search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Case registered"

    • நயினார் நாகேந்திரன் உள்பட 25 பேர் மீது வழக்குப்பதிவு.
    • விதிகளை மீறி தேர்தல் பிரசாரம் செய்ததாக புகார்.

    நெல்லை பாராளுமன்ற தொகுதியில் பிரதான கட்சியான பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. நேற்று ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.

    தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை. இந்நிலையில் நேற்று ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம், இருக்கன்துறை உள்ளிட்ட பகுதிகளில் இரவு 10 மணிக்கு மேல் அவர் நிர்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரித்ததாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக தகவல் அறிந்த பறக்கும்படை அதிகாரி தினேஷ்குமார் பழவூர் போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 25 பேர் மீது தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் நடவடிக்கை.
    • அறந்தாங்கி போலீசாரிடம் கண்காணிப்பு குழு அதிகாரி அருள் புகார்.

    பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கும் வகிக்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    இதற்கிடையே, ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ராமநாதபுரம் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அறந்தாங்கியில் நேற்று காலை ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாகவே ஓ.பன்னீர்செல்வம் கூட்டம் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் மீது அறந்தாங்கி போலீசாரிடம் கண்காணிப்பு குழு அதிகாரி அருள் புகார் அளித்துள்ளார்.

    புகாரின் அடிப்படையில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெறுகிறது.

    • தேர்தல் நடத்தும் உதவி அலுவலரான பாளை தாசில்தார் சரவணன் பாளை போலீசில் புகார் அளித்தார்.
    • வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான கடந்த 27-ந்தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் சத்யாவும், தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களும் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    அப்போது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து வாக்குவாதம் ஏற்பட்டது.

    நாம் தமிழர் கட்சியினர் தாங்கள் மனுதாக்கல் செய்ய முதலில் வந்ததாகவும், குறைவான ஆதரவாளர்களுடன் மட்டுமே வந்ததாகவும், ஆனால் காங்கிரசார் அதிகமான எண்ணிக்கையில் வந்திருந்ததாகவும் கூறி நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தேர்தல் நடத்தும் உதவி அலுவலரான பாளை தாசில்தார் சரவணன் பாளை போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.
    • உயிரிழந்த ராஜீவ் வாரிகோ, கனடாவில் சுகாதாரத்துறை அமைச்சகத்தில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒட்டாவா:

    கனடாவில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜீவ் வாரிகோ (வயது51). இவரது மனைவி ஷில்பா கோதா (47), மகள் மகேக் வாரிகோ (16).

    இவர்கள் கனடாவின் பிராம்ப்டனில் உள்ள பிக்ஸ்கைவே அன்ட் வான்கிரிக் டிரைவ் பகுதியில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் இவர்கள் வீட்டில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்றனர். வீட்டில் எரிந்த தீயை அணைத்தனர்.

    அப்போது அங்கு ராஜீவ் வாரிகோ, ஷில்பா கோதா, மகேக் ஆகிய 3 பேரும் தீயில் கருகி பிணமாக கிடந்தனர். அவர்களது உடல்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வீட்டில் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை. இது தொடர்பாக போலீசார், சந்தேகத்திற்கிடமான சம்பவம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகி றார்கள்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரி டாரின்யங் கூறும்போது, வீட்டில் தீப்பிடித்தது தற்செயலாக ஏற்படவில்லை என்று உயர் அதிகாரிகள் கருதியதால் சந்தேகத்திற்குரியதாக விசாரித்து வருகிறோம்.

    தீ விபத்துக்கான சாத்தியமான காரணம் அதிகம் இல்லை. இவ்வழக்கு எங்கள் கொலைப்பணியகத்துடன் விசாரித்து வருகிறோம் என்றார். உயிரிழந்த ராஜீவ் வாரிகோ, கனடாவில் சுகாதாரத்துறை அமைச்சகத்தில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாதிக்கப்பட்ட அப்பெண் கடந்த 23-ந் தேதி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
    • ஆரோக்கிய பாஸ்கர ராஜை கைது செய்து கோர்ட்டு உத்தரவின் பேரில் வேடம் பட்டு சிறையில் அடைத்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே நல்லாப்பாளையம் கிராமத்தில் உள்ள இருளர் குடியிருப்பில் வசித்து வரும் 28 வயது இளம் பெண்ணின் கணவர் கடந்த 2014-ம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அந்த இளம் பெண் 11 வயது மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.

    இந்நிலையில் கணவரின் இறப்பு சான்றிதழ், விதவை உதவித் தொகை வழங்க கோரி நல்லாப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கர ராஜை அப்பெண் அணுகியுள்ளார். இதற்காக ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்றுக் கொண்ட கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கரராஜ், அப் பெண்ணிடம் இருந்து செல்போன் எண்ணைக் கேட்டு வாங்கி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    பாதிக்கப்பட்ட அப்பெண் கடந்த 23-ந் தேதி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். இந்நிலையில் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் காதர் பாஷா, கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கர ராஜை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் கண்டாச்சிபுரம் போலீசார் பெண்களுக்கு பாலியல்எதிரான வன்கொடுமை மற்றும் சாதியை பற்றி பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கர ராஜை கைது செய்து கோர்ட்டு உத்தரவின் பேரில் வேடம் பட்டு சிறையில் அடைத்தனர்.

    • மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • பரளச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள கள்ளக்காரி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி வள்ளி (45). கடந்த 10 வருடங்களாக மனைவியை மாரிமுத்து அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு மனைவி தூங்கிக் கொண்டிருந்த போது மனைவியின் தலையில் மாரிமுத்து அரிவாளால் வெட்டியுள்ளார்.

    அதைப் பார்த்து அங்கிருந்த அவர்களின் மகள் கூச்சலிட்டார். அவரது சத்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். உடனே மாரிமுத்து அங்கிருந்து தப்பிச் சென்றார். அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் இருந்த வள்ளியை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் பரளச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என மெசேஜ் அனுப்பி விட்டு போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து ராயந்த் ரெட்டியை தேடி வந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், நெல்லூரை சேர்ந்தவர் சுரேஷ் குமார் ரெட்டி. இவரது மனைவி ஸ்வப்னா ரெட்டி. தம்பதிக்கு 2 மகன்கள் இவர்களது மூத்த மகன் ராயந்த் ரெட்டி (வயது 14).

    இவர் ஐதராபாத், காஜாகுடா பகுதியில் உள்ள சர்வதேச பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    மகன்கள் இருவரும் ஐதராபாத்தில் படித்து வருவதால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ்குமார் ரெட்டி தனது குடும்பத்தினருடன் ஐதராபாத் கச்சி பவுலி பகுதியில் உள்ள மை ஹோம் பூஜா அடுக்குமாடி குடியிருப்புக்கு குடி பெயர்ந்தார்.

    இந்நிலையில் ராயந்த் ரெட்டிக்கு படிப்பில் நாட்டம் இல்லாததால் சரிவர படிக்க முடியவில்லை. நேற்று முன்தினம் இரவு 8-30 மணி அளவில் ராயந்த் ரெட்டி தனது தாயாருக்கு செல்போனில் தகவல் அனுப்பினார். அதில் படிப்பில் இஷ்டம் இல்லாததால் அவமானமாக உள்ளது.

    இதனால் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என மெசேஜ் அனுப்பி விட்டு போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாய் குடியிருப்பு காவலாளிகளுடன் சேர்ந்து இரவு முழுவதும் தேடினர். தகனது மகனை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து ராயதுர்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து ராயந்த் ரெட்டியை தேடி வந்தனர். நேற்று காலை அடுக்கு மாடி குடியிருப்பின் எச்.பிளாக் படிக்கட்டில் மாணவன் ராயந்த் ரெட்டி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் ராயந்த் ரெட்டி அடுக்குமாடி குடியிருப்பின் 35-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    • விபத்தில் நேதாஜியின் இடுப்புக்கு கீழ் உள்ள உடல்பாகங்கள் முழுவதும் நசுங்கி துண்டானது.
    • ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம், வன்னியர் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கேசவமூர்த்தி. இவரது மகன் நேதாஜி (வயது 19).இவர் தாம்பரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த 22-ந்தேதி காலை நேதாஜி வழக்கம் போல் மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் இருந்து கல்லூரிக்கு செல்ல வந்தார். அப்போது விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற பயணிகள் ரெயிலில் அவர் ஓடிச்சென்று ஏற முயன்றார். இதில் நிலை தடுமாறிய நேதாஜி ரெயிலுக்கும் தண்டவாளத்திற்கும் இடையில் சிக்கி விழுந்தார்.

    அவர் மீது ரெயில் பெட்டிகள் ஏறி இறங்கின. இந்த விபத்தில் நேதாஜியின் இடுப்புக்கு கீழ் உள்ள உடல்பாகங்கள் முழுவதும் நசுங்கி துண்டானது.

    பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய நேதாஜியை மீட்டு சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு கடந்த 2 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேதாஜி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கணவன் மனைவி, 2 குழந்தைகளும் மயங்கிய நிலையில் ஒரு அறையில் கிடந்தனர்.
    • நேசமணி நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் தட்டான் விளை பெருமாள் நகரை சேர்ந்தவர் பிரவீன் (வயது 30). இவரது மனைவி ரூபா (28). இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தையும் ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது.

    பிரவீன் மர வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக தொழிலில் கடுமையான நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கினார்.

    கடன் கொடுத்தவர்கள் பிரவீனுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர். ஆனால் அவரால் கடனை திருப்பிக் கொடுக்க முடியவில்லை.

    இது குறித்து மனைவி ரூபாவிடம் தெரிவித்தார். இதனால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள அவர்கள் முடிவு செய்தனர். நேற்று பிரவீன் விஷ மாத்திரைகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தார். அதனை இரவில் குழந்தைகளுக்கு கொடுத்தனர்.

    பின்னர் பிரவினும், ரூபாவும் விஷம் குடித்தனர்.விஷம் குடித்த பிறகு பிரவீன் வீட்டிலிருந்து கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.

    இதுகுறித்து நேசமணி நகர் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது கணவன் மனைவி, 2 குழந்தைகளும் மயங்கிய நிலையில் ஒரு அறையில் கிடந்தனர். இதை பார்த்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிரவீன் அவரது மனைவி ரூபா மற்றும் 2 குழந்தைகளையும் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் அவரது வீட்டில் இருந்த கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அந்த கடிதத்தில் தொழிலில் கடுமையான நஷ்டம் ஏற்பட்டது. இதனால் ரூ.20 லட்சம் வரை கடன் ஏற்பட்டது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு நெருக்கடி கொடுத்தனர்.

    ஆனால் பணத்தை திரும்ப கொடுக்க முடியவில்லை. இதனால் இந்த முடிவை எடுத்துக் கொண்டதாக குறிப்பிட்டு இருந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து நேசமணி நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

    • வாழுமுனிக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஹரிகிருஷ்ணனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பத்தை அடுத்த மணவெளி தேர்முட்டி வீதியைச் சேர்ந்தவர் வாழுமுனி (வயது 40). ஆட்டோ டிரைவர். வாழுமுனிக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் ஹரிகிருஷ்ணனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று வாழுமுனி குடும்பத்துக்கும், ஹரிகிருஷ்ணன் குடும்பத்துக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் இரு குடும்பத்தினருக்கு இடையே கை கலப்பு ஏற்பட்டது. அப்போது ஹரிகிருஷ்ணன் மகன் செந்தில்குமார், அவரது மனைவி சுமதி ஆகியோர் தாங்கள் வீட்டில் வளர்க்கும் நாயை ஏவி வாழுமுனியை கடிக்க விட்டதாக கூறப்படுகிறது. மேலும் வாழுமுனியின் மனைவி சங்கரி மற்றும் மகன் மணிகண்டன் ஆகியோரையும் அவர்கள் தாக்கினர்.

    அவர்கள் அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றபோது, செந்தில்குமாரின் உறவினர்களான சிங்காரவேலன், மாதேஷ் ஆகியோர் மீண்டும் வாழுமுனியை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து வாழுமுனி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவு
    • போலீசார் சாய்ராம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்

    ஈரோடு

    ஈரோடு மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார்.

    அதன் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த சில நாட்க ளுக்கு முன்பு பவானியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 11 பேர் கொண்ட கும்பல் பிடிபட்டது.

    அதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு கருங்கல்பாளையத்தில் ஆன்லைன் லாட்டரி விற்ப னையில் ஈடுபட்ட பெண் உள்பட 4 பேர் கைது செய்ய ப்பட்டனர். இதை தொட ர்ந்து மாவட்டம் முழுவதும் லாட்டரி சீட்டு விற்பனை நடை பெறுகிறதா? என்று போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று ஈரோடு மாணிக்கம் பாளை யம் ஹவுசிங் யூனிட் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ப னை நடைபெறுவதாக ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்திய போது சாய்ராம் (35) என்பவர் கேரளா லாட்டரி சீட்டுகளை வெள்ளை தாளில் எழுதி பரிசு விழும் என்று ஆசை வார்த்தை கூறி லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடு பட்டது தெரிய வந்தது.

    இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் சாய்ராம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • விருதுநகர் அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலியானார்.
    • இந்த விபத்து குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூர் இந்திரா காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது31). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். நேற்று காருசேரிக்கு சவாரி சென்று விட்டு விருதுநகர்-சிவகாசி ரோட்டில் வந்து கொண்டிருந்தார்.

    மத்தியசேனை பகுதியில் வந்த போது ரோட்டின் குறுக்கே மூதாட்டி ஒருவர் வந்துவிட்டார். அவர் மீது மோதாமல் இருப்பதற்காக ஆட்டோவை திருப்பினார்.அப்போது நடுரோட்டில் கவிழ்ந்து ஆட்டோ விபத்துக் குள்ளானது. டிரைவர் செந்தில்குமார் ஆட்டோவின் அடியில் சிக்கிக் கொண்டார்.

    இதில் படுகாயமடைந்த அவரை, அந்த பகுதி வழியாக வந்தவர்கள் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×