என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கரூர் விவகாரம்: 19-ந்தேதி விசாரணைக்கு மீண்டும் ஆஜராக விஜய்க்கு சி.பி.ஐ. சம்மன்?
- சம்பவத்துக்கு முழு காரணமும் த.வெ.க.தான் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- த.வெ.க. மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டை நேற்றைய விசாரணையில் விஜய் மறுத்துள்ளார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜயின் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். மேலும் 110 பேர் காயமடைந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஏற்கனவே போலீசார், பிரேத பரிசோதனை மேற்கொண்ட டாக்டர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள், உரிமையாளர்கள், காயமடைந்தவர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் என ஏராளமானோரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.
இதேபோல் த.வெ.க. மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகி தங்களது தரப்பு விளக்கங்களை அளித்து உள்ளனர். மேலும் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்ட வாகனத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மற்றும் பதிவுகளும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
கரூர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு 12-ந்தேதி ஆஜராக சி.பி.ஐ. சம்மன் அனுப்பியதையடுத்து அவர் நேற்று சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். அவரிம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மதிய உணவு இடைவேளைக்கு அவர் வெளியே விடப்படவில்லை. அவருக்காக வெளியில் இருந்து உணவு கொண்டு செல்லப்பட்டது.
பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே மாலை 6.30 மணிக்கு விசாரணை முடிந்து விஜய் வெளியே வந்தார். அவரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.
கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே நடத்திய விசாரணையின் அடிப்படையில் விஜய்யிடம் கேட்பதற்கு கேள்விகள் தயாரித்து வைக்கப்பட்டு இருந்தன. கிட்டத்தட்ட 100 கேள்விகள் தயாரிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது.
விஜய் விசாரணைக்கு சென்ற நேரத்தை ஒட்டியே கரூர் சம்பவம் நடந்தபோது சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்தவரும், தற்போது ஆயுதப்படை டி.ஜி.பி.யாக இருக்கும் டேவிட்சன் தேவாசீர்வாதம், மத்திய மண்டல ஐ.ஜி.யாக இருந்த (தற்போது தலைமையக கூடுதல் கமிஷனர்) ஜோஷி நிர்மல்குமார் ஆகியோரும் ஆஜர் ஆகினர். விஜய்யிடம் கேட்கப்பட்ட கேள்விகளை ஒப்பிட்டே அவர்களிடமும் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும் என தெரிகிறது.
சம்பவத்துக்கு முழு காரணமும் த.வெ.க.தான் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் த.வெ.க. இதனை மறுத்து போலீஸ் தரப்பை குற்றம் சாட்டியுள்ளது.
எனவே, சி.பி.ஐ. விசாரணை இருபக்கமும் கூர்மையாக செல்கிறது. சி.பி.ஐ. அதிகாரிகள் 3 கோணங்களில் விசாரணையை கொண்டு செல்கிறார்கள். ஒன்று, கட்சியிடம் நடத்தப்படுகிறது. மற்றொன்று காவல்துறை மற்றும் அதிகாரிகளிடம் நடத்தப்படுகிறது. இன்னொன்று சி.பி.ஐ. அதிகாரிகளின் கள ஆய்வு மூலம் தகவல்கள் சேகரிக்கப்படுகிறது.
இந்த 3 கோண விசாரணையையும் சி.பி.ஐ. அதிகாரிகள் ஒப்பீடு செய்து அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு செல்வார்கள் என கூறப்படுகிறது.
த.வெ.க. மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டை நேற்றைய விசாரணையில் விஜய் மறுத்துள்ளார். சம்பவத்துக்கு த.வெ.க. பொறுப்பல்ல என அவர் உறுதிபட கூறியுள்ளார்.
அவரை 2-வது நாளாக இன்று விசாரணைக்கு வருமாறு சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்டுள்ளனர். ஆனால் பொங்கல் பண்டிகையை காரணம் காட்டி, பொங்கலுக்கு பிறகு விசாரணையை தொடருமாறு விஜய் தரப்பில் கேட்கப்பட்டது. அதற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மதித்து உள்ளனர்.
இந்நிலையில சி.பி.ஐ. முதற்கட்ட விசாரணை முடிந்து டெல்லியில் இருந்து சென்னைக்கு விஜய் புறப்பட்டார்.
ஜன. 19-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக விஜய்க்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.






