என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு 5-ந்தேதி விடுமுறை
- வணிகர் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் உள்ள கடைகள் அனைத்துக்கும் விடுமுறை விடப்பட்டு வருகிறது.
- கோயம்பேடு பூ மார்க்கெட் மற்றும் பழ மார்க்கெட்டில் உள்ள ஒரு சில சங்கங்கள் வணிகர் தினத்தன்று விடுமுறை அளிக்கவில்லை.
சென்னை:
தமிழகத்தில் ஆண்டுதோறும் மே 5-ந்தேதி வணிகர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அன்று வியாபாரிகள் கடைகளை மூடிவிட்டு பல்வேறு இடங்களில் நடக்கும் வணிகர் தின மாநாடுகளில் பங்கேற்பது வழக்கம்.
வணிகர் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் உள்ள கடைகள் அனைத்துக்கும் விடுமுறை விடப்பட்டு வருகிறது.
அதன்படி வருகிற 5-ந்தேதி வணிகர் தினத்தையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள அனைத்து காய்கறி கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டு உள்ளதாக வணிகர் சங்கங்கள் அறிவித்து உள்ளன.
இதுகுறித்து கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சங்கத்தினர் கூறுகையில், 'வணிகர் தினத்தையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்படும். இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சில்லறை வியாபாரிகளின் வரத்து அதிக அளவில் இருக்காது. எனவே வணிகர் தினத்தையொட்டி வருகிற 5-ந்தேதி கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள 2 ஆயிரம் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது' என்று தெரிவித்தனர்.
அதே நேரத்தில் கோயம்பேடு பூ மார்க்கெட் மற்றும் பழ மார்க்கெட்டில் உள்ள ஒரு சில சங்கங்கள் வணிகர் தினத்தன்று விடுமுறை அளிக்கவில்லை. இதனால் பூ மார்க்கெட் மற்றும் பழ மார்க்கெட்டில் சில கடைகள் திறந்து இருக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.






