என் மலர்
நீங்கள் தேடியது "Agricultural Development"
- நெற்பயிர்களை திமுக அரசு கொள்முதல் செய்யவில்லை என்றால், எதற்கு இந்த அரசு இருக்கிறது?
- விவசாயிகளை முற்றிலுமாக புறக்கணித்துள்ள அரசாக தான் இன்றைய விடியா திமுக அரசு இருக்கிறது.
2020-21 அதிமுக ஆட்சி காலத்தில் 4.5% ஆக இருந்த விவசாய வளர்ச்சி 2024-25 திமுக ஆட்சியில் 0.09% ஆக குறைந்தது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
டெல்டா மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் தஞ்சையில் உள்ள நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்த உடன் தஞ்சை விரைந்தேன். பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்ததுடன், நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டேன்.
"திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்கனவே உள்ள நெல் மூட்டைகளை, குடோனுக்கு எடுத்து செல்லாததால், புதிய கொள்முதல்களை வைக்க இடமில்லை" என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனை சட்டப்பேரவையில் நான் குறிப்பிட்டால், அதனை மறுத்த திமுக அரசின் உணவுத்துறை அமைச்சர், தாங்கள் வேகமாக, துரிதமாக செயல்படுவதாக குறிப்பிட்டார். ஒரு நாளுக்கு 2,000 மூட்டைகள் எடை போடப்படுவதாகவும் கூறினார்.
ஆனால், நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வுசெய்த போது, அங்கு இருக்கும் Loadman, ஒரு நாளுக்கு வெறும் 800-900 மூட்டைகள் தான் எடை போடப்படுவதாக சொல்கிறார்.
திமுக அமைச்சர் தவறான கருத்தைப் பதிவு செய்துள்ளார். இது விவசாயத்திற்கு விரோதமான செயல். அஇஅதிமுக ஆட்சியில், ஒரு நாளுக்கு 1,000 நெல் மூட்டைகள் எடை போடப்பட்டன.
இரவு பகலெனப் பாராமல் 100 நாட்கள் போராடி விளைவித்த நெற்பயிர்களை இந்த திமுக அரசு கொள்முதல் செய்யவில்லை என்றால், எதற்கு இந்த அரசு இருக்கிறது?
செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை என்றும், அதனை நான் கேட்டுப் பெறவேண்டும் எனவும் உணவுத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் சொன்னார். ஆனால், கடந்த 18.08.2025 அன்றே மத்திய அரசு அதற்கான அனுமதியை வழங்கிவிட்டது. இது கூடத் தெரியாமல், சட்டமன்றத்தில் தவறான தகவலை தெரிவித்துள்ளார் திமுக அரசின் அமைச்சர்.
தான் போட்ட நகையை அடமானம் வைத்து விளைவித்த நெற்பயிரை 20 நாட்களாகக் கொள்முதல் செய்யாமல் இழுத்தடித்து, தற்போது மழையில் நனைந்து முளைத்துப் போனதால் என்ன செய்வதென தெரியாமல் கண்ணீருடன் என்னிடம் பெண் விவசாயி ஒருவர் கண்ணீர் விட்டு கதறியது, கலங்கச் செய்தது. இது ஒரு கொடுமையான செயல்.
அதிமுக ஆட்சியில் 2020-21 காலத்தில் 4.5% ஆக இருந்த விவசாய வளர்ச்சியை, 2024-25 காலத்தில் 0.09% ஆக படுபாதாளத்தில் தள்ளியது தான் திமுக அரசின் சாதனை.
விவசாயிகளை முற்றிலுமாக புறக்கணித்துள்ள அரசாக தான் இன்றைய விடியா திமுக அரசு இருக்கிறது. விவசாயிகளுடன் எப்போதும் துணை நிற்பது போல், இந்த கடினமான நேரத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அவர்களோடு துணைநிற்கும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் 50 ஊராட்சிகளில் வேளாண் வளர்ச்சி சிறப்பு முகாம் வரும் 7ந்தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து திருப்பூர் வேளாண் இணை இயக்குனர் மகாதேவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில், 2021 - 22ம் நிதியாண்டில், 50 ஊராட்சிகளில் வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தன்னிறைவு பெற்ற ஊராட்சிகளாக மாற்றும் நோக்கில் வேளாண் சார்ந்த அனைத்து துறைகள் இணைந்து, வருகிற 7-ந் தேதி, 50 ஊராட்சிகளில் தொடர் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
அவிநாசியில் ஆலத்தூர், சேவூர், நம்பியாம்பாளையம், பழங்கரை, பாப்பான்குளம், புதுப்பாளையம், செம்பியநல்லுார். தாராபுரத்தில் பொன்னாபுரம், முண்டுவேலம்பட்டி, தொப்பம்பட்டி. குடிமங்கலத்தில், அணிக்கடவு, குடிமங்கலம், வாகைத்தொழுவு.
காங்கயத்தில், நத்தக்காடையூர், பழையகோட்டை, பாப்பினி, பரஞ்சேர் வழி, பொதியம்பாளையம் ஊராட்சி.குண்டடத்தில், எல்லம்பாளையம் புதூர், நந்தவனம்பாளையம், பெருமாள்பாளையம், சடையபாளையம், சங்கரன்டாம்பாளையம், சூரியநல்லுார், வட சின்னேரி பாளையம்.
மடத்துக்குளத்தில், துங்காவி. மூலனூரில் கிழான்குண்டல், கொமாரபாளையம், பொன்னிவாடி. பல்லடத்தில், கணபதிபாளையம், கரைப்புதூர், வடுகபாளையம்புதூர். பொங்கலூரில் கண்டியன்கோவில், தெ.அவிநாசி பாளையம், தொங்குட்டிபாளையம், உகாயனூர்.திருப்பூரில், முதலிபாளையம், வள்ளிபுரம்.
உடுமலையில் ஆண்டிய கவுண்டனூர்,ஜல்லிப்பட்டி, கல்லாபுரம், ஊத்துக்குளியில் செங்கப்பள்ளி, சின்னேகவுண்டன் வலசு, கமலக்குட்டை, கவுண்டம்பாளையம், நடுப்பட்டி, சுண்டக்காம்பாளையம், விருமாண்டம்பாளையம். வெள்ளகோவிலில் பச்சாபாளையம், வேலம்பாளையம் ஊராட்சிகளில் முகாம் நடைபெற உள்ளது.
முகாமில், பட்டா மாறுதல், வண்டல் மண் எடுக்க விண்ணப்பம் பெறப்படும். பயிர்க்கடன் வழங்கல், பயிர் காப்பீடு திட்ட விழிப்புணர்வு, விவசாய கடன் பெற விண்ணப்பம் பெறப்படும். விவசாயிகள், முகாமில் பங்கேற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






