search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காணும் பொங்கல் களை கட்டியது - மெரினாவில் மக்கள் வெள்ளம்
    X

    காணும் பொங்கல் களை கட்டியது - மெரினாவில் மக்கள் வெள்ளம்

    காணும் பொங்கலையொட்டி மெரினா கடற்கரையில் மக்கள் வெள்ளமென திரண்டனர். சென்னை மாநகரம் முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #KaanumPongal
    சென்னை:

    காணும் பொங்கல் கொண்டாட்டங்கள் இன்று தமிழகம் முழுவதும் களை கட்டியது.

    சென்னையில் மெரினா கடற்கரையில் மக்கள் வெள்ளமென திரண்டனர். காலையில் இருந்தே கார் மற்றும் மோட்டார்சைக்கிள்களில் கடற்கரையை நோக்கி மக்கள் படையெடுத்த வண்ணம் இருந்தனர். சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து மினி லாரிகளிலும் மக்கள் வந்திருந்தனர்.

    ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கலையொட்டி மெரினாவில் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடி வருகிறார்கள்.

    இந்த ஆண்டும் வழக்கமான உற்சாகத்துடன் காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் மெரினாவில் திரண்டனர்.

    தங்களது வீடுகளில் இருந்து சமைத்து எடுத்து வந்திருந்த உணவுகளை கடற்கரை மணலில் ஒன்றாக அமர்ந்து அனைவரும் சாப்பிட்டனர்.

    சிறுவர்களும் பெரியவர்களும் பாரபட்சமின்றி கூடி விளையாடி மகிழ்ந்தனர். கடற்கரை மணலில் பலர் கபடி விளையாடினார்கள்

    கண்ணாமூச்சி ஆட்டம் மற்றும் பந்து எறிதல் உள்ளிட்ட விளையாட்டுகளிலும் ஈடுபட்டனர். இதனால் மெரினா கடற்கரையில் உற்சாகம் கரைபுரண்டது.

    காணும் பொங்கலையொட்டி சென்னை மாநகரம் முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையர்கள், கமி‌ஷனர்கள் மகேஸ்குமார், தினகரன், இணை கமி‌ஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோரது மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

    உழைப்பாளர் சிலை மற்றும் காந்தி சிலை அருகில் தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலுள்ள சர்வீஸ் சாலை நுழைவு வாயில்களில் 11 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவசர மருத்துவ உதவிக்காக 7 ஆம்புலன்ஸ் வாகனங்களில் மருத்துவக் குழுவினர் மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது. மீட்புப் பணிக்காக மோட்டார் படகுகள் மற்றும் 140 நீச்சல் தெரிந்த நபர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

    மணல் பரப்பில் 13 உயர்கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு கோபுரத்திலும் 3 போலீசார் பணியமர்த்தப்பட்டிருந்தனர். அங்கிருந்து பைனாகுலர் மூலம் கண்காணித்து வாக்கி-டாக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. கட்டுப்பாட்டறைக்கு வாக்கிடாக்கி மூலமும் வாட்சப் குழுவிலும் உடனுக்குடன் தகவல்கள் வழங்கினர். 3 பறக்கும் பொம்மை விமானத்தில் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

    12 முக்கியமான இடங்களில் அதிக ஒளி திறன் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவை தற்காலிக கட்டுப்பாட்டு அறையில் அமைக்கப்பட்டுள்ள அகன்ற திரைகளில் கண்காணிக்கப்பட்டன.



    கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தடுப்பு வேலிகளை அமைத்து போலீசார் கண்காணித்தனர். ஆயுதப்படையின் குதிரைப் படையுடன் கூடுதலாக 16 குதிரைகள் மூலமும் கண்காணிக்கப்பட்டது.

    கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் உடனடியாக மீட்பதற்காக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. அடையாள அட்டையில் குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர் மற்றும் பெற்றோர் கைபேசி எண் ஆகியவற்றை எழுதி, குழந்தைகளின் கைகளில் கட்டப்பட்டது.

    இதே போன்று பொதுமக்கள் அதிகம் கூடும் மற்ற இடங்களான கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடலில் உள்ள தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, கேளிக்கை பூங்காக்கள் மற்றும் இதர இடங்களிலும் தற்காலிக காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. #KaanumPongal

    Next Story
    ×