search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய பென்‌ஷன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் போராட்டம்
    X

    புதிய பென்‌ஷன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் போராட்டம்

    புதிய பென்‌ஷன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நடத்தினர். #jactojio
    சென்னை:

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்சன் திட்டத்தை கொண்டு வர வேண்டும்,

    21 மாத சம்பள நிலுவை தொகை வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன.

    சேப்பாக்கம் எழிலகத்தில் 4 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து அரசுக்கு தங்கள் உணர்வை வெளிப்படுத்தினர். ஆனாலும் அப்போது அரசு சார்பில் யாரும் பேச்சு நடத்தவில்லை. ஆளும் கட்சி தவிர பிற கட்சி தலைவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். இதையடுத்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

    இந்த நிலையில் இன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டு அறிவித்தனர். இதற்கு அரசு தரப்பில் தற்செயல் விடுப்பு எடுத்தால் சம்பளம் ‘கட்’ செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அரசு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் உத்தரவை மீறி தற்செயல் விடுப்பு எடுத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் இன்று போராட்டத்தில் குதித்தனர். அனைத்து மாவட்டங்களிலும் தாலுகா அலுவலகங்களில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    சென்னையில் எழிலகம் வளாகத்தில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அன்பரசு, வெங்கடேசன், மாயவன் ஆகியோர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாம்பரத்தில் ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன், திருவள்ளூரில் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த போராட்டத்தில் பங்கேற்க ஆசிரியர்கள் விடுப்பு எடுப்பதற்கு தலைமை ஆசிரியர்கள் அனுமதி தராததால் அதையும் மீறி போராட்டத்தில் கலந்து கொண்டனர். அதே போல அரசு ஊழியர்களும் தங்களது பொறுப்பாளர்களிடம் விடுப்பு கடிதத்தை கொடுத்து விட்டு இதில் பங்கேற்றனர். விடுப்பு கடிதத்தை கொடுக்காதவர்கள் தபால் மூலம் அனுப்பி வைத்து விட்டு இன்று போராட்டத்தில் பங்கேற்றனர்.

    ஆசிரியர்கள் விடுப்பு எடுத்து கொண்டு போராட்டத்தில் பங்கேற்றதால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாட்டினை பள்ளி கல்வித்துறை செய்திருந்தது.

    போராட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் அன்பரசு, தியாகராஜன் ஆகியோர் கூறியதாவது:-

    ஒரு நாள் சம்பளத்தை அரசு பிடித்தம் செய்தாலும் பரவாயில்லை என்ற நிலையில் தான் இன்று இந்த போராட்டம் நடக்கிறது. நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் கூட ஒரு வருடமாக அரசு ஏற்றுக்கொண்ட கோரிக்கையினை நிறைவேற்றாமல் இழுத்தடிக்கிறது.

    இந்த போராட்டத்தை ஒரு அடையாள போராட்டமாகத்தான் நடத்துகிறோம். சேலத்தில் வருகின்ற 13-ந்தேதி வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடக்கிறது. அதனை தொடர்ந்து நவம்பர் 27-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்கிறோம். அதற்குள்ளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையினை அரசு நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    போராட்டம் காரணமாக ஆசிரியர்கள் வராததால் அரசு பள்ளியில் மாணவி பாடம் நடத்திய காட்சி

    இந்த போராட்டத்தால் அரசு அலுவலகங்களில் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. என்றாலும் ஊழியர்கள் வராததால் வழக்கமான பணியில் சுணக்கம் ஏற்பட்டது. தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் மாணவர்கள் பாதிக்காத வகையில் வகுப்புகளை நடைபெற்றன. #jactojio

    Next Story
    ×