search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "government workers"

    சென்னை மாவட்டத்தில் உள்ள 3,754 வாக்குச்சாவடிகள் மற்றும் 72 துணை வாக்குச்சாவடிகளில் சுமார் 24 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
    சென்னை:

    சென்னை மாவட்டத்தில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிக்கும், பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கும் நடைபெறும் தேர்தலில் மத்திய-மாநில அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    சென்னை மாவட்டத்தில் உள்ள 3,754 வாக்குச்சாவடிகள் மற்றும் 72 துணை வாக்குச்சாவடிகளில் சுமார் 24 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    வாக்குப்பதிவுக்கு 10,797 வாக்குப்பதிவு எந்திரங்களும், 5298 கட்டுப்பாட்டு கருவிகளும் தயார் நிலையில் உள்ளன.

    தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு 4 கட்டமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. 16 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 16 மையங்களில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

    நேற்று முதல் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஏப்ரல் 7, 14 மற்றும் 17-ந் தேதிகளில் 16 மையங்களில் 20,271 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தபால் ஓட்டு தொடர்பான ஆவணங்கள், பயிற்சி கையேடுகள் அளிக்கப்பட்டன.

    மேலும் அதில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை எந்திரம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்படுகிறது.

    சென்னை மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 48 பறக்கும் படை குழுக்களின் எண்ணிக்கை 144 ஆக அதிகரிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று தேர்தல் அதிகாரி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

    ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு ‘சஸ்பெண்டு’ ஆன அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்ட காலங்களில் வேறு வேலை பார்க்கவில்லை என்று சான்று கொடுத்தால் மட்டுமே பாதி சம்பளம் வழங்கப்படும் என தெரிய வந்துள்ளது. #JactoGeo
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த 22-ந் தேதி முதல் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இதில் மறியலில் ஈடுபட்டவர்கள், வேலைக்கு செல்பவர்களை தடுத்தவர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சிலர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் ஜாமீனில் வெளி வந்துள்ளனர். இவர்கள் மீது துறைரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஜாக்டோ-ஜியோ போராட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்டது.

    முதல்-அமைச்சரின் கனிவான வேண்டுகோளை ஏற்றும், மாணவர்களின் நலன் கருதியும் எந்தவிதமான தொடர் போராட்டத்திலும் ஈடுபட போவதில்லை என்று சங்க நிர்வாகிகள் அறிவித்தனர்.

    போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ள நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஜாமீனில் வெளி வந்துள்ளனர். இவர்கள் மீது துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ள நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெரும்பாலான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைக்கு திரும்பி உள்ள நிலையில் துறை ரீதியாக நடவடிக்கைக்கு உட்பட்டவர்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    தற்காலிக பணி நீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சிறைக்கு சென்றவர்கள் இன்று வேலையில் சேர முடியவில்லை.

    சென்னை தலைமை செயலகத்தில் ‘சஸ்பெண்டு’ நடவடிக்கைக்கு உள்ளான ஜாக்டோ-ஜியோ நிர்வாகி வெங்கடேசன் இதுபற்றி கூறியதாவது:-

    அரசு ஊழியர்களில் சஸ்பெண்டு ஆனவர்களில் நானும் ஒருவன். போராட்டத்தை தூண்டியதாக என் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். தலைமை செயலகத்தில் நான் உள்பட 30 பேர் சஸ்பெண்டு ஆகி உள்ளோம். எங்களுக்கு பாதி சம்பளம் தான் கிடைக்கும்.

    எங்களைப்போல் சஸ்பெண்டு ஆனவர்கள் ஜெயிலுக்கு சென்று வந்தவர்கள் சுமார் 3500 பேர் இருப்பார்கள். இவர்களுக்கு 1-ந்தேதி சம்பளம் கிடைக்காது.

    3 அல்லது 4-ந் தேதிகளில் தான் பாதி சம்பளம் கிடைக்கும். சஸ்பெண்டில் இருக்கும்போது தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கவில்லை என்று எழுதி சான்று கொடுத்தால் தான் எங்களுக்கு பாதி சம்பளம் கிடைக்கும்.

    கடந்த 2003-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் அரசு ஊழியர்கள் மீது டிஸ்மிஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டபோது 7 மாதம் பணியில் சேர முடியாமல் இருந்தோம். அதன் பிறகு தேர்தலுக்கு முன்புதான் எங்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்தார். அதன் பிறகே வேலையில் சேர முடிந்தது.

    அதேபோல் இப்போதும் சஸ்பெண்டு நடவடிக்கைக்கு ஆளாகி இருப்பதால் பணியில் சேர முடியாத நிலை உள்ளது.

    தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து எங்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்வதாக அறிவித்தால்தான் நாங்கள் பணியில் சேர முடியும். அப்போதுதான் முழு சம்பளத்தை பெற முடியும். அதுவரை பாதி சம்பளம் தான்.

    பாராளுமன்ற தேர்தல் வருவதால் அதற்கு முன்பு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எங்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்து அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #JactoGeo

    கடந்த 9 நாட்களாக நடைபெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் இன்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வழக்கம்போல பணிக்கு திரும்பினார்கள். #JactoGeo
    சென்னை:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பின் கீழ் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 22-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    ஒவ்வொரு நாளும் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் செய்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். 1500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. நேற்று 9-வது நாளாக வேலைநிறுத்தம் நீடித்தது.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “அர்ப்பணிப்பு உணர்வோடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற வேண்டுகோள் விடுத்தார்.

    இந்த நிலையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் உயர்மட்டகுழு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் நடந்தது. இதில் வேலைநிறுத்தத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளான அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அதில் இருந்து எப்படி விடுவிப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    இந்த நிலையில் முதல்-அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய தலைவர் சண்முகராஜன், தமிழ்நாடு தலைமை செயலக சங்கத்தலைவர் பீட்டர் அந்தோணிசாமி, தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர் சங்கத் தலைவர் பாலமுருகன் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூட்டாக தெரிவித்தனர்.

    இதையடுத்து கடந்த 9 நாட்களாக நடைபெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது.

    இந்த நிலையில் இன்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வழக்கம்போல பணிக்கு திரும்பினார்கள். #JactoGeo


    மதுரையில் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 150 பேரை போலீசார் கைது செய்தனர். #JactoGeo #Strike
    மதுரை:

    பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச திட்டத்தை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த ஒரு வாரமாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதனால் அரசு பணிகள் முற்றிலும் முடங்கியது. பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக மாணவ-மாணவிகளின் கல்வியும் பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் அரசு நடவடிக்கையால் இன்று அரசு பள்ளிகளில் 80 சதவீத ஆசிரிய-ஆசிரியைகள் பணிக்கு திரும்பி உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆனாலும் ஜாக்டோ-ஜியோ சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்றும் 8-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மதுரையில் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் 68 பெண்கள் உள்பட 150 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் நுழைய முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    இதேபோல் ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தன. #JactoGeo #Strike

    தனியார் ஊழியர்களை விட அதிக சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்க இயலாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். #MinisterJayakumar #JactoGeo
    சென்னை:

    மீன்வளம் மற்றும் பணியாளர் நிர்வாக சீர்த்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பின் கீழ் செயல்படும் பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களும், ஆசிரியர் சங்கங்களும் கடந்த 22.1.2019 முதல் காலவரையற்ற தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

    இச்சங்கங்கள் வலியுறுத்தி வரும் கோரிக்கைகள் யாவும் அரசால் பரிசீலிக்கப்பட்டு செயல்படுத்த இயலாது என பலமுறை தெரிவித்தும், அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் தவறான பிரச்சாரத்தின் அடிப்படையில் அவர்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு, போராட்டத்தை தொடங்கி, சில தீவிரமான வழிமுறைகளை அவர்கள் தற்போது கடைபிடிக்க தொடங்கியிருப்பது வேதனை அளிக்கிறது.

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தினால், மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதியே இல்லாமல் போவதுடன், அரசு வசூலிக்கும் வரியுடன் கடன் பெற்றுத்தான் சம்பளமும், ஓய்வூதியமும் தரவேண்டிய நிலை ஏற்படும்.

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த சாத்தியக்கூறு இல்லை என்றும், அவ்வாறு செய்தால் அரசு பெறும் வரி வருவாயைவிட கூடுதலாக சம்பளத்திற்கும், ஓய்வூதியத்திற்கும் செலவு செய்ய வேண்டி வரும் என்றும், சில ஆண்டுகளுக்குப் பிறகு எந்த மக்கள் நலத்திட்டங்களும், வளர்ச்சிப்பணிகளும் செயல்படுத்த நிதி இருக்காது என்றும் குழு தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில், அரசு மக்களுக்காக இயங்க வேண்டுமே தவிர, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் வழங்க மட்டுமே இயங்கக்கூடாது என்று கருதித்தான் இந்தக் கோரிக்கையை, அரசின் நிர்வாக நலனையும், பொதுமக்கள் நலனையும் கருத்தில் கொண்டு இதை ஏற்க இயலாது என அரசு கருதுகிறது.

    ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு வழங்கியதால் அரசுக்கு ஆண்டுக்கு 14,500 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டாலும், அறிக்கை பெற்ற உடனே அரசு ஊதிய உயர்வை அமல்படுத்தியது. இதனால், அரசின் வருவாய் பற்றாக்குறை 2017-18ஆம் ஆண்டில் 21,594 கோடி ரூபாயாக உயர்ந்துவிட்டது. இந்த ஆண்டு வருவாய் பற்றாக்குறை 24,000 கோடி ரூபாயாக உயரும். இதை அரசு வெளிச்சந்தையில் கடன் பெற்றுத்தான் செலவு செய்கிறது.

    இந்நிலையில், ஊதிய நிலுவை வழங்க வேண்டும் என்றால் அதற்காக 20,000 கோடி ரூபாய் கூடுதலாக நிதி தேவைப்படுகிறது. இதையும் அரசு கடன் பெற்றுத்தான் வழங்க முடியும். கூடுதல் கடன் சுமையை சமாளிக்க வேண்டுமென்றால் மக்கள் மீது கூடுதல் வரிச்சுமையை திணிப்பது ஒன்றே வழியாகும். இதை அரசு தவிர்க்கவே கருதுகிறது.

    இதனால் அரசின் கடன் சுமை மேலும் அதிகரிக்கும். எனவே, தற்போதைய அரசின் நிதிநிலையில் இவர்களின் இந்தக் கோரிக்கை ஏற்க இயலாது என்பதை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், பொதுமக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

    மத்திய அரசில் இடைநிலை ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. ஆனால் மாநில அரசில் இவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். மேலும் இதே கல்வித் தகுதியில் பிற அரசுப் பணிகளிலும் அரசு ஊழியர்கள் பணிபுரியும் நிலையில், இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு தர இயலாது. அனைவருக்கும் ஊதியத்தை உயர்த்தித் தந்தால் மேல்நிலையில் உள்ளவர்களுக்கும் ஊதியத்தை உயர்த்த வேண்டிய நிலை வரும்.

    இதனால் அரசுக்கு ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படுவதுடன், அரசு ஊழியர்களுக்கிடையே உள்ள ஒப்பீட்டுச் சமநிலையை இது வெகுவாக பாதிக்கும்.

    எனினும், இதே கல்வித் தகுதியுள்ள பிற பணியாளர்களை விட இடைநிலை ஆசிரியர்களுக்கு கூடுதலாக மாதம் 2,000 ரூபாய் சிறப்பு ஊதியம் வழங்கப்படுகிறது. இதனால் தான், இந்தக் கோரிக்கையை செயல்படுத்த இயலாது என பலமுறை தெரிவித்தும், இப்போது போராட்டத்தில் அவர்கள் ஈடுபடுவது அரசை நிர்ப்பந்திக்க வேண்டும் என்ற உள்நோக்குடன்தான் இச்சங்கங்களும் அதன் பிரதிநிதிகளும் ஈடுபட்டுள்ளனர் என்பதைத் தான் காட்டுகிறது.

    இடைநிலை ஆசிரியர்கள் 2003ற்கு பிறகு பணியில் சேரும் போதே, புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் தான் பணிபுரிய வேண்டும் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.

    இதுபோன்ற செயல்படுத்த முடியாத கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், பிற தனியார் நிறுவனங்களைக் காட்டிலும் அதிக சம்பளம் பெறுகின்றனர் என்பதை உணர வேண்டும்.

    இந்த சங்கடங்களையெல்லாம் நடுநிலையான அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நன்கு அறிவார்கள். ஆனால் சிலர் சங்கம் நடத்த வேண்டும் என்பதற்காகவும், தங்கள் பிரச்சனைகளை அரசியல்படுத்துவதற்காகவும், அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் தூண்டிவிட்டு, தவறான பாதையில் வழிநடத்துகின்றனர்.

    மேலும், 5000 அரசுப் பள்ளிகளை மூடுவதாகவும், 3500 அரசுப் பள்ளிகளை இணைப்பதாகவும் தவறான கருத்துக்களை மக்களிடையே பரப்புகின்றனர். இது முற்றிலும் தவறான செய்தியாகும்.



    இவர்களின் உள்நோக்கத்தை புரிந்துகொண்டு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் விழிப்போடு இருப்பதுடன், அரசின் நோக்கம் மக்கள் நலம் காப்பதே என்ற உண்மையும், எண்ணற்ற படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் திண்டாடி வரும் நிலையில் அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வளர்ச்சிப் பணிகளை அரசு தான் செய்ய வேண்டும்.

    இதை உணர்ந்து, தற்போதைய நிதி நிலையில், அரசின் நிர்வாக முன்னுரிமையைக் கருத்தில்கொண்டு, இது போன்ற தேவையற்ற போராட்டத்தை தூண்டி விடும் சங்கங்கள் வீசும் சதி வலையில் விழாமல், அரசுக்கு ஒத்துழைப்பு நல்கி மக்கள் பணியை தொய்வின்றி தொடர்ந்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். #MinisterJayakumar #JactoGeo 
    தமிழகம் முழுவதும் அரசு ஊழியர், ஆசிரியர்கள் போராட்டம் 4வது நாளாக நீடித்து வரும் நிலையில் மெரினா சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். #JactoGeo
    சென்னை:

    அரசு ஊழியர்-ஆசிரியர்கள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இன்று 4-வது நாளாக தமிழகம் முழுவதும் நீடிக்கிறது.

    போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அதையும் மீறி போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர்.

    அதன்படி இன்று அரசு ஊழியர்-ஆசிரியர்கள் மறியல் போராட்டம் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடந்தது. சென்னையில் எழிலகம் அருகில் ஆயிரத்திற்கும் மேலான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒன்று திரண்டனர்.

    ஒருங்கிணைப்பாளர்கள் அன்பரசு, மாயவன், வெங்கடேசன், தியாகராஜன், தாஸ் ஆகியோர் தலைமையில் திரண்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர். எந்த நிலையிலும் போராட்டத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று அறிவித்தனர்.

    நாளை குடியரசு தினம் கொண்டாடப்படும் நிலையில் ஆசிரியர்கள் போராட்டம் பள்ளி மாணவர்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிகளை திறந்து தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவது வழக்கமாகும். இந்நாளில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவதும் உண்டு.

    ஆனால் தமிழகத்தில் நடைபெற்று வரும் வேலைநிறுத்தத்தால் பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நகர்ப்புறங்களைவிட கிராமப் பகுதியை சேர்ந்த பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களின் கல்வி கற்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.

    அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்து தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    எழிலகம் வளாகத்தில் அமர்ந்து சிறிதுநேரம் போராட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் பேசினார்கள். பின்னர் மறியல் செய்வதற்காக காமராஜர் சாலைக்கு செல்ல முயன்றனர். அவர்களை சாலை பகுதிக்கு விடாமல் போலீசார் தடுப்பு வேலி அமைத்தும், கயிறு கட்டியும் வைத்து இருந்தனர்.

    ஆனால் அதையும் மீறி தடுப்பு வேலிமேல் குதித்து மெரினா சாலையில் உட்கார்ந்தனர். போலீசாரின் கட்டுப்பாட்டை மீறி அரசு ஊழியர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சாலையில் அமர்ந்து அரசு ஊழியர்களை போலீசார் வெளியேற்ற முயன்றனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து செல்ல மறுத்தனர். இதனால் போலீசார் சாலையில் அமர்ந்து மறியல் செய்த ஊழியர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று போலீஸ் வேனில் ஏற்றினர். மற்றவர்கள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றப்பட்டனர்.

    மதுரை ஐகோர்ட்டில் திங்கட்கிழமை அன்று வழக்கு விசாரணைக்கு வருகிறது. பணிக்கு திரும்பவேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.

    அதேநேரத்தில் அரசையும், அரசு ஊழியர் பிரச்சினையை முறையாக அணுக வேண்டும் என்று கூறியுள்ளது. கோர்ட்டின் உத்தரவை மீறவில்லை. எங்களது நியாயமான கோர்க்கையை நிறைவேற்றித்தர வேண்டும் என இப்போது போராடவில்லை. 2 ஆண்டுகளுக்கு மேலாக அரசை வலியுறுத்தி வருகிறோம்.

    இந்த பிரச்சினையை தீர்க்காமல் காலம் கடத்தி வந்தது அரசின் தவறு. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் அதற்கு நாங்கள் காரணம் அல்ல. அரசுதான் பொறுப்பு. மாணவர்கள் நலனில் எங்களுக்கு அக்கறை அதிகம் உள்ளது. எங்களைவிட அவர்கள் மீது அக்கறைப்பட யாராலும் முடியாது.

    தேர்வு நேரத்தில் போராட்டம் நடத்த முடிவு செய்யவில்லை. கஜா புயல் பாதிப்பு என்று கூறி பிரச்சினையை தள்ளி வைத்துவிட்டது. மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தி இந்த பாதிப்பை ஈடுசெய்ய எங்களால் முடியும். அரசின் தவறான முடிவால்தான் இந்த பிரச்சினை. எங்கள் போராட்டம் தொடரும். அரசு அழைத்து பேசி தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார். #JactoGeo

    ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் 4வது நாளாக ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 8 லட்சம் பேருக்கு ‘நோட்டீசு’ அனுப்பப்பட்டுள்ளது. #JactoGeo #GovtStaff
    சென்னை:

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்-ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடந்து வருகிறது.

    கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்த போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) 4-வது நாளாக நீடித்தது.

    தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சுமார் 13 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் 8 லட்சம் பேர் காலவரையற்ற போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் வழக்கமான பணிகள் முடங்கியுள்ளன.

    தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊர்களில் தொடக்கப்பள்ளிகள் கடந்த 4 நாட்களாக மூடப்பட்டுள்ளன. நேற்றும், நேற்று முன்தினமும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைத்து மாவட்டங்களிலும் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    போராட்டத்தை கைவிடுமாறு ஜாக்டோ-ஜியோவுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பல தடவை கோரிக்கை விடுத்தார். ஆனால் அது ஏற்கப்படவில்லை. இந்த நிலையில் போராட்டத்தில் பங்கேற்றுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 25-ந்தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

    இதுபற்றி முடிவு எடுக்க ஜாக்டோ-ஜியோ உயர்மட்ட குழுவின் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை சென்னை திருவல்லிக்கேணியில் நடந்தது. கோர்ட்டு உத்தரவை ஏற்று வேலைக்கு திரும்புவதா? வேண்டாமா? என்று கூட்டத்தில் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது.

    முடிவில் தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ள 9 அம்ச கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற போராட்டத்தைத் தொடர்வது என்று தீர்மானிக்கப்பட்டது. இதனால் தமிழ்நாடு முழுவதும் இன்றும் 4-வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத் தொடர்ந்து காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஜாக்டோ-ஜியோ போராட்டம் தொடங்கிய 22-ந்தேதி முதலே பணிக்கு வராதவர்கள் யார்-யார்? என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு சட்டப்பிரிவு 17-பி-ன் கீழ் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.

    பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவின் பேரில், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், பள்ளிகள் வாரியாக நோட்டீஸ் அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உரிய விளக்கம் அளிக்குமாறு அனுப்பப்படும் நோட்டீசுகளை சில இடங்களில் ஆசிரியர்கள் வாங்க மறுத்ததாக தெரியவந்தது. இதையடுத்து ஆசிரியர்களின் வீடுகளில் நோட்டீசை ஒட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து பணிக்கு வராத ஆசிரியர்களின் வீடுகளில் நோட்டீசை ஒட்டும் பணி நேற்று இரவு தொடங்கி விடிய, விடிய நடந்தது. இன்றும் நோட்டீசு ஒட்டப்பட்டு வருகிறது. கிராம நிர்வாக அதிகாரிகள் துணையுடன் இந்த பணி நடந்து வருகிறது.

    இதன் அடிப்படையில் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பற்றிய முழு விபரமும் இன்று மாலைக்குள் தொகுக்கப்பட உள்ளது. அந்த பட்டியலை கொண்டு நாளை (சனிக்கிழமை) முதல் அதிரடி நடவடிக்கைகள் பாய உள்ளது. சட்ட பிரிவுகளின் துணைகொண்டு பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.

    குறிப்பாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு “நோ ஒர்க், நோபே” என்ற அடிப்படையில் சம்பளத்தை பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எத்தனை நாட்களுக்கு வேலைக்கு வரவில்லையோ, அத்தனை நாட்களுக்கு சம்பளத்தை வழங்கக் கூடாது என்பதில் அரசு தீவிரமாக உள்ளது.

    இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்து நியமனம் செய்ய பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் பிரதீப் யாதவ் அரசாணை வெளியிட்டுள்ளார்.

    அதில் பள்ளி பெற்றோர்-ஆசிரியர் சங்கம் மூலமாக பள்ளிகளுக்கு அருகில் உள்ள ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை தேர்வு செய்து பள்ளிக்கூடங்களை தங்கு தடையின்றி நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் அங்கேரிபாளையம் அரசு பள்ளியில் ஆசிரியர்கள் வேலைக்கு வராததால் தற்காலிக ஆசிரியை மூலம் பாடம் நடத்தப்பட்டது

    அப்படி தேர்வு செய்யப்படும் தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூ.7,500 சம்பளம் வழங்கலாம் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அரசாணையைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. 3 நாட்களுக்குள் தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு பணியை முடிக்கும்படி பெற்றோர்-ஆசிரியர் சங்கங்களிடம் கூறப்பட்டுள்ளது.

    பெற்றோர், ஆசிரியர் சங்கம் இல்லாத பள்ளிகளில் அருகில் உள்ள பள்ளிகளில் இயங்கும் சங்கங்கள் மூலம் தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இப்படி தேர்வு செய்யப்படும் தற்காலிக ஆசிரியர்கள் 28-ந்தேதி முதல் பள்ளிகளில் பணி அமர்த்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 28-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் தற்காலிக ஆசிரியர்கள் உதவியுடன் தொடக்கப் பள்ளிகளைத் திறந்து பாடம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டில் ஜாக்டோ-ஜியோ தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. அன்றைய தினம் மதுரை ஐகோர்ட்டு புதிய உத்தரவுகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஓரிரு நாட்களில் முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #JactoGeo #GovtStaff
    தமிழகம் முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கானோர் கைதானார்கள். #JactoGeo
    சென்னை:

    தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மறியலில் ஈடுபட்டனர்.

    சென்னை மாவட்டம் சார்பில் மாநகராட்சி வளாகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திரண்டனர். மாநகராட்சியின் பின்பகுதி வழியாக ஊழியர்கள் அனுமதிக்கப்பட்டனர். அங்கு குவிந்த அரசு ஊழியர்கள், அரசுக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

    ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள், அவர்கள் மத்தியில் பேசினார்கள். போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

    500 பெண் ஊழியர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேலானவர்கள் திரண்டிருந்த இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் அன்பரசு பேசியதாவது:-

    இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது அரசு ஊழியர்கள் கையில் இல்லை. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் ஆகியோரிடம்தான் உள்ளது.

    குடியரசு தினத்தன்று நாம் மீண்டும் கூடி அடுத்தக்கட்ட போராட்டத்தை வலுப்படுத்த முடிவு செய்வோம். அதற்குள்ளாக ஒருங்கிணைப்பாளர்களை அரசு அழைத்து பேசி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இது போராட்டம் அல்ல. அரசுக்கு நாம் வைத்துள்ள தேர்வு. இந்த தேர்வில் அவர்கள் தேர்ச்சி பெறுவார்களா? தோல்வி அடைவார்களா? என்பது அவர்கள் கையில்தான் உள்ளது.

    மே மாதம் நடைபெறும் தேர்தல் முடிவு ஆட்சியாளர்களுக்கு பதில் கொடுக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதனைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள் வரிசையாக சென்று போலீஸ் வேனில் ஏறி கைதானார்கள். முதலாவதாக ஒருங்கிணைப்பாளர்கள் ரங்கநாதன், அன்பரசு, வெங்கடேசன், மாயவன், சங்கரபெருமாள் ஆகியோர் கைதானார்கள். அவர்களை தொடர்ந்து அரசு ஊழியர்கள் ஒவ்வொருவராக கைதாகி போலீஸ் வேனில் ஏறினார்கள். சுமார் 1000 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கைது செய்யப்பட்டவர்கள் நேரு ஸ்டேடியத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். பெண் ஊழியர்கள் மதிய உணவு கொண்டு வந்திருந்தனர்.

    தாம்பரம் சானடோரியத்தில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில செய்தி தொடர்பாளர் தியாகராஜன் தலைமையில் சிட்லபாக்கம் மற்றும் குன்றத்தூர் ஒன்றியத்திலிருந்து 300-க்கும் மேற்பட்ட பள்ளியிலிருந்து 800-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் செய்த முயன்ற ஆசிரியர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.



    மாதவரம் மண்டல அலுவலகம் எதிரே 100 பெண் ஆசிரியர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை மாதவரம் போலீசார் கைது செய்தனர். அவர்கள் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது போலீசார் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், ஜாக்டோ- ஜியோ சங்கத்தினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அத்துமீறி சாலை மறியலில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு 750-க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் திரண்டனர். பின்பு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பின்னர் மறியலில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் நின்ற போலீசார் மறியலில் ஈடுபட்ட 750-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். அவர்களை வேன்களில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றனர்.

    கடலூர் மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இன்று 10 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலூரில் மறியலில் ஈடுபட்ட 400 பேரும், வேப்பூரில் மறியலில் ஈடுபட்ட 200 பேரும், திட்டக்குடியில் மறியலில் ஈடுபட்ட 400 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    சேலம் மாவட்டத்தில் சேலம், ஏற்காடு, சங்ககிரி, எடப்பாடி, வாழப்பாடி, ஆத்தூர், கெங்கவல்லி, மேட்டூர், ஓமலூர், காடையாம்பட்டி ஆகிய 10 இடங்களில் இன்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் சேலம் மாவட்டத்தில் 2ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், குமாரபாளையம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, ராசிபுரம் ஆகிய 8 இடங்களில் மறியல் நடந்தது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 1500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.

    தர்மபுரி மாவட்டத்தில் 7 இடங்களில் ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டனர். நல்லம்பள்ளி, அரூர், பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம் மற்றும் தருமபுரி தாலுகா அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

    தர்மபுரி தாலுகா அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட 500 பேரை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். இதே போன்று நல்லம்பள்ளி தாலுகா அலுவலகம் முன்பு 250 பேரை போலீசார் கைது செய்தனர். இதே போல் மற்ற இடங்களிலும், மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை போலீசார் கைதுசெய்தனர்.

    தர்மபுரி மாவட்டத்தில் 7 இடங்களில் மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.

    ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் நெல்லை தாலுகா அலுவலகம் முன்பு இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மறியலில் ஈடுபட்ட 700 பேரை போலீசார் கைது செய்தனர். நாங்குநேரி, அம்பை, ஆலங்குளம், தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூர் உள்பட 6 இடங்களில் மறியலில் ஈடுபட்ட சுமார் 2 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்தனர்.

    தூத்துக்குடியில் உள்ள அரசு ஊழியர் சங்கம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 300 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    திருச்செந்தூர், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், விளாத்திகுளம், கோவில்பட்டி, எட்டயபுரம் ஆகிய தாலுகா அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட 1700 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திருச்சி மாவட்டத்தில் தொட்டியம், முசிறி, மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டை நகரில் மறியலில் ஈடுபட்ட 600 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் மறியலில் ஈடுபட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மறியல் காரணமாக பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    மதுரையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் திரண்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 2-வது நாளாக இன்றும் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்ட அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலுக்கு முயன்றனர். தடையை மீறி மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் 900 பெண்கள் உள்பட 1500 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு தாலூகா அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோஅமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 5 ஆயிரம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்- ஆசிரியைகளை கைது செய்தனர்.

    மேலும் கோவை, தஞ்சை, திருவாரூர், நாகை, திண்டுக்கல், கன்னியாகுமரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்திலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கானோர் கைதானார்கள். #JactoGeo

    மதுரையில் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு நுழைய முயன்ற அரசு ஊழியர்கள் 800 பேரை போலீசார் கைது செய்தனர். #BharatBandh
    மதுரை:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரத்தை நிர்ணயம் செய்ய வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது.

    தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கக்கூடாது என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் நேற்றும், இன்றும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

    இதில் வருமான வரித்துறை, தபால் துறை, தொலை தொடர்புத்துறை உள்ளிட்ட மத்திய அரசு துறையில் பணிபுரியும் ஊழியர்கள் பங்கேற்று உள்ளனர்.

    இதே போல் வங்கி, காப்பீடு நிறுவன ஊழியர்களும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    மதுரை மாவட்டத்தில் 2-வது நாளாக நடைபெற்ற வேலைநிறுத்தம் காரணமாக மத்திய அரசு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. வங்கிகள் செயல்படாததால் பொதுமக்களும், வியாபாரிகளும் சிரமம் அடைந்தனர்.

    பல ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

    மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலை முன்பு இன்று காலை தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட தொழிற்சங்கங்ள் சார்பில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் 800-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

    அவர்கள் சாலையை மறித்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். பின்னர் ரெயில் நிலையத்தை முற்றுகையிடுவதற்காக அவர்கள் பேரணியாக சென்றனர்.

    தொழிலாளர்களின் முற்றுகையையொட்டி மதுரை ரெயில் நிலைய கிழக்கு நுழைவுவாயில் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும் தடுப்புகளும் அமைக்கப்பட்டு இருந்தன.

    பேரணியாக வந்தவர்களிடம் கலைந்து செல்லுமாறு போலீசார் கூறினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர். இதையடுத்து போலீசார் தடுத்து நிறுத்தி பெண்கள் உள்பட 800-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

    மதுரை கீழவெளி வீதியில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பெண்கள் உள்பட 50 பேர் கலந்து கொண்டனர்.

    மதுரை ரெயில் நிலையத்தின் மேற்கு நுழைவுவாயில் முன்பு இன்று எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கத்தின் சார்பில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  #BharatBandh
    புதிய பென்‌ஷன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நடத்தினர். #jactojio
    சென்னை:

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்சன் திட்டத்தை கொண்டு வர வேண்டும்,

    21 மாத சம்பள நிலுவை தொகை வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன.

    சேப்பாக்கம் எழிலகத்தில் 4 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து அரசுக்கு தங்கள் உணர்வை வெளிப்படுத்தினர். ஆனாலும் அப்போது அரசு சார்பில் யாரும் பேச்சு நடத்தவில்லை. ஆளும் கட்சி தவிர பிற கட்சி தலைவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். இதையடுத்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

    இந்த நிலையில் இன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டு அறிவித்தனர். இதற்கு அரசு தரப்பில் தற்செயல் விடுப்பு எடுத்தால் சம்பளம் ‘கட்’ செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அரசு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் உத்தரவை மீறி தற்செயல் விடுப்பு எடுத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் இன்று போராட்டத்தில் குதித்தனர். அனைத்து மாவட்டங்களிலும் தாலுகா அலுவலகங்களில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    சென்னையில் எழிலகம் வளாகத்தில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அன்பரசு, வெங்கடேசன், மாயவன் ஆகியோர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாம்பரத்தில் ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன், திருவள்ளூரில் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த போராட்டத்தில் பங்கேற்க ஆசிரியர்கள் விடுப்பு எடுப்பதற்கு தலைமை ஆசிரியர்கள் அனுமதி தராததால் அதையும் மீறி போராட்டத்தில் கலந்து கொண்டனர். அதே போல அரசு ஊழியர்களும் தங்களது பொறுப்பாளர்களிடம் விடுப்பு கடிதத்தை கொடுத்து விட்டு இதில் பங்கேற்றனர். விடுப்பு கடிதத்தை கொடுக்காதவர்கள் தபால் மூலம் அனுப்பி வைத்து விட்டு இன்று போராட்டத்தில் பங்கேற்றனர்.

    ஆசிரியர்கள் விடுப்பு எடுத்து கொண்டு போராட்டத்தில் பங்கேற்றதால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாட்டினை பள்ளி கல்வித்துறை செய்திருந்தது.

    போராட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் அன்பரசு, தியாகராஜன் ஆகியோர் கூறியதாவது:-

    ஒரு நாள் சம்பளத்தை அரசு பிடித்தம் செய்தாலும் பரவாயில்லை என்ற நிலையில் தான் இன்று இந்த போராட்டம் நடக்கிறது. நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் கூட ஒரு வருடமாக அரசு ஏற்றுக்கொண்ட கோரிக்கையினை நிறைவேற்றாமல் இழுத்தடிக்கிறது.

    இந்த போராட்டத்தை ஒரு அடையாள போராட்டமாகத்தான் நடத்துகிறோம். சேலத்தில் வருகின்ற 13-ந்தேதி வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடக்கிறது. அதனை தொடர்ந்து நவம்பர் 27-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்கிறோம். அதற்குள்ளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையினை அரசு நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    போராட்டம் காரணமாக ஆசிரியர்கள் வராததால் அரசு பள்ளியில் மாணவி பாடம் நடத்திய காட்சி

    இந்த போராட்டத்தால் அரசு அலுவலகங்களில் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. என்றாலும் ஊழியர்கள் வராததால் வழக்கமான பணியில் சுணக்கம் ஏற்பட்டது. தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் மாணவர்கள் பாதிக்காத வகையில் வகுப்புகளை நடைபெற்றன. #jactojio

    ×