search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோயம்பேடு மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை கிலோ ரூ.800 ஆக உயர்வு
    X

    கோயம்பேடு மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை கிலோ ரூ.800 ஆக உயர்வு

    • கடந்த சில நாட்களாக 3 முதல் 4 மினி வேன்களில் மட்டுமே மல்லிகை பூ விற்பனைக்கு வருகிறது.
    • மல்லி பூ விலை 3 மடங்காக அதிகரித்து உள்ளது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மல்லிகை பூ விற்பனைக்கு வருகிறது.

    வழக்கமாக தினமும் 28 மினி வேன்கள் மூலம் மல்லிகை பூ விற்பனைக்கு கொண்டு வரப்படும். இதில் ஏறத்தாழ 20 மினி வேன்கள் அளவிலான மல்லிகை பூக்களை வாசனை திரவியம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இங்கிருந்து வாங்கி செல்வது வழக்கம். பனி சீசன் நேரத்தில் பொதுவாகவே மல்லி பூ விளைச்சல் இருக்காது.

    கடந்த 10நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை மற்றும் அதனை தொடர்ந்து கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கோயம்பேடு பூ சந்தைக்கு வரும் மல்லிகை பூக்களின் வரத்து வெகுவாக குறைந்து விட்டது.

    கடந்த சில நாட்களாக 3 முதல் 4 மினி வேன்களில் மட்டுமே மல்லிகை பூ விற்பனைக்கு வருகிறது. இதன் காரணமாக மல்லி பூ விலை 3 மடங்காக அதிகரித்து உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ மல்லிகை ரூ.300-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் இன்று அதன் விலை அதிகரித்து ஒரு கிலோ ரூ.800-க்கு விற்கப்படுகிறது.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் இருந்து தினசரி விற்பனைக்கு வரும் ஐஸ் மல்லிகை கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.150-க்கு விற்ற நிலையில் இன்று விலை அதிகரித்து கிலோ ரூ.500-க்கு விற்கப்படுகிறது. மல்லிகை பூவை தொடர்ந்து ஐஸ் மல்லிகை விலையும் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து பூ மொத்த வியாபாரி மூக்கையா கூறுகையில், கடும் பனிப்பொழிவு காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் மல்லிகை பூ வரத்து குறைந்து விலை அதிகரித்து உள்ளது. அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வர உள்ளதால் அதன் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

    Next Story
    ×