந்தனர். காலை 7 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் படகுதுறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு திரும்பினர்.

    திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து கண்ணாடி கூண்டு பாலம் வழியாக ஏராளமான சுற்றுலா பயணிகள் நடந்து சென்றனர். திருவள்ளுவர் சிலையை பார்வையிட்ட பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து படகு மூலம் கரைக்கு திரும்பினர்.

    மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன், திருப்பதி வெங்கடாஜலபதி, கொட்டாரம் ராமர், சுசீந்திரம் தாணுமாலயசாமி, விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா, ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    தற்போது கோடையை மிஞ்சும் வகையில் வெயில் கொளுத்துவதால் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் கடலில் ஆனந்த குளியல் போட்டு உற்சாகம் அடைந்தனர்.

    மேலும் மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான குளிர்காற்று வீசுவதால் வெயில் வெப்பத்தை தணிக்கும் வகையில் இரவு 9 மணி வரை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • நாளை முதல் 7-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நாளை முதல் 7-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு:

    இன்று முதல் 4-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஓரிரு இடங்களில் சற்று உயரக்கூடும்.

    5-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் சற்று குறையக்கூடும்.

    இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:

    இன்று முதல் 3-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

    4 மற்றும் 5-ந்தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

    இன்று மற்றும் நாளை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் வெப்பம் சார்ந்த அசெளகரியம் ஏற்படலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    3 மற்றும் 4-ந்தேதிகளில் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் தென்தமிழக கடலோ அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • வெப்ப அலையின் தாக்கம் தமிழகத்தில் இருக்காது.
    • மே 15-ந்தேதி மத்திய வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெப்பம் வாட்டி எடுத்து வருகிறது. ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்தாலும் அது கோடை வெப்பத்தை பெரியளவில் தணிக்கவில்லை. கடலோரப் பகுதிகளிலும் தொடர்ந்து அதிக வெப்பநிலை நீடித்து வருகிறது.

    இதற்கிடையே வருகிற 18-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளரான டெல்டா ஹேமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்த மாதம் இயல்பான வெப்பம் நிலவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வெப்ப அலையின் தாக்கம் தமிழகத்தில் இருக்காது.

    தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் நிலவும் கோடை வெப்பச்சலன மழை மே 8-ந்தேதி வரை நீடிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக பகலில் வெயில் சுட்டெரித்தாலும் இரவு நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும். உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மழை நீடிக்கும். 2-வது வாரத்தில் மழைப்பொழிவு குறைந்து வெப்பநிலை உயரக்கூடும்.

    ஆனால் மே 15-ந்தேதி மத்திய வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அந்தமான் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை வருகிற 18-ந்தேதி தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இதன் காரணமாக தமிழகத்தில் மேற்கு காற்றின் ஊடுருவல் மே மத்தியில் படிப்படியாக தொடங்கும். அதனை தொடர்ந்து இந்த மாத இறுதியில் கேரளா, தமிழக பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்புள்ளது.

    ஒட்டுமொத்தமாக இந்த மாதத்தில் இயல்பான வெப்பமும், இயல்பிற்கு அதிமான கோடை மழைக்கும் வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே இந்திய மாநில மையம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கடலோரப் பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையை பொறுத்தவரையில் கடந்த சில நாட்களாகவே பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது.

    இரவு நேரங்களில் வீடுகளில் கடுமையான வெப்பமும் வாட்டி எடுக்கிறது. இதனால் குளிர்சாதன வசதி இல்லாத அறைகளில் தூங்குபவர்கள் வியர்வை மழையில் நனைய வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்பட்டு உள்ளனர். பலர் வீடுகளில் மொட்டை மாடிகளில் காற்றுக்காக இரவு நேரங்களில் தூங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டு உள்ளது.

    • சூரிய வெப்பத்தில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் காரணமாக நாய்கள் குழப்பமடையக்கூடும்.
    • வீட்டில் வளர்க்கப்படும் செல்ல நாய்களுக்கு முன்கூட்டியே ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும்.

    கோடை வெப்பம் தாங்க முடியாத அளவுக்கு கணிசமாக அதிகரித்துள்ளது.பொதுமக்களுடன் சேர்ந்து விலங்குகளும் இந்த வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. கால்நடைகள், பறவைகள் மற்றும் தெருநாய்கள் மீது கோடையின் தாக்கம் கடுமையாக உள்ளது.

    தெரு நாய்களுக்கு இது மிகவும் கடினமான நேரம். தெரு நாய்கள் வெயிலின் வெப்பத்தால் அவதிப்படுகின்றன. மனிதர்களின் உடல் சூடாகும்போது குளிர்விக்க வியர்வை சுரக்கிறது. நாய்களுக்கு அந்த நிலை இல்லை. இதனால் அவை விரைவாக வெயில் பாதிப்புக்கு ஆளாகின்றன.

    இதனால் நாய்களின் குணநலன் பாதிக்கப்பட்டு கோபம் அடைகிறது. அவற்றின் நடத்தை ஆவேசமாக மாறுகிறது. இந்த நேரத்தில் நாய்களை அணுகினாலோ அல்லது தூண்டிவிட்டாலோ ஓடி வந்து கடித்து விடும்.

    மற்ற நாட்களை விட கோடை காலத்தில் நாய் கடியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்தியாவில் உள்ள பெரிய நகரங்களில் ஒவ்வொரு மாதமும் 2,500 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வருகிறார்கள். ஆனால் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், அந்த எண்ணிக்கை 3,000-க்கும் அதிகமாக இருக்கும்.

    கோடை காலத்தில் தெரு நாய்கள் மற்றும் செல்ல நாய்கள் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க நிபுணர்கள் ஆலோசனைகள் வழங்கி உள்ளனர்.

    ஒரு நாயின் காதில் ஒரு சிறிய வெட்டு (காது வெட்டு) இருந்தால் அது குடும்பக் கட்டுப்பாட்டுடன் ரேபிஸுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று அர்த்தம். அத்தகைய நாய்களால் எந்த ஆபத்தும் இல்லை.

    உங்கள் பகுதியில் அதிக அளவில் தெருநாய்கள் இருந்தால் உடனடியாக மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் நாய்களை பிடித்து குடும்பக் கட்டுப்பாட்டுடன் ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசிகளையும் வழங்குகிறார்கள்.

    குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டால், நாய்களின் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் உற்பத்தி குறைந்து தங்கள் ஆக்ரோஷமான தன்மையை இழந்து விடும். அவை மனிதர்களைத் தாக்குவதில்லை. நீங்கள் நடந்து செல்லும் போது நாய்களைக் கண்டால், அவற்றின் கண்களைப் பார்க்கவோ அல்லது அச்சுறுத்தவோ கூடாது. நாம் அவைகளை புறக்கணித்தால், நாய்கள் பெரும்பாலும் கண்டுகொள்ளாமல் விட்டு விடும்.

    99 சதவீத நாய்கள் நன்றி உள்ளவை. அதன் மீது கொஞ்சம் பரிதாபப்பட்டாலும் உண்மையுள்ளவர்களாகவே மாறிவிடும். உடலில் ஏற்படும் மாற்றங்களால் சில சமயங்களில் ஆக்ரோஷமாக நடந்து கொள்கின்றன. இது போன்ற நேரங்களில் கவனமாக இருங்கள்.

    சூரிய வெப்பத்தில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் காரணமாக நாய்கள் குழப்பமடையக்கூடும். நீங்கள் அவற்றை நெருங்கும்போது அவை தாக்குகின்றன.

    குழந்தைகளின் கையில் ஏதாவது உணவு இருந்தால் அதைப் பறிப்பதற்காக அவை தாக்கும். ஒரு நாய் உங்களைக் கடித்தால், அதைப் புறக்கணிக்காதீர்கள் காயத்தை உடனடியாக சோப்பு போட்டு கழுவவும். காயத்தின் மீது தண்ணீர் விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது ரேபிஸை ஏற்படுத்தும் வைரஸை நீக்கும்.

    வீட்டில் வளர்க்கப்படும் செல்ல நாய்களுக்கு முன்கூட்டியே ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும். அவை கடித்தால் கூட நீங்கள் ஒரு மருத்துவரை அணுக வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • எஞ்சின் கூல் அண்ட் ஆயில், பிரேக், ஏசி ஆகியவற்றை சரி பார்க்க வேண்டும்.
    • நியூட்ரலில் வாகனங்களை இயக்கக் கூடாது என தெரிவித்துள்ளனர்.

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க சொந்த வாகனங்களில் வருபவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஷர்ஷவார்த்தன் ராஜு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    கோடை வெப்பம் காரணமாக சமீபத்தில் திருப்பதி மலை பாதையில் வந்த 2 கார்கள் தீப்பிடித்து எரிந்தன.

    இதுகுறித்து நிபுணர்கள் அளித்த அறிக்கை படி, பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 500 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து வரும் வாகனங்கள் அதிகம் வெப்பம் அடைகிறது. மலைப்பாதையில் பயணம் செய்வதற்கு முன் 30 நிமிடங்கள் காரை நிறுத்தி அணைத்து வைக்க வேண்டும்.

    எஞ்சின் கூல் அண்ட் ஆயில், பிரேக், ஏசி ஆகியவற்றை சரி பார்க்க வேண்டும். மலைப்பாதையில் வாகனங்களில் செல்லும் போது ஏசியை பயன்படுத்தக் கூடாது. அடிக்கடி பிரேக் பிடிப்பதை தவிர்க்க வேண்டும். நியூட்ரலில் வாகனங்களை இயக்கக் கூடாது என தெரிவித்துள்ளனர்.

    • வேலூர், கடலூர், ஈரோடு, மதுரை, சேலம், புதுச்சேரி, திருத்தணி உள்ளிட்ட இடங்களில் வெப்பம் சதம்.
    • வேலூரில் காலை முதல் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் சுட்டெரித்த நிலையில் காற்றுடன் கூடிய கனமழை.

    தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. அதன்படி, வேலூர், கடலூர், ஈரோடு, மதுரை, சேலம், புதுச்சேரி, திருத்தணி உள்ளிட்ட இடங்களில் வெப்பம் 100 டிகிரியை தாண்டியுள்ளது.

    தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வேலூரில் 104.18 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. கடலூரில் 102.56 டிகிரி, ஈரோட்டில் 101.84 டிகிரி, மதுரையில் 100.4 டிகிரி, சேலம் மற்றும் புதுச்சேரியில் தலா 100.4 டிகிரி, திருத்தணியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

    சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மீனம்பாக்கம் மற்றும் நுங்கம்பாக்கத்தில் தலா 103 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

    வேலூரில் காலை முதல் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் சுட்டெரித்த நிலையில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    • சம்பல்பூரில் கடந்த 6 மற்றும் 7-ம் தேதிகளில் 104 டிகிரி அளவுக்கு வெயில் சுட்டெரித்தது.
    • நேற்று முன்தினம் அங்கு அதிகபட்சமாக 107 டிகிரி வரை வெப்பம் பதிவானது.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக, அங்குள்ள சம்பல்பூர் மாவட்டத்தில் கடந்த 6 மற்றும் 7-ம் தேதிகளில் 104 டிகிரி அளவுக்கு வெயில் சுட்டெரித்தது. நேற்று முன்தினம் அங்கு அதிகபட்சமாக 107 டிகிரி வரை பதிவானது என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்தது.

    எனவே சம்பல்பூர் மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்த மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.

    இந்நிலையில், அரசு அலுவலர்களின் நலனை கருத்தில் கொண்டு சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் அனைத்தும் வரும் ஜூன் மாதம் 15-ம் தேதி வரை காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை (வழக்கமான அலுவலக நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை) உணவு இடைவேளையின்றி செயல்படும் என அந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

    • நடப்பு ஆண்டு தொடங்கியதும் குளிர் பருவத்தில் வழக்கமான அளவு மழை பெய்யவில்லை.
    • கடந்த சில நாட்களாக திடீரென வெப்பக்காற்றுடன் வெயில் சுட்டெரிக்க துவங்கியது.

    திருப்பூர் :

    நடப்பு ஆண்டு தொடங்கியதும் குளிர் பருவத்தில் (ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம்) வழக்கமான அளவு மழை பெய்யவில்லை.தொடர்ந்து குளிரின் தாக்கம், இம்மாதம் 2வது வாரம் வரை நீடித்தது. குளிர்ந்த காலநிலை மாறும் முன்னதாக கடந்த சில நாட்களாக திடீரென வெப்பக்காற்றுடன் வெயில் சுட்டெரிக்க துவங்கியது. காலை 10 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை வெயில் கடுமையாக இருக்கிறது.

    குறிப்பாக உச்சி நேரத்தில் ரோட்டில் வெப்பக்காற்று வீசுவதால் மோட்டார் சைக்கிளில் சென்று வருவோர் கடும் சோதனைக்கு ஆளாகின்றனர். ரோட்டில் சுற்றித்திரியும் ஆடு, மாடுகளும், வெளியே தலைகாட்டாமல் நிழல் உள்ள இடங்களில் தஞ்சமடைந்து விடுகின்றன.

    வெயில் தாக்கம் துவங்கியதால் வீடுகளின் மொட்டை மாடியில் பறவைகளுக்கு தண்ணீர் வைப்பதும் அதிகரித்துள்ளது. தன்னார்வ அமைப்புகள் நீர்மோர் பந்தல் திறந்து மக்களின் தாகம் தணிக்கும் சேவையை தொடங்கி விட்டன. இவர்கள் தவிர துணிக்கடைகள் மற்றும் நிறுவனங்கள் சார்பிலும் குடிநீர் அல்லது நீர்மோர் வழங்கி வருகின்றனர்.

    கோடை பருவம், மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதம் வரை சுட்டெரிக்கும். ஆரம்பமே இப்படி என்றால் அக்னி நட்சத்திர வெயில் காலம் எப்படி இருக்குமோ என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோடை மழை கருணை காட்டினால் மட்டுமே கொளுத்தும் கோடை வெப்பம் தணிய வாய்ப்புள்ளது.

    • விவசாய பிரிவில் கூடுதலாக வழங்கப்பட்ட 1.50 லட்சம் மின் இணைப்புகளால் அந்தப் பிரிவில் மட்டும் கூடுதலாக 727 மெகாவாட் அதிகரித்து உள்ளது.
    • முந்தைய உச்சபட்ச நுகர்வு மார்ச் 16-ந் தேதி 18 ஆயிரத்து 53 மெகாவாட்டாக இருந்தது.

    சென்னை:

    தமிழகத்தில் மின் நுகர்வோர்கள் 2.67 கோடி பேர் உள்ளனர். தினசரி மின் தேவை சராசரியாக 15 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இந்த அளவு, கோடைகாலத்தில் 16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவுக்கு அதிகரித்தும், குளிர்காலத்தில் 12 ஆயிரம் மெகாவாட் என்ற அளவுக்கு குறைந்தும் காணப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான கோடை காலம் தொடங்கி விட்டதால் மின்சாதன பொருட்களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக, தினசரி மின் தேவை 16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவைத்தாண்டி செல்கிறது.

    மேலும், விவசாய பிரிவில் கூடுதலாக வழங்கப்பட்ட 1.50 லட்சம் மின் இணைப்புகளால் அந்தப் பிரிவில் மட்டும் கூடுதலாக 727 மெகாவாட் அதிகரித்து உள்ளது.

    இத்தகைய காரணங்களால் கடந்த மாதம் 4-ந் தேதி தினசரி மின் தேவை முதல் முறையாக 17,584 மெகாவாட்டாக அதிகரித்தது. இதற்கு முன் கடந்த ஆண்டு ஏப்.29-ந் தேதி 17,563 மெகாவாட் என்ற சாதனை அளவாக இருந்தது.

    விவசாயத்துக்கான 18 மணி நேர மின்விநியோகம் மற்றும் பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் தொடங்கி உள்ளதால் மின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இதனால் முன் எப்போதும் இல்லாத அளவாக மார்ச் 15-ந் தேதி தினசரி மின்தேவை 17 ஆயிரத்து 647 மெகாவாட்டாக அதிகரித்தது.

    ஆனால் மார்ச் 17-ந் தேதி தினசரி மின்நுகர்வு 18 ஆயிரத்து 53 மெகாவாட் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டி தனது முந்தைய நாள் சாதனையை முறியடித்தது.

    இந்த நிலையில் தினசரி மின் நுகர்வு நேற்று முன்தினம் 18 ஆயிரத்து 252 மெகாவாட் அளவு அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதுகுறித்து மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    வியாழக்கிழமை (நேற்று முன்தினம்) தமிழ்நாட்டின் மின் நுகர்வு 18 ஆயிரத்து 252 மெகாவாட் அளவை எட்டியுள்ளது.

    இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது. இதற்கு முந்தைய உச்சபட்ச நுகர்வு மார்ச் 16-ந் தேதி 18 ஆயிரத்து 53 மெகாவாட்டாக இருந்தது.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    • தர்பூசணி, கேரட், வாழைப்பழம், அன்னாசி பழம், இளநீர் உள்ளிட்ட வற்றையும் எடுத்துக் கொள்ளலாம்.
    • நீர்ச்சத்து அதிகம் உள்ள பூசணிக்காய், சுரைக்காய் அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.

    தாராபுரம் :

    வாட்டி வதைக்கும் வெயிலால் தினமும் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இது குறித்து சிறுநீரக மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது:- வெய்யில் காலத்தில், சிறுநீரக கற்கள் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். தண்ணீர் குறைந்தளவு குடிப்பதால், உடலில் நீர் வறட்சி ஏற்படுவதே இதற்கு காரணம்.அனைத்து காலங்களிலும், சிறுநீரின் நிறம் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். மிகவும் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால், நீரிழப்பு ஏற்பட்டுள்ளது என அர்த்தம்.ஆரஞ்சு உள்ளிட்ட சிட்ரிக் ஆசிட் அதிகளவு உள்ள பழங்களை உட்கொள்ளலாம். ஜூஸ் ஆக குடிக்காமல், நேரடியாக பழங்களாக உட்கொள்வது நல்லது.

    தர்பூசணி, கேரட், வாழைப்பழம், அன்னாசி பழம், இளநீர் உள்ளிட்ட வற்றையும் எடுத்துக் கொள்ளலாம். எலுமிச்சை ஜூஸ் குடிக்கும் போது, அதிக உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டி இருக்கும். எனவே அதைத் தவிர்க்கலாம்.

    மாமிச உணவுகளை வாரம் ஒரு முறை உட்கொள்ளலாம். கோழி இறைச்சி, மீன் உட்கொ ள்ளலாம். அனைத்து விதமான பேக்கரி உணவு, உப்பு அதிகம் இருக்கும் சிப்ஸ், ஊறுகாய், அப்பளம் தவிர்க்க வேண்டும்.

    சிறுநீரக கற்கள் ஏற்படுத்தும் ஒரு சில கீரைகள், முட்டைக்கோஸ், காலிபிளவர் ஆகியவற்றை வாரம் ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம். உலர் பழங்களை குறைவாக எடுக்க வேண்டும்.பிளாக் டீ, காபி, கிரீன் டீ, ஆகியவற்றை தவிர்க்கலாம். சுடு தண்ணீர், குளிர்ந்த நீர் எடுத்துக் கொள்வதற்குபதில், சாதாரணதண்ணீர் குடிப்பது சிறந்தது.கார்பன், செயற்கை நிறமிகள் நிறைந்த குளிர்பா னங்களை, முற்றி லும் தவிர்க்க வே ண்டும். முக்கி யமாக மது அருந்துவது கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.உணவியல் நிபுணர்(டயட்டி சியன்) கவிதா கூறியதாவது:

    வெய்யில் காலத்தில் நீர்ச்சத்து அதிகம் உள்ள பூசணிக்காய், சுரைக்காய் அதிகம்எடுத்துக் கொள்ளலாம். உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள, தர்பூசணி, வெள்ளரிக்காய், பழங்கள், கம்மங்கூழ், கேப்பைக்கூழ் உட்கொள்ளலாம். இனிப்பு வகைகள், அதிக காரம் உள்ள உணவு, எண்ணெயில் பொறித்த உணவு, துரித உணவு, உப்பு அதிகம் உள்ள உணவு, காபி, டீ, செயற்கை குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். கம்மங்கூழ், கேப்பைக்கூழ் ஆகியவற்றை, 200 மி.லி., அளவு எடுக்க வேண்டும். நீர் மோர் குடிக்க லாம். இவையனைத்துக்கும் மேல், தண்ணீர் குடிப்பதே சிறந்தது.செயற்கை குளிர்பானங்களில், சர்க்கரை அதிகம் இருப்ப தால், அவற்றால் எந்த பயனும் இல்லை. சர்க்கரை நோயாளிகள், நீர்ச்சத்து காய்கறி எடுத்துக் கொள்ள லாம்.இவ்வாறு அவர் கூறினார். 

    • தமிழ்நாட்டில் இயல்பு நிலையை விட 2 முதல் 3 டிகிரி கூடுதல் வெப்பம் பதிவாகியுள்ளது.
    • கோடை வெப்பத்தை எதிர்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் 19.5.2023 நாளிட்ட அறிவிக்கையில், தமிழ்நாட்டில் இயல்பு நிலையை விட 2 முதல் 3 டிகிரி கூடுதல் வெப்பம் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக வேலூர் பகுதியில் 41.8 டிகிரி சென்டிகிரேடும், கரூர்-பரமத்தி பகுதியில் 41.5 டிகிரி சென்டிகிரேடும் வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு இயல்பை விட 2 முதல் 3 டிகிரி கூடுதல் வெப்பம் நிலவக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் வெப்ப நிலை அதிகரித்து வரும் நிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் இது தொடர்பாக 15.5.2023 அன்று செய்தி வெளியீடு மூலமாக பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.

    திறந்த இடங்களில் பணிபுரியும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்கள், வேளாண் தொழிலாளர்கள், கட்டுமானப் பணியாளர்கள், சாலைப் பணியாளர்கள் தங்களது பணியை காலை முன்கூட்டியே தொடங்கி, வெப்ப அலையின் தாக்கம் அதிகரிக்கும் முன்னர் முடித்திடும் வகையில் உரிய ஏற்பாடுகளை தொடர்புடைய இப்பணியாளர்களுக்கு போதுமான குடிநீர், முதலுதவி வசதி செய்வதுடன், ஓ.ஆர்.எஸ். செய்ய இருப்பு, நிழற்கூடங்கள் மற்றும் முதலுதவி செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களான பேருந்து நிலையம், சந்தைகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட இடங்களில் போதுமான குடிநீர் வசதி, இளைப்பாறுவதற்கான நிழற்கூடங்கள் மற்றும் அவசர மருத்துவ வசதிகளுக்கான ஏற்பாடுகளை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்களும் மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    தொழிற்சாலைகளில் அமர்ந்து வேலை செய்யும் வசதி மற்றும் கூடுதல் வெப்பம் உற்பத்தி ஆகும் தொழிற்கூடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போதுமான ஓய்வு வழங்கவும், அவசர உதவிக்காக அருகில் உள்ள அரசு மற்றும் கால தனியார் மருத்துவமனைகளுடன் ஆம்புலன்ஸ் வசதியுடன் கூடிய சேவைக்கான முன்னேற்பாடுகளை உறுதி செய்யவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    பொதுமக்களுக்கு அரசு மருத்துவமனைகளில், போதுமான அளவு ஓ.ஆர்.எஸ். இருப்பு வைப்பதுடன், வெப்ப அலையின் தாக்கத்திற்கு உள்ளாகும் நபர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க தேவையான மருந்து இருப்பு வைக்கவும், கால்நடைகளுக்கு தேவையான குடிநீர், நிழற்கூடங்கள், தீவனம் மற்றும் மருத்துவ வசதி செய்யவும், அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள், வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் ஆகியோரை வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க போதுமான விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் தொலைக்காட்சி, செய்தித்தாள், சமூக ஊடகங்கள், முகாம்கள், துண்டு பிரசுரங்கள், பதாகைகள் மூலமாக மாவட்ட ஆட்சியர்கள், தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசுத் துறைகள் நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    எனவே, தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மூலமாகவும் விழிப்புணர்வில் அரசு தெரிவித்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலமாகவும், பொதுமக்கள், திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்ட தூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • கடலோர பகுதிகளில் வீசும் கடல் காற்றால் சென்னை போன்ற கடலோர மாவட்டங்களில் வெப்பம் குறைய வாய்ப்பு உள்ளது.
    • அடுத்த வாரத்தில் மே 26-ந்தேதிக்கு பிறகு தென்மேற்கு பருவமழை தொடங்கும் காலம் என்பதால் மேற்கு திசை கடல் காற்று குறையும்.

    சென்னை:

    தமிழகத்தில் இந்த ஆண்டு கோடைவெயில் வாட்டி எடுத்து வருகிறது. குறிப்பாக சென்னையில் வெயிலின் தாக்கம் பல மடங்கு அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பகல் நேரங்களில் வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு வெப்பம் அதிகமாகவே உள்ளது.

    இனிவரும் நாட்களிலும் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்றே வானிலை மையம் கணித்துள்ளது. இந்த நிலையில் வருகிற 26-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஜூன்) 4-ந்தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை நிபுணர் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கதேசத்தை தாக்கிய புயலின்போது 240 கி.மீ வேகத்தில் கடுமையான காற்று வீசியது. இது தமிழகத்துக்கு வர வேண்டிய மேகங்களை இழுத்துச்சென்றுள்ளது. இதன் காரணமாகவே இயல்பை விட அதிக வெயில் காணப்படுகிறது. இதனால் தான் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது.

    கடலோர பகுதிகளில் வீசும் கடல் காற்றால் சென்னை போன்ற கடலோர மாவட்டங்களில் வெப்பம் குறைய வாய்ப்பு உள்ளது. உதாரணத்துக்கு சென்னையில் பகல் 11 மணிக்கு கடல் காற்று வீசினால் அது நகர பகுதிகளில் வெப்பத்தின் தாக்கத்தை பகல் நேரத்தில் ஓரளவுக்கு குறைக்கலாம். ஆனால் புறநகர் பகுதிகளை இந்த காற்று சென்றடைய மாலையில் ஆகி விடும். இதனால் சென்னை புறநகர் பகுதிகளில் வெயிலின் தாக்கம் பகல் நேரங்களில் அதிகமாகவே இருக்க வாய்ப்பு உள்ளது.

    அடுத்த வாரத்தில் மே 26-ந்தேதிக்கு பிறகு தென்மேற்கு பருவமழை தொடங்கும் காலம் என்பதால் மேற்கு திசை கடல் காற்று குறையும். அப்போது தரைக்காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த வெயில் ஜூன் மாதம் 4-ந்தேதி வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது என்று தனியார் வானிலை நிபுணர் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார்.

    ×