search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு ஊழியர்-ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்க இயலாது - அமைச்சர் ஜெயக்குமார்
    X

    அரசு ஊழியர்-ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்க இயலாது - அமைச்சர் ஜெயக்குமார்

    தனியார் ஊழியர்களை விட அதிக சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்க இயலாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். #MinisterJayakumar #JactoGeo
    சென்னை:

    மீன்வளம் மற்றும் பணியாளர் நிர்வாக சீர்த்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பின் கீழ் செயல்படும் பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களும், ஆசிரியர் சங்கங்களும் கடந்த 22.1.2019 முதல் காலவரையற்ற தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

    இச்சங்கங்கள் வலியுறுத்தி வரும் கோரிக்கைகள் யாவும் அரசால் பரிசீலிக்கப்பட்டு செயல்படுத்த இயலாது என பலமுறை தெரிவித்தும், அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் தவறான பிரச்சாரத்தின் அடிப்படையில் அவர்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு, போராட்டத்தை தொடங்கி, சில தீவிரமான வழிமுறைகளை அவர்கள் தற்போது கடைபிடிக்க தொடங்கியிருப்பது வேதனை அளிக்கிறது.

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தினால், மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதியே இல்லாமல் போவதுடன், அரசு வசூலிக்கும் வரியுடன் கடன் பெற்றுத்தான் சம்பளமும், ஓய்வூதியமும் தரவேண்டிய நிலை ஏற்படும்.

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த சாத்தியக்கூறு இல்லை என்றும், அவ்வாறு செய்தால் அரசு பெறும் வரி வருவாயைவிட கூடுதலாக சம்பளத்திற்கும், ஓய்வூதியத்திற்கும் செலவு செய்ய வேண்டி வரும் என்றும், சில ஆண்டுகளுக்குப் பிறகு எந்த மக்கள் நலத்திட்டங்களும், வளர்ச்சிப்பணிகளும் செயல்படுத்த நிதி இருக்காது என்றும் குழு தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில், அரசு மக்களுக்காக இயங்க வேண்டுமே தவிர, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் வழங்க மட்டுமே இயங்கக்கூடாது என்று கருதித்தான் இந்தக் கோரிக்கையை, அரசின் நிர்வாக நலனையும், பொதுமக்கள் நலனையும் கருத்தில் கொண்டு இதை ஏற்க இயலாது என அரசு கருதுகிறது.

    ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு வழங்கியதால் அரசுக்கு ஆண்டுக்கு 14,500 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டாலும், அறிக்கை பெற்ற உடனே அரசு ஊதிய உயர்வை அமல்படுத்தியது. இதனால், அரசின் வருவாய் பற்றாக்குறை 2017-18ஆம் ஆண்டில் 21,594 கோடி ரூபாயாக உயர்ந்துவிட்டது. இந்த ஆண்டு வருவாய் பற்றாக்குறை 24,000 கோடி ரூபாயாக உயரும். இதை அரசு வெளிச்சந்தையில் கடன் பெற்றுத்தான் செலவு செய்கிறது.

    இந்நிலையில், ஊதிய நிலுவை வழங்க வேண்டும் என்றால் அதற்காக 20,000 கோடி ரூபாய் கூடுதலாக நிதி தேவைப்படுகிறது. இதையும் அரசு கடன் பெற்றுத்தான் வழங்க முடியும். கூடுதல் கடன் சுமையை சமாளிக்க வேண்டுமென்றால் மக்கள் மீது கூடுதல் வரிச்சுமையை திணிப்பது ஒன்றே வழியாகும். இதை அரசு தவிர்க்கவே கருதுகிறது.

    இதனால் அரசின் கடன் சுமை மேலும் அதிகரிக்கும். எனவே, தற்போதைய அரசின் நிதிநிலையில் இவர்களின் இந்தக் கோரிக்கை ஏற்க இயலாது என்பதை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், பொதுமக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

    மத்திய அரசில் இடைநிலை ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. ஆனால் மாநில அரசில் இவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். மேலும் இதே கல்வித் தகுதியில் பிற அரசுப் பணிகளிலும் அரசு ஊழியர்கள் பணிபுரியும் நிலையில், இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு தர இயலாது. அனைவருக்கும் ஊதியத்தை உயர்த்தித் தந்தால் மேல்நிலையில் உள்ளவர்களுக்கும் ஊதியத்தை உயர்த்த வேண்டிய நிலை வரும்.

    இதனால் அரசுக்கு ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படுவதுடன், அரசு ஊழியர்களுக்கிடையே உள்ள ஒப்பீட்டுச் சமநிலையை இது வெகுவாக பாதிக்கும்.

    எனினும், இதே கல்வித் தகுதியுள்ள பிற பணியாளர்களை விட இடைநிலை ஆசிரியர்களுக்கு கூடுதலாக மாதம் 2,000 ரூபாய் சிறப்பு ஊதியம் வழங்கப்படுகிறது. இதனால் தான், இந்தக் கோரிக்கையை செயல்படுத்த இயலாது என பலமுறை தெரிவித்தும், இப்போது போராட்டத்தில் அவர்கள் ஈடுபடுவது அரசை நிர்ப்பந்திக்க வேண்டும் என்ற உள்நோக்குடன்தான் இச்சங்கங்களும் அதன் பிரதிநிதிகளும் ஈடுபட்டுள்ளனர் என்பதைத் தான் காட்டுகிறது.

    இடைநிலை ஆசிரியர்கள் 2003ற்கு பிறகு பணியில் சேரும் போதே, புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் தான் பணிபுரிய வேண்டும் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.

    இதுபோன்ற செயல்படுத்த முடியாத கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், பிற தனியார் நிறுவனங்களைக் காட்டிலும் அதிக சம்பளம் பெறுகின்றனர் என்பதை உணர வேண்டும்.

    இந்த சங்கடங்களையெல்லாம் நடுநிலையான அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நன்கு அறிவார்கள். ஆனால் சிலர் சங்கம் நடத்த வேண்டும் என்பதற்காகவும், தங்கள் பிரச்சனைகளை அரசியல்படுத்துவதற்காகவும், அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் தூண்டிவிட்டு, தவறான பாதையில் வழிநடத்துகின்றனர்.

    மேலும், 5000 அரசுப் பள்ளிகளை மூடுவதாகவும், 3500 அரசுப் பள்ளிகளை இணைப்பதாகவும் தவறான கருத்துக்களை மக்களிடையே பரப்புகின்றனர். இது முற்றிலும் தவறான செய்தியாகும்.



    இவர்களின் உள்நோக்கத்தை புரிந்துகொண்டு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் விழிப்போடு இருப்பதுடன், அரசின் நோக்கம் மக்கள் நலம் காப்பதே என்ற உண்மையும், எண்ணற்ற படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் திண்டாடி வரும் நிலையில் அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வளர்ச்சிப் பணிகளை அரசு தான் செய்ய வேண்டும்.

    இதை உணர்ந்து, தற்போதைய நிதி நிலையில், அரசின் நிர்வாக முன்னுரிமையைக் கருத்தில்கொண்டு, இது போன்ற தேவையற்ற போராட்டத்தை தூண்டி விடும் சங்கங்கள் வீசும் சதி வலையில் விழாமல், அரசுக்கு ஒத்துழைப்பு நல்கி மக்கள் பணியை தொய்வின்றி தொடர்ந்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். #MinisterJayakumar #JactoGeo 
    Next Story
    ×