என் மலர்
நீங்கள் தேடியது "Southewest Monsoon"
- பருவமழையை கையாள தயாராக இருக்குமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- தொடர் மழை காரணமாக கேரளாவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
கூடலூர்:
கேரள மாநிலம் தேக்கடி பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஏரியில் படகு சவாரி செய்தவாறு வன விலங்குகளை கண்டு ரசிக்கலாம் என்பதால் இதற்கு அதிகமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளது. 16 வருடங்களுக்கு பின் முன்கூட்டியே 8 நாட்களுக்கு முன்பு பருவமழை தொடங்கியுள்ளதால் மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது.
5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி, எர்ணாகுளம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி 3 நாட்கள் தேக்கடி படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மண் சரிவு ஏற்படும் இடங்கள், மரங்கள் முறிந்து விழும் பகுதி ஆகியவற்றை கண்காணித்து அங்கும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் பருவமழையை கையாள தயாராக இருக்குமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக கேரளாவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 585 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து 114.90 அடியாக உள்ளது.
1710 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. வைகை அணை நீர் மட்டம் 52.85 அடியாக உள்ளது. 6 கன அடி நீர் வருகிற நிலையில் 72 கன அடி நீர் மதுரை மாநகர குடிநீருக்காக திறக்கப்படுகிறது. அணையில் 2389 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 39.40 அடியாக உள்ளது. 15 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 94.46 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 43.10 அடியாக உள்ளது. 3 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை.
அரண்மனைப்புதூர் 2, வீரபாண்டி 13.8, பெரியகுளம் 4.6, மஞ்சளாறு 4, சோத்துப்பாறை 2, வைகை அணை 1.4, போடி 3.2, உத்தமபாளையம் 4.6, கூடலூர் 2, பெரியாறு அணை 27.6, தேக்கடி 21.4, சண்முகாநதி 1.6 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
- வெப்ப அலையின் தாக்கம் தமிழகத்தில் இருக்காது.
- மே 15-ந்தேதி மத்திய வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெப்பம் வாட்டி எடுத்து வருகிறது. ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்தாலும் அது கோடை வெப்பத்தை பெரியளவில் தணிக்கவில்லை. கடலோரப் பகுதிகளிலும் தொடர்ந்து அதிக வெப்பநிலை நீடித்து வருகிறது.
இதற்கிடையே வருகிற 18-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளரான டெல்டா ஹேமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்த மாதம் இயல்பான வெப்பம் நிலவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வெப்ப அலையின் தாக்கம் தமிழகத்தில் இருக்காது.
தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் நிலவும் கோடை வெப்பச்சலன மழை மே 8-ந்தேதி வரை நீடிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக பகலில் வெயில் சுட்டெரித்தாலும் இரவு நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும். உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மழை நீடிக்கும். 2-வது வாரத்தில் மழைப்பொழிவு குறைந்து வெப்பநிலை உயரக்கூடும்.
ஆனால் மே 15-ந்தேதி மத்திய வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அந்தமான் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை வருகிற 18-ந்தேதி தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் மேற்கு காற்றின் ஊடுருவல் மே மத்தியில் படிப்படியாக தொடங்கும். அதனை தொடர்ந்து இந்த மாத இறுதியில் கேரளா, தமிழக பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்புள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்த மாதத்தில் இயல்பான வெப்பமும், இயல்பிற்கு அதிமான கோடை மழைக்கும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இந்திய மாநில மையம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கடலோரப் பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் கடந்த சில நாட்களாகவே பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது.
இரவு நேரங்களில் வீடுகளில் கடுமையான வெப்பமும் வாட்டி எடுக்கிறது. இதனால் குளிர்சாதன வசதி இல்லாத அறைகளில் தூங்குபவர்கள் வியர்வை மழையில் நனைய வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்பட்டு உள்ளனர். பலர் வீடுகளில் மொட்டை மாடிகளில் காற்றுக்காக இரவு நேரங்களில் தூங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டு உள்ளது.
- சமீப கால ஆண்டுகளில் மாநிலத்தில் பெய்ததை போன்று மிக வலுவான மழையாக இருக்கும் என்றும், ஜூன் மாதத்தில் இயல்பை விட அதிக மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம், கொச்சி, ஆலப்புழா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டியதால் தாழ்வான பகுதிகளிலும், பிரதான சாலைகளிலும் மழைநீர் தேங்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்வதால் அங்கு கோடை வெப்பம் தணிந்து குளர்ச்சியான தட்பவெப்பநிலை நிலவி வருகிறது. மாநிலத்தில் கோடைமழை வெளுத்துவாங்கி வரும் நிலையில், வருகிற 31-ந் தேதிக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
கேரளாவில் ஒருசில மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பத்தினம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பத்தினம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா, திருச்சூர், கொல்லம் ஆகிய மாவட்டங்களில் நாளை(29-ந்தேதி) மற்றும் நாளை மறுதினம் ஆகிய 2 நாட்களும், இடுக்கியில் 31-ந்தேதியும் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் வருகிற 31-ந்தேதி முதல் கேரள மாநிலத்தில் அதிகனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீப கால ஆண்டுகளில் மாநிலத்தில் பெய்ததை போன்று மிக வலுவான மழையாக இருக்கும் என்றும், ஜூன் மாதத்தில் இயல்பை விட அதிக மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதன் காரணமாக அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
- 15 விமானங்கள் தாமதமானதல் பயணிகள் அவதி அடைந்தனர்.
- வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் நள்ளிரவில் மழை பெய்தது.
சென்னை:
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் நேற்று முதல் வருகிற 23-ந்தேதி முதல் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பலத்த மழை பெய்தது. ராயப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், மேற்கு மாம்பலம், பெசன்ட் நகர், அடையாறு, மந்தைவெளி, பட்டினப்பாக்கம், கிண்டி, வேளச்சேரி, மடிப்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னல் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
இதே போல் வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் நள்ளிரவில் மழை பெய்தது.
பகல் முழுவதும் வெப்பம் வாட்டி வதைத்த நிலையில், நள்ளிரவில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதனிடையே சென்னையில் நள்ளிரவில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. 15 விமானங்கள் தாமதமானதல் பயணிகள் அவதி அடைந்தனர்.






