search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2G Case"

    • டெல்லி ஐகோர்ட்டு விசாரணை நீதிமன்றம் கிடையாது என்பதால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராக வேண்டியதில்லை.
    • சி.பி.ஐ. கோர்ட்டின் தீர்ப்பு சரியா? தவறா என்பது குறித்த வாதங்கள் மற்றும் விசாரணை மட்டுமே டெல்லி ஐகோர்ட்டில் நடைபெறும்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றது என்றும், இதனால் அரசுக்கு ரூ1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது என்றும் மத்திய கணக்கு தணிக்கை துறை அதிகாரியாக இருந்த வினோத் ராய் அறிக்கை தாக்கல் செய்தார்.

    இதையடுத்து அப்போதைய மத்திய மந்திரியாக இருந்த ஆ.ராசா தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

    பின்னர் 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆ.ராசா கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தி.மு.க. எம்.பி. கனிமொழியும் சேர்க்கப்பட்டார். அவர் அதே ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை விசாரிப்பதற்காக சிறப்பு கோர்ட்டு அமைக்கப்பட்டது. நீதிபதி ஓ.பி.ஷைனி இந்த வழக்கை விசாரித்தார்.

    அதே ஆண்டு நவம்பர் மாதம் கனிமொழி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 2012-ம் ஆண்டு ஆ.ராசா ஜாமீனில் விடுதலையானார். இந்த நிலையில் 2014-ம் ஆண்டு ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 17 பேருக்கு எதிராக சி.பி.ஐ. கோர்ட்டில் மத்திய அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. பின்னர் இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது.

    2017-ம் ஆண்டு டிசம்பர் 21-ந்தேதி இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி ஓ.பி.ஷைனி தீர்ப்பு அளித்தார்.

    இந்த நிலையில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கடந்த 2018-ம் ஆண்டு டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ தரப்பில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை தாமதமானதால், மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என சி.பி.ஐ. தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இதனையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பியது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் பல மனுக்கள் டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.

    இதையடுத்து மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்பதா அல்லது வேண்டாமா என்பது தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி தினேஷ்குமார் விசாரணை நடத்தினார்.

    மனுக்களை விசாரணைக்கு ஏற்கலாமா அல்லது வேண்டாமா என்பது தொடர்பாக வக்கீல்கள் வாதங்களும் நடந்தன. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி தினேஷ்குமார் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் கடந்த 14-ந்தேதி தள்ளி வைத்தார்.

    இந்த வழக்கில் இன்று காலை டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீதான மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக நீதிபதி தினேஷ்குமார் அதிரடியாக அறிவித்தார். இதையடுத்து கனிமொழி, ஆ.ராசா மீதான 2ஜி வழக்கு மீண்டும் விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்த மேல்முறையீடு வழக்கு விசாரணை வருகிற மே மாதத்தில் இருந்து தொடங்கும் என்று கோர்ட்டு தெரிவித்துள்ளது.

    டெல்லி ஐகோர்ட்டு விசாரணை நீதிமன்றம் கிடையாது என்பதால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராக வேண்டியதில்லை. சாட்சியங்கள் விசாரணையும் நடைபெறாது. ஏற்கனவே இந்த வழக்கின் சாட்சியங்கள் விசாரணை நீதிமன்றமான சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு விட்டன.

    எனவே, சி.பி.ஐ. கோர்ட்டின் தீர்ப்பு சரியா? தவறா என்பது குறித்த வாதங்கள் மற்றும் விசாரணை மட்டுமே டெல்லி ஐகோர்ட்டில் நடைபெறும். புதிதாக சாட்சியங்களை பதிவு செய்வதற்கோ, குறுக்கு விசாரணை செய்வதற்கோ வாய்ப்பு இல்லை. எனவே டெல்லி ஐகோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை விரைவில் முடிவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளராக கனிமொழியும், நீலகிரி தொகுதி தி.மு.க. வேட்பாளராக ஆ.ராசாவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு விசாரிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 2ஜி வழக்கில் விரைவில் இறுதி தீர்ப்புக்கு வாய்ப்புள்ளது என்று பா.ஜ.க. நிர்வாகி பேட்டியளித்துள்ளார்.
    • மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் ராஜாஜி சிலை முன்பு மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க. தேசிய நிர்வாகி ஆசிர்வாதம் ஆச்சாரி கலந்து கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    2ஜி வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் கீழ்அமர்வு நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டிருந்தாலும், டெல்லி ஐகோர்ட்டில் மிக விரைவில் 2ஜி மேல்முறை யீட்டு வழக்கு தினந்தோறும் விசாரிக்கப்பட உள்ளது. அப்போது 2ஜி வழக்கில் சம்பந்தப்பட்ட எம்.பி.க்கள், முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் மீண்டும் விசாரணைக்கு உட்படுத் தப்படுவார்கள்.

    சி.பி.ஐ. சார்பில் அந்த வழக்கு தினமும் விசாரிக்கப்படும் சிறப்பு வழக்காக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள னர். அது கண்டிப்பாக நடக்க வாய்ப்புள்ளது இன்னும் 6-7 மாதத்தில் 2ஜி வழக்கு இறுதி தீர்வை நோக்கி நகரும். அப்போது வழக்கில் சம்பந்தப்பட்ட வர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வர வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உடன் கூட்டுறவு பிரிவு மாநில தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. மாணிக்கம் மாவட்டத் தலைவர் சசிகுமார் பொருளா தாரப் பிரிவு மாநில தலைவர் அன்னை பாத்திமா எம்.எஸ்.ஷா ஊடகப்பிரிவு காளிதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சி.பி.ஐ., அமலாக்கத்துறை சார்பில் 2018-ம் ஆண்டு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
    • குற்றம்சாட்டப்பட்டவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளால் அரசுக்கு ரூ.22 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது.

    புதுடெல்லி :

    2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ., மத்திய அமலாக்கத்துறை ஆகியவை தொடுத்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்பட 14 பேரையும் விடுவித்து சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் தீர்ப்பு கூறியது.

    அந்த தீர்ப்புக்கு எதிராக சி.பி.ஐ., அமலாக்கத்துறை சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    அந்த மேல்முறையீட்டு மனுக்களை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி தினேஷ்குமார் சர்மா விசாரித்து வருகிறார்.

    கடந்த ஏப்ரல் 13-ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது, இந்த விவகாரத்தில் தொடர்புடைய மேல்முறையீட்டு மனுக்களை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்பதால் நாள்தோறும் விசாரிக்க வேண்டும் என சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வக்கீல் நீரஜ் ஜெயின் கோரினார்.

    அதை பதிவு செய்துகொண்ட டெல்லி ஐகோர்ட்டு, 2ஜி வழக்கு தொடர்புடைய மேல்முறையீட்டு மனுக்களுக்கு 5 பக்கங்களுக்கு மிகாமல் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய அனைத்து தரப்பினருக்கும் உத்தரவிட்டு, விசாரணை மே 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் தெரிவித்தது.

    நேற்று விசாரணை தொடங்கியதும் ஆர்.கே.சந்தோலியா உள்ளிட்ட எதிர் மனுதாரர்கள் சார்பில் வக்கீல் விஜய் அகர்வால் ஆஜராகி, சி.பி.ஐ. வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்படாததால், அமலாக்கத்துறை வழக்கிலும் விடுதலை கிடைத்தது. வரையறுக்கப்பட்ட குற்றம் தொடர்புடைய வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நபர் அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என விஜய் மதன்லால் சவுத்திரி வழக்கிலும், அதைத் தொடர்ந்து இந்திராணி பட்நாயக் வழக்கிலும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. அதன்படி, சி.பி.ஐ. வழக்கில் விடுவிக்கப்பட்ட நபர்கள் அமலாக்கத்துறை வழக்கிலிருந்து தானாகே விடுவிக்கப்பட வேண்டும், அமலாக்கத்துறையின் மனுவை முடித்துவைக்க வேண்டும் என வாதிட்டார்.

    அதைத் தொடர்ந்து சி.பி.ஐ. சார்பில் வக்கீல் நீரஜ் ஜெயின் ஆஜராகி, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அரசு அதிகாரிகளுக்கும், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் இருந்த கூட்டு, கட்-ஆப் தேதியை நிர்ணயித்தது, முதலில் வருபவருக்கு முதலில் சேவை என்ற கொள்கையை மீறியது, நுழைவுக் கட்டணத்தை மாற்றியமைக்காதது, விசாரணையின்போது கண்டறியப்பட்ட 200 கோடி ரூபாய் ஆகிய 5 முறைகேடுகளும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அடங்கியுள்ளன என்பதை விரிவாக சுட்டிக்காட்டினார். மேலும், குற்றம்சாட்டப்பட்டவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளால் அரசுக்கு ரூ.22 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது. தவறான முடிவுகளின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவித்த சிறப்பு கோர்ட்டின் தீர்ப்பு சட்டப்படி ஏற்கமுடியாத ஒன்று என வாதிட்டார்.

    வாதங்களை பதிவு செய்துகொண்ட டெல்லி ஐகோர்ட்டு, விசாரணை இன்றும் தொடரும் என தெரிவித்தது.

    2ஜி வழக்கில் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய முன்னாள் மந்திரி ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி ஆகியோருக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    புதுடெல்லி:

    2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சி.பி.ஐ. தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நாட்டின் நலன் சார்ந்த வழக்கு என்பதால் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் எனவும் சி.பி.ஐ. மனு தாக்கல் செய்தது.

    இந்த வழக்கை ஜூலை 30-ந்தேதி ஐகோர்ட்டு விசாரிக்க உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஆ.ராசா, கனிமொழி ஆகியோருக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது.
    2 ‘ஜி’ வழக்கில் பதில் மனு தாக்கல் செய்வதற்கு கூடுதல் அவகாசம் கேட்டவர்கள் தலா 3 ஆயிரம் மரம் நட வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. #2GCase #DelhiHighCourt #TreePlant
    புதுடெல்லி:

    மத்தியில் முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு, 2 ‘ஜி’ அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கு.

    இதில் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. ஒரு வழக்கும், சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் ஒரு வழக்கும் தொடுத்தன.

    அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் தொடுத்த சட்ட விரோத பணபரிமாற்ற தடை வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மனைவி தயாளு அம்மாள், வினோத் கோயங்கா, ஆசிப் பல்வா, கரீம் மொரானி, பி.அமிர்தம், சரத்குமார் உள்ளிட்ட 19 பேரை விடுதலை செய்து டெல்லி தனிக்கோர்ட்டு 2017-ம் ஆண்டு டிசம்பர் 21-ந்தேதி தீர்ப்பு அளித்தது.

    இதே போன்று சி.பி.ஐ. தொடுத்த ஊழல் வழக்கில் ஆ.ராசா, கனிமொழி மற்றும் 15 பேரை அதே நாளில் சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு விடுதலை செய்தது.

    சட்டவிரோத பண பரிமாற்ற தடை வழக்கில் தனிக்கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் டெல்லி ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 19-ந்தேதி மேல்முறையீடு செய்தது.

    அதைத் தொடர்ந்து மறுநாளில், ஊழல் வழக்கில் தனிக்கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. மேல்முறையீடு செய்தது.

    அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் தொடுத்துள்ள மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி நஜ்மி வாஜிரி விசாரித்து வருகிறார்.

    இதில் சுவான் டெலிகாம் நிறுவனத்தின் நிறுவனர் சாகித் பல்வா, குசேகான் பழம், காய்கறி நிறுவனத்தின் இயக்குனர் ராஜீவ் அகர்வால் மற்றும் டைனமிக் ரியால்டி நிறுவனம், டி.பி. ரியால்டி நிறுவனம், நிகார் கட்டுமான நிறுவனம் ஆகியோர் பதில் மனுதாக்கல் செய்யவில்லை.

    இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அவர்கள் பதில் மனு தாக்கல் செய்ய மேலும் அவகாசம் கேட்டனர். அப்போது அவர்களுக்கு மேலும் அவகாசம் வழங்கிய நீதிபதி நஜ்மி வாஜிரி, அவர்கள் ஒவ்வொருவரும் தெற்கு டெல்லி பகுதியில் தலா 3 ஆயிரம் மரம் நடுமாறு உத்தரவிட்டார்.

    இது தொடர்பாக சாகித் பல்வாவும், ராஜீவ் அகர்வாலும் நேரிலும், பிற 3 நிறுவனங்களின் அதிகாரப்பூர்வமான பிரதிநிதிகளும் சம்மந்தப்பட்ட வன அதிகாரி முன் வரும் 15-ந்தேதி ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டார்.

    வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (மார்ச்) 26-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். #2GCase #DelhiHighCourt #TreePlant 
    ×