search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு ஊழியர், ஆசிரியர்கள் 8 லட்சம் பேருக்கு நோட்டீசு - இன்று முதல் தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு
    X

    அரசு ஊழியர், ஆசிரியர்கள் 8 லட்சம் பேருக்கு நோட்டீசு - இன்று முதல் தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு

    ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் 4வது நாளாக ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 8 லட்சம் பேருக்கு ‘நோட்டீசு’ அனுப்பப்பட்டுள்ளது. #JactoGeo #GovtStaff
    சென்னை:

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்-ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடந்து வருகிறது.

    கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்த போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) 4-வது நாளாக நீடித்தது.

    தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சுமார் 13 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் 8 லட்சம் பேர் காலவரையற்ற போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் வழக்கமான பணிகள் முடங்கியுள்ளன.

    தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊர்களில் தொடக்கப்பள்ளிகள் கடந்த 4 நாட்களாக மூடப்பட்டுள்ளன. நேற்றும், நேற்று முன்தினமும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைத்து மாவட்டங்களிலும் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    போராட்டத்தை கைவிடுமாறு ஜாக்டோ-ஜியோவுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பல தடவை கோரிக்கை விடுத்தார். ஆனால் அது ஏற்கப்படவில்லை. இந்த நிலையில் போராட்டத்தில் பங்கேற்றுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 25-ந்தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

    இதுபற்றி முடிவு எடுக்க ஜாக்டோ-ஜியோ உயர்மட்ட குழுவின் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை சென்னை திருவல்லிக்கேணியில் நடந்தது. கோர்ட்டு உத்தரவை ஏற்று வேலைக்கு திரும்புவதா? வேண்டாமா? என்று கூட்டத்தில் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது.

    முடிவில் தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ள 9 அம்ச கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற போராட்டத்தைத் தொடர்வது என்று தீர்மானிக்கப்பட்டது. இதனால் தமிழ்நாடு முழுவதும் இன்றும் 4-வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத் தொடர்ந்து காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஜாக்டோ-ஜியோ போராட்டம் தொடங்கிய 22-ந்தேதி முதலே பணிக்கு வராதவர்கள் யார்-யார்? என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு சட்டப்பிரிவு 17-பி-ன் கீழ் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.

    பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவின் பேரில், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், பள்ளிகள் வாரியாக நோட்டீஸ் அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உரிய விளக்கம் அளிக்குமாறு அனுப்பப்படும் நோட்டீசுகளை சில இடங்களில் ஆசிரியர்கள் வாங்க மறுத்ததாக தெரியவந்தது. இதையடுத்து ஆசிரியர்களின் வீடுகளில் நோட்டீசை ஒட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து பணிக்கு வராத ஆசிரியர்களின் வீடுகளில் நோட்டீசை ஒட்டும் பணி நேற்று இரவு தொடங்கி விடிய, விடிய நடந்தது. இன்றும் நோட்டீசு ஒட்டப்பட்டு வருகிறது. கிராம நிர்வாக அதிகாரிகள் துணையுடன் இந்த பணி நடந்து வருகிறது.

    இதன் அடிப்படையில் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பற்றிய முழு விபரமும் இன்று மாலைக்குள் தொகுக்கப்பட உள்ளது. அந்த பட்டியலை கொண்டு நாளை (சனிக்கிழமை) முதல் அதிரடி நடவடிக்கைகள் பாய உள்ளது. சட்ட பிரிவுகளின் துணைகொண்டு பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.

    குறிப்பாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு “நோ ஒர்க், நோபே” என்ற அடிப்படையில் சம்பளத்தை பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எத்தனை நாட்களுக்கு வேலைக்கு வரவில்லையோ, அத்தனை நாட்களுக்கு சம்பளத்தை வழங்கக் கூடாது என்பதில் அரசு தீவிரமாக உள்ளது.

    இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்து நியமனம் செய்ய பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் பிரதீப் யாதவ் அரசாணை வெளியிட்டுள்ளார்.

    அதில் பள்ளி பெற்றோர்-ஆசிரியர் சங்கம் மூலமாக பள்ளிகளுக்கு அருகில் உள்ள ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை தேர்வு செய்து பள்ளிக்கூடங்களை தங்கு தடையின்றி நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் அங்கேரிபாளையம் அரசு பள்ளியில் ஆசிரியர்கள் வேலைக்கு வராததால் தற்காலிக ஆசிரியை மூலம் பாடம் நடத்தப்பட்டது

    அப்படி தேர்வு செய்யப்படும் தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூ.7,500 சம்பளம் வழங்கலாம் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அரசாணையைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. 3 நாட்களுக்குள் தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு பணியை முடிக்கும்படி பெற்றோர்-ஆசிரியர் சங்கங்களிடம் கூறப்பட்டுள்ளது.

    பெற்றோர், ஆசிரியர் சங்கம் இல்லாத பள்ளிகளில் அருகில் உள்ள பள்ளிகளில் இயங்கும் சங்கங்கள் மூலம் தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இப்படி தேர்வு செய்யப்படும் தற்காலிக ஆசிரியர்கள் 28-ந்தேதி முதல் பள்ளிகளில் பணி அமர்த்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 28-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் தற்காலிக ஆசிரியர்கள் உதவியுடன் தொடக்கப் பள்ளிகளைத் திறந்து பாடம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டில் ஜாக்டோ-ஜியோ தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. அன்றைய தினம் மதுரை ஐகோர்ட்டு புதிய உத்தரவுகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஓரிரு நாட்களில் முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #JactoGeo #GovtStaff
    Next Story
    ×