என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் பாதுகாப்பு"

    • புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட வெளிமாநில சுற்றுலா பயணிகள் கடந்த ஒரு வாரமாக புதுச்சேரிக்கு படையெடுத்து வருகிறார்கள்.
    • புதுவை எல்லைகளில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படும்.

    புதுச்சேரி:

    நாளை மறுநாள் புத்தாண்டு பிறக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடைபெறும். புத்தாண்டை கொண்டாட வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு திரளுவார்கள்.

    அதுபோல் இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டமும் புதுச்சேரியில் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. புத்தாண்டை கொண்டாடப்படும் கடற்கரை சாலையில் அரசு சுற்றுலா துறை சார்பில் இசை நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.

    புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட வெளிமாநில சுற்றுலா பயணிகள் கடந்த ஒரு வாரமாக புதுச்சேரிக்கு படையெடுத்து வருகிறார்கள். இதனால் புதுச்சேரியில் தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் அறைகள் நிரம்பி வழிகின்றன. புதுச்சேரியில் உள்ள விடுதிகள் அனைத்தும் நிரம்பி விட்டதால் சுற்றுலா பயணிகள் புதுச்சேரி அருகே கோட்டக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் விடுதிகளை நோக்கி செல்கின்றனர்.

    புதுச்சேரி நகர் முழுவதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுவதால் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து புதுச்சேரி போலீஸ் டி.ஐ.ஜி. சத்திய சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரியில் புத்தாண்டை பொதுமக்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் காவல்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. புத்தாண்டை தினத்தன்று 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். புதுச்சேரி முழுவதும் போக்குவ ரத்து போலீசார் குவிக்கப் பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    புதுவை எல்லைகளில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படும்.

    புதுச்சேரியில் மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை கண்காணிக்க 50 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் சீருடையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி பணியில் ஈடுபடுவார்கள். மேலும் மதுகுடித்திருப்பதை கண்டறியும் கருவி (பிரீத் அனலைசர்) சோதனை மேற்கொள்வார்கள். இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணிக்கக்கூடாது. அதிக வேகத்தில் செல்லக்கூடாது இருசக்கர வாகனங்களில் சாகசங்கள் செய்யக்கூடாது அதிக இரைச்சல் எழுப்பக்கூடாது. இதனை இன்டர்செப்டர் வாகனம் மூலமாக கண்கா ணிக்கப்படும். இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்படுகின்றனர்.
    • ‘பைக் ரேசில் ஈடுபடுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    சென்னை:

    ஜனவரி 1-ந் தேதி ஆங்கில புத்தாண்டு உலகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. டிசம்பர் 31-ந் தேதி(புதன்கிழமை) நள்ளிரவு ஓட்டல்கள், கடற்கரை, ரிசார்ட்டுகளில் உற்சாகம் களைகட்டும்.

    புத்தாண்டுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கடற்கரை ரிசார்ட்டுகள் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகிறது.

    புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது எந்தவொரு அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பதை உறுதி செய்யும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு பொறுப்பு டி.ஜி.பி. அறிவுறுத்தி உள்ளார். குறிப்பாக பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் மிக கவனமாக செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். குறிப்பாக கடற்கரை, வழிபாட்டு தலங்களில் கூடுதல் போலீசார் பணி அமர்த்தப்பட உள்ளனர். மெரினா கடற்கரையில் மட்டும் 1,000 போலீசார் நிறுத்தப்பட உள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கடலில் இறங்கி குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோன்று, சென்னை பெசன்ட்நகர், திருவான்மியூர், கோவளம், மாமல்லபுரம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் கடற்கரையிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படுகின்றனர். இதுதவிர கடற்கரை ஓரத்தில் நீச்சல் வீரர்களும் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.

    மெரினா போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பெண்கள் மிக பாதுகாப்பாக இருக்க போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். குறிப்பாக குழந்தைகளை அழைத்து செல்வதை தவிர்க்க பெற்றோர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

    'பைக் ரேஸ்' என்ற பெயரில் பந்தயம் கட்டி மோட்டார் சைக்கிள்களில் இளைஞர்கள் அதிவேகமாக சென்று, சாகசம் செய்வதை தடுக்கவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    'பைக் ரேசில் ஈடுபடுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    அதோடு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போலீசார் கடும் நிபந்தனைகளுடன் கூடிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுபவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

    சாலையின் நடுவே 'கேக்' வெட்டுவது, பட்டாசு வெடிப்பது, பெண்களை மடக்கி புத்தாண்டு வாழ்த்து சொல்வது போல அவர்களுடன் கைக்குலுக்கி பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போன்ற சம்பவங்களில் யாரும் ஈடுபட கூடாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது விபத்துகளால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படாமல் தடுக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். புத்தாண்டு தினத்தன்று முக்கியமான சாலைகளின் நடுவே இரும்பு தடுப்புகளை அமைத்து, வாகனங்கள் வேகமாக செல்வதை கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    நட்சத்திர ஓட்டல்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போலீசார் கடந்த ஆண்டை போன்று கடும் கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளனர். நட்சத்திர ஓட்டல்களில் மது அருந்தும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்ல கூடாது என ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    இந்த உத்தரவை நிறைவேற்றும் வகையில் நட்சத்திர ஓட்டல்கள் செயல்பட வேண்டும் என்றும், இதை மீறினால் ஓட்டல் நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து உள்ளனர்.

    நட்சத்திர ஓட்டல்களில் ஆபாச நடனங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது. அதுமட்டுமல்லாமல் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு நள்ளிரவு எவ்வளவு நேரம் அனுமதிக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

    கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் இரவு பைக் ரேசில் ஈடுபட்டதாக 24 இளைஞர்கள் பிடிபட்டனர். அவர்களது மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள், டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
    • தேவாலயங்கள் இருக்கும் முக்கிய சந்திப்புகளில் வாகன சோதனைகள் மேற்கொள்ளவும், போலீஸ் தரப்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் பொதுமக்கள் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் கொண்டாட போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    கிறிஸ்துமஸ் தினத்தன்று அதிகாலை முதல் கிறிஸ்தவ மக்கள் அனைவரும் தேவாலயங்களுக்கு செல்வார்கள். இதன்காரணமாக, கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் நாளை இரவு முதல் 2 நாட்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மயிலாப்பூர் சாந்தோம் தேவாலயம், பெசன்ட் நகர் வேளாங்கண்ணி தேவாலயம், பாரிமுனை அந்தோணியார் தேவாலயம், அண்ணா சாலை புனிதஜார்ஜ் (கதீட்ரல்) தேவாலயம், சைதாப்பேட்டை சின்னமலை தேவாலயம் உள்பட சென்னையில் உள்ள முக்கியமான 350 கிறிஸ்தவ தேவாலயங்கள் இருக்கும் பகுதிகளில் போலீசார் சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்.

    மேலும் இந்த பகுதிகளில் போலீசார் வாகனங்களில் ரோந்து செல்லும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட குற்றங்கள் நடைபெறுவதை தடுக்கவும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடித்து கைது செய்யவும் போலீசார் சாதாரண உடைகளிலும், மாறுவேடங்களிலும் ரோந்து செல்ல இருக்கின்றனர்.

    மேலும் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள், டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    தேவாலயங்கள் இருக்கும் முக்கிய சந்திப்புகளில் வாகன சோதனைகள் மேற்கொள்ளவும், போலீஸ் தரப்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சென்னை முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் போலீஸ் கமிஷனர் அருண் தலைமையில் செய்யப்பட்டுள்ளன. போலீசாருக்கு உதவியாக, ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த உள்ளனர்.

    மோட்டார் சைக்கிள் பந்தயம், மதுபோதையில் வாகனங்களை ஓட்டுவது உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    • பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுர்ஜித், அவரது தந்தை சரவணன் ஆகியோரை கைது செய்தனர்.
    • கவினின் தந்தை சந்திரசேகரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் தெரிவித்து வந்தனர்.

    ஸ்ரீவைகுண்டம்:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கவின் செல்வகணேஷ் (வயது 27). ஐ.டி. ஊழியர்.

    கவின் கடந்த 27-ந்தேதி பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் வைத்து அதே பகுதியை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியான சரவணன்-கிருஷ்ணகுமாரியின் மகன் சுர்ஜித் (24) என்பவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்தது தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுர்ஜித், அவரது தந்தை சரவணன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு அவர்களும் விசாரணையை தொடங்கினர்.

    இந்நிலையில் கவினின் தந்தை சந்திரசேகரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் கவின் தந்தை சந்திரசேகருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் 24 மணி நேரமும் கவின் தந்தை சந்திர சேகருடன் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • எனது ஊரான உடன்குடி காலன்குடியிருப்பு பெருமாள்புரத்தில் கீழத்தெரு என்ற தெரு இருந்தது.
    • கடந்த 20 ஆண்டுகளில் கீழத்தெரு காணாமல் போய்விட்டது.

    சமூக வலைதளமான டிக்டாக் மூலம் பிரபலமானவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது வட்டார மொழியில் பேசும் அவரது பேச்சு பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.

    இதனிடையே, தமிழ் திரைப்படம் ஒன்றில் நடிகர் வடிவேலு எனது கிணற்றை காணவில்லை என போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுப்பார். அதனை போன்று தனது தெருவை காணவில்லை என ஜி.பி. முத்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

    அந்த மனுவில், எனது ஊரான உடன்குடி காலன்குடியிருப்பு பெருமாள்புரத்தில் கீழத்தெரு என்ற தெரு இருந்தது. இந்த பகுதியில் அரசு புறம்போக்கு பாதையாக பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. இது வருவாய்த்துறை ஆவணங்களில் உள்ளது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் கீழத்தெரு காணாமல் போய்விட்டது.

    அந்த தெரு முழுவதும் பல்வேறு தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. பொதுப்பாதையும் அடைக்கப்பட்டுவிட்டது. எனவே அந்த பகுதியில் நில அளவை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கீழத்தெருவை மீட்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    ஜி.பி.முத்து அளித்த மனுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வீட்டை முற்றுகையிடப்போவதாக ஊர் பொதுமக்கள் கூறியிருந்தனர். இதையடுத்து வீடியோ வெளியிட்டு பேசிய ஜி.பி.முத்து, போலீசார் தனக்கு உதவி செய்யுமாறு வலியுறுத்தி இருந்தார்.

    இந்த நிலையில், ஜி.பி.முத்து வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

    • சென்னையில் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • ஒவ்வொரு வணிக வளாகத்திற்கும் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் பாகிஸ்தான் எல்லையில் உள்ள மாநிலங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

    இதற்கிடையே, சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐ.பி.எல்.போட்டி நடத்தினால் குண்டு வெடிக்கும் என எச்சரித்து டெல்லி கிரிக்கெட் வாரியத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், போர் பதற்றம் நிலவுவதால் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ், வி.ஆர். மால், ஸ்பென்சர் பிளாசா, விஜயா மால் உள்ளிட்ட இடங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு வணிக வளாகத்திற்கும் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்ற சூழல் எதிரொலியால், அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மால்களுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேவர் நினைவிட கும்பாபிஷேகம் மற்றும் ஜெயந்தி விழா பசும்பொன்னில் நாளை தொடங்குகிறது.
    • பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    கமுதி:

    ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் இருக்கும் அவரது சிலைக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014-ம் ஆண்டு 13 கிலோ தங்க கவசத்தை வழங்கினார்.

    அந்த தங்க கவசம் மதுரை அண்ணாநகரில் உள்ள வங்கி லாக்கரில் அ.தி.மு.க. மற்றும் பசும்பொன் தேவர் நினைவாலயம் பெயரில் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு 3 நாட்களுக்கு முன்னதாக வங்கியில் இருந்து தங்க கவசம் எடுத்து செல்லப்பட்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும்.

    பின்பு குருபூஜை விழா முடிந்ததும் தங்க கவசம் மீண்டும் வங்கி லாக்கரில் வைக்கப்படும். லாக்கரில் உள்ள தங்க கவசத்தை அ.தி.மு.க. பொருளாளரும், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாலய பொறுப்பாளர்களும் கையெழுத்திட்டு வங்கியில் இருந்து பெற்று செல்வார்கள்.

    இந்த நிலையில் இந்த ஆண்டு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தேவர் தங்க கவசத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தனித்தனியாக கேட்டுக்கொண்டனர். ஆனால் தங்களிடம் தான் வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் அ.தி.மு.க.வின் 'ஏ' மற்றும் 'பி' தரப்பில் பல்வேறு பிரச்சினை இருப்பதால் தங்ககவசத்தை அவர்களிடம் வழங்க உத்தரவிட முடியாது. மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அதிகாரிகளும், தேவர் நினைவாலய பொறுப்பாளர்களும் வங்கியில் கையெழுத்து போட்டு தங்க கவசத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து மதுரை வங்கியில் இருந்த தேவர் தங்க கவசத்தை மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து தேவர் தங்க கவசம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பசும்பொன்னுக்கு எடுத்து செல்லப்பட்டது.

    அங்கு ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ராஜசேகரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்பு மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அதிகாரிகள், தேவர் நினைவாலய பொறுப்பாளர்கள் முன்னிலையில் தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. தங்க கவசம் அணிவிக்கப்பட்ட தேவர் சிலைக்கு வருவாய் துறை அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேவர் நினைவிட கும்பாபிஷேகம் மற்றும் ஜெயந்தி விழா பசும்பொன்னில் நாளை தொடங்குகிறது. இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பசும்பொன் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • நவாப் மாலிக், அனில் தேஷ்முக், சஞ்சய் ராவத் ஆகியோரின் பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • அசோக் சவான், பிரிதிவிராஜ் சவான் ஆகியோருக்கு “ஒய் பிளஸ்” பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    மும்பை

    முக்கிய அரசியல் தலைவர்கள், பிரபலங்களுக்கு அரசு போலீஸ் பாதுகாப்பை வழங்கி வருகிறது.

    தலைவர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல் அடிப்படையில் ஒய், ஒய் பிளஸ் என பல்வேறு வகைப்படுத்தப்பட்ட பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

    இந்த நிலையில் மராட்டியத்தில் ஆட்சி செய்து வரும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணி அரசு சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை உள்ளடக்கிய மகா விகாஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் முன்னாள் மந்திரிகள், தலைவர்கள் 25 பேரின் பாதுகாப்பை அதிரடியாக ரத்து செய்துள்ளது.

    இதன்படி முன்னாள் மந்திரிகள் ஜெயந்த் பாட்டீல், சகன் புஜ்பால் மற்றும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முன்னாள் மந்திரிகள் நவாப் மாலிக், அனில் தேஷ்முக், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் ஆகியோரின் பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல விஜய் வடேட்டிவார், பாலாசாகேப் தோரட், மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே, பாஸ்கர் ஜாதவ், சதேஜ் பாட்டீல், தனஞ்செய் முண்டே, சினில் கேதாரே, நர்கரி ஜர்வால் மற்றும் வருண் சர்தேசாய் உள்ளிட்ட தலைவர்களின் பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு நீக்கப்பட்ட ஜெயந்த் பாட்டீல், சகன் புஜ்பால் மற்றும் அனில் தேஷ்முக் 3 பேரும் முன்னாள் உள்துறை மந்திரிகள் ஆவர்.

    அதேநேரம் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் குடும்பத்தினர், தேசியவாத காங்கிரஸ் நிறுவன தலைவர் சரத்பவார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    அதேபோல காங்கிரஸ் தலைவர்களும், முன்னாள் முதல்-மந்திரிகளுமான அசோக் சவான், பிரிதிவிராஜ் சவான் ஆகியோருக்கு "ஒய் பிளஸ்" பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    ஆச்சரியமளிக்கும் விதமாக உத்தவ் தாக்கரேவின் தனிப்பட்ட செயலாளரும், நம்பகத்தன்மை வாய்ந்த உதவியாளருமான மிலிந்த் நர்வேகருக்கு ஒய்-பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த பாதுகாப்பு தொடர்பான முடிவுகள் அனைத்தும் அச்சுறுத்தல் உணர்வை கருத்தில் கொண்டு நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்டவை என்றும், இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்றும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

    போலீஸ் பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டவர்களில் பெரும்பாலனவர்கள் முன்னாள் மந்திரிகள் ஆவர். இனி இவர்களின் வீடுகளுக்கு வெளியேயும், அவர்களுக்கு துணையாகவும் நிரந்தர போலீஸ் பாதுகாப்பு இருக்காது.

    மராட்டிய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை மகா விகாஷ் அகாடி கூட்டணியை சேர்ந்த தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • விழுப்புரம் மாவட்டம் முழுவதும் போலீ சார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • தங்கும் விடுதியில் உள்ளவர்களை ஒவ்வொரு வராக போலீசார் சோதனை செய்தனர்.

    விழுப்புரம்:

    கர்நாடக மாநிலம் மங்களூர் நகரில் கங்கை டவுன் போலீஸ் நிலைய எல்லை அருகே ஆட்டோவில் மர்ம பொருள் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. இதன் எதிரொலியாக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் போலீ சார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்- மரக்காணம் சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன், தலைமையிலான சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சிவகுமார், தலைமை போலீசார்கள் கணேசன், சபரி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    மேலும் திண்டிவனத்தில் உள்ள கோவில், சர்ச், மசூதி ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் திண்டிவனத்தில் உள்ள தங்கும் விடுதியில் சந்தேக படும் படியான நபர்கள் யாரேனும் தங்கி உள்ளார்களா எனவும் போலீசார் சோதனை செய்தனர். மேலும் தங்கும் விடுதியில் உள்ளவர்களின் அடையா ளங்களை சேகரிக்கும் பொருட்டு எப்.ஆர்.எஸ். செயலி மூலம் தங்கும் விடுதியில் உள்ளவர்களை ஒவ்வொரு வராக போலீசார் சோதனை செய்தனர்.

    • வெளியூர் வியாபாரிகள் குவிந்தனர்
    • இந்த ஆண்டு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் கடந்த 17-ந் தேதி தொடங்கியது.

    கன்னியாகுமரி:

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப்புகழ்பெற்ற சர்வதேச சுற்றுலா தலம் ஆகும். இங்குவருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களில் பெரும்பாலானவர்களும் வந்து செல்வார்கள். இதனால் இந்த 3 மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் கடந்த 17-ந் தேதி தொடங்கியது.

    இந்த சீசனையொட்டி கன்னியாகுமரியில் நடை பாதைகளில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சீசன் கடைகள் தனியாருக்கு ஏலம் விடப்படும். இந்த ஆண்டு கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரைக்கு செல்லும் சிலுவை நகர் பகுதி, குமரி மாவட்ட சுற்றுலா அலுவலகம் முதல் அரசு விருந்து மாளிகை முன்பு வரை உள்ள மெயின் ரோடு பகுதி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு செல்லும் சன்னதி தெருவில் உள்ள விவேகானந்தா ராக் ரோடு ஆகிய பகுதிகளில் மொத்தம் 125 சீசன் கடைகள் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துஉள்ளது. இந்த சீசன் கடைகள் ஏலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை 11 மணிக்கு கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகன் தலைமையில் நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், குமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயலட்சுமி, கன்னியாகுமரிசிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் ஆகியோர் முன்னிலையில் இந்த சீசன் கடைகள் ஏலம் நடந்தது.

    இந்த சீசன் கடை ஏலம் எடுப்பதற்காக உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து குவிந்திருந்தனர். சீசன் கடைகளை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். இதையொட்டி கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இந்த சீசன் கடைகளை ஏலம் எடுக்க வெளியூர் வியாபாரிகள் நேற்று முதலே கன்னியாகுமரியில் வந்து குவிந்த வண்ணமாக இருந்தனர். ஏலம் எடுக்க சென்ற வியாபாரிகள் போலீசாரின் கடுமையான சோதனைக்கு பிறகே பேரூராட்சி அலுவலகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    • சோதனைக்கு பின்னரே சுற்றுலா பயணிகள் அனுமதி
    • பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நடவடிக்கை

    வேலூர்:

    பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி வேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் 400 போலீசார் ஈடுபடுத்த பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ்நிலையங்கள், மார்க்கெட், வணிகவளாகங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் இன்றுகாலை முதல் ஈடுபட்டுள்ளனர்.

    வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில், ஸ்ரீபுரம் தங்ககோவில், விரிஞ்சிபுரம் மார்கப்பந்தீஸ்வரர் ஆகிய கோவில்களுக்கு வரும் பக்தர்களின் உடமைகள் மற்றும் பொருட்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்படுகிறது.

    மேலும் இந்த கோவில்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    வேலூர் கோட்டையிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கோட்டைக்கு வந்த பயணிகளின் உடைமைகளை போலீசார் சோதனை செய்து உள்ளே அனுப்பினர்.

    கார், மோட்டார்சைக்கிள்களில் வந்தவர்களையும் சோதனை செய்து உள்ளே அனுப்பினர். கோட்டைக்கு வந்த காதல் ஜோடிகள் பலர் போலீசாரை கண்டதும் உள்ளே செல்லாமல் தானாக திரும்பி சென்றனர்.

    இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    மேலும் வெளி மாவட்டங்கள், பிறமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் மாநில மற்றும் மாவட்ட எல்லைகளான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, பத்தலப்பல்லி, பிள்ளையார்குப்பம், கண்ணமங்கலம் கூட்ரோடு அருகே, மாதனூர் அருகே ஆகிய பகுதிகளில் சோதனை செய்யபடுகிறது.

    மாவட்டம் முழுவதும் ரோந்து, கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணிகள் புதன்கிழமை காலை வரை தொடரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தமிழகத்தில் உள்ள முக்கிய சந்திப்புகளில் பெரியார், அம்பேத்கர் சிலைகள் நிறுவப்பட்டிருக்கும்.
    • சென்னை அண்ணாசாலை சிம்சன் சந்திப்பு பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு பாதுகாப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    அம்பேத்கரின் 66-வது நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் அவரது சிலைக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டன.

    இந்த நிலையில் இந்து மக்கள் கட்சியினர் கும்பகோணத்தில் காவி உடையுடன் கூடிய அம்பேத்கர் சுவரொட்டிகளை ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து சென்னையில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த சென்ற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது.

    ஐகோர்ட்டில் வக்கீல்களும், ராஜா அண்ணாமலைபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலைகளுக்கு இந்து மக்கள் கட்சியினர் காவி சாயம் பூசி விடக்கூடாது என்பதால் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலைகள் முன்பு நேற்று இரவில் இருந்தே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பெரியார், அம்பேத்கர் சிலைகளை பொறுத்தவரையில் தமிழகத்தில் முக்கிய சந்திப்புகளில் இந்த 2 சிலைகளும் நிறுவப்பட்டிருக்கும். கிராமப்புறங்கள் தொடங்கி நகர பகுதிகள் வரையில் உள்புற சாலைகளிலும் இந்த 2 தலைவர்களுக்கும் சிலைகள் நிறுவப்பட்டுள்ளது. இதனால் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சென்னை அண்ணாசாலை சிம்சன் சந்திப்பு பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு பாதுகாப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தாம்பரம், ஆவடி போலீஸ் கமிஷனரக எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் சிலைகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ×