என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கோடை வெப்பத்தால் விரட்டி கடிக்கும் தெரு நாய்கள்- நிபுணர்கள் எச்சரிக்கை
    X

    கோடை வெப்பத்தால் விரட்டி கடிக்கும் தெரு நாய்கள்- நிபுணர்கள் எச்சரிக்கை

    • சூரிய வெப்பத்தில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் காரணமாக நாய்கள் குழப்பமடையக்கூடும்.
    • வீட்டில் வளர்க்கப்படும் செல்ல நாய்களுக்கு முன்கூட்டியே ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும்.

    கோடை வெப்பம் தாங்க முடியாத அளவுக்கு கணிசமாக அதிகரித்துள்ளது.பொதுமக்களுடன் சேர்ந்து விலங்குகளும் இந்த வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. கால்நடைகள், பறவைகள் மற்றும் தெருநாய்கள் மீது கோடையின் தாக்கம் கடுமையாக உள்ளது.

    தெரு நாய்களுக்கு இது மிகவும் கடினமான நேரம். தெரு நாய்கள் வெயிலின் வெப்பத்தால் அவதிப்படுகின்றன. மனிதர்களின் உடல் சூடாகும்போது குளிர்விக்க வியர்வை சுரக்கிறது. நாய்களுக்கு அந்த நிலை இல்லை. இதனால் அவை விரைவாக வெயில் பாதிப்புக்கு ஆளாகின்றன.

    இதனால் நாய்களின் குணநலன் பாதிக்கப்பட்டு கோபம் அடைகிறது. அவற்றின் நடத்தை ஆவேசமாக மாறுகிறது. இந்த நேரத்தில் நாய்களை அணுகினாலோ அல்லது தூண்டிவிட்டாலோ ஓடி வந்து கடித்து விடும்.

    மற்ற நாட்களை விட கோடை காலத்தில் நாய் கடியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்தியாவில் உள்ள பெரிய நகரங்களில் ஒவ்வொரு மாதமும் 2,500 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வருகிறார்கள். ஆனால் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், அந்த எண்ணிக்கை 3,000-க்கும் அதிகமாக இருக்கும்.

    கோடை காலத்தில் தெரு நாய்கள் மற்றும் செல்ல நாய்கள் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க நிபுணர்கள் ஆலோசனைகள் வழங்கி உள்ளனர்.

    ஒரு நாயின் காதில் ஒரு சிறிய வெட்டு (காது வெட்டு) இருந்தால் அது குடும்பக் கட்டுப்பாட்டுடன் ரேபிஸுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று அர்த்தம். அத்தகைய நாய்களால் எந்த ஆபத்தும் இல்லை.

    உங்கள் பகுதியில் அதிக அளவில் தெருநாய்கள் இருந்தால் உடனடியாக மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் நாய்களை பிடித்து குடும்பக் கட்டுப்பாட்டுடன் ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசிகளையும் வழங்குகிறார்கள்.

    குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டால், நாய்களின் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் உற்பத்தி குறைந்து தங்கள் ஆக்ரோஷமான தன்மையை இழந்து விடும். அவை மனிதர்களைத் தாக்குவதில்லை. நீங்கள் நடந்து செல்லும் போது நாய்களைக் கண்டால், அவற்றின் கண்களைப் பார்க்கவோ அல்லது அச்சுறுத்தவோ கூடாது. நாம் அவைகளை புறக்கணித்தால், நாய்கள் பெரும்பாலும் கண்டுகொள்ளாமல் விட்டு விடும்.

    99 சதவீத நாய்கள் நன்றி உள்ளவை. அதன் மீது கொஞ்சம் பரிதாபப்பட்டாலும் உண்மையுள்ளவர்களாகவே மாறிவிடும். உடலில் ஏற்படும் மாற்றங்களால் சில சமயங்களில் ஆக்ரோஷமாக நடந்து கொள்கின்றன. இது போன்ற நேரங்களில் கவனமாக இருங்கள்.

    சூரிய வெப்பத்தில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் காரணமாக நாய்கள் குழப்பமடையக்கூடும். நீங்கள் அவற்றை நெருங்கும்போது அவை தாக்குகின்றன.

    குழந்தைகளின் கையில் ஏதாவது உணவு இருந்தால் அதைப் பறிப்பதற்காக அவை தாக்கும். ஒரு நாய் உங்களைக் கடித்தால், அதைப் புறக்கணிக்காதீர்கள் காயத்தை உடனடியாக சோப்பு போட்டு கழுவவும். காயத்தின் மீது தண்ணீர் விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது ரேபிஸை ஏற்படுத்தும் வைரஸை நீக்கும்.

    வீட்டில் வளர்க்கப்படும் செல்ல நாய்களுக்கு முன்கூட்டியே ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும். அவை கடித்தால் கூட நீங்கள் ஒரு மருத்துவரை அணுக வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×