என் மலர்
நீங்கள் தேடியது "Koyambedu Market"
- குறைந்த அளவிலான போக்குவரத்து போலீசாரே பணியில் ஈடுபட்டதால் வாகன நெரிசலை சரிசெய்யமுடியவில்லை.
- போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விற்பனையும் பாதிக்கப்பட்டு உள்ளது.
போரூர்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதனால் பல முக்கிய சாலைகளில் தண்ணீர் குளம் போல தேங்கியது. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்திவிழாவையொட்டி பூஜை பொருட்கள் விற்பனைக்காக வெளியூர்களில் இருந்து ஏராளமான வாகனங்கள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நள்ளிரவு முதலே வரத்தொடங்கின.
இதனால் கோயம்பேடு மார்க்கெட்டை ஒட்டி உள்ள காளியம்மன் கோவில் தெரு, கோயம்பேடு மெட்டுக்குளம் சந்திப்பு, மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் அதிகாலை 4மணி முதலே வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பொருட்கள் வாங்க புறநகர் பகுதிகளில் இருந்து வந்த பெரும்பாலான வியாபாரிகள் குறித்த நேரத்திற்குள் திரும்பி செல்ல முடியாமல் சிக்கித் தவித்தனர். இதேபோல் மதுரவாயல் சாலை முழுவதுமே வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மதுரவாயல் சாலையில் இருந்து மார்க்கெட் நோக்கி செல்லும் வாகனங்களை நேராக செல்ல அனுமதிக்காமல் பூந்தமல்லி சாலையில் திருப்பிவிட்டனர். இதனால் அந்த வாகனங்கள் மேம்பாலத்தில் சுற்றி வந்து 100 அடி சாலைவழியாக வந்தது. ஏற்கனவே கோயம்பேடு 100 அடி சாலையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு இருந்த நிலையில் அனைத்து வாகனங்களும் ஸ்தம்பித்து நின்றன.
கோயம்பேடு சிக்னலில் இருந்த சின்மயாநகர் பாலம் வரை சுமார் 1 1/2 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன. இதேபோல் வெளியூர்களில் இருந்து வந்த ஆம்னி பஸ்களும் வந்ததால் கோயம்பேடு பகுதி முழுவதுமே போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவித்தது.
இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தன். நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து சென்றனர். குறைந்த அளவிலான போக்குவரத்து போலீசாரே பணியில் ஈடுபட்டதால் வாகன நெரிசலை சரிசெய்யமுடியவில்லை. இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் அருகில் உள்ள சந்து, தெருக்களில் புகுந்து சென்றனர். இதுகுறித்து கோயம்பேடு வியாபாரிகள் கூறும்போது, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு சந்தைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் அங்காடி நிர்வாக குழு மூலம் பண்டிகை பொருட்கள் விற்பனைக்கு முறையான மாற்று ஏற்பாடு ஏதும் செய்யவில்லை. இதன் காரணமாகவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விற்பனையும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதுவரை மார்க்கெட்டுக்கு வர வேண்டிய பொருட்கள் முழுமையாக வந்து சேரவில்லை என்றனர்.
- வியாபாரிகள் ஒன்று திரண்டு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர்.
- பிளாஸ்டிக் பைகளை மொத்தமாக விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை.
போரூர்:
கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள காய்கறி, பழக்கடை, மளிகை உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் இன்று காலை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் என மொத்தம் 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். மதியம் வரை சுமார் 100-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் என்று கூறி அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டது.
இதற்கு வியாபாரிகள் ஒன்று திரண்டு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். அனுமதிக்கப்பட்ட அளவிலேயே பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாக கூறினர். இத னால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து சோதனைநடத்தி பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை மொத்தமாக விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. அதனை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்று குற்றம்சாட்டினர்.
- கடந்த 2 மாதமாக ஆட்டம் காட்டிவந்த தக்காளி விலையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
- வரத்து குறைவு காரணமாக பீன்ஸ், அவரைக்காய் விலை மட்டும் அதிகமாக காணப்படுகிறது.
போரூர்:
சென்னை கோயம்பேடு, மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.
இன்று தக்காளி 55 லாரிகள், வெங்காயம் 40 லாரிகள் உட்பட 500க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்தன.
இதனால் வரத்து அதிகரிப்பு காரணமாக பச்சைகாய்கறிகள் விலை சரிந்து உள்ளன. பெரும்பாலான காய்கறிகள் கிலோ ரூ.20-க்கு கீழ் உள்ளது. கத்தரிக்காய், வெண்டைக்காய், முட்டை கோஸ், முருங்கைக்காய் ஆகிய காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
கடந்த 2 மாதமாக ஆட்டம் காட்டிவந்த தக்காளி விலையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று ஒருகிலோ தக்காளி ரூ.11-க்கு விற்கப்பட்டது. வரத்து குறைவு காரணமாக பீன்ஸ், அவரைக்காய் விலை மட்டும் அதிகமாக காணப்படுகிறது. மொத்த விற்பனையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.70-க்கும், அவரைக்காய் ரூ.80-க்கும் விற்கப்பட்டது.
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி மொத்த விற்பனை விலை (கிலோவில்) வருமாறு :-
உஜாலா கத்தரிக்காய்-ரூ.20, வரி கத்தரிக்காய்-ரூ.12, முருங்கைக்காய்-ரூ.10, வெண்டைக்காய்-ரூ.10, ஊட்டி கேரட்-ரூ.30, பீட்ரூட் -ரூ.15, முட்டை கோஸ்-ரூ.8, முள்ளங்கி-ரூ.20, புடலங்காய்-ரூ.8, நைஸ் கொத்தவரங்காய்-ரூ.40, குடை மிளகாய்-ரூ.20, பீர்க்கங்காய்-ரூ.15, சுரக்காய்-ரூ.8,
நாசிக் வெங்காயம்-ரூ.20, ஆந்திரா வெங்காயம்-ரூ.18 , சின்ன வெங்காயம்-ரூ.30 முதல் ரூ.60வரை, உருளைக்கிழங்கு-ரூ.18 , வெள்ளரிக்காய்-ரூ.20, பன்னீர் பாகற்காய்-ரூ.25, கோவக்காய்-ரூ.10, இஞ்சி-ரூ.85, பச்சை மிளகாய்-ரூ.30.
- கடந்த 2 வாரங்களாக தக்காளியின் வரத்து மீண்டும் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியதால் அதன் விலை குறைய தொடங்கியது.
- மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.9-க்கு விற்கப்படுகிறது.
போரூர்:
கடந்த மாத தொடக்கத்தில் வரத்து குறைவால் தக்காளியின் விலை உச்சத்தை எட்டியது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை விற்கப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் பெரிதும் கவலை அடைந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக தக்காளியின் வரத்து மீண்டும் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியதால் அதன் விலை குறைய தொடங்கியது. கடந்த வாரம் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.18-க்கும் சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.25-க்கும் தக்காளி விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று 55 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்துள்ளது. இதையடுத்து தக்காளியின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.9-க்கு விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.15-க்கு விற்கப்படுகிறது.
கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய காய்கறிகள் மொத்த விற்பனை விலை விபரம் வருமாறு (கிலோவில்):-
பீன்ஸ்-ரூ.50, ஊட்டி கேரட்-ரூ.40, பீட்ரூட்-ரூ.20, அவரைக்காய்-ரூ.55, வெள்ளரிக்காய்-ரூ.20, உஜாலா கத்தரிக்காய்- ரூ.15, வரி கத்தரிக்காய்-ரூ.10, வெண்டைக்காய்-ரூ.10, பீர்க்கங்காய்-ரூ.20, புடலங்காய்-ரூ.15, முட்டைகோஸ்-ரூ.8, கோவக்காய்-ரூ.8, பட்டை கொத்தவரங்காய்-ரூ.20, நைஸ் கொத்தவரங்காய் ரூ.40, பச்சை மிளகாய்- ரூ.30, இஞ்சி-ரூ.240, புது இஞ்சி- ரூ.80-க்கு விற்கப்படுகிறது.
- மர்ம வாலிபர் கோபியை வழிமறித்து பணம் கேட்டு ரகளையில் ஈடுபட்டார்.
- கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
கோயம்பேடு, சேமாத்தம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் கோபிமணி தொழிலாளி. இவர் நேற்று இரவு கோயம்பேடு மார்க்கெட் அருகே உள்ள "ஏ" சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம வாலிபர் கோபியை வழிமறித்து பணம் கேட்டு ரகளையில் ஈடுபட்டார்.
ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் அருகில் கிடந்த பீர் பாட்டிலால் கோபியை தலையில் சரமாரியாக தாக்கினார். பின்னர் அவரிடம் இருந்த ரூ.5ஆயிரம் மற்றும் செல்போனை பறித்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஓணம் பண்டிகையையொட்டி பூக்கள் விலை உயர்ந்து உள்ளது.
- கனகாம்பரம் கிலோ ரூ.400-க்கும் மல்லி-ரூ.300-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
போரூர்:
ஓணம் பண்டிகை நாளை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பூக்கள் விலை சற்று அதிகரித்து உள்ளது. சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ஓசூர், சேலம் திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு வருகிறது. இன்று 40 வாகனங்களில் பூக்கள் விற்பனைக்கு குவிந்து இருந்தன.
ஓணம் பண்டிகையையொட்டி பூக்கள் விலை உயர்ந்து உள்ளது. கனகாம்பரம் கிலோ ரூ.400-க்கும் மல்லி-ரூ.300-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய பூக்கள் விலை விபரம் (கிலோவில்) வருமாறு:-
சாமந்தி- ரூ.100வரை, பன்னீர் ரோஸ்-ரூ.70, சாக்லேட் ரோஸ்-ரூ.120, அரளி- ரூ.200, மல்லி-ரூ.300, முல்லை-ரூ.180, ஜாதி-ரூ.240, சம்பங்கி-ரூ.150, கனகாம்பரம் -ரூ.400.
இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறும்போது, ஓணம் பண்டிகையை முன்னிட்டு பூ விற்பனை விறுவிறுப்பாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிகாலை முதலே மார்க்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் பூ கடைக்காரர்களின் வரத்து குறைந்து இருந்தது. பூ விற்பனை மந்தமாகவே நடந்து வருகிறது என்றனர்.
- 45 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்தது.
- தக்காளி விலை சரிந்து பழையநிலைக்கு திரும்புவதால் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்து உள்ளனர்.
போரூர்:
தமிழகத்தில் கடந்த மாதம் தக்காளியின் விலை கிலோ ரூ.200 வரை உச்சத்தில் இருந்தது. தற்போது வரத்து அதிகரிப்பு காரணமாக கடந்த சில நாட்களாகவே தக்காளியின் விலை சரியத்தொடங்கி உள்ளது.
கோயம்பேடு மார்கெட்டுக்கு தினசரி 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால் மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டு வரத்து பாதியாக குறைந்ததால் கடந்த மாதத்தில் தக்காளி விலை திடீரென அதிகரிக்க தொடங்கியது. அதிகபட்சமாக சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.200வரை விற்கப் பட்டது.
இந்நிலையில் தற்போது கோயம்பேடு சந்தைக்கு தக்காளியின் வரத்து மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இன்று 45 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்தது.
தக்காளி வரத்து பழைய நிலைக்கு வந்து உள்ளதால் அதன் விலையும் வேகமாக குறைந்து வருகிறது. இன்று மொத்த விற்பனை கடைகளில் முதல் ரக தக்காளி ஒரு கிலோ ரூ.30-க்கு விற்கப்படுகிறது. வெளி மார்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி விலை சரிந்து பழையநிலைக்கு திரும்புவதால் இல்லத்த ரசிகள் நிம்மதி அடைந்து உள்ளனர்.
- மார்க்கெட்டை திருமழிசையில் பிரமாண்டமாக கட்டுவதற்கான வடிவமைப்பை தயார் செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளது.
- கோயம்பேட்டை பொறுத்தவரை மெட்ரோ ரெயில் போக்குவரத்தின் முதல் மற்றும் 2-ம் பகுதியின் இணைப்பிடமாக இருக்கிறது.
சென்னை:
கோயம்பேடு மார்க்கெட் ஆசியாவிலேயே மிகப் பெரிய மார்க்கெட் என்று பெயர் பெற்றது.
இந்த மார்க்கெட்டை திருமழிசைக்கு மாற்ற சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டுள்ளது. புதிதாக மார்க்கெட் அமையும் இடத்தில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் வணிக வளாகம், நட்சத்திர ஓட்டல், பொழுதுபோக்கு இடம் என்று பிரமாண்டமாக வடிவமைக்கவும் திட்டமிட்டு உள்ளார்கள்.
இதற்காக சி.எம்.டி.ஏ. வால் நியமிக்கப்பட்டுள்ள உலகளாவிய ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான குஷ்மேன் மற்றும் வேக் பீல்டு நிறுவனத்திடம் மார்க்கெட்டை திருமழிசையில் பிரமாண்டமாக கட்டுவதற்கான வடிவமைப்பை தயார் செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளது.
மார்க்கெட்டை முழுவதுமாக திருமழிசையில் அமைக்கலாமா? பாதியை அங்கு கொண்டு செல்வதா? என்று எல்லா சாத்தியக் கூறுகளையும் ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில் இருக்கும் கடைகளை மொத்த வியாபாரிகள் சொந்தமாக வாங்கி வைத்திருக்கிறார்கள்.
இனி அவர்களை திருமழிசைக்கு மாற்றும் போது அதற்கான இழப்பீடு தொகையையும் வழங்க சி.எம்.டி.ஏ. முடிவு செய்து உள்ளது.
வியாபாரிகளின் உரிமையை பாதுகாத்து அவர்களுக்கு சரியான இழப்பீட்டையும் வழங்கும் போது தாமாகவே இடம் பெயர ஒத்துக் கொள்வார்கள் என்று கருதப்படுகிறது.
திருமழிசையில் மொத்த நிலப்பரப்பில் 35 சதவீதம் அல்லது 29.75 ஏக்கர் நிலப்பரப்பு திறந்தவெளிகள், பூங்காக்கள், சாலைகள் அமைக்க ஒதுக்கப்படுகிறது.
கோயம்பேட்டில் கனரக வாகனப் போக்குவரத்து, பாதசாரிகள் நடமாட்டம் காரணமாக நெரிசலாகிவிட்டது. எனவே இந்த பகுதியை சில்லரை விற்பனை மற்றும் ஓட்டல்களுக்கு பயன்படுத்தலாம் என்று முடிவு செய்து உள்ளனர்.
இதன் மூலம் மாநிலம் முழுவதும் இருந்து வருபவர்களை கவரும் இடமாக கோயம்பேடு மாறும். கோயம்பேட்டை பொறுத்தவரை மெட்ரோ ரெயில் போக்குவரத்தின் முதல் மற்றும் 2-ம் பகுதியின் இணைப்பிடமாக இருக்கிறது.
ெசன்னை பெருநகர வளர்ச்சி குழுமம். கோயம்பேடு மார்க்கெட் பராமரிப்புக்காக ஆண்டுக்கு ரூ.11.70 கோடி செலவிடுகிறது. ஆனால் லாபம் ரூ.30 லட்சம் மட்டுமே கிடைக்கிறது.
எனவே மார்க்கெட்டை நவீனப்படுத்துவது, புதிய வசதிகளை உருவாக்குவதன் மூலம் கூடுதல் வருவாயும் ஈட்ட முடியும் என்று ஆய்வறிக்கை தெரிவித்து உள்ளது.
நுழைவு கட்டணம், வாகன நிறுத்தக்கட்டணம், திறந்த வெளிப்பகுதிகள் மூலம்தான் அதிக வருவாய் ஈட்டப்படுகிறது.
கோயம்பேடு உள்பட சென்னையின் வடமேற்கு பகுதிகளில் பெரிய அளவிலான வளர்ச்சி திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. திருமழிசையில் புதிய மார்க்கெட்டை உருவாக்குவது, கோயம்பேட்டை நவீன மயமாக்குவது மூலம் மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என்று கூறப்படுகிறது.
- ஒரு நபருக்கு குளிப்பதற்கு கட்டணமாக ரூ.25 வசூல் செய்து வருகின்றனர் எனினும் முறையாக கழிப்பறைகள் பராமரிப்பு செய்யப்படாமல் உள்ளது.
- பழம் மற்றும் காய்கறி மார்க்கெட் வளாகத்திற்குள் "மீன்பாடி" வண்டிகள் அதிகரித்து வருகிறது.
ஆசியாவின் மிகப்பெரிய சந்தையான கோயம்பேடு மார்க்கெட் கடந்த 1996-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பூ, பழம், காய்கறி மார்க்கெட் மட்டுமே தொடங்கி செயல்பட்டு வந்த நிலையில் பின்னர் அதன் அருகிலேயே மளிகை மார்க்கெட்டும் தொடங்கப்பட்டது.
இங்கு சுமார் 4ஆயிரம் கடைகள் உள்ளன. வியாபாரிகள் மொத்தமாகவும் சில்லரையிலும் காய்கறி மற்றும் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். தினசரி ரூ.30கோடி அளவிற்கு வர்த்தகம் நடந்து வருகிறது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கோயம்பேடு சந்தைக்கு தினசரி லாரிகள் மூலம் காய்கறி மற்றும் பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சில்லரை வியாபாரிகள், மளிகை, காய்கறி கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்து செல்கிறார்கள்.
காய்கறிகள் வரத்து நள்ளிரவே வரத்தொடங்கி விடும் என்பதால் தினந்தோறும் நள்ளிரவு முதலே சந்தையில் வியாபாரம் தொடங்கி களை கட்டும்.
மினி லாரி, ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் வந்து குவிந்து மக்கள் இங்கிருந்து பொருட்களை வாங்கி செல்வது வழக்கம்.
இதன் காரணமாக நள்ளிரவு தொடங்கி மதியம் வரை கோயம்பேடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து பரபரபாகவே காணப்படும்.
காய்கறி, பழம் மற்றும் பூ மார்க்கெட்டில் மொத்தம் 20 நுழைவு வாயில்கள் உள்ளது. இதில் காய்கறி மார்கெட்டில் ஏ முதல் என் வரை 14 பிளாக்குகளும், பழ மார்க்கெட்டில் டிஏ முதல் டிஜி வரை 7 பிளாக்குகளும், பூ மார்க்கெட்டில் 4 பிளாக்குகளும் என மொத்தம் 25 பிளாக்குகள் உள்ளது. இதில் மொத்தம் 68 கழிவறைகள் செயல்பட்டு வருகிறது.
கோயம்பேடு மார்க்கெட்டில் ஏராளமான வெளி மாவட்ட கூலி தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் மார்க்கெட் வளாகத்தில் உள்ள கழிவறைகளை பயன்படுத்தி வருகிறார்கள்.
ஆனால் இந்த கழிவறை முறையாக பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. பல கழிவறைகள் ஆங்காங்கே பூட்டப்பட்டு கிடக்கின்றன. மேலும் பயன்பாட்டில் உள்ள கழிவறைகளும் முறையான பராமரிப்பு இல்லாமல் துர்நாற்றம் வீசி வருகிறது. தண்ணீரும் சரவர வருவதில்லை என்று தொழிலாளர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். இதனால் மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள், தொழிலாளர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். கழிவறை அருகில் கடை நடத்தும் வியாபாரிகள் மற்றும் ஊழியர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும் மார்க்கெட் வளாகம் முழுவதும் மாடுகள் ஹாயாக சுற்றி வருகின்றன. இதனால் சந்தைக்கு வரும் வியாபாரிகள், பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே மார்க்கெட் வளாகத்தில் பூட்டப்பட்டு கிடக்கும் கழிவறைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும், கழிவறைகளை முறையாக பராமரித்து சுத்தம் செய்யவேண்டும். 24 மணிநேரமும் தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள், தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இது தொடர்பாக மார்க்கெட்டில் தங்கி வேலை பார்த்து வரும் தொழிலாளர்கள் கூறும்போது, நாங்கள் மாலையில் பணி முடிந்து மார்க்கெட் வளாகத்தல் உள்ள கழிவறையில் குளிக்க செல்லும்போது பெரும்பாலான கழிவறைகளில் உள்ள குழாய்களில் தண்ணீர் சரியாக வருவது கிடையாது.
ஒரு நபருக்கு குளிப்பதற்கு கட்டணமாக ரூ.25 வசூல் செய்து வருகின்றனர் எனினும் முறையாக கழிப்பறைகள் பராமரிப்பு செய்யப்படாமல் உள்ளது. இதனால் தொழிலாளர்கள் கழிவறைகளின் முன்பு நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை நீடிக்கிறது என்று வேதனையோடு தெரிவித்தனர்.
வியாபாரிகள் கூறும்போது, கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் கழிவறை வசதி மோசமாக உள்ளது. இதனை முதலாவதாக சரிசெய்ய வேண்டும். கார்நடைகளும் காய்கறி கழிவுகளை சாப்பிட அதிக அளவில் சுற்றி வருகின்றன.
மார்க்கெட்டில் சி.எம்.டி.ஏ மூலம் முறையாக ஒதுக்கீடு செய்யப்பட்ட கடைகளை தவிர்த்து மார்க்கெட் வளாகத்திற்குள் பல இடங்களில் தற்காலிக கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகள் மூலம் பூ, பழம், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இதேபோல் மார்க்கெட்டை ஒட்டி உள்ள சாலைகளில் பிளாட்பார கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் ஒளி பெருக்கி வைத்து காய்கறி, பழங்கள் விற்பனை நடந்து வருகிறது. இதனால் தேவையற்ற போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு மட்டும் இல்லாமல் மார்க்கெட்டில் கடை நடத்தி வரும் வியாபாரிகளுக்கும் விற்பனை பாதிக்கப்படுகிறது. இதனை அதிகாரிகள் முறைப்படுத்த வேண்டும்.
பழம் மற்றும் காய்கறி மார்க்கெட் வளாகத்திற்குள் "மீன்பாடி" வண்டிகள் அதிகரித்து வருகிறது. நள்ளிரவு நேரத்தில் நடைபாதையை மறித்தபடி "மீன்பாடி" வண்டியை நிறுத்தி பொருட்களை ஏற்றி வருவதால் அவ்வப்போது தேவையற்ற நெரிசல் ஏற்படுகிறது. மார்க்கெட் வளாகம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மாடுகளின் நடமாட்டமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அவ்வப்போது விபத்தும் ஏற்படுகிறது. இதை சி.எம்.டி.ஏ மற்றும் அங்காடி நிர்வாக குழு முறையாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்து உள்ளது.
- கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 10, 15 லாரிகளில் வந்த தக்காளி இப்போது 40 லாரிகளில் வருகிறது.
போரூர்:
ஏழை மக்களை 2 மாதமாக மிரட்டி வந்த தக்காளி விலை தற்போது குறையத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் தக்காளி விளைச்சல் குறைந்தது மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் பாதித்ததால் தக்காளி வரத்து கணிசமாக குறைந்தது. இதனால் தக்காளி கிலோ ரூ.200 வரை விற்கப்பட்டது.
கோயம்பேடு மார்க்கெட்டிற்கு குறைந்த அளவில் தக்காளி வந்ததால் சில்லரை காய்கறி கடைகளில் விலை உச்சத்தை அடைந்தது. இதனால் பொதுமக்கள் தக்காளி பயன்பாட்டை குறைத்தனர்.
100 கிராம், 200 கிராம், கால் கிலோ என வாங்கும் அளவை குறைத்தனர். ஓட்டல்களில் தக்காளி சாதம், சட்னி போன்றவை காணாமல் போனது.
இந்த நிலையில் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்து உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 10, 15 லாரிகளில் வந்த தக்காளி இப்போது 40 லாரிகளில் வருகிறது. இதனால் விலையும் படிப்படியாக குறைந்து வருகிறது.
இந்த வாரத்தின் தொடக்கத்தில் கிலோ ரூ.120, ரூ.130 வரை விற்கப்பட்ட தக்காளி தற்போது ரூ.100-க்குள் குறைந்தது. மொத்த விலையில் கிலோ ரூ.60 ஆக இருந்த தக்காளி நேற்று முன்தினம் ரூ.50 ஆக குறைந்தது.
இன்று மேலும் 15 ரூபாய் குறைந்ததை தொடர்ந்து சில்லரையில் கிலோ ரூ.60, ரூ.70-க்கு ஒரு சில இடங்களில் விற்கப்படுகிறது.
இன்று 40 லாரிகளில் தக்காளி வந்ததால் விலை மேலும் சரிந்துள்ளது.
கோயம்பேடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தக்காளி விலை குறைந்த அளவிற்கு சென்னையின் மற்ற பகுதிகளில் விலை குறையவில்லை. காய்கறி கடை வியாபாரிகள் இன்றும் கிலோ ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கிறார்கள்.
மொத்த மார்க்கெட்டில் குறையும் போது சில்லரை விற்பனையிலும் குறைக்க வேண்டும். ஆனால் ஒரு சில சில்லரை வியாபாரிகள் விலையை குறைக்காமல் விற்பது பொதுமக்களை பாதிக்கிறது. தக்காளியை தொடர்ந்து பிற காய்கறிகளின் விலையும் குறைந்து உள்ளது.