என் மலர்
நீங்கள் தேடியது "farmer house"
- வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோக்களில் இருந்த பொருட்கள் எல்லாம் படுக்கையில் சிதறிக் கிடந்தன.
- வீட்டில் இருந்த மொத்த நகைகள் விவரத்தை போலீசார் விசாரித்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாநகரில் பாசில் நகரை சோ்ந்தவர் முருகேசன் (வயது 68). விவசாயி. இவரது மனைவி ராணி. இவர்களுக்கு அசோக்குமார், கார்த்திக் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணமாகி ஒருவர் சென்னையிலும், மற்றொருவர் பெங்களூருவிலும் வசித்து வருகின்றனர். பாசில்நகர் வீட்டில் முருகேசன், தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் ஆடிப்பெருக்கையொட்டி தனது சொந்த ஊரான திருமயம் அருகே ராங்கியத்திற்கு முருகேசன் தனது மனைவியுடன் வீட்டை பூட்டிவிட்டு சென்றார். அங்கு இரவு தங்கி விட்டு நேற்று காலை புதுக்கோட்டை பாசில் நகருக்கு முருகேசன் தம்பதியினர் திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததுடன் உள்பக்க கதவும் திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோக்களில் இருந்த பொருட்கள் எல்லாம் படுக்கையில் சிதறிக் கிடந்தன. மேலும் 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் இருந்த நகைகள், பணம் எல்லாம் காணாமல் போய் இருந்தது. மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக திருக்கோகர்ணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் விரல் ரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், முருகேசனின் உறவினர்கள் அவரது வீட்டிற்கு வந்தனர். தனது வீட்டில் இருந்த நகைகள் எல்லாவற்றையும் மர்மநபர்கள் அள்ளிச்சென்று விட்டதாக கூறி ராணி கண்ணீர் விட்டு கதறி அழுதார். வீட்டில் 160 பவுன் நகைகளும், ரூ.3 லட்சமும் கொள்ளை போனதாக போலீசாரிடம் முருகேசன் தெரிவித்தார். வீட்டில் இருந்த மொத்த நகைகள் விவரத்தை போலீசார் விசாரித்தனர். அதில் வீட்டில் தனது மனைவி மற்றும் மருமகள்கள் நகைகள் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டிற்குள் புகுந்து கைவரிசை காட்டிவிட்டு தப்பிச்சென்று உள்ளனர். வீட்டின் எதிர்பகுதியில் உள்ள வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதில் முருகேசனின் வீட்டிற்குள் மர்மநபர்கள் வந்து செல்லும் காட்சி எதுவும் பதிவாகியுள்ளதா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். விவசாயி வீட்டில் 160 பவுன் நகைகள் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் கர்ணன்(வயது 30). விவசாயி. இவரது மனைவி சாந்தி(23). இவர்கள் 2 பேரும் கோவில் திருவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தங்களது வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றனர்.
இதைநோட்டமிட்ட மர்மநபர்கள் சிலர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 12 பவுன் நகையை கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்தநிலையில் திருவிழா முடிந்தவுடன் கர்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் வீடு திரும்பினர். அவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடப்பதையும், வீட்டில் இருந்த பொருட்களும் சிதறிக்கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தனர். அங்கு பீரோவில் இருந்த 12 பவுன் நகை கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது. கொள்ளைபோன நகையின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.
இதுகுறித்து சாந்தி திருநாவலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம்போஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் சாந்தியின் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்துக்கும், அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த பெண்ணுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
அதன்பேரில் அந்த பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.






