search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "App"

    • புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
    • சீன நாட்டின் லோன் செயலி நிறுவனத்துக்கு அர்ஜூன்குமார் வேலை செய்து வந்தார்.

    திருப்பூர்:

    திருப்பூரை சேர்ந்த வாலிபர் ஒருவர், தனது செல்போனில், லோன் செயலி மூலம் ரூ.3 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். அந்த பணத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் அவரால் செலுத்த முடியவில்லை. அதன்பிறகு பணம் முழுவதையும் கட்டி முடித்தார். ஆனால் அதன்பிறகு அவருடைய செல்போன் எண்ணுக்கு வெளிநாட்டு எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், கடனுக்கான தொகையை வட்டியுடன் கூடுதலாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    அதன்பிறகு அந்த வாலிபர், கூடுதல் பணத்தை கட்டவில்லை. இதைத்தொடர்ந்து அந்த வாலிபர் சிறுமி ஒருவருடன் ஆபாசமாக இருப்பது போன்ற புகைப்படத்தை அந்த வாலிபரின் நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி வைத்திருந்தனர். இதைப்பார்த்து அந்த வாலிபர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதைத்தொடர்ந்து அந்த வாலிபர் திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பீகார் மாநிலம் மதுபானியை சேர்ந்த ரோஷன்குமார் காமத் (வயது 22) என்பவர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை ஹரியானாவில் வைத்து கடந்த மாதம் கைது செய்து பின்னர் சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவத்தில் மற்றொரு நபரை போலீசார் தேடி வந்தனர். மேலும் திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சையது ரபீக் சிக்கந்தர் தலைமையிலான தனிப்படையினர் பீகார் விரைந்தனர்.

    அங்கு பாட்னாவில் பதுங்கி இருந்த அர்ஜூன்குமார் (26) என்பவரை பிடித்தனர். அவர் சீன நாட்டின் லோன் செயலி நிறுவனத்துக்கு அர்ஜூன்குமார் வேலை செய்து வந்தார். அவர் கடன் வசூலிப்பு பிரிவில் குழு தலைவராக செயல்பட்டுள்ளார். ஆபாச படத்தை சித்தரித்து அனுப்பியது தொடர்பாக அர்ஜூன் குமாரை போலீசார் கைது செய்து பின்னர் திருப்பூர் அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். 

    • அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் "ப்ளூ டிக்" மூலம் அடையாளம் காணப்படுவார்கள்
    • டிஜிட்டல் பிசினஸிற்குள் கொண்டுவருவதுடன் மின்மினி செயலியிலும் லிஸ்ட் செய்யப்படுகிறது.

    சென்னை:

    உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களிடையே நெருக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன், தமிழர்கள் தங்களின் தோழமை மற்றும் ஒற்றுமை உணர்வை உணரக்கூடிய ஒரே தளமாக, 'மின்மினி' என்ற செயலி உருவாக்கப்பட்டு இன்று (ஜனவரி 22) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பயனர்கள் ஒருவருக்கொருவர் அரட்டையடிக்கலாம் (சாட் செய்யலாம்), தனிப்பட்ட மற்றும் பொதுவான குழுக்களை உருவாக்கலாம். மேலும் மற்ற செயலி பயனர்களுடனும் தடையின்றி தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம்.

    மின்மினி குழுவால் மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு மல்டி-சேனல் நெட்வொர்க்குகளை கொண்ட மின்மினி செயலியானது கன்டென்ட் கிரியேட்டர்களுக்கும், அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களுக்கும், சிட்டிசன் ஜர்னலிஸ்ட்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் சிறந்த சமூக ஊடக தளமாக விளங்கும்.

    சமூக ஊடகங்களை இதுவரை பயன்படுத்தாதவர்கள் கூட இந்த மின்மினி செயலியை மிகவும் சுலபமாக பயன்படுத்தக்கூடிய எளிய அம்சங்களுடன், டிஜிட்டல் உலகிற்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை

    மின்மினியில், "அங்கீகாரம்" (Verified) என்ற நிலை பணம் கொடுத்து பெறப்படுவதில்லை. மாறாக கன்டென்ட்டின் தரம் மற்றும் மக்களின் வரவேற்பு ஆகியவற்றின் அடிப்படையில் அங்கீகாரமானது நிறுவனத்தால் வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் "ப்ளூ டிக்" மூலம் அடையாளம் காணப்படுவார்கள், எனவே பயனர்கள் நம்பகமான கன்டென்ட்டுகளை படிக்கிறார்கள் அல்லது பார்க்கிறார்கள் என்பதை உணரலாம்.

    காலப்போக்கில், இந்த தளத்தில் மற்ற பயனர்களுடன் தகுதியான உள்ளடக்கத்தை (கன்டென்ட்டுகளை) பகிர்ந்து, அர்த்தமுள்ள தாக்கத்தை உருவாக்கும் தனிப்பட்ட பயனர்கள் "அங்கீகரிக்கப்பட்ட பார்ட்னர்கள்" என மேம்படுத்தப்படுவார்கள்".

    இன்று நடைபெற்ற மின்மினியின் அறிமுக விழாவில் அதன் நிர்வாக துணைத்தலைவர் எஸ்.ஸ்ரீராம், தனது உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், "உலகளாவிய தமிழ்ச் சகோதரத்துவத்தை மட்டுமே மையமாக வைத்து மின்மினியை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். எங்கள் பயனர்கள் செயலியின் தனித்துவமான பயன்பாட்டு அனுபவம் மற்றும் படைப்பாளர்களுக்கான பிற வருவாய் வாய்ப்புகளின் மூலம் நாங்கள் வழங்கும் பல்வேறு சுவாரஸ்யமான அம்சங்களை பயனர்கள் பெறுவார்கள் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்".

    "ஹைப்பர்லோக்கல் கன்டென்ட் மற்றும் எங்கள் செயலியின் மூலம் நாங்கள் உருவாக்கும் இணைப்பைக் கருத்தில் கொண்டு மின்மினி மூலம் விளம்பரதாரர்கள் இந்தியாவின் கடைசி கிராமங்கள் வரை சென்றடைய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்", என்று அவர் மேலும் கூறினார்..

    தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான சிறிய கடைகள், எங்கள் ஏஜெண்டுகள் மற்றும் ஊழியர்கள் மூலம் அடையாளம் காணப்பட்டு, 'மின்மினி கடைகள்', என்ற அங்கீகாரம் அக்கடைகளுக்கு வழங்கப்படும். அக்கடைகள், டிஜிட்டல் பிசினஸிற்குள் கொண்டுவருவதுடன் மின்மினி செயலியிலும் லிஸ்ட் செய்யப்படுகிறது. அந்த கடைக்கு வழங்கப்பட்ட பிரத்யேக கியூ ஆர் கோடுகள் (QR Code) மூலம் செயலியை பதிவிறக்கம் செய்து வாடிக்கையாளர்களை மின்மினி பயனர்களாக மாற்றும் பொழுது கடை உரிமையாளர்கள் வருமானம் பெறுவர். மின்மினி கடைகள் மூலம் பயனர்களும் எளிதாக விளம்பரங்களை புக் செய்யலாம் (தாங்கள் செய்யும் தொழில் வாடிக்கையாளர்களை சென்றடைய, விளம்பரம் பெற விரும்பும் சேவை, பிறந்தநாள் வாழ்த்து, திருமண நாள் வாழ்த்து, இரங்கல் செய்தி என பல்வேறு விளம்பரங்களை புக் செய்யலாம்) ஹைப்பர் லோக்கல் விளம்பரங்கள் மூலம் அந்தந்த பகுதிகளுக்கே எளிதாக சென்றடையலாம்.

    இந்த செயலியானது தமிழகத்தின் ஒவ்வொரு வட்டாரத்திலும் எலக்ட்ரீஷியன்கள், பிளம்பர்கள், கார்பெண்டர்கள் போன்ற ஆயிரக்கணக்கான சேவை வழங்குபவர்களைக் காலப்போக்கில் கொண்டிருக்கும். எனவே பயனர்கள் அத்தகைய பணியாளர்களை உடனடியாக தேடலாம். சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான அதன் தனித்துவமான விளம்பரத் தொகுப்புகளுடன், மின்மினி பயனர்களை சென்றடையும் வழியையும் வழங்கும்.

    "தமிழகம் முழுவதும் 40 லட்சத்துக்கும் அதிகமான கடைக்காரர்கள், சேவை வழங்குபவர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் வணிகர்கள் இருப்பதாக நாங்கள் மதிப்பிட்டுள்ளோம். அவர்களில் பலரை, மின்மினி செயலி மூலம் லிஸ்ட் செய்து அவர்களையும் டிஜிட்டல் பிசினஸிற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்", என்றார்.

    "விளம்பரதாரர்கள் மற்றும் பிராண்டுகளுக்கு, எங்களின் தனித்துவமான பின்-கோடு மூலம், தமிழ்நாட்டின் கடைசி தாலுகா வரை கடைசி மைல் தூரத்தை சென்றடையும் வழியை மின்மினி வழங்கும்", என்று ஸ்ரீராம் கூறினார்.

    மின்மினி செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..

    • வோட்டர்ஸ் ஹெல்ப் லைன் என்ற மொபைல் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம்.
    • காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலுக்குட்பட்ட 2308 வாக்குச்சாவடிகளிலும் கடந்த 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைத்திட ஏதுவாக தேர்தல் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

    தற்பொழுது இரண்டாம் கட்டமாக நாளை ( சனிக்கிழமை ) மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக் கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட 2308 வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது.

    எனவே, கடந்த சிறப்பு முகாமினை பயன்படுத்தி கொள்ள தவறிய பொது மக்கள் இச்சிறப்பு முகாம்களை பயன்படுத்தி கொள்ளலாம்.

    இச்சிறப்பு முகாமில் 17 வயது பூர்த்தியடைந்தவர்கள் அடுத்து வரும் நான்கு காலாண்டுகளின் மைய தகுதிநாளில் (அதாவது ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1) 18 வயதினை பூர்த்தியடைபவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட, படிவம் எண் 6 பூர்த்தி செய்தும், இறப்பு, நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவு போன்ற காரணங்களினால் பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7 பூர்த்தி செய்தும், வாக்களார் பட்டியலில் அனைத்து வகையான திருத்தங்களை மேற்கொள்ள படிவம் 8 பூர்த்தி செய்தும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பதற்கு படிவம் 6பி பூர்த்தி செய்தும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கலாம்.

    மேலும், மேற்படி முகாமினை பயன்படுத்திகொள்ள இயலாத வாக்காளர்கள் அலுவலக வேலை நாட்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் 9.12.2023 வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தேர்தல் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம். நேரில் சென்று படிவங்கள் பெற்று பூர்த்தி செய்து வழங்க இயலாதவர்கள் www.nvsp.in என்ற இணைய தளம் மற்றும் Voters Help Line என்ற மொபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்

    மேலும் விபரங்கள் அறிய 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிவரை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

    • சென்னையில் இருந்து இன்று ரெயில் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்பாடி விரைந்தார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விழா பேரூரை ஆற்றுகிறார்.

    வேலூரில் நாளை தி.மு.க பவள விழாவுடன் கூடிய முப்பெரும் விழா நடைபெற உள்ளது.

    இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கட்சி நிர்வாகிகள் அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர். இதனால் ஆயிரக்கணக்கானோர் விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்காக வேலூர் அடுத்த கந்தனேரியில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே பிரம்மாண்ட கோட்டை வடிவிலான மேடை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

    விழாவில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து இன்று ரெயில் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்பாடி விரைந்தார். ரெயில் நிலையத்தில் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

    முதலமைச்சர் இன்று இரவு வேலூர் அரசு சுற்றுலா மாளிகை அல்லது தனியார் ஓட்டலில் தங்குகிறார். நாளை காலை முதல் பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. மாலையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விழா பேரூரை ஆற்றுகிறார்.

    இந்நிலையில், நாளை வேலூரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் மக்களுடன் ஸ்டாலின் என்ற செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்.

    முதலமைச்சரின் கள செயல்பாடுகளை அறிந்துகொள்ளும் வகையிலும், எல்லாருக்கும் எல்லாமும் கிடைத்தாக வேண்டும் என்ற நோக்கிலும் இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

    • பயனர் எண்ணிக்கை பற்றிய விவரங்களை இன்ஸ்டாகிராம் செயலியிலேயே அறிந்து கொள்ள முடியும்.
    • இரண்டு மணி நேரத்தில் திரெட்ஸ் ஆப்-ஐ இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்தனர்.

    மெட்டா நிறுவனத்தின் திரெட்ஸ் சமூக வலைதள சேவை வெளியான ஐந்து நாட்களில் 100 மில்லியன் பயனர்களை பெற்று அசத்தி இருக்கிறது. மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் இந்த தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறார். இத்தகைய மைல்கல்லை எட்டியதில் திரெட்ஸ் ஆப் சாட்ஜிபிடி-யை பின்னுக்குத் தள்ளியது.

    திரெட்ஸ் சேவையின் பயனர் எண்ணிக்கை பற்றிய விவரங்களை இன்ஸ்டாகிராம் செயலியிலேயே அறிந்து கொள்ள முடியும். அறிமுகமான இரண்டு மணி நேரத்தில் திரெட்ஸ் ஆப்-ஐ இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்து இருந்தனர்.

    பிறகு பயனர் எண்ணிக்கை படிப்படியாக 5 மில்லியன், 10 மில்லியன், 30 மில்லியன் மற்றும் 70 மில்லியன் வரை சீராக அதிகரித்தது. இத்தகைய டவுன்லோட்கள் மூலம் திரெட்ஸ் செயலி, மெட்டா எதிர்பார்ப்புகளை கடந்து அமோக வரவேற்பை பெற்று இருப்பதாக மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்துள்ளார். 

    • புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் உழவன் செயலியை பயன்படுத்திட வேண்டும் என வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்
    • விவசாயிகள் இச்செயலியில் உரிய பதிவுகள் மேற்கொண்டு துறையின் திட்டப்பலன்களை அறிவதோடு, பயன்பெற்றும் வருகின்றனர்.

    புதுக்கோட்டை,

    அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் இடுபொருட்கள் ஆகியவற்றை பெற்று பயன்பெறுவதற்கு உழவன் செயலியில், புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று வேளாண்மை இணை இயக்குநர் மா.பெரியசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2021-22 ஆம் ஆண்டு முதல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பு 2023-24 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 98 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்களில் பயன்பெறுவதற்காக உழவன் செயலி என்ற உன்னதமான செயலி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. விவசாயிகள் இச்செயலியில் உரிய பதிவுகள் மேற்கொண்டு துறையின் திட்டப்பலன்களை அறிவதோடு, பயன்பெற்றும் வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் தங்கள் கைபேசியில் உழவன் செயலியினை பதிவிறக்கம் செய்து திட்டப்பலன்களை பெற்றிட உரிய முன்பதிவுகள் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • தற்போது 21 வகையான சேவைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    • பட்டு வளர்ப்பு மற்றும் மானியங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் உழவன் செயலி மூலம் கிடைக்கும்.

    நீடாமங்கலம்:

    குடவாசல் மற்றும் வலங்கைமான் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் உழவர் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ள ஒரு முக்கிய செயலி 'உழவன்'. இதில் தற்போது 21 வகையான சேவைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மாநில மற்றும் மத்திய அரசால் வழங்கப்படும் மானிய திட்டங்கள், விவசாயிகள் தங்களுக்கு தேவையான இடுபொருள்களை எந்த ஒரு தடையும் இன்றி அனைவரும் பெற முன்பதிவு செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு இடுபொருள் முன்பதிவு, பயிர் மகசூல் இழப்பினை தடுத்திடும் பொருட்டு பயிர் காப்பீட்டு விபரம், விவசாயிகள் தாங்கள் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் தனியார் உரக்கடைகளில் உள்ள உரங்களின் இருப்பு மற்றும் விலை விவரங்கள் தங்கள் கைப்பேசியிலேயே எளிதில் அறிந்து கொள்ள ஏதுவாக உரங்கள் இருப்பு நிலை, மேலும் விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகள் அரசு வேளாண்மை விரிவாக்க மையங்கல் மற்றும் தனியார் துறையில் இருப்பு உள்ளதா? இல்லையா? அவற்றின் விலை என்ன என்று இருந்த இடத்திலேயே அறிந்து கொள்ள உதவுகிறது.மேலும் தொடர்பு கொள்ள வேண்டிய நபரின் கைபேசி எண்ணுடன் கூடிய விதை இருப்பு நிலை, மேலும் விவசாயிகளுக்கு உதவிடும் பொருட்டு குறைந்த விலையில் வாடகைக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் நிறுவனங்களின் வேளாண் இயந்திரங்கள் , பல்வேறு விலைப்பொருட்கள் மாநிலம் முழுவதுமுள்ள சந்தைகள் விலை விபரம் தெரிந்து கொள்வதன் மூலம் விவசாயிகள் தங்கள் பொருட்களுக்கான உண்மை விலை விபரங்களை எளிதில் அறிந்து கொண்டு இடை தரகர்களிடம் ஏமாறாமல் இருக்க உதவும். தமிழகம் முழுவதும் உள்ள அணை நீர்மட்டம், தற்போது உள்ள சூழலுக்கு ஏற்ற பின்பற்ற வேண்டிய தொழில்நுட்பங்களை அளிக்கும் வேளாண் செய்திகள், விவசாயிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க உதவிடும் வேளாண் கருத்துக்கள், பூச்சி நோய் கண்காணிப்பு பரிந்துரை அனைத்து பயிர்களுக்கும் படம் பார்த்து பரிந்துரை வழங்கும் பகுதி, பயிற்சி பெற முன்பதிவு செய்திடவும் உதவிடும் அட்மா பயிற்சி மற்றும் செயல் விளக்கம், உழவன் இ-சந்தை, பட்டு வளர்ப்பு மற்றும் மானியங்கள் விலை விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் உழவன் செயலி மூலம் கிடைக்கும்.

    இந்த உழவன் செயலியை பதிவிறக்கம் செய்ய விவசாயிகள் தங்களது செல்போனில் கூகுளில் ப்ளே ஸ்டோர் சென்று உழவன் என தட்டச்சு செய்து ஒரே கிளிக்கில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விவசாயிகள் தங்களுக்கு தேவையான இடுபொருட்களை உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்யும் விவசாயிகளுக்கு 100 சதவீத முன்னுரிமை வழங்கப்படுவதால் இந்த வாய்ப்பினை அனைவரும் தவறாது பயன்படுத்திட வேண்டும்.

    • புதிய செயலியின் இன்டர்ஃபேஸ் இன்ஸ்டாகிராமில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது.
    • இந்த செயலி டுவிட்டர் தளத்திற்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    டுவிட்டர் தளத்திற்கு போட்டியாக புதிய சமூக வலைதள செயலியை மெட்டா நிறுவனம் உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. பிராஜக்ட் 92 பெயரில் உருவாகி வரும் புதிய செயலி பற்றிய முன்னோட்டம் அந்நிறுவன ஊழியர்களுக்கு சமீபத்தில் காட்டப்பட்டது. மெட்டா நிறுவனத்தின் புதிய செயலி எப்படி காட்சியளிக்கும் என்பதை கூறும் ஸ்கிரீன்ஷாட்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

    மேலும், புதிய செயலி த்ரெட்ஸ் (threads) எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது வெளியாகி இருக்கும் ஸ்கிரீன்ஷாட்களின் படி புதிய செயலியின் இன்டர்ஃபேஸ் இன்ஸ்டாகிராமில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இதில் புகைப்படங்கள் காணப்படவில்லை.

    மெட்டா நிறுவனத்தின் மூத்த பிராடக்ட் அலுவலர் க்ரிஸ் கோக்ஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி, புதிய சமூக வலைதள செயலி ஆக்டிவிட்டிபப் சோஷியல் நெட்வொர்க்கிங் ப்ரோடோகாலை (ActivityPub social networking protocol) பயன்படுத்துகிறது. இதை கொண்டு பயனர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் அக்கவுன்டை புதிய பிளாட்ஃபார்மிற்கும் கொண்டு செல்ல முடியும்.

    இந்த செயலி டுவிட்டர் தளத்திற்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த செயலி இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட் விவரங்களை கொண்டு தானாக ப்ரோஃபைல் உருவாக்கும் என்று கூறப்படுகிறது. புதிய தளத்தை பயன்படுத்துவதற்காக மெட்டா நிறுவனம் பல்வேறு பிரபலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    புதிய செயலியை உருவாக்குவதற்கான பணிகள் ஜனவரி மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது. விரைவில், இந்த செயலி பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

    Photo Courtesy: The Verge

    • டிண்டரில் அறிமுகமான பெண்ணிடம் சிக்கிய நிதி ஆலோசகர், தான் ஏமாற்றப்படுவதை அறியாமல் மோசடியில் சிக்கியுள்ளார்.
    • டிண்டர் மோசடியில் ஏமாற்றப்பட்ட நபருக்கு 55 வயது என்று தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    பொது மக்கள் இணையத்தில் பணம் இழப்பது சமீப காலங்களில் பெருமளவு அதிகரிக்க துவங்கி விட்டது. இந்த வரிசையில் தற்போது நிதி ஆலோசகர் ஒருவர் இணைந்து இருக்கிறார். இத்தாலியை சேர்ந்த நிதி ஆலோசகர் ஒருவர் டேட்டிங் வலைதள சேவையான டிண்டரில் சுமார் HK14 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 14 கோடியை இழந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. டிண்டரில் அறிமுகமான பெண்ணிடம் சிக்கிய நிதி ஆலோசகர், தான் ஏமாற்றப்படுவதை அறியாமல் மோசடியில் சிக்கியுள்ளார்.

    டிண்டர் மோசடியில் ஏமாற்றப்பட்ட நபருக்கு 55 வயதாகிறது என சீனாவை சேர்ந்த செய்தி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. ஹாங்காங்கின் மேற்கு மாவட்டத்தில் வசிக்கும் நபருக்கும் சிங்கப்பூரை சேர்ந்த பெண் முதலீட்டு புரோக்கருக்கும் டிண்டரில் மேட்ச் ஏற்பட்டதே, இந்த மோசடியின் ஆரம்பப் புள்ளி.

     

    கடந்த பிப்ரவரி மாதம் டிண்டரில் மேட்ச் ஆனதைத் தொடர்ந்து நிதி ஆலோசகர் மற்றும் முதலீட்டு புரோக்கர் இருவரும் வாட்ஸ்அப்பில் உரையாடலை ஆரம்பித்துள்ளனர். இவர்களின் டேட்டிங் ஆன்லைனில் ஜோராக நடந்து வந்துள்ளது. டேட்டிங்கை தொடர்ந்து டிண்டரில் அறிமுகமான பெண் ஆலோசனையை கேட்டு மார்ச் 6 ஆம் தேதியில் இருந்து மார்ச் 23 ஆம் தேதி வரை பல்வேறு வலைதளங்களில் நிதி ஆலோசகர் முதலீடு செய்து இருக்கிறார்.

    இவ்வாறு பல்வேறு வங்கி கணக்குகளில் இருந்து 22 தனித்தனி பரிவர்த்தனைகளில் நிதி ஆலோசகர் HK 14.2 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 14 கோடி வரை முதலீடு செய்து இருந்தார். இவரின் முதலீடுகளுக்கு நிச்சயம் லாபம் கிடைக்கும் என பெண் வலியுறுத்தி வந்துள்ளார். பெண் கூறியப்படி தனக்கு லாபம் கிடைக்காததை அடுத்து சந்தேகம் அடைந்த நிதி ஆலோசகர், காவல் துறை உதவியை நாடினார். அப்போது காவல் துறையினர் மூலம், தான் ஏமாற்றப்பட்டதை அந்த நபர் அறிந்து கொள்கிறார்.

    காவல் துறையினர், முதலீட்டாளர்களை ஏமாற்ற பல்வேறு போலி வலைதளங்கள் அதிக லாபம் கொடுப்பதாக கூறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளதை தெரிவித்துள்ளனர். மேலும் பொதுமக்கள் போலி வலைதளங்களை நம்பி எவ்வித முதலீடுகளையும் செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

    ஏமாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

    முதலீட்டு ஆலோசகர் பின்னணி குறித்து முழு விசாரணை செய்ய வேண்டும்.

    அதிக லாபம் கொடுப்பதாக கூறுவோரிடம், அதிக கேள்விகளை கேட்க வேண்டும். இவ்வாறு கூறுவோர் நிச்சயம் ஏமாற்றும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.

    மிக முக்கியத்துவம் வாய்ந்த நிதி விவரங்களை கேட்கும் பட்சத்தில், அதிக கவனமுடன் இருப்பது அவசியம் ஆகும். நேரடியாக சந்திக்காத யாருக்கும் பணம் அனுப்ப வேண்டாம்.

    நேரில் சந்திப்பதை பல்வேறு காரணங்களை கூறி தவிர்ப்போரிடம் கவனமாக இருப்பது அவசியம் ஆகும். 

    • பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே குறைகளை இந்த புதிய செயலியில் தெரிவிக்கலாம்.
    • பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை, சொத்து வரிகளையும் செலுத்த ஏற்பாடு செய்து வருகிறோம்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் மாநகராட்சியில் பொதுமக்கள் தங்களது குறைகளையும் மனுக்களையும் தெரிவிக்க புதிய செயலி அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த புதிய செயலியை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் அறிமுகம் செய்து தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தஞ்சை மாநகராட்சி சார்பில் 51 வார்டுகளிலும் உள்ள பொதுமக்கள் வீடுகளில் இருந்தபடியே குறைகளை இந்த புதிய செயலியில் தெரிவிக்கலாம்.

    குப்பைகள் இருந்தாலோ, கழிவு நீர் தேங்கி இருந்தாலோ, கால்நடைகளால் தொல்லை ஏற்பட்டாலோ புகைப்படங்களுடன் தெரிவி த்தால் உடனடியாக குறைகள் நிவர்த்தி செய்யப்படும்.

    செயலியில் பதிவான குறைகளை அனைத்து பிரிவு அதிகாரிகளும் கண்காணிப்பதால் உடனடியாக பிரச்சனையை தீர்வு செய்ய முடியும்.

    தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தஞ்சாவூர் மாநகராட்சியில் தான் இந்த புதிய செயலி தொடங்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த செயலி மூலம் பொது மக்களுக்கு தேவையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் முறையையும் கொண்டு வந்துள்ளோம்.

    விரைவில் இந்த செயலி மூலம் பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை, சொத்து வரிகளையும் செலுத்த ஏற்பாடு செய்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக இந்த புதிய செயலி மூலம் குறைகள், மனுக்களை எவ்வாறு தெரிவிப்பது எப்படி என்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார், மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம், நல்லூர் கந்தம்பாளையத்தில் உழவன் செயலி பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி நடைபெற்றது.
    • உழவன் செயலி பதிவிறக்கம் செய்தல், அதன் பயன்கள் குறித்து விவசாயிகளிடையே எடுத்துக்கூறினார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம், நல்லூர் கந்தம்பாளையத்தில் உழவன் செயலி பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி நடைபெற்றது.

    நல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கட்டிட வளாகத்தில் அட்மா திட்டத்தின் கீழ் உழவன் செயலி பயன்பா டுகள் குறித்த ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது. பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்த சாமி முன்னிலை வகித்தார். வேளாண்மை அலுவலர் பாபு உழவன் செயலி பதிவிறக்கம் செய்தல், அதன் பயன்கள் குறித்து விவசாயிகளிடையே எடுத்துக்கூறினார். துணை வேளாண்மை அலுவலர் குழந்தைவேல் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் நாகராஜன், வேளாண்மை துறையில் தற்போதுள்ள மானியத்திட்டங்கள் மற்றும் பயிர் காப்பீட்டு திட்டங்கள் குறித்து எடுத்து கூறினர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் ரவீனா ஆகியோர் செய்திருந்தனர்.

    • சர்வதேச தரத்திலான தொழில்நுட்பத்தை புகுத்தி போலீஸ் துறையை நவீன மயமாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
    • இந்த புதிய செயலி போலீஸ்துறை நிர்வாகத்திலும், பொதுமக்கள் சேவையிலும் ஒரு மைல் கல்லாக அமையும்.

    காவல் துறையினரின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் 'ஸ்மார்ட் காவலர்' என்ற புதிய செயலியை டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் தமிழகம் சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன், போலீஸ் கமிஷனர்கள்(சென்னை) சங்கர் ஜிவால், (தாம்பரம்) அமல்ராஜ், (ஆவடி) சந்தீப்ராய் ரத்தோர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    பின்னர், தமிழக போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் சார்பில் இன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சர்வதேச தரத்திலான தொழில்நுட்பத்தை புகுத்தி போலீஸ் துறையை நவீன மயமாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக போலீஸ் துறையினரின் செயல்திறனை மேம்படுத்தவும், குற்ற ஆவணங்களை துல்லியமாக பதிவு செய்யவும், பராமரிக்கவும், தரவுகளை முறையாகவும், சிறப்பாக கையாளவும் 'ஸ்மார்ட் காவலர்' என்ற புதிய செயலியை சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்.

    'ஸ்மார்ட் காவலர்' செயலி, காவல் துறையில் களப்பணியாற்றும் அலுவலர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காகவும், களப்பணியின்போது நிகழும் சம்பவங்களை உடனுக்குடன் பதிவு செய்வதற்காகவும், கள அலுவலர்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டாலோ அல்லது உடனடி உதவிகள் தேவைப்பட்டாலோ அது குறித்த செய்தியை உடனடியாக உயர் அலுவலர்களுக்கு தெரிவிக்க ஏதுவாக இருக்கும்.

    இந்த புதிய செயலி போலீஸ்துறை நிர்வாகத்திலும், பொதுமக்கள் சேவையிலும் ஒரு மைல் கல்லாக அமையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×