என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோயம்பேடு மார்க்கெட்"

    • தோரணம் உள்ளிட்ட பொருட்கள் குடியாத்தம் பகுதியிலிருந்து வரும் விவசாயிகளால் விற்பனை செய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.
    • சிறப்புச் சந்தைக்கு தேவையான வசதிகளான தெருவிளக்கு, குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமானது, அங்காடி நிர்வாகக் குழுவின் மூலமாக நடப்பாண்டிலும் பொங்கல் சிறப்பு சந்தையை இன்று முதல் 17-ந்தேதி (சனிக்கிழமை) வரை செயல்படுத்த திட்டமிட்டிருப்பதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

    அதன்படி, சிறப்பு சந்தைக்கான கரும்பு விழுப்புரம், திண்டிவனம், கடலூர், மதுரை மற்றும் சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும், மஞ்சள் மற்றும் இஞ்சி கொத்து ஆகியவை ஈரோடு, சேலம் மற்றும் ஆந்திராவில் இருந்தும் வரவழைக்கப்படுகிறது. தோரணம் உள்ளிட்ட பொருட்கள் குடியாத்தம் பகுதியிலிருந்து வரும் விவசாயிகளால் விற்பனை செய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.

    இச்சிறப்புச் சந்தைக்கு தேவையான வசதிகளான தெருவிளக்கு, குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலின்றி வியாபாரம் மேற்கொள்ளும் வகையில் போலீசார் மூலம் நடவடிக்கை எடுப்பதோடு, அங்காடி நிர்வாகக் குழு ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர்களும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என அங்காடி நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.

    • விவசாய தொழிலாளர்களும் விடுமுறை அறிவித்து உள்ளனர்.
    • மளிகை, பழம் மற்றும் பூ மார்க்கெட் வழக்கம் போல செயல்படும்.

    போரூர்:

    தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் தங்கி வேலை பார்த்து வரும் வெளி மாவட்டத்தை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல உள்ளனர். இதேபோல் விவசாய தொழிலாளர்களும் விடுமுறை அறிவித்து உள்ளனர்.

    இதையடுத்து கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு வருகிற 21-ந் தேதி விடுமுறை விடப்படுவதாக காய்கறி மொத்த வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர். 22-ந் தேதி அதிகாலை முதல் வழக்கம் போல் சந்தை செயல்படும். அதேநேரம் மளிகை, பழம் மற்றும் பூ மார்க்கெட் வழக்கம் போல செயல்படும் என்று அதன் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • மழையால் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • சில்லறை விற்பனை கடைகளில் தக்காளி கிலோ ரூ.70 முதல் 80க்கு விற்பனையாகிறது.

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு பல மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கோயம்பேட்டிற்கு கொண்டு வரப்படும் காய்கறிகளை வியாபாரிகள் கொள்முதல் செய்து சில்லரை விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில், கடந்த சில தினங்களாகவே தக்காளி விலை உயர்ந்து காணப்படுகிறது. அந்த வகையில், இன்றும் கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை உயர்ந்துள்ளது. ஒரே நாளில் தக்காளியின் விலை மேலும் ரூ.10 உயர்ந்து ரூ.60க்கு விற்பனையாகிறது. சில்லறை விற்பனை கடைகளில் தக்காளி கிலோ ரூ.70 முதல் 80க்கு விற்பனையாகிறது.

    ஊட்டி உள்ளிட்ட மலை பகுதிகளில் பெய்து வரும் மழையால் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

    • கடந்த சில வாரங்களாக தக்காளி வரத்து குறைந்து வருகிறது.
    • தமிழக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கடந்த மாதம் முதலே உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி, 50 ரூபாய் வரை உயர்ந்தது.

    தக்காளி விலை உயர்வு தொடர்பாக கோயம்பேடு சந்தை காய்கறி வியாபாரிகளிடம் கேட்டபோது, "கடந்த சில வாரங்களாக தக்காளி வரத்து குறைந்து வருகிறது. தமிழக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

    இந்நிலையில், வரத்து குறைவு காரணமாக சென்னையில் ஒரே நாளில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.45-க்கு விற்பனையாகிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனையாகிறது.

    மொத்த விற்பனை:

    ஒரு கிலோ தக்காளி விலை: ரூ. 45

    முந்தைய விலையுடன் ஒப்பிடுகையில் உயர்வு: ரூ. 10

    சில்லறை விற்பனை:

    ஒரு கிலோ தக்காளி விலை: ரூ. 60

    விலை உயர்வுக்குக் காரணம்: தக்காளி வரத்து குறைவு

    தக்காளி விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    • வணிகர் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் உள்ள கடைகள் அனைத்துக்கும் விடுமுறை விடப்பட்டு வருகிறது.
    • கோயம்பேடு பூ மார்க்கெட் மற்றும் பழ மார்க்கெட்டில் உள்ள ஒரு சில சங்கங்கள் வணிகர் தினத்தன்று விடுமுறை அளிக்கவில்லை.

    சென்னை:

    தமிழகத்தில் ஆண்டுதோறும் மே 5-ந்தேதி வணிகர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அன்று வியாபாரிகள் கடைகளை மூடிவிட்டு பல்வேறு இடங்களில் நடக்கும் வணிகர் தின மாநாடுகளில் பங்கேற்பது வழக்கம்.

    வணிகர் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் உள்ள கடைகள் அனைத்துக்கும் விடுமுறை விடப்பட்டு வருகிறது.

    அதன்படி வருகிற 5-ந்தேதி வணிகர் தினத்தையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள அனைத்து காய்கறி கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டு உள்ளதாக வணிகர் சங்கங்கள் அறிவித்து உள்ளன.

    இதுகுறித்து கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சங்கத்தினர் கூறுகையில், 'வணிகர் தினத்தையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்படும். இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சில்லறை வியாபாரிகளின் வரத்து அதிக அளவில் இருக்காது. எனவே வணிகர் தினத்தையொட்டி வருகிற 5-ந்தேதி கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள 2 ஆயிரம் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது' என்று தெரிவித்தனர்.

    அதே நேரத்தில் கோயம்பேடு பூ மார்க்கெட் மற்றும் பழ மார்க்கெட்டில் உள்ள ஒரு சில சங்கங்கள் வணிகர் தினத்தன்று விடுமுறை அளிக்கவில்லை. இதனால் பூ மார்க்கெட் மற்றும் பழ மார்க்கெட்டில் சில கடைகள் திறந்து இருக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கடந்த சில தினங்களாக எலுமிச்சை பழங்களின் வரத்தும் பாதியாகக் குறைந்துவிட்டது.
    • மழைக்காலம் தொடங்கும் வரை இந்த விலை உயா்வு மேலும் அதிகரிக்கும் என மொத்த வியாபாரிகள் தெரிவித்தனா்.

    சென்னை:

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திர மாநிலம் கூடூா், ராஜம்பேட்டை, கா்நாடகம் ஆகிய பகுதிகளிலிருந்து எலுமிச்சை பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இதன்படி, தினசரி சுமாா் 100 டன் அளவுக்கு எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வருகின்றன. தற்போது கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் எலுமிச்சை பழத்துக்கான தேவை அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கடந்த சில தினங்களாக எலுமிச்சை பழங்களின் வரத்தும் பாதியாகக் குறைந்துவிட்டது. (வியாழக்கிழமை)நிலவரப்படி 5 லாரிகளில் 40 டன் எலுமிச்சை பழங்கள் மட்டுமே விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதன் காரணமாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ எலுமிச்சை பழத்தின் விலை திடீரென 2 மடங்காக அதிகரித்துள்ளது.

    இதன்படி, மொத்த விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.150-க்கும், சில்லறை விற்பனைக் கடைகளில் ரூ.170-க்கும் விற்பனை செய்யப்பட்டன. மழைக்காலம் தொடங்கும் வரை இந்த விலை உயா்வு மேலும் அதிகரிக்கும் என மொத்த வியாபாரிகள் தெரிவித்தனா்.

    • கடந்த வாரம் வரை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினசரி 450-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்து வந்தது.
    • இன்று 300 லாரிகளில் மட்டுமே காய்கறிகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதனால் காய்கறி விலை திடீரென அதிகரித்து உள்ளது.

    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா கேரளா, உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கள் விற்பனைக்கு வருகிறது.

    விவசாய பணியில் ஈடுபட்டு வரும் தொழி லாளர்களில் பெரும்பா லானவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட 3 நாட்கள் வரை விடுமுறை எடுத்து சென்றுவிட்டனர். இதனால் காய்கறி உற்பத்தி மற்றும் அறுவடை செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறி வரத்து கடந்த 2 நாட்களாகவே வெகுவாக குறைந்துவிட்டது.

    கடந்த வாரம் வரை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினசரி 450-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்து வந்தது. இந்த நிலையில் இன்று 300 லாரிகளில் மட்டுமே காய்கறிகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதனால் காய்கறி விலை திடீரென அதிகரித்து உள்ளது.

    கடந்த வாரம் மொத்த விற்பனை கடைகளில் ரூ.40-க்கு விற்ற பீன்ஸ் தற்போது விலை அதிகரித்து ரூ.70-க்கும், ரூ.50-க்கு விற்ற ஊட்டி கேரட் ரூ90-க்கும், ரூ.70-க்கு விற்ற முருங்கைக்காய் ரூ.90-க்கும், ஒரு கிலோ ரூ.10-க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.25-க்கும் விற்கப்படுகிறது.

    அதேபோல் கத்தரிக்காய், முட்டை கோஸ், அவ ரைக்காய் உள்ளிட்ட பெரும்பாலான பச்சை காய்கறிகளின் விலையும் கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை அதிகரித்து உள்ளது.

    தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வரும் சின்ன வெங்காயம் இன்று ஒரு கிலோ ரூ.110-க்கு விற்கப்பட்டு வருகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள மளிகை மற்றும் காய்கறி கடைகளில் ஊட்டி கேரட் ஒரு கிலோ ரூ.120 வரையிலும், பீன்ஸ் ஒரு கிலோ ரூ.100 வரையிலும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.130 வரையும் விற்கப்படுகிறது.

    சமையலுக்கு தினசரி பயன்படுத்தப்படும் பச்சை காய்கறிகள் விலை திடீரென அதிகரித்து உள்ளது இல்லத்தரசிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய காய்கறிகள் மொத்த விற்பனை விலை விபரம் வருமாறு (கிலோவில்):-

    தக்காளி-ரூ.23.

    நாசிக் வெங்காயம்-ரூ.36

    ஆந்திரா வெங்காயம்- ரூ.20

    சின்ன வெங்காயம்- ரூ.110

    உருளைக்கிழங்கு-ரூ.27

    ஹாசன் உருளைக்கிழங்கு- ரூ.42

    கத்திரிக்காய்- ரூ.20

    வரி கத்திரிக்காய்- ரூ.15

    அவரைக்காய்- ரூ.40

    வெண்டைக்காய்- ரூ.25

    பீன்ஸ்- ரூ.70

    ஊட்டி கேரட்-ரூ.90

    பீட்ரூட்- ரூ.25

    முள்ளங்கி- ரூ.22

    வெள்ளரிக்காய்- ரூ.12

    கோவக்காய்- ரூ.35

    பன்னீர் பாகற்காய்- ரூ.40

    முட்டை கோஸ்- ரூ.20

    காலி பிளவர் ஒன்று - ரூ.25

    முருங்கைக்காய்- ரூ.90

    சுரக்காய்- ரூ.15

    புடலங்காய்-ரூ.15

    பீர்க்கங்காய்-ரூ.35

    சவ்சவ்-ரூ.15

    இஞ்சி-ரூ.65.

    • தக்காளி 47 லாரிகள், வெங்காயம் 40 லாரிகள் உட்பட 370 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்தன.
    • பலத்த மழை பெய்து வருவதால் கோயம்பேடு சந்தைக்கு வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறிகள் கடைக்காரர்களின் வரத்து வெகுவாக குறைந்தது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.

    இன்று தக்காளி 47 லாரிகள், வெங்காயம் 40 லாரிகள் உட்பட 370 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்தன. ஆனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருவதால் கோயம்பேடு சந்தைக்கு வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறிகள் கடைக்காரர்களின் வரத்து வெகுவாக குறைந்தது.

    நள்ளிரவு மந்தமாக தொடங்கிய காய்கறி விற்பனை படிப்படியாக வியாபாரிகளின் வரத்து குறைய தொடங்கியதால் அதிகாலையில் மார்க்கெட் வளாகம் முழுவதும் வெறிச்சோடியது.

    இதனால் மூட்டை மூட்டையாக காய்கறிகள் விற்பனை ஆகாமல் தேங்கின. இதனால் காய்கறி விலை குறைந்து விற்கப்பட்டது.

    கடந்த வாரம் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.90-க்கு விற்ற ஊட்டி கேரட் விலை குறைந்து ரூ.50-க்கும், ரூ.70-க்கு விற்ற பீன்ஸ் ரூ.40-க்கும், ரூ.23-க்கு விற்ற தக்காளி ரூ.19-க்கும் விற்கப்படுகிறது.

    தக்காளி, கத்தரிக்காய், புடலங்காய், முள்ளங்கி, நூக்கல், முட்டைகோஸ், சவ்சவ், வெள்ளரிக்காய், காலி பிளவர் உள்ளிட்ட பச்சை காய்கறிகள் ஏராளமான மூட்டைகளில் தேக்கமடைந்து இருப்பதால் மொத்த வியாபாரிகள் பெரிதும் கவலை அடைந்து உள்ளனர்.

    • வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • சமையலுக்கு தினசரி பயன்படுத்தப்படும் சின்ன வெங்காயம் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருவதால் இல்லத்தரசிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.

    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கோவை, திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து சின்ன வெங்காயம் விற்பனைக்கு வருகிறது.

    தினசரி 8 முதல் 10 வாகனங்களில் சின்ன வெங்காயம் விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால் கடந்த ஒரு மாதமாக இதன் வரத்து வெகுவாக குறைந்து விட்டது. தற்போது தினசரி ஒன்று முதல் 2 வாகனங்களில் மட்டுமே சின்ன வெங்காயம் விற்பனைக்கு வருகிறது.

    இதன் காரணமாகவே சின்ன வெங்காயம் விலை திடீரென அதிகரித்தது. இந்த நிலையில் இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.90-க்கு விற்கப்படுகிறது.

    அதேபோல் வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சமையலுக்கு தினசரி பயன்படுத்தப்படும் சின்ன வெங்காயம் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருவதால் இல்லத்தரசிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து வெங்காய மொத்த வியாபாரி தண்டபாணி கூறியதாவது:-

    கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் சின்ன வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.30-க்கு மட்டுமே விற்கப்பட்டது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் உற்பத்தி செய்வதற்கு ரூ.20 வரை செலவு ஆகிறது.

    ஆனால் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கடும் அவதிப்பட்டனர். இதையடுத்து பெரும்பாலான விவசாயிகள் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்வதை திடீரென நிறுத்திவிட்டனர். இதன் காரணமாகவே தட்டுப்பாடு ஏற்பட்டு சின்ன வெங்காயம் விலை அதிகரித்து உள்ளது

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த சில நாட்களாக 3 முதல் 4 மினி வேன்களில் மட்டுமே மல்லிகை பூ விற்பனைக்கு வருகிறது.
    • மல்லி பூ விலை 3 மடங்காக அதிகரித்து உள்ளது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மல்லிகை பூ விற்பனைக்கு வருகிறது.

    வழக்கமாக தினமும் 28 மினி வேன்கள் மூலம் மல்லிகை பூ விற்பனைக்கு கொண்டு வரப்படும். இதில் ஏறத்தாழ 20 மினி வேன்கள் அளவிலான மல்லிகை பூக்களை வாசனை திரவியம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இங்கிருந்து வாங்கி செல்வது வழக்கம். பனி சீசன் நேரத்தில் பொதுவாகவே மல்லி பூ விளைச்சல் இருக்காது.

    கடந்த 10நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை மற்றும் அதனை தொடர்ந்து கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கோயம்பேடு பூ சந்தைக்கு வரும் மல்லிகை பூக்களின் வரத்து வெகுவாக குறைந்து விட்டது.

    கடந்த சில நாட்களாக 3 முதல் 4 மினி வேன்களில் மட்டுமே மல்லிகை பூ விற்பனைக்கு வருகிறது. இதன் காரணமாக மல்லி பூ விலை 3 மடங்காக அதிகரித்து உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ மல்லிகை ரூ.300-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் இன்று அதன் விலை அதிகரித்து ஒரு கிலோ ரூ.800-க்கு விற்கப்படுகிறது.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் இருந்து தினசரி விற்பனைக்கு வரும் ஐஸ் மல்லிகை கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.150-க்கு விற்ற நிலையில் இன்று விலை அதிகரித்து கிலோ ரூ.500-க்கு விற்கப்படுகிறது. மல்லிகை பூவை தொடர்ந்து ஐஸ் மல்லிகை விலையும் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து பூ மொத்த வியாபாரி மூக்கையா கூறுகையில், கடும் பனிப்பொழிவு காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் மல்லிகை பூ வரத்து குறைந்து விலை அதிகரித்து உள்ளது. அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வர உள்ளதால் அதன் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

    • அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் என்பதால் கடந்த 2 நாட்களாக சந்தைக்கு வரும் சில்லரை வியாபாரிகளின் வரத்து அதிகரித்து காய்கறி விற்பனை மீண்டும் சூடு பிடித்துள்ளது.
    • கத்தரிக்காய், கேரட், அவரைக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் கடந்த வாரத்தை காட்டிலும் தற்போது கணிசமாக அதிகரித்து உள்ளது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு மார்கெட்டுக்கு இன்று 420 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்து குவிந்து உள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள மார்க்கெட் மற்றும் காய்கறி கடைகளில் கடந்த வாரம் வரை மழை காரணமாக காய்கறி விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு நடக்கவில்லை.

    இதனால் கோயம்பேடு சந்தைக்கு பொருட்கள் வாங்க வரும் சில்லரை வியாபாரிகளின் வரத்து வெகுவாக குறைந்தது. விற்பனை ஆகாமல் காய்கறிகள் தேக்கமடைந்தது. அவை வீணாவதை தடுக்க மொத்த வியாபாரிகள் கேரட், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையை 30 சதவீதம் வரை குறைத்து விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

    இந்த நிலையில் அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் என்பதால் கடந்த 2 நாட்களாக சந்தைக்கு வரும் சில்லரை வியாபாரிகளின் வரத்து அதிகரித்து காய்கறி விற்பனை மீண்டும் சூடு பிடித்துள்ளது.

    அதேபோல் கத்தரிக்காய், கேரட், அவரைக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் கடந்த வாரத்தை காட்டிலும் தற்போது கணிசமாக அதிகரித்து உள்ளது.

    இன்று மொத்த விற்பனை கடைகளில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.100-க்கும், முருங்கைக் காய் கிலோ ரூ.70-க்கும், ஊட்டி கேரட் கிலோ ரூ.65-க்கும், அவரைக்காய் கிலோ ரூ.30-க்கும், பீன்ஸ் கிலோ ரூ.25-க்கும் விற்கப்படுகிறது.

    இன்றைய காய்கறிகள் மொத்த விற்பனை விலை விவரம் வருமாறு (கிலோவில்):-

    தக்காளி ரூ.13, நாசிக் வெங்காயம் ரூ.30, சின்ன வெங்காயம் ரூ.100, ஆக்ரா உருளைக்கிழங்கு ரூ.25, கோலார் உருளைக்கிழங்கு ரூ.33, பீன்ஸ் ரூ.25, ஊட்டி கேரட் ரூ.65, பீட்ருட் ரூ.25, முள்ளங்கி ரூ.18, சவ் சவ் ரூ.10, அவரைக்காய் ரூ.30, வெண்டைக்காய் ரூ.25, பன்னீர் பாகற்காய் ரூ.40, சுரக்காய் ரூ.15, பீர்க்கங்காய் ரூ.40, புடலங்காய் ரூ.25, நைஸ் கொத்தவரங்காய் ரூ.60, பட்டை கொத்தவரங்காய் ரூ.40, முருங்கைக்காய் ரூ.70, உஜாலா கத்தரிக்காய் ரூ.35, வரி கத்தரிக்காய் ரூ.20, வெள்ளரிக்காய் ரூ.7, பச்சை மிளகாய் ரூ.35, குடை மிளகாய் ரூ.30, இஞ்சி ரூ.63, இஞ்சி (புதுசு) ரூ.45.

    • கடந்த சில நாட்களாகவே மல்லி, கனகாம்பரம், ஜாதி உள்ளிட்ட பூக்களின் விலை திடீரென அதிகரித்தது.
    • கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.1200-க்கு விற்ற மல்லி இன்று மேலும் அதிகரித்து கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு பூ மார்கெட்டுக்கு தமிழகத்தின் திருவள்ளூர், வேலூர், சேலம், திண்டுக்கல், சத்தியமங்கலம், ஓசூர் ஆகிய பகுதிகள் மற்றும் ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து பூ தினசரி விற்பனைக்கு வருகிறது.

    மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரத்து மூன்றில் ஒரு பங்காக குறைந்து விட்டது. கார்த்திகை மாதம் தொடங்கியது முதல் முகூர்த்த நாட்கள் அடுத்த டுத்து வருவதால் பூக்களின் தேவை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே மல்லி, கனகாம்பரம், ஜாதி உள்ளிட்ட பூக்களின் விலை திடீரென அதிகரித்தது.

    இந்த நிலையில் இன்று சுப முகூர்த்த நாள், நாளை மறுநாள் கார்த்திகை தீபம் என அடுத்தடுத்து விசேஷ நாட்கள் என்பதால் பூக்கள் விலை மேலும் அதிகரித்து உள்ளது.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.1200-க்கு விற்ற மல்லி இன்று மேலும் அதிகரித்து கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. அதேபோல் ஒரு கிலோ ரூ.800-க்கு விற்ற ஐஸ் மல்லி இன்று ரூ.1500 வரை விற்கப்படுகிறது.

    இன்றைய பூக்கள் விலை விவரம் வருமாறு (கிலோவில்):- சாமந்தி (ரகத்தை பொறுத்து)-ரூ.50 முதல் ரூ.80 வரை, அரளி-ரூ.250, பன்னீர் ரோஸ்-ரூ.100 முதல் ரூ.120 வரை, சாக்லேட் ரோஸ்-ரூ.140 முதல் ரூ.160 வரை, மல்லி-ரூ.2000, ஐஸ் மல்லி-ரூ.1200 முதல் ரூ.1500 வரை, முல்லை-ரூ.1000, கனகாம்பரம் (ரகத்தை பொறுத்து)-ரூ.600 முதல் ரூ.800 வரை, ஜாதி-ரூ.500 முதல் ரூ.600 வரை.

    ×