என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குன்றத்தூர் அருகே செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் குடியிருப்புக்குள் புகுந்தது
- கரையோரம் உள்ள குடியிருப்புக்குள் தடுப்பு மணல் மூட்டைகளையும் தாண்டி தண்ணீர் வந்து உள்ளது.
- புழல் ஏரியில் 21.20 அடியும், பூண்டி ஏரியில் 35 அடியும் தண்ணீர் முழுவதும் நிரம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.
பூந்தமல்லி:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.
கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கனமழையாக கொட்டியது. மேலும் டிட்வா புயலின் தாக்கத்தாலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டின.
செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த உயரமான 24 அடி முழுவதும் நிரம்பி காணப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு 750 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீராக 500 கனஅடி தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது. நேற்று காலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சில இடங்களில் மழை கொட்டியது. இதனால் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் அதன் கரையோரப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து உள்ளது.
செம்பரம்பாக்கம், பழஞ்சூர் பகுதியில் ஏரியின் கரையோரத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்து உள்ளது. சுமார் 3 அடிக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதேபோல் குன்றத்தூர் அருகே புதுப்பேடு, தாராவூர், குன்றத்தூர் அருகே நந்தம்பாக்கம் அம்பேத்கர் நகர் பகுதியிலும் செம்பரம்பாக்கம் ஏரியின் தண்ணீர் கரையோரம் உள்ள குடியிருப்புக்குள் சென்று உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ஏரியில் 23 அடிவரை தண்ணீர் தேக்கினால் பாதிப்பு இருக்காது. தற்போது ஏரியில் 24 அடி முழுவதும் நிரம்பி உள்ளதால் கரையோரம் உள்ள குடியிருப்புக்குள் தடுப்பு மணல் மூட்டைகளையும் தாண்டி தண்ணீர் வந்து உள்ளது என்றனர்.
இதேபோல் புழல் ஏரியில் 21.20 அடியும், பூண்டி ஏரியில் 35 அடியும் தண்ணீர் முழுவதும் நிரம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது. புழல் ஏரிக்கு 270 கனஅடி தண்ணீர் வருகிறது. 50 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. பூண்டி ஏரிக்கு 850 கன அடியும் தண்ணீர்வருகிறது. 500 கனஅடி வெளியேற்றப்படுகிறது.
சோழவரம் ஏரியில் 18.86 அடியில் 12.72 அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 45 கனஅடி தண்ணீர் வருகிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கனஅடியில் 461 மி.கன அடி தண்ணீர் உள்ளது.ஏரிக்கு நீர் வரத்து இல்லை.






