என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வாட்டி வதைக்கும் வெயில்... அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம்
- 25 நாட்களுக்கு அக்னி நட்சத்திரம் வாட்டி வதைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பகல் பொழுதில் வெளியே நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.
சென்னை:
'அக்னி நட்சத்திரம்' என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது. பொதுவாக கத்திரி வெயிலின்போது வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்தே 100 டிகிரி வெப்பநிலை பதிவாகி வருகிறது. இன்று தொடங்கும் கத்திரி வெயிலின் தாக்கம் வருகிற 28-ந்தேதி வரை நீடிக்கும். அதாவது, 25 நாட்களுக்கு அக்னி நட்சத்திரம் வாட்டி வதைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு அக்னி நட்சத்திர காலத்தில் கரூரில் 111 டிகிரி வெயில் பதிவானதுதான் அந்த ஆண்டின் உச்சபட்சமாக பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அந்த அளவுக்கு வெயில் பதிவாகாது என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து இயற்கை மருத்துவர்கள் கூறும்போது, 'அக்னி நட்சத்திரம் முடியும் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், மக்கள் வீட்டை விட்டு தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கலாம். குறிப்பாக, பகல் பொழுதில் வெளியே நடமாடுவதை தவிர்க்க வேண்டும். கோடைகாலம் வந்தாலே அதிகளவு தண்ணீர் குடிப்பதுடன், ஐஸ் சர்பத், பழங்கள், மோர் சாதம் என குளிர்ந்த ஆகாரங்களை அதிகம் சாப்பிட வேண்டும்' என்கின்றனர்.
இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் கூறும்போது, 'தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நாளை (திங்கட்கிழமை) ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வருகிற 6-ந்தேதி இதேபோன்று மிதமான மழை பெய்யக்கூடும்.
கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, மயிலாடுதுறை, நாகபட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வருகிற 7, 8-ந்தேதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல், இன்று அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது' என்றார்.






